under review

கச்சியப்ப முனிவர்

From Tamil Wiki
கச்சியப்ப முனிவர்

கச்சியப்ப முனிவர் (பொ.யு. 18-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர், சைவ அறிஞர். ’கவிராட்சதர்’ என்று அழைக்கப்பட்டார்.

வாழ்க்கைக் குறிப்பு

கச்சியப்ப முனிவர் தொண்டை மண்டலம் திருத்தணிகை எனும் ஊரில் காஞ்சிபுரப் பரம்பரை சைவ வேளாளர் மரபில் பிறந்தார். பாலபாடம் கற்றபின் சிவஸ்தல யாத்திரை செய்தார். சிவஞான முனிவரின் மாணவர்.

சைவ வாழ்க்கை

கச்சியப்ப முனிவர் திருவாடுதுறை நமச்சிவாய தம்பிரானின் அனுக்கிரகத்தால் சின்னப்பட்டத்தில் இருந்தார். வேலப்பதேசிகரிடம் தீட்சை பெற்றார். சிவஞான யோகீஸ்வரரை ஆசிரியராகப் பெற்றார். அவரிடம் இலக்கண, இலக்கியம், தருக்கம், பதிசாத்திரம் பாடம்கேட்டு வித்துவான் பட்டம் பெற்றார். திருத்தணிகை கந்தப்பையருக்கு ஆசிரியராக இருந்தார்.

இலக்கிய வாழ்க்கை

கச்சியப்ப முனிவர் இலக்கணம், இலக்கியம், சைவ சித்தாந்தம் என்ற மூன்றிலும வல்லவர். 'திருத்தணிகைப் புராணம்', 'பூவாளூர்ப் புராணம்', 'பேரூர்ப் புராணம்', 'விநாயக புராணம்', 'திருவானைக்காப் புராணம்', காஞ்சிப் புராணப் பிற்பகுதி, 'சென்னை விநாயகர் பிள்ளைத் தமிழ்', 'கச்சியானந்த ருத்ரேசர் வண்டு விடு தூது', 'பதிற்றுப் பத்தாந்தாதி', 'திருத்தணிகையாற்றுப் படை', 'பஞ்சாக்கர அந்தாதி' முதலிய நூல்களை இயற்றினார். கச்சியப்ப முனிவர் மீது நெஞ்சுவிடுதூது பாடப்பட்டுள்ளது. அதன் ஆசிரியர் தெரியவில்லை.

பாடல் நடை

  • விநாயக புராணம்

"மரந்துளைத்த கணையானுஞ் சோவெறிந்த திறலானு
மதிக்குந் தோறும்
சிரந்துளக்க அலைகடலுஞ் சேணிகந்த பெருவரையுந்
திறத்திற் குன்றக்
கரந்துளக்குங் குறுமுனிக்குங் கருத்தின்மயல் பூட்டியகை
தவஞ்சால் வெற்பின்
உரந்துளைத்த சேயிலைவேல் வலனுயர்த்த இளையவனை
யுளத்துள் வைப்பாம்"

மறைவு

கச்சியப்ப முனிவர் பொ.யு. 1750-ல் காலமானார் என பழைய செய்யுளில் காணப்படுகிறது.

நூல்கள் பட்டியல்

  • திருத்தணிகைப் புராணம்
  • பூவாளூர்ப் புராணம்
  • பேரூர்ப் புராணம்
  • விநாயக புராணம்
  • திருவானைக்காப் புராணம்
  • காஞ்சிப் புராணப் பிற்பகுதி
  • சென்னை விநாயகர் பிள்ளைத் தமிழ்
  • கச்சியானந்த ருத்ரேசர் வண்டு விடு தூது
  • பதிற்றுப் பத்தாந்தாதி
  • திருத்தணிகையாற்றுப் படை
  • பஞ்சாக்கர அந்தாதி

உசாத்துணை


✅Finalised Page