under review

செங்குந்த சிலாக்கியர் மாலை

From Tamil Wiki

செங்குந்த சிலாக்கியர் மாலை (பொ.யு. பனிரெண்டாம் நூற்றாண்டு), செங்குந்தர் என்று புகழப்படும் மரபினருள் உயர்ந்தோர் மீது பாடப்பட்ட மாலை நூல். இதனை இயற்றியவர் காஞ்சி வீரபத்திர தேசிகர்.

வெளியீடு

செங்குந்த சிலாக்கியர் மாலை, செங்குந்தர் பிரபந்தத் திரட்டு தொகுப்பு நூலில் இடம்பெற்றது. இம்மாலை நூலை, 1926-ல், காஞ்சி ஸ்ரீ நாகலிங்க முனிவர் பதிப்பித்தார். திருவாரூர் செங்குந்த மகாஜன சங்க நிறுவனர் தி.க.ச. சபாபதி முதலியார் இந்நூலை வெளியிட்டார். சிறுமணவூர் முனிசாமி முதலியாரின் சென்னை சிவகாமி விலாச அச்சுக்கூடத்தில் செங்குந்த சிலாக்கியர் மாலை நூல் அச்சிடப்பட்டது. இந்நூலின் ஆசிரியர், காஞ்சி வீரபத்திர தேசிகர்.

நூல் அமைப்பு

செங்குந்த சிலாக்கியர் மாலை நூலில் கட்டளைக் கலித்துறையால் அமைந்த 37 பாடல்கள் இடம்பெற்றன. நூலின் தொடக்கத்தில் விநாயகர் மீதான காப்புச் செய்யுள் இடம்பெற்றது. தொடர்ந்து நூல் இடம்பெற்றது. நூலின் இறுதியில் வாழ்த்துச் செய்யுள் இடம்பெற்றது. ஒவ்வொரு பாடலும் 'செங்குந்த சிலாக்கியரே' என்ற வரியுடன் முடிவுற்றது.

உள்ளடக்கம்

செங்குந்த சிலாக்கியர் மாலை, செங்குந்தப் படையைக் கொண்டதால் செங்குந்தர் என்று புகழப்படும் மரபினருள் உயர்ந்தவர்கள் மீது பாடப்பட்ட மாலை நூல். சிலாக்கியர் என்பதற்கு உயர்ந்தோர் என்பது பொருள். இம்மாலை நூலில் செங்குந்த மரபில் பிறந்த சான்றோர்கள், வீரர்கள் சிலர் மீதான பாடல்கள் இடம்பெற்றன.

செங்குந்த சிலாக்கியர் மாலை நூலில் கீழ்க்காண்போர் பற்றிய பாடல்கள் இடம்பெற்றன

பாடல்

திருமூலதேவர்

ஒப்புயர் வற்ற சிவாகம மேழ்நான்கி னுண்மையெலாம்
எப்புவ னத்தும் விளங்கவா மேக்கி யிறந்தவுட
லிற்புகுந் தாண்டுக்கொன் றாகவே மூவா யிரமனுவைச்
செப்புறு ஞானக் கதிரோர்செங் குந்த சிலாக்கியரே

நரசிங்கமுனையரையர்

ஒரு நாறு பொன்னை யுலப்பிலி நாட்சைவ வுத்தமர்க்குத்
தருநூறி லன்புக் கெதிர்தூர்த்த வேடன் றனித்துறலும்
இருநூறு பொன்றந் திகலும் புறமத ரேவிடும்பல்
செருநூறும் வாழ்க்கை சிவண்வோர்செங் குந்த சிலாக்கியரே

பெருமிழலைப்பெருந்தகை

கருக்கலை நேர்குழற் சங்கிலி கேள்வனைக் காதலித்த
பெருக்கம தாற்சித்தி யாவையும் பெற்றவன் பிஞ்ஞகன்பால்
இருக்கை பெறலறிந் தாற்றாது யோ லிணங்கிமுன்னர்
திருக்கயி லைப்பதி மேயோர்செங் குந்த சிலாக்கியரே

எறிபத்த நாயனார்

என்று மலர்பறித் தேறூர்திக் கார மியற்றுந்தொண்டர்
நின்றல றச்சிந்துந் தும்பியொ டைவர் நெடுமழுவால்
பொன்ற விடுத்திறை மெய்யன்புக் கின்னுயிர் போக்கவெண்ணிச்
சென்ற வுயிரைமீள் வித்தோர்செல் குந்த சிலாக்கியரே.

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 11-Dec-2024, 09:54:39 IST