under review

வேளை நவமணி மாலை

From Tamil Wiki

வேளை நவமணி மாலை (1995), கிறிஸ்தவச் சிற்றிலக்கிய நூல்களுள் ஒன்று. ’ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள்’ தொகுப்பு நூலில் இம்மாலை நூல் இடம்பெற்றது. இதனை இயற்றியவர் சூ. தாமஸ்.

வெளியீடு

வேளை நவமணி மாலை நூல், ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள் தொகுப்பு நூலில் இடம்பெற்றது. இந்நூல் ஜனவரி 1, 1995 அன்று, தஞ்சாவூரில் நிகழ்ந்த உலகத் தமிழ் மாநாட்டில், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் வெளியிடப்பட்டது. புலவர் நாக. சண்முகம் இந்நூலைப் பதிப்பித்தார். நூலின் ஆசிரியர்: சூ. தாமஸ்.

ஆசிரியர் குறிப்பு

சூசை உடையார் தாமஸ் என்னும் சூ. தாமஸ் தஞ்சை தூய இருதய மகளிர் உயர்நிலைப்பள்ளியில், 22 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

வேளாங்கண்ணித் திருத்தலத்தின் மீதும் அங்குக் கோயில் கொண்டுள்ள ஆரோக்கிய மாதா மீதும் மிகுந்த பக்தி கொண்டு பல சிற்றிலக்கிய நூல்களைப் படைத்தார். அவை தொகுக்கப்பட்டு ’ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள்’ என்ற தலைப்பில் நூலாக வெளிவந்தது.

நூல் அமைப்பு

வேளை நவமணி மாலை வேளாங்கண்ணி மாதா மீது பாடப்பட்ட மாலை நூல். நவமணிமாலையின் இலக்கணத்திற்கேற்ப அமைந்த இந்நூல் ஒன்பது பாவகைகளில் அமைந்த ஒன்பது பாடல்களைக் கொண்டது.

உள்ளடக்கம்

வேளை நவமணி மாலை நூல், அன்னை ஆரோக்கிய மேரியின் சிறப்புகளையும் பெருமைகளையும் பேசுகிறது.

பாடல் நடை

அன்னையின் பெருமை

வானவர்க்‌ கரசியே உடுமுடிச்‌ சிரசியே
வையகம்‌ போற்றும்‌ மன்னர்‌
வழிவந்த செல்வியே பழிவந்திடா மலொரு
வள்ளலைப்‌ பெற்ற கனியே
மானவர்க்‌ குறுதியே மலிபுகழ்ச்‌ சுருதியே
மாதவர்க்‌ கான துணையே
மதியேறு தாளியே மதுரமண வாளியே
மங்காத செல்வ மணியே
ஈனவர்க்‌ கரிதான ஞானபே ரின்பமதில்‌
ஏறவைத்‌ திடுமேணி யே
எளியோர்கள்‌ காணியே இன்பமக ராணியே
இணையில்‌ மெய்த்‌ தவ ஞானியே
கானவர்க்‌ கிருபாத சாரியாய்‌ வந்தினிய
காட்சிதந்‌ தாண்ட நிதியே
கவிகொண்ட வேளைதனில்‌ புவிகொண்டு வாழ்கின்ற
கன்னியா ரோக்ய மரியே

அன்னையிடம் வேண்டுதல்

தேனொழுகு மாமதுர வாரியே நறுமலர்‌
செறிந்த சிங்கார வனமே
செய்யமல ரிடைநின்ற தீஞ்சுவைக்‌ கனியே
செழுங்கனி பொழிந்த ரசமே
வானொழுகுஞான அமுதே அமுதின்‌ உள்ளுற
வழிந்த சுவையே சுவையினில்‌
வளர்கின்ற இன்பமே இன்பமெய்‌ வடிவான
வனிதையர்க்‌ கொரு திலசுமே
ஊனொழுகும்‌ ஒருகுருசில்‌ உயிர்தந்‌ திறந்தநின்‌
உரிமைத்‌ திருக்‌ குமாரன்‌
ஒளிர்முகம்‌ பார்த்தெனது பிழைபொறு‌ தாயே வென்று
உன்னைமன்‌ றாடுகின்‌ றேன்‌
கானொழுகு தண்டலையின்‌ இருள்தீர மாமணி
கடற்றிரை கொணர்ந்‌ திறைக்கும்‌
கவிகொண்ட வேளைதனில்‌ புவிகொண்டு வாழ்கின்ற
கன்னியா ரோக்ய மரியே

மதிப்பீடு

வேளாங்கண்ணி ஆரோக்கிய மேரி அன்னையின் சிறப்பைக் கூறும் சிற்றிலக்கிய நூல்களுள் ஒன்றாக வேளை நவமணி மாலை நூல் அறியப்படுகிறது.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 10-Jun-2024, 09:56:13 IST