பாடாண் திணை: Difference between revisions
(Corrected typo errors;) |
(Removed Category:Spc) |
||
| Line 101: | Line 101: | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:புலவர்]] | [[Category:புலவர்]] | ||
Latest revision as of 21:46, 8 January 2026
பாடாண் எனில் பாடப்படும் ஆண்மகனுடைய ஒழுகலாறு என்று பொருள்படும். அரசனுடைய புகழ், கொடை, அளி முதலானவற்றைக் கூறும் புறத்திணை பாடாண் திணை. வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை, வாகை முதலானவற்றில் சிறப்புற்ற ஆண்மகனது ஒழுகலாறுகளை உணர்த்துவது பாடாண் திணை.வெட்சி முதல் வாகைத்திணை வரை பூக்களால் திணைப்பெயர் அமைந்தது. வெட்சி முதலான போர்களை மேற்கொள்ளும்போது அவ்வப் பூக்களைச் சூடுவர். வாகை வெற்றியைக் கொண்டாடும் நிகழ்வு எனினும் வாகை மாலை சூடுதல் மரபில் உண்டு. ஆனால் பாடாண் என்பது ஒருவனைப் பற்றிப் பாடிச் சிறப்பிப்பதாதலின் இதற்குப் பூமாலை சூடும் மரபு இல்லை. ஆகவே பூவால் அன்றிச் செய்தியால் இப்படலத்திற்குப் பெயர் ஏற்பட்டுள்ளது. பாடப்பெறும் ஆண்மகனது ஆளுமைப் பண்புகளைக் கூறுதல் என்பது இதன் பொருள். இதனைக் கொளு,
ஒளியும் ஆற்றலும் ஓம்பா ஈகையும்
அளியும் என்றிவை ஆய்ந்துரைத் தன்று (கொளு.1)
என விளக்குகிறது. 'அரசனுடைய புகழையும் வலிமையையும் தனக்கென்று வைத்துக் கொள்ளாது பிறர்க்கு ஈயும் வள்ளல் தன்மையையும் அருளுடைமையையும் ஆய்ந்து கூறுதல்' என்பது இதன் பொருள். வெண்பா, மேற்கண்ட தன்மைகளைப் புகழும் முறையை எடுத்துக் காட்டுகிறது.
மன்னர் மடங்கல் மறையவர் சொல் மாலை
அன்ன நடையினார்க்(கு) ஆரமுதம் - துன்னும்
பரிசிலர்க்கு வானம் பனிமலர்ப் பைந்தார்
எரிசினவேல் தானைஎம் கோ
'எங்கள் மன்னன் அரசர் பலருள் அரிமா போன்றவன்; அந்தணர்களுக்குப் புகழ்மாலை போன்றவன்; அன்ன நடைப் பெண்களுக்கு அமுதத்தை ஒத்தவன்; பரிசிலர்க்கு முகில் போன்றவன்'. இவ்வாறு வெண்பா பாடாண் படலத் தன்மையை விளக்குகிறது. பாடாண் படலம் 47 துறைகளைக் கொண்டது.
எடுத்துக்காட்டுகள்
எடுத்துக்காட்டு 1
வலம்படு வாய்வாள் ஏந்தி, ஒன்னார்
களம்படக் கடந்த கழல்தொடித் தடக்கை
ஆர்கலி நறவின் அதியர் கோமான்
போர்அடு திருவின் பொலந்தார் அஞ்சி
பால் புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீல மணிமிடற்று ஒருவன் போல
மன்னுக, பெரும! நீயே தொன்னிலைப்
பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது,
ஆதல் நின்னகத்து அடக்கிச்,
சாதல் நீங்க, எமக்கு ஈத்தனையே.
பொருள்: வெற்றி மிகுந்த, குறி தவறாத வாளை எடுத்துப் பகைவர்களைப் போர்க்களத்தில் வென்ற கழலணிந்த காலும், வளையணிந்த பெரிய கையையும், அழன்ற கள்ளையும் உடைய அதியர் தலைவனே! பகைவர்களைப் போரில் வெல்வதால் பெறும் செல்வத்தையும் பொன் மாலையையும் உடைய அஞ்சியே! பழைய பெரிய மலைப்பிளவின்கண் அரிய உயரத்தில் இருந்த சிறிய இலையையுடைய நெல்லியின் இனிய கனியினால் விளையும் (சிறந்த) பயனைக் கூறாது தன்னுள் அடக்கிச் சாதல் நீங்க எனக்கு அளித்தாயே! நீ, பால் போன்ற பிறை நெற்றியிலே இருந்து அழகு செய்யும் தலையையும், நீலமணி போன்ற கறையுள்ள கழுத்தையும் உடைய கடவுள் (சிவன்) போல் நிலைபெற்று வாழ்க! அதியனின் வீரமும், செல்வமும், கொடையும்,அருளும் கூறப்பட்டுள்ளன.
எடுத்துக்காட்டு-2
நல்லவும் தீயவும் அல்ல குவிஇணர்ப்
புல்லிலை எருக்கம் ஆயினும் உடையவை
கடவுள் பேணேம் என்னா ஆங்கு
மடவர் மெல்லியர் செல்லினும்
கடவன் பாரி கைவண் மையே. (புறம்106)
பொருள்: நல்லது தீயது என்ற இருவகையிலும் சேராத, சிறிய இலையையுடைய எருக்கம் செடியில் உள்ள மலராத பூங்கொத்தாயினும் அதுதான் தன்னிடம் உள்ளது என்று அதை ஒருவன் கடவுளுக்கு அளிப்பானானால், கடவுள் அதை விரும்ப மாட்டேன் என்று கூறுவதில்லை. அது போல், அறிவில்லாதவரோ அல்லது அற்ப குணமுடையவரோ பாரியிடம் சென்றாலும் அவர்களுக்கு கொடை வழங்குவதைத் தன் கடமையாகக் கருதுபவன் பாரி. பாரியின் கொடையைப் புகழ்ந்து கூறியதால் இது பாடாண் திணை.
பாடாண் திணையின் துறைகள்
பாடாண் திணையில் 47 துறைகள் உள்ளன
- வாயில் நிலை
- கடவுள் வாழ்த்து
- பூவை நிலை
- பரிசில் துறை
- இயன்மொழி
- கண்படை நிலை
- துயிலெடை நிலை
- மங்கல நிலை
- விளக்குநிலை
- கபிலை கண்ணிய புண்ணிய நிலை
- வேள்வி நிலை
- வெள்ளி நிலை
- நாடு வாழ்த்து
- கிணைநிலை
- களவழி வாழ்த்து
- வீற்றினிதிருந்த பெருமங்கலம்
- குடுமி களைந்த புகழ்சாற்றுநிலை
- மணமங்கலம்
- பொலிவு மங்கலம்
- நாள் மங்கலம்
- பரிசில் நிலை
- பரிசில் விடை
- ஆள்வினை வேள்வி
- பாணாற்றுப்படை
- கூத்தராற்றுப்படை
- பொருநராற்றுப் படை
- விறலியாற்றுப்படை
- வாயுறை வாழ்த்து
- செவியறிவுறூஉ
- குடைமங்கலம்
- வாள் மங்கலம்
- மண்ணு மங்கலம்
- ஓம்படை
- புறநிலை வாழ்த்து
- கொடி நிலை
- கந்தழி
- வள்ளி
- புலவராற்றுப்படை
- புகழ்ந்தனர் பரவல்
- பழிச்சினர் பணிதல்
- கைக்கிளை
- பெருந்திணை
- புலவி பொருளாகத் தோன்றிய பாடாண் பாட்டு
- கடவுள் மாட்டுக் கடவுட் பெண்டிர் நயந்த பக்கம்
- கடவுள் மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம்
- குழவிக்கண் தோன்றிய காமப்பகுதி
- ஊரின்கண் தோன்றிய காமப்பகுதி
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
12-Jan-2023, 06:31:53 IST