under review

நன்று நாற்பது

From Tamil Wiki

நன்று நாற்பது (1995), கிறிஸ்தவச் சிற்றிலக்கிய நூல்களுள் ஒன்று. ’ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள்’ தொகுப்பு நூலில் இந்நூல் இடம்பெற்றது. இந்நூலின் ஆசிரியர் சூ. தாமஸ்.

வெளியீடு

நன்று நாற்பது, ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள் தொகுப்பு நூலில் இடம்பெற்றது. இந்நூல் ஜனவரி 1, 1995 அன்று தஞ்சாவூரில் நிகழ்ந்த உலகத் தமிழ் மாநாட்டில், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் வெளியிடப்பட்டது. புலவர் நாக. சண்முகம் இந்நூலைப் பதிப்பித்தார். நூலின் ஆசிரியர்: சூ. தாமஸ்.

ஆசிரியர் குறிப்பு

சூசை உடையார் தாமஸ் என்னும் சூ. தாமஸ் தஞ்சை தூய இருதய மகளிர் உயர்நிலைப்பள்ளியில், 22 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

வேளாங்கண்ணித் திருத்தலத்தின் மீதும் அங்குக் கோயில் கொண்டுள்ள ஆரோக்கிய மாதா மீதும் மிகுந்த பக்தி கொண்டு பல சிற்றிலக்கிய நூல்களைப் படைத்தார். அவை தொகுக்கப்பட்டு ’ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள்’ என்ற தலைப்பில் நூலாக வெளிவந்தன.

நூல் அமைப்பு

நன்று நாற்பது நூலில் நாற்பது வெண்பாக்கள் இடம்பெற்றன. முதலில் தெய்வ வணக்கம் இடம்பெற்றது. தெய்வ வணக்கத்தில் பிதா, மகன், பரிசுத்த ஆவி என்னும் திரியேகன் வணங்கப்படுகிறார். தொடர்ந்து நாற்பது வெண்பாக்கள் இடம்பெற்றன.

உள்ளடக்கம்

நன்று நாற்பது நானாற்பது என்னும் சிற்றிலக்கிய வகைமையைச் சார்ந்தது. இனியவை நாற்பது, இன்னா நாற்பதை அடியொற்றி, அறக்கருத்துக்களை எடுத்துரைக்கும் நோக்கில் இயற்றப்பெற்றது. ஈகை, தீண்டாமை இனிய சொல் கூறல், பிறருக்கு உதவுதல், வீண் பெருமை பேசாதிருத்தல் என மனிதர்கள் வாழ்வில் பின்பற்றத்தக்க 40 அறக்கருத்துக்களை விளக்குகிறது. இயேசுவின் பெருமை, சிறப்புகளும், வணக்கமும் ஆங்காங்கே கூறப்பட்டுள்ளன. திருக்குறள் கருத்துக்களும் நூலில் இடம்பெற்றன.

பாடல் நடை

பொன்றாத நன்மைப்‌ பொருவில்‌ ஓருகடவுள்‌
தன்றாள்‌ மறவாத்‌ தகைநன்று - குன்றாது
தன்போல்‌ பிறரைத்‌ தரையில்‌ நினைந்தவரோடு
அன்பாய்‌ அமைந்தொழுகல்‌ நன்று.

வையமிசைத்‌ தெய்வ வழிபாடும்‌ வான்‌ துறவும்‌
ஐயமிலாத்‌ தொண்டும்‌ அமையின்‌ மிகநன்றே
துய்ய பரன்பெயரால்‌ பொய்யாணை சத்தியங்கள்‌
செய்ய நினையாமை நன்று

தேவன்‌ திருநாளைத்‌ தேயப்‌ பெருநாளை
ஆவலுடன்‌ போற்றி அறம்புரிதல்‌ முன்நன்றே
காவலன்‌ தாய்தந்தை கற்றார்‌ குருக்களொடு
நாவலரைப்‌ போற்றுதலும்‌ நன்று

இல்லெனினும் ஈதல் இனிய மொழிகூறல்
புல்லெனினும் கொண்டாரைப் போற்றுஞ்செயல் நன்றே
பொல்லா ரினியமொழி போற்றாது கைத்திடினும்
நல்லார் மொழிகோடல் நன்று

அல்லனவே செய்வான்‌ எனினும்‌ அவன்பின்னர்ச்‌
சொல்லாது கண்முன்னர்‌ சொல்லும்‌ திறல்நன்றே
வல்லாமைக்‌ குத்தான்‌ வருந்தும்‌ செயலன்றி
உள்ளாரை எள்ளாமை நன்று

சேராமை தீயரொடு சீரில்‌ படக்காட்சி
பாராமை காமம்‌ பயிலாமை முன்நன்றே
போறாமை யாலே பிறர்தம்‌ புகழ்குறையக்‌
கூறாமை மற்றெதினும்‌ நன்று

மதிப்பீடு

நாநாற்பது என்னும் இலக்கிய வகைமையில் இயற்றப்பட்ட நன்று நாற்பது நூல், மானுடர்கள் வாழ்வில் பின்பற்றத் தக்க நற்செயல்களைக் கூறுகிறது. இனிய, எளிய தமிழில் பாடப்பட்ட இந்நூல் பல்வேறு உவமை, உருவக இலக்கிய நயங்களுடன் அமைந்துள்ளது. கிறிஸ்தவச் சிற்றிலக்கியங்களில் ‘நாற்பது’ என்னும் இலக்கிய வகைமையில் இயற்றப்பட்ட அரிய நூலாக நன்று நாற்பது நூல் அறியப்படுகிறது.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-May-2024, 08:24:27 IST