under review

பீரப்பா மாலை

From Tamil Wiki

பீரப்பா மாலை (பதிப்பு: 1999) இஸ்லாமிய மாலை இலக்கிய நூல்களுள் ஒன்று. இதனை இயற்றியவர் கா. அப்துல்கபூர்.

வெளியீடு

பீரப்பா மாலை, கா. அப்துல்கபூர் இயற்றிய 'பாமாலை 18' என்ற இஸ்லாமிய மாலை இலக்கியங்களின் தொகுப்பு நூலில், பிற மாலை இலக்கிய நூல்களுடன் இணைந்து இடம்பெற்றது. பாமாலை 18 நூலை தக்கலையில் உள்ள பொன்மொழிப் பதிப்பகம், 1999-ல் வெளியிட்டது.

நூல் அமைப்பு

பீரப்பா மாலை, நான்கு சீர்களைக் கொண்ட நான்கடி மாலையாக, காப்புச் செய்யுளுடன் சேர்த்து எழுபத்தொரு கண்ணிகளைக் கொண்டது. கா. அப்துல்கபூர் இயற்றிய பிற மாலை இலக்கிய நூல்களுள் மாறுபட்டு, இந்நூலின் தொடக்கத்தில் காப்புச்செய்யுள் இடம்பெற்றது. ஒவ்வொரு கண்ணியின் இறுதியிலும் 'பீரப்பா' என்ற சொல் இடம்பெற்றது.

உள்ளடக்கம்

பீரப்பா மாலை, தக்கலையில் அடக்கமாயிருக்கும் இறைநேசர் பீர் முகம்மது அப்பாவின் புகழினைப் பாடும் விதமாகவும், அவர் நிகழ்த்திய அற்புதங்களை விளக்கிக் கூறும் வகையிலும் இயற்றப்பட்டுள்ளது. பீர் முகம்மது அப்பா, தென்காசி வட்டத்தில் உள்ள கணிகபுரத்தில் பிறந்தார். சுல்தான் அஹ்மதுல் கபீர் ரிபாயியின் வழித்தோன்றலாகக் கருதப்படுகிறார். இஸ்லாமிய இறைநேசர் சதக்கத்துல்லாஹ் அப்பாவின் சம காலத்தவராக அறியப்படுகிறார்.

பீர் முகம்மது அப்பாவின் புகழை, மேன்மையை, சிறப்பைக் கூறும் நூலாக பீரப்பா மாலை இயற்றப்பட்டுள்ளது.

பாடல்

பூமணக்கும் ஞானப் புகழ்மணக்கும் பாக்களினால்
நாமணக்கும் பீரரசர் நற்சிறப்பைக் - காமணக்கும்
நாவலுறு நற்றமிழில் நான்மகிழ்ந்து பாடுதற்குக்
காவலுறும் ஓரிறையே காப்பு

அன்னையிலி தந்தையிலி ஆணுமிலி பெண்ணுமிலி
முன்னையிலி முடிவுமிலி மொழியுமொரு முதுமையில்
பின்னையிலி பிழையுமிலி பிறப்புமிலி, இறப்புமிலி
மின்னையிலி தன்னையரி மேதகையே பீரப்பா

பூவட்ட மீதிலொரு புகழ்வட்ட மாயிலங்கி
நாவட்டம் இடுகின்ற நாவலத்தின் தென்குமரி
மாவட்ட மாமலரே மாதவத்தோர் நாடும்பூங்
காவட்டம் உறைகின்ற கலையமுதே பீரப்பா

தேர்மேட்டில் ஓடுகின்ற தேசுறுத்தும் வாசிதனைப்
பார்மேட்டில் ஓட்டாமல் பக்குவமாய்ப் பிடித்தடக்கிப்
பீர்மேட்டில் சஞ்சரித்துப் பெருந்தவங்கள் ஆற்றியபின்
ஊர்மேட்டில் உறைந்துவிட்டீர் ஊருணியே பீரப்பா

சித்திருக்கும் மாந்தர்களின் சிந்தைகளில் நிறைந்திருக்கும்
சத்திருக்கும் கலையிலுறு சாரமெல்லாம் உணர்ந்தறிந்து
வித்திருக்கும் திருமறையில் விதைத்திருக்கும் கருத்துகளை
முத்திருக்கும் சொற்களிலே மொழியவந்த பீரப்பா

சீர்கொண்ட திங்களெனச் சேர்ரஜபு முழுமதியில்
பேர்கொண்ட பெருமக்கள் பெரிதுவக்க வருகின்ற
நேர்கொண்ட நினைவுவிழா நிகழ்ச்சிகளைக் கண்டுவந்தே
ஏர்கொண்ட ஆசியருள் எழில்கொண்ட பீரப்பா

மதிப்பீடு

பல்வேறு இஸ்லாமிய இலக்கிய நூல்களை இயற்றிய இறைஞானி பீரப்பா எனப்படும் பீர் முகம்மது அப்பா. தன் வாழ்நாளில் பல்வேறு அற்புதங்களைச் செய்த மெய்ஞ்ஞானி. தக்கலையில் அடக்கமாகியிருக்கும் பீர் முகம்மது அப்பாவைப் புகழ்ந்து பாடப்பட்ட பல நூல்களுள் குறிப்பிடத்தகுந்த மாலை இலக்கிய நூலாக பீரப்பா மாலை நூல் அறியப்படுகிறது.

உசாத்துணை

  • பாமாலை 18, கா. அப்துல்கபூர், பொன்மொழி பதிப்பகம், தக்கலை, முதல் பதிப்பு: 1999



✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 30-May-2025, 09:18:17 IST