நாயக மாலை
நாயக மாலை (முதல் பதிப்பு: 1954) நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றையும், அவர் வாழ்வில் நடந்த நிகழ்வுகளையும் அடிப்படையாக வைத்துப் பாடப்பட்ட மாலை இலக்கிய நூல். இதனை இயற்றியவர் கா. அப்துல்கபூர்
வெளியீடு
நாயக மாலை, 1954-ல், இலங்கை திருக்குர் ஆன் இயக்கத்தாரால் வெளியிடப்பட்டது. இந்நூல், கா. அப்துல்கபூர் இயற்றிய முதல் மாலை இலக்கிய நூல். 'நாயகமே' என்ற தலைப்பில் வெளியானது. பின் 'நாயக மாலை', 'நாயகப் பாமாலை' போன்ற தலைப்புகளில் வெளிவந்தது. 'பாமாலை - 18' என்ற இஸ்லாமிய மாலை இலக்கியங்களின் தொகுப்பு நூலிலும், நாயக மாலை நூல், அப்துல்கபூர் இயற்றிய பிற மாலை இலக்கிய நூல்களுடன் இணைந்து இடம்பெற்றது. 'பாமாலை 18' நூலை தக்கலையில் உள்ள பொன்மொழிப் பதிப்பகம், 1999-ல் வெளியிட்டது.
நூல் அமைப்பு
நாயக மாலை, 120 ஈரடித் தமிழ்க் கண்ணிகளால் இயற்றப்பட்டது. ஒவ்வொரு பாடலும் எட்டு சொற்றொடர்க் கூறுகளைக் கொண்டது. 'நாயகமே' என்ற ஈற்றுச் சொல்லுடன் ஒவ்வொரு பாடலும் நிறைவடைகிறது. பாடலின் முதல் அடி இறைவாழ்த்தாகவும், இரண்டாவது அடி இறைத்தூதர் வாழ்த்தாகவும் அமைக்கப்பட்டது.
உள்ளடக்கம்
நாயக மாலை, உமறுப்புலவர், சீறாப்புராணக் காப்பியத்தில் மூன்று காண்டங்களில் பாடி முழுமை அடையாத நபிகள் நாயகத்தின் வாழ்வை நூற்றி இருபது கண்ணிகளில், 960 சீர்களில் கூறும் இஸ்லாமிய மாலை இலக்கிய நூல். இளமைப் பருவம், காளைப் பருவம், ஞான வாழ்வு, நபித்துவம், சோதனையும் சாதனையும், எதையும் தாங்கிய இதயம், அரும்பணிகள், ஆற்றலும் மாற்றமும், அடியவர்க்கிரங்கல், இடம்பெயர்தல் (ஹிஜ்ரத்), மதீனா நகர் வாழ்வு, மக்கா வெற்றி, இறுதிநாட்கள் என்ற வகையில் நபிகள் வாழ்வின் பல நிகழ்வுகளை, செய்திகளைத் தாங்கி நாயக மாலை நூல் அமைந்துள்ளது. நபிகள் கூறிய பொன்மொழிகள் பலவும் நாயக மாலை நூலில் இடம்பெற்றன. பாடல்களில் தனி மனித ஒழுக்கம், மனித மாண்புகள், கடமைகள், பழக்கவழக்கங்கள் போன்றவை பற்றிய செய்திகள் இடம்பெற்றன.
பாடல்
அருளாளன் அன்புடையோன் அல்லாஹூவின் கருணைப்
பெருங்கொடையாய் வந்துதித்த பெருமானே நாயகமே
உயிரிழந்தும் உணர்விழந்தும் உலைத்திருந்த பாருலகம்
உயர்வடையும் வழிகாண உருகிநின்ற நாயகமே
செங்கதிரும் தண்மதியும் சேர்த்துக் கையில் தந்திடினும்
எங்கொள்கை விட மாட்டோம் என்றுரைத்த நாயகமே
நடைவழியில் முள்ளிட்டும் நற்கழுத்தில் துணியிட்டும்
தடைசெய்தோர் தொல்லைகளால் தயங்காத நாயகமே
விலங்குகளின் குடலையுங்கள் வீசு கதிர் மேனியிலே
கலங்காமற் போட்டவர்க்கும் கருணை பொழி நாயகமே
முந்நூற்றுப் பதின் மூன்று முஸ்லீம்களுடன் பத்ரில்
தந்நலத்தின் தருக் கொழித்த தளபதியே நாயகமே
வியர்வையது உலருமுன்னர் வேலை செய்வோர் கூலியினை
நயமாக கொடுப்பதற்கு நவின்ற நபி நாயகமே
தனக்கேனும் பிறர்க்கேனும் தகுபணிகள் செய்யாதோன்
எனதிறையின் பரிசு பெறான் என நவிலும் நாயகமே
பிறர் பிழையை பொறுத்தருள்வோர் பொறுமையுடன் வறுமை நிற்போர்
திறமான செயல்புரியும் திறமுரைத்த நாயகமே
துன்புறுவோர் மனப்பிணியைத் துடைப்பதற்கா யுதித்திடுமோர்
இன்சொல்லே பெருங்கொடையென் றியம்பு முபீன் நாயகமே
மதிப்பீடு
நாயக மாலை இஸ்லாமிய மாலை இலக்கிய நூல்களுள் ஒன்று. நாகூர் ஹனிபா முதன் முதலாகப் பாடிய இசைத்தட்டுப் பாடலாக இதன் பாடல்கள் அமைந்தன. நபிகள் நாயகத்தின் சிறப்பு, பெருமை, புகழ், அவரது கொள்கைகள், சிந்தனைகளை எளிய தமிழில் கூறும் இஸ்லாமிய மாலை இலக்கிய நூலாக 'நாயக மாலை' நூல் அறியப்படுகிறது.
உசாத்துணை
- நாயக மாலை
- நாயக மாலை இலக்கியத்தில் மனித வாழ்வியல்
- இந்திய இலக்கியச் சிற்பிகள்: கா. அப்துல்கபூர், எழுத்தாக்கம்: ஹ.மு. நத்தர்சா, சாகித்ய அகாதமி நிறுவன வெளியீடு, முதல் பதிப்பு: 2005.
- பாமாலை 18, கா. அப்துல்கபூர், பொன்மொழி பதிப்பகம், தக்கலை, முதல் பதிப்பு: 1999
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Jun-2025, 14:13:02 IST