under review

நற்செய்தி நங்கையர் மாலை

From Tamil Wiki

நற்செய்தி நங்கையர் மாலை ((1995), கிறிஸ்தவச் சிற்றிலக்கிய நூல்களுள் ஒன்று. ’ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள்’ தொகுப்பு நூலில் இந்நூல் இடம்பெற்றது. இந்நூலின் ஆசிரியர் சூ. தாமஸ்.

வெளியீடு

நற்செய்தி நங்கையர் மாலை, ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள் தொகுப்பு நூலில் இடம்பெற்றது. இந்நூல் ஜனவரி 1, 1995 அன்று தஞ்சாவூரில் நிகழ்ந்த உலகத் தமிழ் மாநாட்டில், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் வெளியிடப்பட்டது. புலவர் நாக. சண்முகம் இந்நூலைப் பதிப்பித்தார். நூலின் ஆசிரியர்: சூ. தாமஸ்.

ஆசிரியர் குறிப்பு

சூசை உடையார் தாமஸ் என்னும் சூ. தாமஸ் தஞ்சை தூய இருதய மகளிர் உயர்நிலைப்பள்ளியில், 22 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

வேளாங்கண்ணித் திருத்தலத்தின் மீதும் அங்குக் கோயில் கொண்டுள்ள ஆரோக்கிய மாதா மீதும் மிகுந்த பக்தி கொண்டு பல சிற்றிலக்கிய நூல்களைப் படைத்தார். அவை தொகுக்கப்பட்டு ’ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள்’ என்ற தலைப்பில் நூலாக வெளிவந்தன.

நூல் அமைப்பு

நற்செய்தி நங்கையர் மாலையில் 225 பாடல்கள் அமைந்துள்ளன. கீழ்க்காணும் நற்செய்தி நங்கையர்களைப் பற்றிய பாடல்கள் இந்நூலில் இடம் பெற்றன.

  • சிமியோன் மாமி
  • சமாரியப் பெண்
  • பாவி மரியாள்
  • நயீன் விதவை
  • பிடிபட்ட பெண்
  • சிறுபெண்ணூம் - ஒருபெண்ணும்
  • கனானேயப் பெண்
  • கூனற்பெண்
  • மார்த்தா மரியாள்
  • பிலாத்தின் மனைவி
  • வெரோணிக்காள்

உள்ளடக்கம்

நற்செய்தி நங்கையர் மாலை, விவிலியத்தில் நற்செய்தி நூல்களில் இடம்பெற்ற நங்கையர்களின் வாழ்க்கை வரலாற்றைக் கூறுகிறது. அவர்களின் வாழ்க்கை, அவர்கள் எதிர்கொண்ட சிக்கல்கள், துயரங்கள், மாறா இறைப்பற்று, இயேசு பெருமானால் அவர்கள் ஆட்கொள்ளப்பட்ட விதம், அவர்களின் புகழ், பெருமை போன்ற செய்திகள் நற்செய்தி நங்கையர் மாலையில் இடம்பெற்றன.

பாடல் நடை

சிமியோன் மாமி நோய் தீர்த்தது

நோயொடு புலம்பி மேனி
நுடங்கியே வியர்வை கண்டு
பாயொடு கிடந்தாள்‌ தன்னைப்‌
பரிவொடு குனிந்து நோக்கித்‌
தாயொடு நிகரும்‌ அண்ணல்‌
கட்டளை தருத லோடும்‌
தீயொடு நிகரும்‌ காயல்‌
நோயுடன்‌ தீர்ந்த தன்றே

பாவி மரியாள் இயேசுவைத் தொழுதல்

போற்றினாள்‌ புகழ்ந்தாள்‌ ஐயன்‌
பொருவிலாக்‌ கமலத்‌ தாளில்‌
ஊற்றினாள்‌ தைலம்‌ தன்னை
ஒழிவிலா முத்தம்‌ ஈந்து
சாற்றினாள்‌ குறைகள்‌ கண்ணீர்ச்‌
சலதியால்‌ நனைத்தவ்‌ வீரம்‌
மாற்றினாள்‌ துடைத்தாள்‌ வாச
மணந்தருங்‌ கூந்த லாலே

கூனற் பெண்ணுக்கு அருள்

வாயிலின்‌ புறத்தே வந்த
வள்ளலும்‌ அவளைக்‌ கூவித்‌
தாயினும்‌ பரிவு கொண்டு
தன்‌ துயர்‌ வினவ லோடும்‌
நாயினும்‌ கடைய ளையா
நண்ணியோர்‌ பதினெட்‌ டாண்டு
தேயினும்‌ பிடித்த பீடை
தீர்ந்திடா அடிமை யென்றாள்‌.

மங்கையி னுரையைக்‌ கேட்ட
மனுமகன்‌ மயங்க வேண்டா
நங்கையுன்‌ குறைகள்‌ தீரும்‌
நற்சுகம்‌ அடைவாய்‌ என்னப்‌
பங்கய மலர்க்கை கொண்டு
பாவையைத்‌ தொடுத லோடும்‌
அங்கவள்‌ நிமிர்ந்து தோன்றி
அலகையும்‌ விலக நின்றாள்

மார்த்தா மரியாள்

நற்பணி புரிந்த மார்த்தாள்‌
நங்கையைத்‌ தேடி ஐயன்‌
பொற்பதத்‌ தருகே கண்டு
புனிதனே பணிக ளெல்லாம்‌
தப்பியே கிடக்க இந்தத்‌
தையலென்‌ செய்தா ளென்ன
ஒப்பிலான்‌ மார்த்தாள்‌ தன்னை
நோக்கியே உரைக்க லுற்றார்‌

பூவைநீ புறமா யுள்ள
செயல்களில்‌ கவலை பூண்டாய்‌
பாவையோ மிகவும்‌ நல்ல
பங்கினைத்‌ தெரிந்து கொண்டாள்‌
தேவையு மதுவே இந்தச்‌
சேயிழை பெற்ற பங்கு
யாவையும்‌ பறித்துச்‌ செல்ல
யார்க்குமே இயலா தென்றார்‌

மதிப்பீடு

நற்செய்தி நங்கையர் மாலை, புனித விவிலியத்தில் இடம் பெற்ற பெண்களின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூலாக அறியப்படுகிறது.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-May-2024, 08:23:41 IST