க. பொ. இளம்வழுதி
க. பொ. இளம்வழுதி (கவிச்சித்தர் க. பொ. இளம்வழுதி; க.பொ. பாலசுப்ரமணியன்) (ஏப்ரல் 25, 1938 - மார்ச் 5, 2013) கவிஞர், எழுத்தாளர். வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணியாற்றினார். தனது படைப்புகளுக்காக தமிழக அரசு, புதுச்சேரி அரசின் பரிசுகளைப் பெற்றார்.
பிறப்பு, கல்வி
க.பொ. பாலசுப்ரமணியன் என்னும் இயற்பெயரை உடைய க. பொ. இளம்வழுதி, ஜனவரி 6, 1936 அன்று, புதுச்சேரி மாநிலம், மண்ணாடிப்பட்டு அருகே உள்ள கலிதீர்த்தாள் குப்பம் என்ற ஊரில், வே. பொன்னுசாமி - தனபாக்கியம் இணையருக்குப் பிறந்தார். பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தார்.
தனி வாழ்க்கை
க. பொ. இளம்வழுதி, வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். மணமானவர். மனைவி: கலைவாணி. மகன்கள்: இளந்திரையன், இளம்பரிதி; மகள்கள்: இளமதி, இளந்தென்றல்.
இலக்கிய வாழ்க்கை
தொடக்கம்
க. பொ. இளம்வழுதி, பாரதிதாசன், வாணிதாசன் போன்றோரின் நூல்களை வாசித்து இலக்கிய ஆர்வம் பெற்றார். 'உண்டாலம்ம இவ்வுலகம்' என்ற புறநானூற்றுப் பாடலால் ஈர்க்கப்பட்டு 'இளம்வழுதி' என்ற புனைப்பெயரைச் சூட்டிக் கொண்டு எழுதினார். முதல் கட்டுரை 1954-ல், 'புதுவை முரசு' இதழில் வெளியானது. முதல் கவிதை, 1955-ல், சுரதா நடத்திய 'காவியம்' இதழில் வெளிவந்தது. தொடர்ந்து 'திராவிட நாடு', 'தென்றல்', 'குயில்', 'முல்லை', 'மன்றம்', 'இனமுழக்கம்', 'கல்கி', 'தினமணி', 'முல்லைச்சரம்', 'சௌபாக்கியம்' உள்ளிட்ட பல இதழ்களில் கவிதைகள் வெளியாகின.
நூல்கள்
க. பொ. இளம்வழுதி, 'தெசிணி' நடத்திய 'கவிதை' இதழில் தொடர்ந்து 'ஆண்டவன் அறுபது', 'பொள்ளாச்சி தந்த புனல்' போன்ற சில கவிதைத் தொடர்களை எழுதினார். 'கவிதை' இதழில் தொடராக வெளிவந்த 'சிவப்பு நிலா' என்னும் காப்பிய நூல் முதல் நூலாக வெளியானது. தொடர்ந்து கவிதை, கட்டுரை, திறனாய்வு, வாழ்க்கை வரலாறு எனப் பல நூல்களை எழுதினார். சிறார்களுக்கான பாடல் நூல்களை எழுதினார். 400-க்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதினார்.
வெண்பூக்கள்
க. பொ. இளம்வழுதி, பலவகை யாப்புகளில் வெண்பாக்கள் எழுதினார். அதனை 'வெண்பூக்கள்' என்ற பெயரில் தொகுத்து நுாலாக வெளியிட்டார். அது நூலாக வெளிவருவற்கு முன், 'சங்கப் பலகை' என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சியை நடத்தினார். வெண்பூக்கள் நூலில் உள்ள குறைகளையும் நிறைகளையும் சங்கப் பலகையில் பேசச் செய்து, தமிழ் அறிஞர்கள் சொன்ன குறைகளை நீக்கியும் அறிவுரைகளைப் பின்பற்றியும் செம்மையாக்கம் செய்து 'வெண்பூக்கள்' நூலை வெளியிட்டார்
இதழியல்
க. பொ. இளம்வழுதி, பள்ளி மாணவராக இருந்தபோது 'எடுத்துக்காட்டு', 'சீர்திருத்தம்' என்ற கையேடுகளை நடத்தினார். 1962 முதல் 1970 வரை 'கலம்பகம்' என்ற சிற்றிதழை நடத்தினார்
பதிப்பு
'கவிச்சித்தர் க. பொ. இளம்வழுதி தமிழ்ப்பணி அறக்கட்டளை' என்ற அமைப்பு 2000-த்தில் தோற்றம் பெற்றது. க. பொ. இளம்வழுதி, அவ்வமைப்பின் மூலம் தனது நூல்கள் சிலவற்றை வெளியிட்டார்.
பொறுப்பு
- தென்னாற்காடு மாவட்ட எழுத்தாளர் மன்றத் தலைவர்
- தென்னாற்காடு மாவட்டத் தமிழ்க் கவிஞர் மன்றத்தின் பொதுச் செயலாளர்
- கடலூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சி இயக்கத் தலைவர்
- தமிழ்ப்பணி அறக்கட்டளையின் நிறுவனர், பொருளாளர்
விருதுகள்
- 'சிவப்பு நிலா' காப்பியத்திற்கு தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசு
- 'சிவப்புச் சிந்தனைகள்' நூலுக்கு தமிழக அரசின் பரிசு
- 'வேர்கள்' நூலுக்கு புதுச்சேரி அரசின் பரிசு
- 'வெடித்து முளைத்த விதைகள்' நூலுக்கு சேலம் கே.ஆர்.ஜி. நாகப்பன் - இராசம்மாள் அறக்கட்டளை பரிசு.
- 'வெண்பூக்கள்' நூலுக்கு திருப்பூர் தமிழ்ச்சங்க இலக்கியப் பரிசு
- 'நாளங்கள்' நூலுக்கு, கரூர் கருப்பண்ணன் - செல்லம்மாள் இலக்கியப் பரிசு
- 'விளையாட்டுகள் அன்றும் இன்றும்' நூலுக்குத் தமிழக அரசின் பரிசு
- 'விளையாட்டுகள் அன்றும் இன்றும்' நூலுக்குத் திருப்பூர் தமிழ்ச்சங்கப் பரிசு
- கவிச்சித்தர் பட்டம்
ஆய்வு
- க. பொ. இளம்வழுதியின் 'சிவப்புச் சிந்தனைகள்' கவிதை நூலை ஆராய்ந்து எழிலரசி பாபு ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றார்.
- புலவர் இரா. அரங்கநாதன் க. பொ. இளம்வழுதியின் ஐந்து நூல்களை ஆய்வு செய்து 'கவிசித்தரின் சொல்லோவியங்கள்' என்ற நூலை எழுதினார்.
- 'கவிச்சித்தரின் படைப்புகள் ஒரு கணிப்பு' என்ற திறனாய்வு நூலை கவிஞர் கல்லாடன், புலவர் பொறி, சி. செந்தமிழ்ச்சேய், இலக்கியன் ஆகியோர் தொகுத்து வெளியிட்டனர்.
மறைவு
க. பொ. இளம்வழுதி, மார்ச் 5, 2013 அன்று காலமானார்.
மதிப்பீடு
க. பொ. இளம்வழுதி, பழமைக்கும், புதுமைக்கும் பாலமாகச் செயல்பட்டார். பல்வேறு இலக்கிய அமைப்புகளைத் தொடங்கி கடலூரிலும் புதுச்சேரியிலும் இலக்கியம் வளர்த்தார். இளையோர்களை ஊக்குவித்தார். எத்தனை வகை வெண்பாக்கள் இருக்கின்றனவோ அத்தனை வகையிலும் இளம்வழுதி எழுதியிருக்கும் 'வெண்பூக்கள்' நூல் முக்கியமான வழிகாட்டி நூலாக அறியப்படுகிறது. மரபு வழுவாமல் நூற்றுக்கணக்கான பாடல்களை எழுதியவராகவும், புதுச்சேரியின் குறிப்பிடத்தகுந்த மரபுப் பாவலர்களுள் ஒருவராகவும் க. பொ. இளம்வழுதி அறியப்படுகிறார்.
நூல்கள்
கவிதைத் தொகுப்பு
- சிவப்பு நிலா
- குறுநூறு
- சிவப்புச் சிந்தனைகள்
- வண்ணத் தமிழ்
- வேர்கள்
- ஆண்டவன் அறுபது
- நந்திவர்மன் காதலி
- நிறங்கள்
- சில்லுகள்
- வாக்குமூலம்
- நாளங்கள்
- வெடித்து முளைத்த விதைகள்
- தளிர் (சிறார் பாடல்கள்)
- வெண்பூக்கள்
கட்டுரைத் தொகுப்பு
- ஆரங்கள்
- தமிழைத் தேடி
- தமிழிலக்கிய அறிமுகம்
- விளையாட்டுகள் - அன்றும் இன்றும்
- மரபும் திரிபும் (ஆய்வு)
வரலாற்று நூல்கள்
- வெற்றியின் அறிமுகம் (நேரு வரலாறு)
- இலக்கை நோக்கி (நெல்சன் மண்டேலா வரலாறு)
- வைகறைப்புள் (வாணிதாசன் வரலாறு)
- கார்கில் கதை (கார்கில் போர் வரலாறு)
- போராட்டப் பூமி (வியட்நாம்-ஹோசிமின் வரலாறு)
- நம்முடன் நல்லவர் (இரா. நல்லகண்ணு வரலாறு)
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-Feb-2025, 06:28:45 IST

