under review

வேளைச் சகாய மாலை

From Tamil Wiki

வேளைச் சகாய மாலை (1995), கிறிஸ்தவச் சிற்றிலக்கிய நூல்களுள் ஒன்று. ’ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள்’ தொகுப்பு நூலில் இந்நூல் இடம்பெற்றது. இந்நூலின் ஆசிரியர் சூ. தாமஸ்.

வெளியீடு

வேளைச் சகாய மாலை, ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள் தொகுப்பு நூலில் இடம்பெற்றது. இந்நூல் ஜனவரி 1, 1995 அன்று தஞ்சாவூரில் நிகழ்ந்த உலகத் தமிழ் மாநாட்டில், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் வெளியிடப்பட்டது. புலவர் நாக. சண்முகம் இந்நூலைப் பதிப்பித்தார்.

ஆசிரியர் குறிப்பு

சூசை உடையார் தாமஸ் என்னும் சூ. தாமஸ், தஞ்சை தூய இருதய மகளிர் உயர்நிலைப்பள்ளியில், 22 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

வேளாங்கண்ணித் திருத்தலத்தின் மீதும் அங்குக் கோயில் கொண்டுள்ள ஆரோக்கிய மாதா மீதும் மிகுந்த பக்தி கொண்டு பல சிற்றிலக்கிய நூல்களைப் படைத்தார். அவை தொகுக்கப்பட்டு ’ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள்’ என்ற தலைப்பில் நூலாக வெளிவந்தன.

நூல் அமைப்பு

வேளைச் சகாய மாலை, வேளாங்கண்ணி அன்னை மீது பாடப்பட்ட சிற்றிலக்கிய நூல். இந்நூலில் 35 பாடல்கள் உள்ளன. கீழ்க்காணும் பதினேழு தலைப்புகளில் பாடல்கள் இடம்பெற்றன.

  • வேலைவாய்ப்பு
  • தேர்வில் வெற்றி
  • வறுமைத்துயர் தீர்தல்
  • திருமணம்
  • பிரிவு
  • மகப்பேறு
  • சுகப்பிரசவம்
  • காய்ச்சல்
  • குடும்ப ஒற்றுமை
  • கெட்ட குமாரன்
  • உத்தியோக மாற்றம்
  • களவுபோன பொருள்
  • வயிற்றுவலி
  • மனக்கவலை
  • பருவமழை
  • குருத்துவம்
  • கண்பார்வை

உள்ளடக்கம்

வேளைச் சகாய மாலை, வேளை எனப்படும் வேளாங்கண்ணி நகரில் வீற்றிருக்கும் ஆரோக்கிய அன்னையிடம் புலவர் சூ. தாமஸ் தன் மனக்குறைகளை முறையிட்டு, தனக்குச் சகாயம் செய்து உதவுமாறு வேண்டும் வகையில் பாடப்பட்டது.

பாடல் நடை

அன்னையிடம் வேண்டுதல்

பெருமையாய்‌ வாழ்ந்தோம்‌
அன்று பிள்ளைகள்‌ தம்மை மிக்க
அருமையாய்‌ வளர்த்தோம்‌
எங்கள்‌ ஆஸ்தியை இழந்தோம்‌ இன்று
சிறுமையால்‌ வாடுகின்றோம்‌
செல்லவோர்‌ கதியும்‌ இல்லை
வறுமைதான்‌ இன்றி வாழ
வரமருள்‌ வேளைத்‌ தாயே!

வாயினை வயிற்றைக்‌ கட்டிச்‌
சேர்த்துநான்‌ வைத்த பொன்னைத்‌
தீயவர்‌ எவரோ வந்து
திருடியே சென்றார்‌ அம்மா!
போயின பொருளை மீண்டும்‌
புவியில்யான்‌ பெற்று வாழத்‌
தாயுனை வேண்டு கின்றேன்‌
தயைசெய்வாய்‌ வேளைத்‌ தாயே!

அன்னைக்கு நன்றி பாராட்டல்

பொன்னினால் பொருளால்
ஈன்ற புதல்வரால் மனைக்கு வந்த
பெண்ணினால் கவலை பூண்ட
பேதையான் பெரிதும் உன்னை
எண்ணியே செபித்தேன்
தீமை இன்றியே கவலை தீரப்
பண்ணினாய் நன்றி நன்றி

பழுதிலா வேளைத் தாயே
ஏரியும்‌ குளமும்‌ பொங்க
எங்குமே வளமை தங்க
நேரிடும்‌ கொடிய பஞ்சம்‌
நீங்க நின்‌ கருணையாலே
மாரிதான்‌ பொழியச்‌ செய்து
மன்னுயிர்‌ வாழ வைத்தாய்‌
தாரணி புரந்தாய்‌ நன்றி
தயைமிகும்‌ வேளைத்‌ தாயே!

மதிப்பீடு

வேளைச் சகாய மாலை, புலவர் சூ. தாமஸ் தன் வாழ்வில் தனக்கு நிகழ்ந்த சிக்கல்கள், தனக்கேற்பட்ட மனக்குறைகள், பிரச்சனைகள் நீங்க வேளாங்கண்ணி அன்னையைத் துதித்து அவை நீங்கப்பெற்ற நிறைவில் பாடப்பட்ட பாடல்களைக் கொண்டது. எளிய நடையில் இயற்றப்பட்டது. கிறித்தவ மாலை இலக்கியங்களுள் ஒன்றாக அறியப்படுகிறது.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Jun-2024, 18:43:38 IST