பனப்பாக்கம் சீத்தா
பனப்பாக்கம் சீத்தா (பனப்பாக்கம் கு. சீத்தா; சீத்தாராமன்; பனப்பாக்கம் சீத்தாராமன்) (பிறப்பு: அக்டோபர் 24, 1937) கவிஞர், எழுத்தாளர், இதழாளர், பேச்சாளர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களுள் ஒருவர். தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்றார்.
பிறப்பு, கல்வி
சீத்தாராமன் என்னும் இயற்பெயரை உடைய பனப்பாக்கம் சீத்தா, அக்டோபர் 24, 1937 அன்று, தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பனப்பாக்கத்தில், புலவனூர் குப்புசாமி - பனப்பாக்கம் வீரம்மாள் இணையருக்குப் பிறந்தார். பனையபுரத்தில் தொடக்கக் கல்வி கற்றார். விக்கிரவாண்டி அரசுப் பள்ளியில் உயர்நிலைக் கல்வி பயின்றார். கடலூரில் உள்ள அரசு ஆசிரியப் பயிற்சிப் பள்ளியில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயின்று கல்வியியலில் இளநிலை, முதுநிலைப் பட்டங்களைப் பெற்றார்.
தனி வாழ்க்கை
பனப்பாக்கம் சீத்தா, விழுப்புரம் மாவட்டம் அன்னியூர் நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றினார். பின் முதுகலைத் தமிழாசிரியராகப் பணி புரிந்தார். வடலூரில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றி, 1995-ல் பணி ஓய்வு பெற்றார்.
பனப்பாக்கம் சீத்தா, பாரதிதாசன் தலைமையில், 1962-ல், இந்திராணியை மணம் செய்து கொண்டார். பிள்ளைகள்: அன்புச்செல்வி, அறிவுச்செல்வி, அறிவண்ணல், அனிச்சமலர்.
இலக்கிய வாழ்க்கை
பனப்பாக்கம் சீத்தா, பள்ளியில் படிக்கும்போதே கவிதை ஆர்வம் கொண்டிருந்தார். பாரதிதாசனின் கவிதைகளால் இலக்கிய ஆர்வம் பெற்றார். கவிச்செல்வம் கலையழகனுடன் தான் இணைந்து வெளியிட்ட 'மதியொளி' கையேட்டில் பல கவிதைகளை எழுதினார். கவிஞர் இளம்வழுதியால் ஊக்குவிக்கப்பட்டார். கண்ணதாசன், தனது இதழ்களில் பனப்பாக்கம் சீத்தாவின் கவிதைகளை வெளியிட்டு ஊக்குவித்தார்.
பனப்பாக்கம் சீத்தாவின் கவிதைகள் குயில், தென்றல், திராவிட நாடு, சுரதா, நம்நாடு, முரசொலி, முல்லை, காவியம், இலக்கியம், கவிதா மண்டலம், நமது நாடு உள்ளிட்ட பல இதழ்களில் வெளியாகின. பல முன்னணி இதழ்களில் கவிதைகளை எழுதியதுடன், கவிதை நூல்கள் சிலவற்றையும் வெளியிட்டார். அவற்றின் சில பகுதிகள் தமிழக அரசின் பள்ளிப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றன. பனப்பாக்கம் சீத்தாவின் கவிதைகளையும் தமிழ்ப்பணிகளையும் ஆராய்ந்து மாணவர்கள் சிலர் பட்டம் பெற்றனர்.
மேடையுரை
பனப்பாக்கம் சீத்தா, குன்றக்குடி அடிகளார், உவமைக்கவிஞர் சுரதா, கவியரசு கண்ணதாசன், கவியரசு முடியரசன், பாவலர் வாணிதாசன் ஆகியோர் தலைமையிலான கவியரங்குகளில் கலந்துகொண்டு கவிதை வாசித்தார். கப்பல் கவியரங்கம், விமானக் கவியரங்கம் உள்ளிட்ட சிறப்புக் கவியரங்கங்களில் பங்கேற்றார். பல்வேறு கவியரங்குகளுக்குத் தலைமை தாங்கி நடத்தினார்.
அமைப்புச் செயல்பாடுகள்
பனப்பாக்கம் சீத்தா, தமிழ்நாட்டு அரசின் பாடநூல் குழுவில் இடம்பெற்று 8-ம் வகுப்பு, 11-ம் வகுப்புத் தமிழ்ப்பாட நூல்களின் ஆசிரியராகச் செயல்பட்டார். தமிழ்க் கவிஞர் மாநாடு, உலகத்தமிழ்ப் பேரவை மாநாடு, கபிலர் குன்று கவியரங்கம் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். மலேசியாவில் நடைபெற்ற முதலாவது உலகத் தமிழ் மறை ஆராய்ச்சி மாநாட்டில் கலந்துகொண்டார். 1958-ல், 'தமிழ் எழுத்தாளர் மன்றம்' என்ற அமைப்பைத் தொடங்கி நடத்தினார்.
பாரதிதாசனுக்கு 70-ம் அகவை மலர் வெளியிட்டார். கவிஞர் வாணிதாசனுக்குப் புதுச்சேரியில் விழா எடுத்து 'கவிஞர் ஏறு' எனும் விருது வழங்கக் காரணமானார். சுரதாவிற்கு 'உவமைக் கவிஞர்' எனும் விருது வழங்க விழா எடுத்தார். கவிஞர் தெசிணிக்கு 'கவிதைக் காவலர்' எனும் விருதளிக்கக் காரணமாகச் செயல்பட்டார். கிருஷ்ணகிரியில், மு. கருணாநிதி தலைமையில் கவிஞர் மாநாடு ஒன்றைக் கூட்டிப் பல கவிஞர்களுக்குக் 'கவிமாமணி' விருது வழங்கிச் சிறப்பித்தார்.
திருக்குறள், பாரதி மற்றும் பாரதிதாசன் படைப்புகள், ஈ.வெ. ராமசாமிப் பெரியார் படைப்புகள், அண்ணா படைப்புகள் உள்ளிட்ட பல்வேறு நூல்களைக் கொண்ட ஆய்வு நூலகம் ஒன்றை உருவாக்கினார்.
வானொலி
சென்னை, திருச்சி, புதுச்சேரி, சீனா ஆகிய வானொலிகளில் பனப்பாக்கம் சீத்தாவின் கவிதைகள், உரைகள், நேர்காணல்கள் ஒலிபரப்பாகியுள்ளன.
திரைப்படம்
பனப்பாக்கம் சீத்தா, திரைப்படங்கள் சிலவற்றுக்குப் பாடலாசிரியராகப் பணியாற்றினார்.
இதழியல்
பனப்பாக்கம் சீத்தா, பள்ளியில் படிக்கும்போது நண்பர் கலையழகனுடன் இணைந்து 'மதியொளி' என்ற கையெழுத்து இதழை நடத்தினார். 'பாட்டுப்பயணம்' என்ற மாத இதழைத் தொடங்கி நடத்தினார்.
அரசியல்
பனப்பாக்கம் சீத்தா, திராவிட இயக்க ஆதரவாளராகச் செயல்பட்டார். ராஜாஜியின் புதிய கல்வித்திட்ட எதிர்ப்புப் போராட்டத்திலும், இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும் பங்கேற்றார். ஆசிரியர் போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றார்.
பொறுப்பு
- தமிழ் எழுத்தாளர் மன்ற நிறுவனர்
- உலகத் தமிழ்க்கவிஞர் பேரவையின் பொதுச்செயலாளர்
விருதுகள்
- தமிழ்நாடு அரசின், 'பாவேந்தர் பாரதிதாசன் விருது'
- புதுவை அரசின் 'சிந்தனைக் கவிஞர்' விருது
- புதுவை அரசின் பாரதியார் நூற்றாண்டு விழாவில் அளிக்கப்பட்ட 'பாரதிப் பட்டய விருது'
- தஞ்சை 'தமிழ்த்தாய் அறக்கட்டளை விருது'
- கோலாலம்பூர் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கங்கள் இணைந்தளித்த 'திராவிடச்சுடர் விருது'
- கவிச்சித்தர் க.பொ.இளம்வழுதி தமிழ்ப்பணி அறக்கட்டளை வழங்கிய 'வள்ளலார் விருது'
- தஞ்சைத் தமிழ்க் கழகத்தின் 'செம்மொழிப் போராட்டச் செம்மல் விருது'
- சென்னை பெரியார் தமிழ்ப் பேரவையின் 'மாமனிதர் விருது'
மதிப்பீடு
பனப்பாக்கம் சீத்தா, மரபுக் கவிஞர். எளிய தமிழில் சந்தங்களுடன் கூடிய பல கவிதைகளை எழுதினார். பாரதிதாசன், சுரதா, வாணிதாசன் வரிசையில் இடம் பெறுபவர். பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களுள் ஒருவராக அறியப்படுகிறார். "பனப்பாக்கம் கு. சீத்தா அவர்கள் உவமைக் கவிஞர் சுரதா அவர்களின் கவிதைகளைப் போல் உயிரோட்டமான கவிதை வடிப்பதில் வல்லவர்." என்று முனைவர் மு. இளங்கோவன் மதிப்பிட்டார்.
நூல்கள்
- புலிக்கொடியோன்
- இவர்கள் வாழ்த்துகிறார்கள்
- பனப்பாக்கம் சீத்தாவின் பாட்டுப் பயணம் - இரண்டு தொகுதிகள்
- பனப்பாக்கம் சீத்தாவின் பாட்டரங்கப் பயணம் - இரண்டு தொகுதிகள்
உசாத்துணை
- முனைவர் மு. இளங்கோவன் தளக் கட்டுரை
- பனப்பாக்கம் சீத்தா வாழ்க்கைக் குறிப்பு, தமிழ்ச்சுரங்கம் தளம்
- பனப்பாக்கம் சீத்தா நேர்காணல், நக்கீரன் தளம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Sep-2026, 12:39:07 IST
