under review

கோட்டூர் மரியன்னை பதிகம்

From Tamil Wiki

கோட்டூர் மரியன்னை பதிகம் (1995), கிறிஸ்தவச் சிற்றிலக்கிய நூல்களுள் ஒன்று. ’ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள்’ தொகுப்பு நூலில் இந்நூல் இடம்பெற்றது. இந்நூலின் ஆசிரியர் சூ. தாமஸ்.

வெளியீடு

கோட்டூர் மரியன்னை பதிகம், ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள் தொகுப்பு நூலில் இடம்பெற்றது. இந்நூல் ஜனவரி 1, 1995 அன்று தஞ்சாவூரில் நிகழ்ந்த உலகத் தமிழ் மாநாட்டில், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் வெளியிடப்பட்டது. புலவர் நாக. சண்முகம் இந்நூலைப் பதிப்பித்தார். நூலின் ஆசிரியர்: சூ. தாமஸ்.

ஆசிரியர் குறிப்பு

சூசை உடையார் தாமஸ் என்னும் சூ. தாமஸ் தஞ்சை தூய இருதய மகளிர் உயர்நிலைப்பள்ளியில், 22 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

வேளாங்கண்ணி அன்னைத் திருத்தலத்தின் மீதும் அங்குக் கோயில் கொண்டுள்ள ஆரோக்கிய மாதா மீதும் மிகுந்த பக்தி கொண்டு பல சிற்றிலக்கிய நூல்களைப் படைத்தார். அவை தொகுக்கப்பட்டு ’ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள்’ என்ற தலைப்பில் நூலாக வெளிவந்தது.

நூல் அமைப்பு

கோட்டூர் மரியன்னை பதிகத்தில் பத்துப் பாடல்கள் இடம் பெற்றன.

உள்ளடக்கம்

புலவர் சூ. தாமஸ், தான் வாழ்ந்த கோட்டாரப்பட்டி என்னும் கோட்டூரில் எழுந்தருளியுள்ள ஆரோக்கிய அன்னை மீது பாடிய பாடல்களே கோட்டூர் மரியன்னை பதிகம். இப்பதிக நூலில் அன்னையின் பெருமை, சிறப்பு, ஆரோக்கிய அன்னையைப் பிரிந்து வாழ முடியாத தன் மனம், ஏக்கம் பற்றிப் புலவர் பாடியுள்ளார். தான் செய்த தவறுகளை மன்னிக்கும்படியும், தன்னையும் குடும்பத்தையும் எப்போதும் காத்தருளும்படியும் அன்னையிடம் வேண்டுகிறார்.

பாடல் நடை

அன்னையின் பெருமை

காணரிய வுருவாகி அருவாகி யென்றுமுள
கத்தனின்‌ சித்த மதிலே
கருவுற்ற செல்‌ வியே மருவற்ற கன்னியே!
ககனவா னவரும்‌ என்றும்‌
பூணரிய வரமுற்ற புனிதையே! வனிதையே!
பொற்புநிறை கற்பி னுருவே!
பூரணக்‌ கடவுள்தனை ஆரண முரைத்தபடி
புவியிற்‌ கொணர்ந்த தருவே!
சேணுறையும்‌ அர்ச்சயரும்‌ வானவரும்‌ நின்றுபணி
செய்யப்‌ பிறந்த திருவே!
செகமதனிலேசுவக்‌ கீனன்னமாளிடம்‌
சென்மித்து வந்த மகவே!
மாணுறு மொழிப்புலவர்‌ காணுற அமைத்தகலை
மன்றில்முத்‌ தமிழ்‌ முழக்கம்‌
மாறாத கோட்டுநகர்‌ பேராலயத்‌ துறையும்‌
மங்கை ஆரோக்ய மரியே!

அன்னையின் பிரிவுத் துயரம்

வானமழை காணாத பயிர்போலும் நீரற்ற
வாவியுறு மீன்கள்‌ போலும்‌
வளரன்பு சொரிகின்ற தாய்முகம்‌ காணாது
வாழ்கின்ற குழவி போலும்‌
காணுமிரு விழியற்ற வுடல்போலும்‌ இறகற்ற
கானகப்‌ பறவை போலும்‌
கதிரொளி படாதுற்ற வனசமலர்‌ போலும்‌
கரைசெலாக்‌ கப்பல்‌ போலும்‌
ஈனமுறு பாவியான்‌ ஞானநா யகியுந்தன்‌
இணையடி பிரிந்து வாழேன்‌
என்பதறி யாய்கொலோ மன்பதைகள்‌ யார்க்கும்நீ
இனிதுற்ற தாய்‌ அல்லவோ
பீனமணி மாடமதில்‌ நீள்கொடிகள்‌ வானமுகில்‌
பெயராம லேதடுக்கும்‌
பெற்றியுறு கோட்டுநகர்‌ வெற்றிமக ளாய்ப்‌ பெருமை
பெற்றஆ ரோக்ய மரியே

மதிப்பீடு

இறை நம்பிக்கை, இறைவேண்டல், பாவத்திற்காக மனம் வருந்ததல் ஆகியவை கோட்டூர் மரியன்னை பதிகத்தின் பாடுபொருள்கள். இது கற்பனை நயம், சொல்வளமும் மிக்க நூல். கோட்டூர் மரியன்னை மீது பாடப்பட்ட ஒரே பதிக நூலாக, கோட்டூர் மரியன்னை பதிக நூல் அறியப்படுகிறது.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 03-Jun-2024, 10:18:15 IST