under review

பேரின்பத் தூதுப் பாடல்கள்

From Tamil Wiki

பேரின்பத் தூதுப் பாடல்கள் (1995), கிறிஸ்தவச் சிற்றிலக்கிய நூல்களுள் ஒன்று. ’ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள்’ தொகுப்பு நூலில் இந்நூல் இடம்பெற்றது. இறைவன் மீது அன்புகொண்ட ஆன்மாவாகிய காதலி, கிளியைத் தூதாக விடுப்பதாக இயற்றப்பட்டது. இந்நூலின் ஆசிரியர் சூ. தாமஸ்.

வெளியீடு

பேரின்பத் தூதுப் பாடல்கள், ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள் தொகுப்பு நூலில் இடம்பெற்றது. இந்நூல் ஜனவரி 1, 1995 அன்று தஞ்சாவூரில் நிகழ்ந்த உலகத் தமிழ் மாநாட்டில், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் வெளியிடப்பட்டது. புலவர் நாக. சண்முகம் இந்நூலைப் பதிப்பித்தார். நூலின் ஆசிரியர்: சூ. தாமஸ்.

ஆசிரியர் குறிப்பு

சூசை உடையார் தாமஸ் என்னும் சூ. தாமஸ் தஞ்சை தூய இருதய மகளிர் உயர்நிலைப்பள்ளியில், 22 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

வேளாங்கண்ணித் திருத்தலத்தின் மீதும் அங்குக் கோயில் கொண்டுள்ள ஆரோக்கிய மாதா மீதும் மிகுந்த பக்தி கொண்டு பல சிற்றிலக்கிய நூல்களைப் படைத்தார். அவை தொகுக்கப்பட்டு ’ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள்’ என்ற தலைப்பில் நூலாக வெளிவந்தன.

நூல் அமைப்பு

பேரின்பத் தூதுப் பாடல்களில் பதினேழு தலைப்புக்கள் இடம்பெற்றன. அவை,

  • பொது விண்ணப்பம்
  • காதலுரைத்தல்
  • ஏக்கம்
  • கருணை விளம்பல்
  • ஆத்தும சோதனை
  • ஊடல்
  • தாழ்ச்சி
  • துயராற்றாமை
  • ஏதுவினாதல்
  • தகுதி காட்டல்
  • உலகை வெறுத்தல்
  • வருந்துயருரைத்தல்
  • கனவுரைத்தல்
  • தன் நிலை கூறல்
  • தன் குறையுணர்தல்
  • அடைக்கலம் கோரல்
  • உறுதியளித்தல்

பேரின்பத் தூதுப் பாடல்கள் நூலில் 153 வெண்பாக்கள் இடம் பெற்றன.

உள்ளடக்கம்

பேரின்பத் தூதுப் பாடல்கள் தூது என்னும் சிற்றிலக்கிய வகைமையில் அமைந்தது. தேவகுமாரனாகிய இயேசு மீது கிளியைத் தூதாக விடுக்கும் வகையில் இயற்றப்பட்டது. புலவர், தன் விண்ணப்பத்தை, காதலை, ஏக்கத்தை, சோதனையை, ஊடலை, தாழ்ச்சியை, துயரை, தகுதியை, வருத்தத்தை, கனவை, குறையை எடுத்துரைத்து இயேசுவை அடைக்கலம் கேட்டுக் கிளியைத் தூதாக அனுப்பும் வகையில் நூல் அமைந்துள்ளது.

பாடல் நடை

இறை வேண்டுதல்

வண்டுகள் தேன்மறந் தாலும் - மீன்கள்
வாருதி யைமறந் தாலும்
அண்டர் தொழும்மரி மைந்தன் - இணை
அடிமற வேனென்று சொல்லு

அன்றில் துணைமறந் தாலும் - கன்றை
ஆவினங் கள்மறந் தாலும்
நன்று தரும்மரி மைந்தன் - அடி
நான்மற வேனென்று சொல்லு

கண்ணை இமைமறந் தாலும் - செல்லும்
கப்பல் திசை மறந் தாலும்
தன்னை நிகர்மரி மைந்தன் - இரு
தான்மற வேனென்று சொல்லு

தாயினைச் சேய்மறந் தாலும் - பெற்றோர்
தனையரை யே மறந்தாலும்
தூய மரிதிரு மைந்தன் - அடி
தொழமற வேனென்று சொல்லு

வானைப் புவிமறந் தாலும் - தமிழ்
வாணர் கவமறந் தாலும்
ஈனமி லாமரி மைந்தன் - அடி
இணைமற வேனென்று சொல்லு

மாவுறங் கும்புள்ளும் உறங்கும் - வாச
மலரிடை வண்டுகள் உறங்கும்
காவுறங கும்கட லுறங்கும்-என்
கண்ணுறங் காதென்று சொல்லு

கிளியிடம் வேண்டுதல்

சொல்லு கிளியேநீ சொல்லு - தேவ
சுதனிடம் போய்த்தூது சொல்லு
அல்லும் பகலுமென் சிந்தை - படும்
ஆறாத் துயரத்தைச் சொல்லு

தாமரைத் தாளினைத் தந்து - என்
தாகத்தைத் தீர்த்திடச் சொல்லு
மாமரி யாளினைக் கண்டால் - தன்
மைந்தனிடம் சொல்லச் சொல்லு

ஆவி பிரிந்திடும் வேளை - எனக்
காறுதல் தந்திடச் சொல்லு
பூவில் இருந்தெனை மீட்டுத்-தன்
பொன்னடி சேர்த்திடச் சொல்லு

தீமை அகற்றிடச் சொல்லு - துயர்
தீர்த்து விலகிடச் சொல்லு
தாமதம் செய்திட வேண்டாம் - என்று
தயவாய் அவரிடம் சொல்லு

சோதனை செய்தது போதும் - அன்பு
சுரந்தெனைக் காத்திடச் சொல்லு
வாதனையாம் உல கத்தில்-நல்ல
வாழ்வு தரும்படிச் சொல்லு

கண்ணிலே கண்டதைச் சொல்லு - இரு
காதிலே கேட்டதும் சொல்லு
மண்ணில் என் வேதனை யெல்லாம் - கண்டு
மனம் இரங் கும்படி சொல்லு

பாவச் சுமைபொறுக் காமல் - மனம்
பதறுகி றேன் என்று சொல்லு
தீவினைப் பாவியைக் கண்ணால் - சற்றே
திரும்பிப் பார்த்திடச் சொல்லு

உள்ளதெல் லாம்சொன்ன போதும் - மனம்
உருகாத தேனென்று சொல்லு
கள்ளமில் லாத மெஞ்ஞானம் - அது
கைவரவே செய்யச் சொல்லு

நல்ல வரமொன்று கேட்டேன் - அதை
நல்கி விடும்படி சொல்லு
வல்ல பரனுக்கே தொண்டு - செய்யும்
வாழ்வை அளித்திடச் சொல்லு

மதிப்பீடு

பேரின்பத் தூதுப்பாடல்கள், புலவரால் உள்ளத்தை உருக்கும் வகையில் இயற்றப்பட்டுள்ளன. கிறிஸ்தவத் தூது இலக்கிய நூல்களுள் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகவும், இலக்கியச் சுவை மிகுந்த நூலாகவும் பேரின்பத் தூதுப்பாடல்கள் அறியப்படுகிறது.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-May-2024, 08:25:15 IST