under review

கி.ஆ. சச்சிதானந்தம்

From Tamil Wiki
Ki.a.sachithanandham.jpg

கி.ஆ. சச்சிதானந்தம் (மார்ச் 07, 1936 - அக்டோபர் 03, 2020) தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பயணி, இலக்கிய நூல் சேகரிப்பாளர், பதிப்பாளர்.

பிறப்பு, கல்வி

Ki.a.sachithanandham1.jpg

கி.ஆ. சச்சிதானந்தம் மார்ச் 07, 1936 அன்று சென்னையில் ரங்கநாத முதலியார், தாயார் அம்மாள் இணையருக்குப் பிறந்தார். உடன் பிறந்தவர்கள் இரண்டு அக்காக்கள் (சரஸ்வதி, சம்பத்குமாரி), ஒரு அண்ணன் (வேலாயுதம்), ஒரு தம்பி (பழனி). சச்சிதானந்தம் ஆரம்பக் கல்வியை செங்கல்பட்டிலும், இடைநிலைக் கல்வியை காஞ்சிபுரத்திலும் பயின்றார். சென்னை பச்சையப்பா கல்லூரியில் இளம் வணிகவியல் பட்டம் (பி.காம்) பெற்றார். திறந்தவெளிப் பல்கலைகழகத்தில் பயின்று முதுகலைப் பட்டம் பெற்றார்.

Ki.a.Sachithanandham6.jpeg

தனிவாழ்க்கை

கி.ஆ. சச்சிதானந்தம், ஜெயகுமாரியை 1977-ம் ஆண்டு மணந்தார். மகள் நித்ய கல்யாணி, மகன் ஆனந்த குமாரசுவாமி. மகள் நித்ய கல்யாணி கணவர் ஒரு குழந்தையுடன் சென்னையில் வசிக்கிறார். மகன் குடும்பத்துடன் லண்டனில் வசிக்கிறார்.

சச்சிதானந்தம் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் தன் பணியைத் தொடங்கினார். பின் சென்னை ராயப்பேட்டையிலுள்ள பப்ளிக் ப்ராவிடெண்ட் ஃப்ண்ட் அலுவலகத்தில் பணியாற்றினார்.சென்னை தேனாம்பேட்டையிலுள்ள ஏ.ஜி. அலுவலகத்தில் மூத்த தணிக்கை அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

இலக்கியவாழ்க்கை

நன்றி: தமிழ் இந்து

கி.ஆ. சச்சிதானந்தம் சிறுகதைகள், கட்டுரைகள், புத்தக மதிப்புரைகள் என நாற்பதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 'உயிர் இயக்கம்', 'அம்மாவின் அத்தை' என இரு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்தன. சில குறுநாவல்களும் எழுதியுள்ளார். எழுத்து, தீபம், கசடதபற, நடை, பிரக்ஞை, தினமணிகதிர், தீராநதி போன்ற இதழ்களில் சச்சிதானந்தத்தின் படைப்புகள் வெளிவந்துள்ளன. 'வரகுவாசல் தெரு' என்ற ஒரு நாவலும் எழுதியுள்ளார். ஆனால் இந்நாவல் வெளியாகவில்லை.

கி.ஆ. சச்சிதானந்தம் தன் இளம் வயதில் அண்ணாவின் மீதும், திராவிட இயக்கத்தின் மீதும் பெரும் பற்றுக் கொண்டிருந்தார். பெரியார், அண்ணா இருவரும் உரையாற்றிய கூட்டங்களுக்குச் சென்றார். கல்லூரி நாட்களில் சச்சிதானந்தத்தின் வாசிப்பு ஆனந்த குமாரசுவாமி பக்கம் திரும்பியது.[1] ஆனந்த குமாரசுவாமியை வாசிக்க தொடங்கிய பின் இந்தியா முழுவதும், முறிப்பாக இமயமலைப் பகுதிகளில் பயணம் மேற்கொண்டார்.

ஆனந்த குமாரசுவாமி மேல் பெரும் பற்றுக் கொண்டிருந்த சச்சிதானந்தம் அவரது 'Dancing Shiva' நூலை 'சிவானந்த நடனம்' என்ற தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். ஆனந்த குமாரசுவாமியின் நூற்றாண்டை ஒட்டி விரிவான கட்டுரை ஒன்றை எழுதினார். தாகூரின் நாடகங்கள் சிலவற்றையும், மராட்டிய நாடகங்களையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். மௌனி, சி.சு. செல்லப்பா ஆகியோரின் படைப்புகளின் மேல் பற்று கொண்டவர். மௌனியைப் பற்றிய ஒரு ஆவணப்படமும் இயக்கினார். சச்சிதானந்தம் மௌனியுடன் நேர்காணலுக்காக நீண்ட உரையாடல் ஒன்றும் நடத்தினார். (பார்க்க: மௌனியுடன் நேர்காணல் - கி.ஆ. சச்சிதானந்தம்[2])

இதழியல் பணி

கி.ஆ. சச்சிதானந்தம் வேர்கள் என்னும் இலக்கிய இதழின் ஆசிரியராக நான்காண்டுகள் பணியாற்றினார்.

பதிப்பு பணி

Ki.a.sachithanandham3.jpg

கி.ஆ. சச்சிதானந்தம் பீகாக்(Peacock) என்ற பதிப்பகத்தைத் தொடங்கி சி.சு. செல்லப்பா, மௌனி இருவரின் நூல்களை வெளியிட்டார். பீகாக் பதிப்பகம் சி.சு. செல்லப்பாவின் பத்திற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டது. பி.ஆர். ராஜம் ஐயர் எழுதிய கமலாம்பாள் சரித்திரத்தை பதிப்பித்து தமிழில் வந்த முதல் நாவல் அதுவே என்று தரவுகளுடன் வாதிட்டார். ராஜம் ஐயர் பற்றியும் விரிவாக எழுதியுள்ளார். பி.ஆர்.ராஜம் அய்யர் 'பிரபுத்தபாரதம் இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான ய 'Rambles in Vedanta' என்னும் நூலையும் தன் கைப்பொருளைச் செலவிட்டு ஆய்வுப்பதிப்பாகக் கொண்டுவந்தார்.

ஆவணப்படம்

கி.ஆ. சச்சிதானந்தம் எழுத்தாளர் மௌனி குறித்த மூன்று மணி நேர ஆவணப்படத்தை இயக்கி, தயாரித்தார். இதனை ஒளிப்பதிவு செய்த சாரங்கனிடம்[3] அதன் மூலப்பிரதி உள்ளதாக மௌனி பற்றிய ஒரு நினைவு உரையில் சச்சிதானந்தம் குறிப்பிட்டார்.

நூலகம்

கி.ஆ. சச்சிதானந்தம் தமிழ் இலக்கியத்தின் இருபதாம் நூற்றாண்டின் அறிய நூல்களை தேடி சேகரித்துள்ளார். வ. ராமசாமி ஐயங்கார் இறந்த போது அவரிடமிருந்த புதுமைப்பித்தன், கு.ப. ரா, ந. பிச்சமூர்த்தி போன்ற முக்கிய படைப்பாளிகளின் முதல் அச்சுப் பதிப்பை பாதுகாத்தார். மஞ்சரி இதழின் முழு தொகுப்பையும் வ. ரா வீட்டிலிருந்து எடுத்து சேகரித்து தன் நூலகத்தில் பாதுகாத்தார்.

பயணம்

Ki.a.Sachithanandham8.jpeg

கி.ஆ. சச்சிதானந்தம் பயணம் செய்வதில் பேரார்வம் கொண்டவர். குறைவான பணச் செலவில், கிடைத்த வண்டியில் ஏறி பயணம் செய்பவர். இந்தியா முழுவதும் தொடர் பயணத்தில் இருந்தவர். இமயமலைப் பகுதிகளுக்கு தொடர்ந்து பயணம் செய்தவர். சச்சிதானந்தம் ஒரு முறை எவரெஸ்ட் மலைச் சிகரத்தின் அடிவாரம் வரை சென்றுள்ளார். "அன்றெல்லாம் அது தற்கொலைக்கு சமானமான பயணம்"என்று ஜெயமோகன் தன் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

இலக்கிய இடம்

கி.ஆ. சச்சிதானந்தம் மனைவி ஜெயகுமாரியுடன்

"மரணத்தை மையமாக வைத்து வாழ்க்கையின் மீதான விசாரணையை நடத்துபவை அவரது கதைகள். நிதானமான நடையும் துல்லியமான சித்தரிப்பும் அவரது கதைகளின் தனிச்சிறப்புகள். சென்னையில் வாழும் ஆங்கிலோ இந்தியர் சமூகத்தைப் பற்றிய வாழ்க்கைப் பதிவுகளாக அவரது சில கதைகள் என்றென்றும் பேசப்படும்." என எழுத்தாளர் ரவிசுப்பிரமணியன் சச்சிதானந்தம் கதைகள் குறித்து குறிப்பிடுகிறார்.

"சச்சிதானந்தம் சிறுகதைகள் அசோகமித்திரன் காட்டிய உலகைச் சார்ந்தவை. அன்றாடவாழ்க்கையின் மிகையில்லாச் சித்திரங்கள். நேர்த்தியான மொழியில் சொல்லப்பட்டவை. ஆனால் அன்றாட உலகியல் பார்வைக்கு அப்பால் செல்லாதவை. அவருக்கு பறங்கிமலை வட்டாரத்தின் ஆங்கிலோ இந்திய மக்களின் வாழ்க்கை பற்றிய அறிமுகம் உண்டு. இளமைக்காலத்தில் அவர்களை நெருங்கி அறிந்திருக்கிறார். அந்த சூழல் குறித்த சித்திரங்கள் அவருடைய கதைகளில் ஆர்வமூட்டும் வாசிப்பு கொண்டவையாக இருக்கும்" என எழுத்தாளர் ஜெயமோகன் மதிப்பிடுகிறார்.

கி.ஆ. சச்சிதானந்தம் மௌனியின் கதைகளை மீண்டும் பதிப்பித்தது பற்றி எழுத்தாளர் ஜெயமோகன், "அன்றெல்லாம் மௌனி கதைகளை வாங்கி வாசிக்க நூறுபேர்தான் தமிழ்நாட்டில். நெடுங்காலமாக அவருடைய கதைகள் அச்சில் வராமலேயே இருந்தன. மௌனியின் இளம்நண்பரான கி.ஆ.சச்சிதானந்தம் மௌனி கதைகளை வெளியிடுவதற்காகவே தொடங்கியது பீக்காக் பதிப்பகம். சொந்தச்செலவில் மௌனி கதைகளை அழகான தொகுதியாக கொண்டுவந்தார். எழுபதுகளுக்குப் பின் தமிழிலக்கியச்சூழலில் மௌனி மீண்டும் தோன்றியது அவ்வாறுதான்" என்று குறிப்பிடுகிறார்.

மறைவு

Ki.a.Sachithanandham7.jpeg

கி.ஆ. சச்சிதானந்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையிலுள்ள அவரது இல்லத்தில் அக்டோபர் 03 காலை காலமானார்.

விருதுகள்

  • நல்லி திசை எட்டும் விருது (2014)
  • சென்னை இலக்கிய திருவிழா விருது (2014)

நூல்கள்

சிறுகதை தொகுப்பு
  • உயிர் இயக்கம் - தமிழினி பதிப்பகம் (2001)
  • அம்மாவின் அத்தை - தமிழினி பதிப்பகம் (2001)
கட்டுரைகள்
  • மௌனி (இந்திய இலக்கிய சிற்பிகள்) - சாகித்திய அகாடெமி (2004)
  • பௌத்தம் - ஞானாலயா வெளியீடு (2006)
  • அழகியல் ஓர் அறிமுகம் - சந்தியா பதிப்பகம் (2009)
  • எழுதிக்கொண்டேயிருந்த க.நா. சுப்பிரமணியம் (வானதி பதிப்பகம், 2010)
மொழியாக்கம்
  • சிவானந்த நடனம் (Dancing Shiva - ஆனந்த குமாரசுவாமி, பீகாக் பதிப்பகம் - 2009)
  • கோடோவிற்காகக் காத்திருத்தல் (Waiting for Godot - சாமுவேல் பெக்கட், நாடகம்) - பீகாக் பதிப்பகம் (2003)
  • சிறைக் கடிதங்கள் (ரோசா லக்சம்பர்க் - கடிதங்கள், போதி வனம் பதிப்பகம்)
  • ஜென் கதைகள் (சிறுகதைகள், கண்ணதாசன் பதிப்பகம் - 2011, சந்தியா பதிப்பகம் - 2017)
  • முல்லா நசுருதீன் கதைகள் (சிறுகதை, சந்தியா பதிப்பகம் - 2010)
  • சித்திரா - ரவீந்திரநாத் தாகூர் நாடகங்கள், பீகாக் பதிப்பகம் (2003)
  • பனிமலை பிரதேசத்துக் கதைகள் - ஹிமாசல பிரதேசத்து கதைகள் - பீகாக் பதிப்பகம் (2003)
  • கல் மாளிகை - மராட்டிய நாடகம், வைகறை பதிப்பகம் (2006)
  • பாஸ்குயோல் துயோரிபட்டேவின் குடும்பம் - கேமிலா ஜோசே சீலோ (நோபல் பரிசு பெற்ற ஸ்பானிஷ் நாவல் - மருதா பதிப்பகம் (2009)
  • நான் யார், ரமணரின் தத்துவ விளக்க கட்டுரைகள் - ஞானாலயா வெளியீடு (2014)
  • வல்லபாய் படேல் - திரைக்கதை - சாகித்திய அகாடெமி (2016)
ஆங்கிலத்தில்
  • மலேசியாவின் தோற்றம் - மலேசிய பினாங் தமிழ்சங்க வெளியீடு (2011)
இதழ்கள் தொகுப்பு
  • நடை - சந்தியா பதிப்பகம் (2004)
  • இலக்கிய வட்டம் - சந்தியா பதிப்பகம் (2004)
  • எழுத்து - சந்தியா பதிப்பகம் (2015)
தொகுத்துப் பதிப்பித்தவை
  • மௌனியின் கதைகள், பீகாக் பதிப்பகம் (2015)
  • தி.க.சி ரசனை ஒலி, பீகாக் பதிப்பகம் (1996)

உசாத்துணை

வெளி இணைப்புகள்

அடிக்குறிப்புகள்

  1. ஆனந்த குமாரசுவாமியின் மேல் கொண்ட பற்றால் தன் மகனுக்கு அவர் பெயரையே இட்டார்.
  2. மௌனியுடன் நேர்காணல் - கி.ஆ. சச்சிதானந்தம்
  3. சாரங்கன் எழுத்தாளர் கு. அழகிரிசாமியின் மகன்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 28-Oct-2024, 09:56:46 IST