first review completed

மணிக்கொடி (இதழ்): Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Corrected link to MV Venkatram page)
Line 71: Line 71:
* [[க.நா.சுப்ரமணியம்]]
* [[க.நா.சுப்ரமணியம்]]
* [[பி.எம்.கண்ணன்]]
* [[பி.எம்.கண்ணன்]]
* [[எம்.வி.வெங்கட்ராம்]]
* [[எம்.வி. வெங்கட்ராம்]]
* [[ஆர். சண்முகசுந்தரம்]]
* [[ஆர். சண்முகசுந்தரம்]]
* சபரிராஜன்
* சபரிராஜன்

Revision as of 13:26, 20 December 2022

மணிக்கொடி (இதழ்)

மணிக்கொடி இதழ் (1933-1950) விடுதலைக்கு முந்தைய கால கட்டங்களில் நவீனத்தமிழ் இலக்கியத்திற்கு முக்கியப் பங்களித்த இதழ். தேசிய இயக்கத்திற்கும், தமிழிலக்கிய மறுமலர்ச்சிக்கும் பங்களித்த இதழ். அரசியல் நோக்கத்துடன் வார இதழாக தொடங்கப்பட்டுப் பின்னர் இலக்கிய மாத இதழாக மாறியது. தமிழ்ச் சிறுகதைகளின் உருவாக்கம் மணிக்கொடியில் நிகழ்ந்தது. மணிக்கொடி இதழை ஒட்டி உருவான இலக்கியவாதிகளின் சிறுவட்டம் மணிக்கொடி எழுத்தாளர்கள் என்று அழைக்கப்பட்டனர். நவீன தமிழ் இலக்கியத்தில் "மணிக்கொடி காலம்" என்று சொல்லுமளவு தாக்கத்தை ஏற்படுத்திய இதழ்.

தோற்றம்

மணிக்கொடி இதழ்

சுதந்திரப்போராட்டக் காலத்தில் காங்கிரஸ் போராட்டத்தில் பல முறை சிறை சென்ற ஸ்டாலின் சீனிவாசன், வ.ராமசாமி ஐயங்கார், டி.எஸ்.சொக்கலிங்கம் ஆகியோருடன் நெருங்கிய நண்பரானார். சிறையிலிருந்து வெளிவந்த பிறகு இலக்கியப் பத்திரிகை ஒன்றைத் தொடங்கத் திட்டமிட்ட சீனிவாசன், திருப்பழனத்துக்குச் சென்று அங்கே வசித்து வந்த வ.ராமசாமி ஐயங்காரையும், வரதராஜுலு நாயுடு நடத்தி வநத தமிழ் நாடு பத்திரிகையில் பணிபுரிந்த டி.எஸ்.சொக்கலிங்கத்தையும் அழைத்து வந்து "மணிக்கொடி" என்ற தேசிய இதழைத் தொடங்கினார். 17 செப்டெம்பர் 1933 அன்று மணிக்கொடியின் முதல் இதழைக் கொணர்ந்தனர். இது விட்டுவிட்டு நான்கு காலகட்டங்களில் வெளிவந்த இதழ்.

"பாரதி பாடியது மணிக்கொடி;
காந்தி ஏந்தியது மணிக்கொடி;
காங்கிரஸ் உயர்த்தியது மணிக்கொடி;
சுதந்திரப் போராட்டத்தில் பல்லாயிரம் வீரர்களை
ஈடுபடச் செய்து அவர்களுக்கு உற்சாகம் ஊட்டியது மணிக்கொடி;
மணிக்கொடி பாரத மக்களின்
மனத்திடை ஓங்கி வளரும் அரசியல் இலட்சியத்தின்
நுனி, முனை, கொழுந்து"

என்ற அறிவிப்புடன் வெளியானது 'மணிக்கொடி இதழ்’.

ஸ்டாலின் சீனிவாசன்

பெயர்க்காரணம்

ஸ்டாலின் ஸ்ரீனிவாசன் மணிக்கொடி இதழின் பெயர்க்காரணத்தை குறிப்பிடும்போது, "டி.எஸ்.சொக்கலிங்கம், வ.ரா. நான் மூவருமாக எங்கள் லட்சியப் பத்திரிகைக்குத் திட்டமிட்டோம். என்ன பெயரிடுவது என்று வெகுவாக விவாதித்தோம். ஒருநாள் ஏதோ நினைவாக கம்பனைப் புரட்டியபோது அவன் மிதிலையில் மணிக்கொடிகளைக் கண்டதாகச் சொன்னது என் மனதை நெருடிக் கொண்டிருந்தது. அன்று மாலை கோட்டைக்கு அடுத்த கடல் மணலில் நாங்கள் மூவரும் பேசிக் கொண்டிருந்தோம். கோட்டைக் கொடி மரத்தில் பறந்த யூனியன் ஜாக் திடீரென்று கீழே விழுந்தது. 'விழுந்தது ஆங்கிலக்கொடி, இனி அங்கு பறக்க வேண்டியது நமது மணிக்கொடி’ என்றேன். அதுவே எங்கள் பத்திரிகைக்குப் பெயராகட்டும் என்று குதூகலத்துடன் முடிவு செய்தோம். மூவரும் கையெழுத்திட்டு "மணிக்கொடி"யைத் தமிழ் நாட்டுக்கு அறிமுகம் செய்தோம்" என்கிறார்.

காலகட்டங்கள்

மணிக்கொடி இதழ்
முதல் காலகட்டம்

செப்டம்பர் 1933-1935 வரை இதழின் முதல் காலகட்டம் என்று கருதப்படுகிறது. கு. ஸ்ரீநிவாசன் (ஸ்டாலின் சீனிவாசன்) வெளியீட்டாளராக இருந்தார். நிர்வாக ஆசிரியராக வ.ராமசாமி ஐயங்கார், பணியாற்றினார். உதவி ஆசிரியர்களாக டி.எஸ். சொக்கலிங்கம், பி.எஸ். ராமையா ஆகியோர் பணியாற்றினர். இக்காலகட்டத்தில் இதழ் வாரமொரு இதழாக, ஞாயிற்றுக்கிழமை தோறும் வெளிவந்தது.

வார இதழின் ஆரம்பகாலத்தில் கட்டுரைகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்தது. கு. ஸ்ரீநிவாசன், வ.ரா, டி.எஸ். சொக்கலிங்கம் ஆகியோர் கட்டுரைகள் எழுதினர். தமிழில் புது முயற்சியான 'நடைச்சித்திரம்' என்பதை வ.ரா. தொடர்ந்து எழுதினார். வாழ்க்கையில் காணப்படுகிற பல தொழில் துறை நபர்களையும் பற்றிய விவரணைச் சித்திரங்கள் இவை.

சிட்டி, ந. ராமரத்னம், கு.ப. ராஜகோபாலன், ந. பிச்சமூர்த்தி முதலியோர் முதலில் கட்டுரைகளே எழுதினார்கள். பின்னர் மணிக் கொடி வார இதழில் அவர்களின் சிறுகதைகளும் வெளியாகின. அரசியல் மற்றும் சமூகக் கருக்கள் சார்ந்த கட்டுரைகளுக்கும் விவாதங்களுக்கும் மணிக்கொடி முக்கியத்துவம் அளித்து வந்தது.

பத்திரிகையின் கூட்டுப் பொறுப்பாளர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படவே 'மணிக்கொடி' ஜனவரி 1935-ல் நின்று விட்டது. வ.ராமசாமி ஐயங்காருக்கும் பி.எஸ். ராமையாவிற்கும் இடையிலான கருத்து வேறுபாடு தான் முக்கியக்காரணமாகக் கருதப்படுகிறது.

"நான் ஒரு லட்சியக் கூடாரம் அடித்தேன்.
ஒரு காற்று வீசியது.
அதில்முளைகள் பிய்த்துக் கொண்டு வந்துவிட்டன.
டேராத் துணியே, காற்றோடுபோய்விட்டது"

என கு. ஸ்ரீநிவாசன் முதல் காலகட்டத்தில் இதழ் நின்றபோது குறிப்பிட்டார்.

வ.ராமசாமி ஐயங்கார்
இரண்டாம் காலகட்டம்
பி.எஸ். ராமையா
டி.எஸ்.சொக்கலிங்கம்

மார்ச், 1935-1939 வரை மணிக்கொடியின் இரண்டாவது காலகட்டம். பி.எஸ். ராமையா ஆசிரியராகவும், டி.எஸ்.சொக்கலிங்கம் மற்றும் கி.ராமச்சந்திரன் உதவி ஆசிரியர்களாகவும் இருந்தனர். மாத இதழாக வெளிவந்தது. உடன் 'காந்தி' என்னும் இணைப்பிதழும் வெளியானது. "பதினெட்டு மாத காலம் வாரப் பதிப்பாக வெளிவந்து கொண்டிருக்கிற மணிக்கொடி இன்று முதல், இலட்சியத்தில் தன்னுடன் ஒன்றுபட்ட காந்தியையும் இணைத்துக் கொண்டு வெளிவருகிறது. புதிய கொடி உருவத்திலும், உள்ளடக்கத்திலும் , மாதமிருமுறை புதுஜென்மம் எடுத்திருக்கிறது" என்ற அறிக்கையோடு மணிக்கொடியின் இரண்டாவது காலகட்டத்து முதல் இதழ் வெளிவந்தது. மணிக்கொடியின் அமைப்பும் உள்ளடக்கமும், நோக்கும் முற்றிலும் மாறுபட்டுவிட்ட போதிலும், அது பழைய தொடர்ச்சியாகவே கணக்கிடப்பட்டது. கதைமட்டுமாக வந்த இதழ் 'கொடி 3, மணி 1' என்று இலக்கம் பெற்றிருந்தது. இந்த முதல் இதழில் புதுமைப்பித்தனின் 'துன்பக்கேணி’, சி.சு. செல்லப்பாவின் 'ஸரஸாவின் பொம்மை', பி.எஸ். ராமையாவின் 'புலியின் பெண்டாட்டி', சங்கு சுப்பிரமணியனின் 'வேதாளம் சொன்ன கதை' முதலியன பிரசுரம் பெற்றன. மணிக்கொடி நிர்வாகத்தினரிடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக 1938 ஜனவரி 27-ஆம் நாளுடன், மணிக்கொடியோடு ராமையாவுக்கு இருந்த தொடர்பு முடிந்தது.

"மணிக்கொடியின் வாமனானாக வந்த ராமையா,
திருவிக்ரமனாக வளர்ந்துவிட்டார்;
மாயையினால் அல்ல சேவையினால்"

என கே. ஸ்ரீனிவாசன் மதிப்பிட்டார்.

மூன்றாம் காலகட்டம்

பிப்ரவரி, 1939 முதல் மூன்றாவது காலகட்டம். மார்ச் 1938-ல் ப. ராமசாமி (ப.ரா) மணிக்கொடியில் ஆசிரியராகச் சேர்ந்தார். மணிக்கொடியின் மூன்றாம் காலகட்டம் அவருடைய பொறுப்பில் வெளிவந்தது. ப. ரா. முதலில் ஒரு அரசியல்வாதி, இலக்கிய ஈடுபாடு அவருக்கு அடுத்தபட்சம்தான் அவருக்கு என பி.எஸ்.ராமையா குறிப்பிடுகிறார். அவருடைய பொறுப்பில், மணிக்கொடியில் அரசியல் விவகாரங்கள் மிகுந்த கவனிப்பைப் பெற்றன. ஏ.ஜி. வெங்கடாச்சாரியின் அரசியல் விமர்சனக் கட்டுரைகள் அதிக பக்கங்களை எடுத்துக் கொண்டன. அரசியல் கார்ட்டூன்கள் வெளியிடப்பட்டன.

மணிக்கொடி காலம்: பி.எஸ். ராமையா

பி.எஸ். ராமையா காலத்தில் உற்சாகத்தோடும் ஆர்வத்தோடும் மணிக் கொடிக்குக் கதைகள் எழுதி, அதற்குத் தனிச்சிறப்பு அளித்துவந்த படைப்பாளிகள் சிறிது சிறிதாகத் தங்கள் தொடர்பைக் குறைத்து, பின்னர் எழுதாமலே இருந்துவிட்டார்கள் என்று பி.எஸ்.ராமையா குறிப்பிடுகிறார். மணிக்கொடி இதழில் புது எழுத்தாளர்களின் கதைகள் அதிகம் வந்தன. உலகக் கதைகளின் மொழிபெயர்ப்புகள் ப.ரா. வின் தம்பி 'சஞ்சீவி' யால்) செய்யப் பட்டிருக்கின்றன. மூன்றாம் காலகட்டத்தில் மணிக்கொடி இதழ், ஜூன் 1939-ல் நிறுத்தப்பட்டது. மணிக்கொடியின் துணையமைப்பான நவயுகப் பிரசுராலயம் லிமிடெட் நிறுவனத்தினர் புத்தகப் பிரசுரத்தில் மட்டுமே கவனம் செலுத்தினர். பின்னர் இந்த நவயுகப் பிரசுரலாயமும், நாட்டுக் கோட்டைச் செட்டியார்களிடம் விற்கப்பட்டது. அவர்களும் பிறகு, வேறொருவருக்கு விற்றனர்.

நான்காவது காலகட்டம்

இந்திய சுதந்திரத்திற்குப்பின், மணிக்கொடி என்னும் பெயர் இலக்கிய உலகில் அழுத்தமாக நிலைபெற்றுவிட்ட பிறகு மணிக்கொடி மீண்டும் தொடங்கப்பட்டது. அதற்குள் திரைத்துறையில் ஈடுபட்டு பொருளாதார ரீதியாக நிலைபெற்றுவிட்ட பி.எஸ்.ராமையா 1950-ல் ஆசிரியராகப் பொறுப்பு வகித்து மணிக்கொடியை மீண்டும் வெளியிட்டார். ஆனால் இதழ் பொருளாதாரப் பிரச்சனைகளால், நான்கே இதழ்களோடு நின்று போனது.

வரலாற்றுப் பதிவு

நா. பார்த்தசாரதியின் வலியுறுத்தலைத் தொடர்ந்து தனது மணிக்கொடி கால அனுபவங்களை 1979 முதல் 'தீபம்' இதழில் தொடராக பி.எஸ்.ராமையா எழுதினார். பின்னர் அவை தொகுக்கப்பட்டு "மணிக்கொடி காலம்" என்ற பெயரில் நூலாக வெளியானது. 1982-ல் அந்நூலுக்கு "சாகித்ய அகாடமி" விருது கிடைத்தது.

பங்களிப்பாளர்கள்

மணிக்கொடி எழுத்தாளர்கள்

ஆகியோர் "மணிக்கொடி எழுத்தாளர்கள்" என்று அழைக்கப்பட்டனர். பி.எஸ். ராமையா இவ்விதழில் நாற்பது கதைகள் எழுதியுள்ளார். புதுமைப்பித்தனின் சிறந்த முப்பத்திநான்கு கதைகள் இவ்விதழில் வெளியாகியுள்ளன. மணிக்கொடியின் தோற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் துணை நின்றவர்கள். சிறுகதையின் முன்னேற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் பாடுபட்டவர்கள்.

மறுமலர்ச்சி எழுத்தாளர்கள்

இந்த எழுத்தாளர்கள் மணிக்கொடியில் எழுதிய "மறுமலர்ச்சி எழுத்தாளர்கள்" என்று அழைக்கப்பட்டனர். வெளி நாட்டு இலக்கியங்களைப் படித்து அதுபோலவே எழுத முனைந்தவர்கள். சிறுகதை, நாவல், கவிதை என்ற பிரிவுகளில் சோதனை முயற்சிகள் செய்தவர்கள்.

பெண் எழுத்தாளர்கள்

ஆகியோர் பெண் எழுத்தாளர்களுக்கென்றே மணிக்கொடி இதழால் கொண்டுவரப்பட்ட "அத்தனையும் ஸ்த்ரீகள்" என்ற கதைச் சிறப்பிதழில் எழுதியவர்கள். இச்சிறப்பிதழுக்கு போதிய அளவு பெண் எழுத்தாளர்களின் கதைகள் கிடைக்கப் பெறாததால் தங்கள் மனைவியின் பெயரில் கி.ரா.வும் (சங்கரி ராமசந்திரன்), பி.எஸ்.ராமையாவும் (ஸ்ரீமதி சௌபாக்கியம்) அதில் சிறுகதைகள் எழுதினர்.

  • ஸ்ரீமதி மங்களம்
  • ஸ்ரீமதி ராஜி
  • ஸ்ரீமதி கமலாபாய்
  • எஸ்.விசாலாட்சி
  • எஸ்.கமலாம்பாள்
  • மதுரம்
  • என்.நாமகிரியம்மாள்
  • கே.கமலா
  • கமலா விருத்தாசலம்
  • அனசூயா தேவி
  • க. பத்மாவதி
  • பி.வி.லக்ஷ்மி

ஆகியோர் மணிக்கொடி இதழில் எழுதிய பிற பெண் எழுத்தாளர்கள்.

உள்ளடக்கம்

லண்டனிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த 'சண்டேஅப்சர்வர்' என்ற வாரப் பத்திரிகையை ஆதர்சமாகக் கொண்டு மணிக்கொடி இதழின் வடிவம் அமைந்தது. அரசியல் இதழாக அது வெளிவந்தது.புதுமைப்பித்தனின் ’கவந்தனும் காமனும்’, ’துன்பக்கேணி’; சி.சு.செல்லப்பாவின் 'ஸரஸாவின் பொம்மை'; மௌனியின் 'அழியாச்சுடர்' உள்ளிட்ட புகழ்மிக்க கதைகள் மணிக்கொடியில் வெளியாயின. பெண் எழுத்தாளர்களின் குறிப்பிடத்தகுந்த கதைகளும் மணிக்கொடியில் வெளியாகியுள்ளன.

இரண்டாம் கட்டத்தில் ஆசிரியராக இருந்த பி.எஸ்.ராமையா இதழின் உள்ளடக்கத்தில் பல்வேறு புதுமைகளைக் கையாண்டார் அவரும் கி.ராமச்சந்திரனும் இணைந்து சிறந்த வெளிநாட்டுக் கதைகளை மொழிபெயர்த்து வெளியிட்டனர். ’யாத்ரா மார்க்கம்’ என்ற பகுதி எழுத்தாளர்களின் கருத்து சுதந்திரத்தை வெளிப்படுத்த உதவியது. நல்ல விவாதங்கள் இந்தப்பகுதியில் தொடர்ந்து வெளிவந்தன. புதுமைப்பித்தன், க.நா.சுப்ரமணியம் ஆகியோர் நிகழ்த்திய இலக்கிய விவாதங்கள் இதில் முக்கியமானவை. பின்னாளில் இது எழுத்து இதழில் "எழுத்தரங்கம்" பகுதி உருவாக ஊக்கமாக அமைந்தது.

இதழியல் உத்திகள்
  • யாத்ரா மார்க்கம் பகுதி
  • ஓவியங்களுடன் கதைகளை வெளியிடுவது
  • ஓவியரின் பெயரை வெளியிடுவது
  • ஆசிரியரைப் பற்றிய குறிப்பு
  • சிறுகதையைப் பற்றிய குறிப்பு
  • புதுமையாகக் கதை சொல்லும் பாணி
  • நாடக பாணிக் கதைகள்
  • இதிகாசப்பாணியில் கதை சொல்வது

என்று பல்வேறு உத்திகளை மணிக்கொடி இதழின் வடிவமைப்பில், படைப்புகளில் கையாண்டார் பி.எஸ். ராமையா.

இலக்கிய இடம்

தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் மணிக்கொடிக்கு முக்கியமான இடமுண்டு. குறிப்பாக, பி.எஸ் ராமையா காலத்து மணிக்கொடி, சிறுகதைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது. "தமிழில் சிறுகதைக்கு என்று தனியாக ஒரு பத்திரிகை இல்லாத குறையை நீக்குவதற்காகவும், பிற நாட்டவர் கண்டு போற்றும்படியான உயர்ந்த கதைகளை எழுதக்கூடிய தமிழ் எழுத்தாளர்களை வெளிப்படுத்தவும், மணிக்கொடி தோன்றியுள்ளது" என்று பி.எஸ். ராமையா முதல் இதழில் குறிப்பிட்டிருந்தார்.

"பிச்சமூர்த்தியின் 'தாய்' போன்ற உயர்ந்த தரத்துச் சில கதைகளை வெளியிட வாய்த்ததிலேயே, மணிக்கொடி கதைப் பதிப்பு முயற்சி ஒரு சாதனையாக நிறைவு பெற்று விட்டது என்று கூறலாம். மணிக்கொடி காலம் என்பதற்கு அந்த மாதிரி இலக்கியத்தரமான கதைகள் எழுதப்பட்ட ஒரு காலகட்டம் என்று பொருள் கொள்ளலாம் என்று தோன்றுகிறது" என்று அவர் கூறுகிறார். "மணிக்கொடி ஒரு பத்திரிகை அல்ல, ஓர் இயக்கம். இந்த இயக்கத்தின் வாழ்வோடு தான் தமிழ் மறுமலர்ச்சி இலக்கியம் இணைந்துள்ளது" என்கிறார் பி.எஸ். ராமையா.

இதழை வாங்கி வாசித்த கல்கி, "பத்திரிகை என்றால் இதுதான் பத்திரிகை" என்று பாராட்டினார். "மணிக்கொடி போன்ற தனித்தன்மை உள்ள ஒரு பத்திரிகை காலத்தின் தேவையாக இருந்தது" என புதுமைப்பித்தன் 'ஆண்மை' என்ற சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் கூறியிருக்கிறார்.

"மணிக்கொடியின் மனப்பான்மை புரட்சி. வாழ்க்கையிலும் சமூகத்திலும் ரசனையிலும் புரட்சி; 'புராணமித்யேவ நசாதுசர்வம் (பழையது என்பதாலேயே எல்லாம் சிறந்தது அல்ல) என்று காளிதாசன் சொன்னதுதான் அதன் கொள்கை. போராட்டத்தில்தான் அதன் உயிர். துக்கத்திலும் வீழ்ச்சியிலும் வறுமையிலும்தான் உணர்ச்சிகள் சிறந்து ஒளிகொண்டு ஜ்வலிக்கின்றன என்பது அதன் கொள்கை. சுகம், ஏமாற்றம், துக்கம்தான் உண்மை என்பது அதன் தீர்மானம். சர்வஜன ஓட்டின் தீர்ப்புப்படி உலகத்தில் பெருவாரியான மக்கள் அனுபவிப்பது இன்பமா? செல்வமா? பதவியா? இல்லை. அதனால் மணிக்கொடி மனப்பான்மை எங்கும் தென்படும் வறுமையையும் நோயையும்தான் ஆராய்ச்சி செய்கிறது. எதையும் அது புறக்கணிப்பதில்லை. எல்லாம் இயல்பு, எல்லாம் பலவீனம் என்று தெளிவு கொள்ளுகிறது. போராட்டம்தான் அதன் லட்சியம், போரின் முடிவுகூட அவ்வளவு இல்லை." தன் புது எழுத்து கட்டுரையில் கு.ப.ராஜகோபாலன் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

"வெற்றி பெற்ற முதல் தமிழ்ச் சிறுகதாசிரியர்களில் பலர், அந்தக் காலத்தில் 'மணிக்கொடி’ என்கிற அல்பாயுஸுப் பத்திரிகையில் தங்கள் சிரஞ்சீவிக் கதைகளை எழுதினார்கள்." என க.நா.சுப்ரமணியம் குறிப்பிடுகிறார்.

'மணிக்கொடி பத்திரிகையானது வெளிவரும் முன்பு எத்தனையோ இலக்கியப் பத்திரிகைகள் இருக்கத்தான் செய்தன. ஆனால், புதிய இடம் கொடுக்கும், உற்காகம் ஊட்டும், வரவேற்கும் பத்திரிகை காலத்தின் தேவையாக இருந்தது. உலக இலக்கியங்களை ஆங்கிலத்தின் மூலம் நன்கு அறிந்திருந்த திறமையாளர்கள் இலக்கியத்தரமான சிறுகதைகளை- கதைக்கலையின் பல்வேறு தன்மையான படைப்புகளை- வாழ்க்கையின் அடிமட்டம் வரை ஆழ்ந்து அலசிப் பார்த்து உண்மைகளை உள்ளது உள்ளபடி சித்திரிக்கும் சிருஷ்டிகளை- பலரகமான உணர்ச்சி வெளிப்பாடுகளை எல்லாம் ஆழமாகவும் அழுத்தமாகவும் தமிழிலும் உருவாக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். இத்தகைய புது முயற்சிகளுக்கு மணிக்கொடி இடம் அளித்தது" என்கிறார் வல்லிக்கண்ணன்.

மணிக்கொடி பற்றிய புத்தகங்கள்

  • மணிக்கொடி முதல்வர்கள்- சி.சு. செல்லப்பா
  • மணிக்கொடி இதழ் தொகுப்பு (அசோகமித்ரன், சிட்டி, ப.முத்துகுமாரசாமி)
  • மணிக்கொடி கவிதைகள்- ய.மணிகண்டன் காலச்சுவடு
  • மணிக்கொடி காலம்- பி.எஸ்.ராமையா

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.