under review

சூ. தாமஸ்

From Tamil Wiki

சூ. தாமஸ் (சூசை உடையார் தாமஸ்) (பிறப்பு: ஆகஸ்ட் 04, 1910) தமிழ்ப் புலவர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். ‘ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள்' என்ற தலைப்பில் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை மீது 19 சிற்றிலக்கிய நூல்களைப் படைத்தார்.

பிறப்பு, கல்வி

சூ. தாமஸ், ஆகஸ்ட் 04, 1910 அன்று, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கோட்டாரப்பட்டி என்னும் கோட்டூரில், சூசை உடையார் - பாப்பு என்னும் சூசையம்மாள் இணையருக்குப் பிறந்தார். திருக்காட்டுப்பள்ளி சிவசாமி அய்யர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். தொடர்ந்து உறவினர் இல்லத்தில் தங்கி தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். 1932-ல், மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய பிரவேசப் பண்டிதத் தேர்வில் வெற்றிபெற்றார். 1936-ல் திருவையாறு தமிழ்க் கல்லூரியில் பயின்று தமிழில் வித்துவான் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

சூ. தாமஸ், 1938-ல், தூத்துக்குடி தூய சவேரியார் உயர்நிலைப்பள்ளியில் ஓராண்டு தமிழாசிரியராகப் பணியாற்றினார். 1939 முதல் தஞ்சை தூய இருதய மகளிர் உயர்நிலைப்பள்ளியில் 22 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். மனைவி அடைக்கலமேரி. இவர்களுக்கு ஆறு மகன்கள்.

இலக்கிய வாழ்க்கை

சூ. தாமஸ், கிறித்தவச் சமயக் கொள்கைகளில் ஆழ்ந்த நம்பிக்கையும் பற்றும் கொண்டிருந்தார். கிறித்தவ இலக்கியங்கள் மீது ஆர்வம் கொண்டு செயல்பட்டார். தனிப் பாடல்களாகவும், கவிதைகளாகவும் பல படைப்புகளை எழுதினார். வேளாங்கண்ணித் திருத்தலத்தின் மீதும் அங்குக் கோயில் கொண்டுள்ள ஆரோக்கிய மாதா மீதும் மிகுந்த பற்றுக் கொண்டிருந்த சூ. தாமஸ், ஆரோக்கிய அன்னை மீது பதிகம், மாலை, அந்தாதி, வெண்பா, பிள்ளைத்தமிழ் போன்ற சிற்றிலக்கியங்களைப் படைத்தார். அவை தொகுக்கப்பட்டு ‘திருவருள்மாலை’ என்ற தலைப்பில் 1977-ம் ஆண்டு வெளிவந்தது.

1995-ல், சூ. தாமஸ் இயற்றிய 19 சிற்றிலக்கியங்கள் தொகுக்கப்பட்டு, ’ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள்’ என்ற தலைப்பில் நூலாக வெளிவந்தது. இந்நூல் ஜனவரி 1, 1995 அன்று தஞ்சாவூரில் நிகழ்ந்த உலகத் தமிழ் மாநாட்டில், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் வெளியிடப்பட்டது. புலவர் நாக. சண்முகம் இந்நூலின் பதிப்பாசிரியராகச் செயல்பட்டார்.

இதழியல்

சூ. தாமஸ் கத்தோலிக்க ஊழியன், சத்திய நேசன் முதலிய மாத இதழ்களில் இறை வணக்கப் பாடல்களை எழுதினார். 'ஞான தூதன்', வேளாங்கண்ணிக் குரலொளி போன்ற இதழ்களில் பல கவிதைகளை எழுதினார். வேளாங்கண்ணிக் குரலொளி இதழில் ’வெண்பாப் போட்டி’க்குப் பொறுப்பேற்று நடத்தினார்.

பொறுப்பு

  • தஞ்சை வேதநாயகர் எழுத்தாளர் கழகத் தலைவர்.
  • தஞ்சை வேதநாயகர் எழுத்தாளர் கழகச் சிறப்பு உறுப்பினர்.

விருதுகள்

கவிக்கடல் பட்டம்

மறைவு

சூ. தாமஸ் மறைவுச் செய்தி குறித்த விவரங்களை அறிய இயலவில்லை.

மதிப்பீடு

சூ. தாமஸின் படைப்புகள் பல சந்தங்களில் எழுதப்பட்டவை. எளிமையும், இனிமையும் உடையவை. இயற்கையோடு இணைந்து பாடப்பட்டவை. இறைப்பற்று, தமிழ்ப்பற்று, சமுதாயப்பற்று நிறைந்தவை. ”புலவர்‌ தாமஸ்‌ அவர்களின்‌ பாடல்கள்‌ கல்லூரி மாணவர்கட்குப்‌ பாடமாகவும்‌, பல்கலைக்‌ கழகங்களிற்‌ ஆய்வு மேற்கொள்ளும்‌ தகுதியினையும்‌ பெற்றுள்ளன” என்று பேராயர் பா. ஆரோக்கியசாமி குறிப்பிட்டார்.

சூ. தாமஸின் படைப்புகள் பற்றி, முனைவர் சி. பாலசுப்ரமணியம், “இந்நூலாசிரியர்‌ முறையாகத்‌ தமிழ்‌ பயின்றவராதலின்‌ தம்‌ கவிதைகளில்‌ தாம் பயின்ற தமிழ்‌ இலக்கியங்களின்‌ சொற்களையும்‌, தொடர்களையும்‌, கருத்துக்‌களையும்‌ அள்ளித்‌ தெளித்துத்‌ தமிழ்‌ வளத்தைக்‌ காட்டியிருப்பது பயில்தொறும்‌ பூரிக்கச்‌ செய்கிறது.” என்று மதிப்பிட்டார்.

நூல்கள்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-May-2024, 08:19:48 IST