under review

நசராபுரி நாயகி மாலை

From Tamil Wiki

நசராபுரி நாயகி மாலை (1995), கிறிஸ்தவச் சிற்றிலக்கிய நூல்களுள் ஒன்று. ’ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள்’ தொகுப்பு நூலில் இந்நூல் இடம்பெற்றது. இந்நூலின் ஆசிரியர் சூ. தாமஸ்.

வெளியீடு

நசராபுரி நாயகி மாலை, ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள் தொகுப்பு நூலில் இடம்பெற்றது. இந்நூல் ஜனவரி 1, 1995 அன்று தஞ்சாவூரில் நிகழ்ந்த உலகத் தமிழ் மாநாட்டில், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் வெளியிடப்பட்டது. புலவர் நாக. சண்முகம் இந்நூலைப் பதிப்பித்தார். நூலின் ஆசிரியர்: சூ. தாமஸ்.

ஆசிரியர் குறிப்பு

சூசை உடையார் தாமஸ் என்னும் சூ. தாமஸ் தஞ்சை தூய இருதய மகளிர் உயர்நிலைப்பள்ளியில், 22 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

வேளாங்கண்ணித் திருத்தலத்தின் மீதும் அங்குக் கோயில் கொண்டுள்ள ஆரோக்கிய மாதா மீதும் மிகுந்த பக்தி கொண்டு பல சிற்றிலக்கிய நூல்களைப் படைத்தார். அவை தொகுக்கப்பட்டு ’ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள்’ என்ற தலைப்பில் நூலாக வெளிவந்தன.

நூல் அமைப்பு

நசராபுரி நாயகி மாலை, நாசரேத்தூரின் அன்னை மீது பாடப்பட்ட சிற்றிலக்கிய நூல். நசராபுரி என்பது நாசரேத்து என்ற ஊரைக் குறிக்கும். அவ்வூரில் வாழும் அன்னையை நாயகி என்று புலவர் குறித்துள்ளார். இந்நூலில் எட்டு அடிகள் கொண்ட 37 பாடல்கள் இடம் பெற்றன.

உள்ளடக்கம்

நசராபுரி நாயகி மாலையில் நாசரேத்து அன்னையிடம் தன் துன்பங்களயும், துயரங்களையும் களைந்து நல்வாழ்வு அளிக்கும்படி புலவர் சூ. தாமஸ் வேண்டுகிறார்.

பாடல் நடை

அன்னையிடம் வேண்டுதல்

தினைக்கும்‌ பயனின்றி யூனுடல்‌
தாங்குமித்‌ தீயனென்னைப்‌
பிணைக்கும்‌ துயர்களைவார்‌
இனி யாரென்று பேசிடுவாய்‌
இணைக்கும்‌ துகிலி லுறப்பொதிந்து
ஏந்திய எந்தைகண்ணீர்‌
நனைக்கும்‌ திருப்புயத்‌ தாய்‌
நச ராபுரி நாயகியே!

கிடத்தும் பவத்தினி லுறாமல்
என்மனக் கிலேச மெல்லாம்
கடத்தும் படிக்குன் கருணை
செய் வாய் கதி யாய்ப்புகுந்த
இடத்தும் திருவுளம் மாறாது
இருந்துற்ற ஈரறமும்
நடத்தும் தவச் செல்வி யே
நச ராபுரி நாயகியே

மதிகொண்ட பங்கயத்‌ தாளால்‌
மிதித்தென்‌ மனக்குரங்கைக்‌
கதிகொண்ட செங்கர மாலைக்‌
கயிற்றினில்‌ கட்டிவைப்பாய்‌
குதிகொண்ட வெள்ளப்‌ புதுநீர்‌
மதகில்‌ குதித்துவிழும்‌
நதிகொண்ட நாடுடை யாய்‌
நச ராபுரி நாயகியே

வாழும்‌ படிக்குனை வந்தடையாது
அந்த வையகத்தில்‌
மாளும்‌ துயர்க்கிட மாகி
நொந் தேனுன்‌ மலரடிக்கே
வீழும்‌ தமியனைத்‌ தள்ளாமல்‌
ஏற்று விரும்பிஎந்த
நாளும்‌ புரந்தருள்‌ வாய்‌
நச ராபுரி நாயகியே

கூடா வொழுக்கமும்‌ வஞ்சமும்‌
சூதும்‌ குடியிருக்கும்‌
காடாகும்‌ என்மனத்து உன்னரு ளாம்‌
ஒளி காட்டிநிற்பாய்‌
வாடாத்‌ தவத்தரும்‌ தூயரும்‌
சேயரும்‌ வாழ்த்தவும்பர்‌
நாடாள்‌ குலக்கொடி யே
நச ராபுரி நாயகியே

மதிப்பீடு

நசராபுரி நாயகி மாலை, நாசரேத்தில் உறையும் அன்னை மீது இனிய நடையில் எளிய தமிழில் பாடப்பட்ட கிறித்தவச் சிற்றிலக்கிய நூல்களுள் ஒன்றாக அறியப்படுகிறது.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-May-2024, 08:22:27 IST