under review

நசரை நான்மணி மாலை

From Tamil Wiki

நசரை நான்மணி மாலை (1995), கிறிஸ்தவச் சிற்றிலக்கிய நூல்களுள் ஒன்று. ’ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள்’ தொகுப்பு நூலில் இந்நூல் இடம்பெற்றது. இந்நூலின் ஆசிரியர் சூ. தாமஸ்.

வெளியீடு

நசரை நான்மணி மாலை, ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள் தொகுப்பு நூலில் இடம்பெற்றது. இந்நூல் ஜனவரி 1, 1995 அன்று தஞ்சாவூரில் நிகழ்ந்த உலகத் தமிழ் மாநாட்டில், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் வெளியிடப்பட்டது. புலவர் நாக. சண்முகம் இந்நூலைப் பதிப்பித்தார். நூலின் ஆசிரியர்: சூ. தாமஸ்.

ஆசிரியர் குறிப்பு

சூசை உடையார் தாமஸ் என்னும் சூ. தாமஸ் தஞ்சை தூய இருதய மகளிர் உயர்நிலைப்பள்ளியில், 22 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

வேளாங்கண்ணித் திருத்தலத்தின் மீதும் அங்குக் கோயில் கொண்டுள்ள ஆரோக்கிய மாதா மீதும் மிகுந்த பக்தி கொண்டு பல சிற்றிலக்கிய நூல்களைப் படைத்தார். அவை தொகுக்கப்பட்டு ’ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள்’ என்ற தலைப்பில் நூலாக வெளிவந்தன.

நூல் அமைப்பு

நசரை நான்மணி மாலை, நசரை நாயகனான இயேசுவின் சிறப்புக்களை மாலையாகக் கூறும் நூல். நசரை என்பது இயேசு பிறந்த நாசரேத்தைக் குறிக்கும். நசரை நான்மணி மாலை வெண்பா, கலித்துறை, ஆசிரியப்பா, விருத்தம் ஆகிய நான்கு பா வகைகளைக் கொண்டது. அந்தாதி அமைப்பில் இயற்றப்பட்ட இந்நூலில் 40 பாடல்கள் உள்ளன.

உள்ளடக்கம்

நசரை நான்மணி மாலை நூலில் இயேசுவின் பெருமை, சிறப்பு, அவரது கருணை உள்ளம், பண்பு நலன்கள் ஆகியன சிறப்பிக்கப்பட்டுள்ளன.

பாடல் நடை

இயேசுவிடம் வேண்டுதல்

பொருவாப்‌ புகழ்நசரைப்‌ புண்ணியனே பண்டோர்‌
குருவாய்‌ மறையளித்த கோவே திருவாரும்‌
பொன்னே மணியே புரைதீர்‌ மருந்தே என்‌
மன்னே யருள்தாள்‌ மலர்‌

மலரும்‌ பவப்பிணிக்கு ஓர்மருந்‌ தாய்‌
என்‌ மனத்தினிருள்‌
புலரும்‌ படித்தவழ்‌ பொற்சுட ரே!
பனி தத்துயர்ந்தோர்‌
பலருந்‌ தொழுநசரைக் கொழுந்தே
வினைப்‌ பாலுழன்றிங்கு
அலருந்‌ தவச்சிறி யேற்கு௨ண்மை
ஞானம்‌ அளித்தருளே!

ஆவி யுண்டெழு காலன்‌ வருமென அஞ்சுகின்றது
எனதுயிர்‌ ஆயினும்‌
தாவி யுண்ட சகதியில்‌ மீளவும் தள்ளுகின்றது
எனைப்புவி மாயைதான்‌
மேவி யுண்டிடும்‌ நின்னுடல்‌ பெற்றிடா மிக்கப்‌ பாவியை
இக்கணம்‌ ஆளுவாய்‌
காவி யுண்டகண்‌ மாமரி சேயனே! கத்தனே
நசரைப்பதி நேயனே

மதிப்பீடு

நசரை நான்மணி மாலை இயேசுவின் பெருமையை, சிறப்பை, இயேசுபெருமானிடம் புலவர் கூறும் வேண்டுதலை முன் வைக்கும் நூலாக அறியப்படுகிறது.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-May-2024, 08:23:04 IST