பாமாலை 18
பாமாலை 18 (பதிப்பு: 1999) இஸ்லாமிய மாலை இலக்கியங்களின் தொகுப்பு. இதன் ஆசிரியர் கா. அப்துல்கபூர்.
வெளியீடு
பாமாலை 18 மாலை இலக்கிய நூலை, தக்கலையில் உள்ள பொன்மொழிப் பதிப்பகம், 1999-ல் வெளியிட்டது. இதனை இயற்றித் தொகுத்து வெளியிட்டவர், கா. அப்துல்கபூர்.
நூல் அமைப்பு
பாமாலை 18, இஸ்லாமிய மாலை இலக்கியங்கள் பதினெட்டின் தொகுப்பு. இதனை இயற்றித் தொகுத்து வெளியிட்டவர் பேராசிரியர் கா. அப்துல்கபூர். இந்நூலில் பின்வரும் மாலை இலக்கியங்கள் இடம்பெற்றன.
- திருமறை மாலை
- நபிமொழி மாலை
- நாயக மாலை
- நபிமணி மாலை
- ஹிளிர் மாலை
- பாத்திமா மாலை
- முஹ்யித்தீன் மாலை
- ஷாதிலீ மாலை
- ரிஃபாயி மாலை
- காஜா மாலை
- மீரான் மாலை
- பீரப்பா மாலை
- தைக்கா சாகிபு மாலை
- சதக்கப்பா மாலை
- கல்வத்து மாலை
- மாப்பிள்ளை ஆலிம் மாலை
- தர்பா மாலை
- இறையருள் மாலை
உள்ளடக்கம்
திருமறைமாலை
திருக்குரானின் செய்திகளை, அவற்றை எப்படிப் பின்பற்றி சரியான முறையில் வாழ்வது என்பதையும் கூறும் மாலை இலக்கிய நூல், திருமறைமாலை.
நபிமொழி மாலை
நபிமொழி மாலை, இஸ்லாமியர்கள் திருக்குர்ஆனையும், நபிகள் நாயகத்தின் ஹதீஸ்களையும் பின்பற்றி எப்படிச் சரியாக வாழ்வது என்ற செய்திகளைக் கூறும் அற வழி நூல்.
நாயக மாலை
நபிகள் நாயகத்தின் வாழ்வையும், வாக்கையும் கூறும் மாலை இலக்கிய நூல், நாயக மாலை.
நபிமணி மாலை
நபிமணி மாலை, நபிகள் நாயகத்தைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்ட மாலை இலக்கிய நூல்.
ஹிளிர் மாலை
ஹிளிர் என்னும் இறைத்தூதரின் வாழ்வையும் வாக்கையும் கூறும் மாலை இலக்கிய நூலே ஹிளிர் மாலை.
பாத்திமா மாலை
பாத்திமா மாலை, நபிகள் நாயகத்தின் மகளான பாத்திமாவை பாட்டுடைத் தலைவியாகக் கொண்டு பாடப்பட்ட மாலை இலக்கிய நூல்.
முஹ்யித்தீன் மாலை
அப்துல் காதிர் என்னும் இஸ்லாமிய ஆன்மிகப் பெரியவரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்ட மாலை இலக்கிய நூல், முஹ்யித்தீன் மாலை.
ஷாதிலீ மாலை
ஷாதிலீ மாலை, இஸ்லாமிய ஆன்மிகப் பெரியவர்களுள் ஒருவரான ஷாதிலீ என்பவரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறுகிறது.
ரிஃபாயி மாலை
நபிகள் நாயகத்தின் பதினேழாம் தலைமுறையில் தோன்றிய சுல்தானுல் ஆர்ஃபின் சையது அகமது கபீர் ரிஃபாயி ஆண்டகை அவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் மாலை நூலே ரிஃபாயி மாலை.
காஜா மாலை
ஆஜ்மீரில் அடங்கியுள்ள காஜா முயினுத்தீன் ஜிஸ்தி அவர்களின் வாழ்வையும், வாக்கையும் கூறும் மாலை இலக்கிய நூல், காஜா மாலை.
மீரான் மாலை
மீரான் மாலை, நாகூர் திருத்தலத்தில் அடங்கியுள்ள ஷாகுல் ஹமீது மீரான் பாதுஷா அவர்கள் மீது பாடப்பட்ட மாலை இலக்கிய நூல்.
பீரப்பா மாலை
பீரரசர் என்று போற்றப்படும் பீர் முகம்மது அப்பா மீது பாடப்பட்ட மாலை இலக்கிய நூல் பீரப்பா மாலை.
தைக்கா சாகிப்பு மாலை
காயல்பட்டினத்தில் வாழ்ந்த தைக்கா சாகிப் எனப்படும் இஸ்லாமிய ஆன்மிகப் பெரியவர் மீது பாடப்பட்ட மாலை இலக்கிய நூல், தைக்கா சாகிப்பு மாலை.
சதகப்பா மாலை
சதகப்பா மாலை, காயல்பட்டினத்தில் வாழ்ந்த சதக்கத்துல்லாஹ் அப்பா என்ற இறை நேசச் செல்வர் மீது பாடப்பட்ட நூல்.
கல்வத்து மாலை
கீழக்கரையில் வாழ்ந்த இறைநேசச் செல்வர்களுள் ஒருவரான கல்வத்து நாயகம் மீது பாடப்பட்ட மாலை இலக்கிய நூல், கல்வத்து மாலை.
மாப்பிள்ளை ஆலிம் மாலை
கீழக்கரையில் பிறந்து காயல்பட்டினத்தில் வாழ்ந்த மார்க்க அறிஞரும் மாமேதையாகவும் விளங்கிய மாப்பிள்ளை ஆலின் அவர்களின் வாழ்வையும், வாக்கையும் கூறும் மாலை இலக்கிய நூல் மாப்பிள்ளை ஆலிம் மாலை.
தர்பா மாலை
ஒரிஸ்ஸாவில் உள்ள தர்பா என்ற ஊரில் வாழ்ந்த இஸ்லாமிய ஞானி அல்ஜீலான் ஹாஜி அப்துஷ் ஷூர் ஷெய்குனா அவர்களைப் பற்றியும், அவர்களைச் சந்திக்கச் சென்ற தனது அனுபவம் பற்றியும் விளக்கி கா. அப்துல்கபூரால் பாடப்பட்ட மாலை இலக்கிய நூல் தர்பா மாலை.
இறையருள் மாலை
எல்லாம் வல்ல இறைவனின் அருள் வேண்டி கா. அப்துல்கபூரால் பாடப்பட்ட மாலை இலக்கிய நூல் இறையருள் மாலை.
மதிப்பீடு
பாமாலை 18, பதினெட்டு இஸ்லாமிய மாலை இலக்கிய நூல்களின் தொகுப்பு. இஸ்லாமியர்கள் திருக்குர்ஆனையும், நபிகள் நாயகத்தின் ஹதீஸ்களையும் பின்பற்றி எப்படிச் சரியாக வாழ்வது என்பதையும், பல்வேறு ஆன்மிகப் பெரியவர்களின் வாழ்க்கை வரலாறுகளையும், இஸ்லாமிய இறை நேசர்கள் குறித்தும், இஸ்லாம் பற்றிய பிற செய்திகளைக் குறித்தும் கூறும் நூலாக அறியப்படுகிறது.
உசாத்துணை
- இந்திய இலக்கியச் சிற்பிகள்: கா. அப்துல்கபூர், எழுத்தாக்கம்: ஹ.மு. நத்தர்சா, சாகித்ய அகாதமி நிறுவன வெளியீடு, முதல் பதிப்பு: 2005.
- பாமாலை 18, கா. அப்துல்கபூர், பொன்மொழி பதிப்பகம், தக்கலை, முதல் பதிப்பு: 1999.
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Apr-2025, 10:57:07 IST