under review

பீர்முகம்மது அப்பா

From Tamil Wiki
அப்பா என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: அப்பா (பெயர் பட்டியல்)
பீர்முகம்மது என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பீர்முகம்மது (பெயர் பட்டியல்)
பீர்முகமது அப்பா தர்கா
பீர்முகமது அப்பா தர்கா தக்கலை
பீர்முகம்மது அப்பா தர்கா, பீர்மேடு, கேரளம்
பீர்முகமது அப்பா தர்கா, பழையபடம்
பீரப்பா வாழ்ந்த இடம் தென்காசி நடுப்பேட்டை
தேவாரம் தர்கா முகப்பு

பீர்முகம்மது அப்பா (ரலி) (தக்கலை பீர் முகம்மது அப்பா) (ஞானமாமேதை) (பொ.யு 15அல்லது 16-ம் நூற்றாண்டு) தமிழக சூஃபி ஞானி, கவிஞர்.தமிழகத்தின் சூஃபி மரபின் முதன்மைக்கவிஞர்களில் ஒருவராக கருதப்படுகிறார். இறைநேசச் செல்வராக வழிபடப்படுகிறார்.

பிறப்பு, கல்வி

மரபு

பீர்முகம்மது அப்பா தென்காசியில் கணிகபுரத்தில் (இன்றைய நடுப்பேட்டை) சிறுமலுக்கர், ஆமீனா இணையருக்குப் பிறந்தார். ('வீரம் புகழும் தென்காசி நகர் சிறுமலுக்கர் மைந்தன் பீருமுகம்மதன்' என்று பீர்முகம்மது அப்பா விருத்தப்பாடலில் குறிப்பிடுகிறார்) இவர் வாவஞ்சி என்னும் பெரியார் மரபில் வந்தவர். ('வேதகுல வாவஞ்சி பேரனான வேந்தரெனும் சிறுமலுக்கர்'- பீரப்பா விருத்தம்).

கல்வி

தென்காசியில் தன் இளமையைக் கழித்த பீரப்பா அங்கே தந்தையிடமிருந்து கல்வி கற்றார்.

காலம்

பொ.யு 15 அல்லது 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்கலாம் என அறிஞர்கள் கருதினர். அவரின் படைப்புக்களை வைத்து அவர் பொ.யு. 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் எனவும் கருதுகின்றனர். பீர்மேட்டுக்கு பீரப்பா பொயு 1550-ல் வந்தார் என கேரள ஆய்வேடுகள் சொல்கின்றன

வாழ்க்கை

பீரப்பாவின் வாழ்க்கை அவருடைய பாடல்கள் காட்டும் குறிப்புகளில் இருந்தும் அவருடைய சமகாலத்தவரான கோட்டாறு ஞானியார் சாகிபு அப்பா போன்றவர்களின் பாடல்களில் உள்ள குறிப்புகளில் இருந்தும் பொதுவாக ஊகிக்கப்படுகிறது

தென்காசி

பீரப்பா தென்காசியில் தன் இளமைப்பருவத்தைக் கழித்தார். தென்காசி விஸ்வநாதர் கோயில் தர்மகர்த்தவான பெஸ்கட் ராமசாஸ்திரியுடன் பீர்முகம்மது அப்பாவின் தந்தை நட்புடன் இருந்தார். விஸ்வநாதர் கோயில் குளத்தில் சைவர்கள் மட்டுமே குளிக்க அனுமதி இருந்த அந்த காலகட்டத்தில் இஸ்லாமியச்சிறுவன் குளித்ததால் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது என ஒரு கதை உள்ளது.

கீழவளவு, தேவாரம், ஆனைமலை

பீர்முகம்மது ஞானத்தேடலுடன் கேரளத்தின் காடுகளுக்குச் சென்று அங்கே பல்வேறு ஞானிகளைச் சந்தித்து யோகப்பயிற்சி ஞானப்பயிற்சி முதலியவற்றை அடைந்தார் என்று கருதப்படுகிறது. மதுரை மேலூர் அருகே கீழவளவு அருகே ஒரு குகையில் தியானம் செய்தார். தேனி மாவட்டத்தில் உள்ள தேவாரம், ஆனைமலை ஆகிய இடங்களில் அவர் வாழ்ந்தார் எனப்படுகிறது.

பீர்மேடு

பொயு 1550 வாக்கில் பீர்முகமது அப்பா பீர்மேடுக்கு வந்தார். அங்கே அவர் நீண்டகாலம் தங்கியிருந்தார்.

பீர்மேட்டில் இருந்த காலத்தில் பீர்முகமது அப்பா மாஅரிபத்து மாலை, ஞான உலக உருளை, ஞானரெத்தினக் குறவஞ்சி, ஞானமணிமாலை முதலிய நூல்களை இயற்றியதாக நெயினாமுகம்மது பாவலர் எழுதிய பீர்முகம்மது அப்பா வரலாறு 1914 நூலில் குறிப்பிடுகிறார்.

1860 முதல் பிரிட்டிஷ் வருவாய் ஆவணங்களில் அவர் வாழ்ந்த இடம் பீர்மேடு என குறிப்பிடப்படுகிறது. 1924-ல் அன்றைய திருவிதாங்கூர் அரசி சேதுலட்சுமிபாய் தன் ஆட்சிக்காலத்தின் தொடக்கத்தில் பீர்முகமது வாழ்ந்த இடத்தில் ஒரு சிறு இஸ்லாமிய வழிபாட்டிடம் கட்டினார். அது பீர்மேட்டில் பீர்முகமது தர்கா என வழிபாட்டில் உள்ளது.

தக்கலை

பொயு 1580 வாக்கில் பீர்முகமது அவர்கள் தக்கலைக்கு வந்திருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது. தக்கலையை ஒட்டி அக்காலத்தில் புகழுடனிருந்த கல்குளம் என்னும் ஊருக்கு அவர் வந்தார். அன்று அப்பகுதி வேணாடு (பழைய திருவிதாங்கூர்) அரசர்களின் ஆட்சியில் இருந்தது.

இளமையில் தக்கலையில் முஹைதீன் பிள்ளை என்பவரின் வீட்டில் பீரப்பா தங்கினர் என்றும் அவர் பீரப்பாவின் உறவினர் என்றும் சொல்லப்படுகிறது. பீர்முகமது அப்பா என்னும் சூஃபியாக அவர் தக்கலைக்கு வந்தது தக்கலை அஞ்சுவண்ணம் வணிகக்குழுவைச் சேர்ந்தவரான கொந்தால்கான் என்பவரின் முயற்சியால் என சொல்லப்படுகிறது. ('தக்கலை கொந்தால்கான் முகமாய்' என பீரப்பாவே குறிப்பிடுகிறார்)

1613-ல் பீர்முகமது அப்பா திருநெறிநீதம் என்னும் 3000 பாடல்கள் அடங்கிய நூலையும், 1617-ல் றோசுமீசாக்குமாலை என்னும் 1207 பாடல்கள் கொண்ட நூலையும் எழுதியது தக்கலையில் தங்கியிருக்கும்போதுதான் என்பதற்கு அந்நூல்களிலேயே சான்றுகள் உள்ளன.

கல்குளத்தில் பீரப்பாவுக்கு முதன்மை மாணவர் அமைந்தார். எக்கீன் முகம்மது (றலி) அவர்களின் அடக்கவிடம் தக்கலை பீரப்பா தர்காவிலேயே அமைந்துள்ளது.

தனிவாழ்க்கை

பீர்முகம்மது தக்கலையில் நெசவுத் தொழில் செய்தார் எனப்படுகிறது. அவர் மணமானவர் என்பதற்கு சான்றுகள் இல்லை.

சதக்கத்துல்லா அப்பா சந்திப்பு

காயல்பட்டினம் சதக்கத்துல்லா அப்பா பீர்முகம்மதுவைச் சந்திக்க தக்கலைக்கு வந்தார் என்றும், வறுமையில் இருந்த பீர்முகமது அப்பா சப்பாத்திக்கள்ளி சதையை தன் வல்லமையால் மாமிசமாக ஆக்கி சமைத்து சதக்கத்துல்லா அப்பாவிற்கு பரிமாறினார் என்றும் ஒரு தொன்மம் உள்ளது. அஞ்சுவண்ணம் பீர்முகமதியா முஸ்லீம் அசோஷியேஷன் வெளியிட்டிருக்கும் மலர்களில் இச்செய்தி அவரது அற்புதங்களில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் காலக்கணிப்புகளின்படி சதக்கத்துல்லா அப்பா 1632-ல் பிறந்தார் என்றும், அவர் தக்கலைக்கு வந்திருக்க வாய்ப்பில்லை என்றும் சொல்லப்படுகிறது.

பீர்முகம்மது அப்பா தர்க்கா தக்கலை

ஆன்மிகம்

ஞானமரபு

பீர்முகமது அப்பா இஸ்லாமிய சூஃபி மெய்ஞான மரபைச் சேர்ந்தவர். இஸ்லாமிய மரபில் சில்சிலா என்ற சொல்லுக்கு ஞானாசிரியர் மரபு என்று பொருள். பீரப்பா நபிகள் நாயகத்தில் இருந்து தன் ஞானாசிரியர் மரபை தொடங்குகிறார். சில்சிலாவின் நாற்பதாவது தலைமுறையின் இடத்தில் தன்னை வைத்துக் காட்டுகிறார். நான்காவது கலீஃபாவான அலி இபு அபீதாலீப் , நபிகள் நாயகத்தின் மகள் பாத்திமாவின் கணவர் அலீ (றலி) என அதில் வரிசையிடப்பட்டுள்ளது. அதில் ஒன்பதாவது இடத்தில் பாரசீகத்தைச் சேர்ந்த ஹஸ்ரத் ஜுனைதீன் பக்தாதி வருகிறார். இவ்வரிசையில் பதினைந்தாவது இடத்தில் முஹிய்யத்தீன் அப்துல் காதர் ஜீலானி வருகிறார்.

இஸ்லாமிய ஞான மரபில் நபிகள் நாயகத்தின் தோழரும் முதல் கலிஃபாவுமான அபூபக்கர் ஸித்திக் அவர்களின் மரபுக்குள் பஸ்தாமிய்யா ,நட்சபந்தியா, பக்தாதிய்யா என்னும் மூன்று மரபுகள் உள்ளன. எஞ்சிய அனைத்தும் ஹஸ்ரத் அலி (றலி) மரபைச் சேர்ந்தவை. ஹஸ்ருல் பஸ்ரியின் சீடர் ஹபீபில் அஜம் ஹபீபுய்யா என்னும் மரபை உருவாக்கினார். அதற்குள் எட்டு பிரிவுகள் உள்ளன, அதிலொன்று சர்சவ்ஸியா மரபு. அந்த சர்சவ்ஸியா மரபின் நான்காம் தலைமுறையின் முதல்வர் முஹிய்யத்தீன் அப்துல் காதர் ஜீலானி அவர்கள். அவரது மரபு காதிரிய்யா மரபு எனப்படுகிறது. தமிழகத்தில் புகழ்பெற்ற மரபு இது. இந்த மரபே பீர்முகமது அப்பா அவர்களுக்குரியது என அவர் குறிப்பிடுகிறார். பீர்முகம்மது அப்பா அவர்களின் நேரடி ஆசிரியர் ஹஸ்ரத் ஷாஹி மீறான் கனி தர்வேஷ் காதிரிய்யீ என்னும் ஞானி. ('சாயபு மீறாக்கனி தன் சீஷன்' என பீரப்பா தன் பாடலில் குறிப்பிடுகிறார்)

ஞானம்

பீரப்பாவை இஸ்லாமிய மரபுக்குள் சூஃபி மெய்ஞான மரபைச் சேர்ந்தவர் என்று சொல்லலாம். சூபி மரபு இஸ்லாமுக்குள் உள்ள அமைப்பாக திரளாத ஒரு தனி மரபு. ஆசிரியர் மணவர் உறவு வழியாக நீடிப்பது. யோகம், தியானம்,பக்தி ஆகியவற்றின் வழியாக இறையடியாராக ஆவதே அம்மரபின் வழி. பொதுவாக மதவேறுபாடுகளைக் கடந்த மானுடநேயப்பார்வையை சூஃபி மரபு முன்வைக்கிறது. எளிமை, புலனடக்கம், துறவு ஆகிய பண்புகள் வலியுறுத்தப்படுகின்றன.

தமிழகத்தில் சூஃபி மரபு தமிழ் சித்தர் மரபுக்கு அணுக்கமானதாகக் கருதப்படுகிறது. சித்தர் மரபில் சரியை ,கிரியை, யோகம், ஞானம் ஆகியவை விடுதலைக்கான வழிகளாகாச் சொல்லப்படுகின்றன. சூஃபி மரபில் இவை ஷரீகத், தரீகத், ஹக்கீகத்,மஹ்ரியத் என கூறப்படுகின்றன.

தொன்மம்

  • பீர்முகம்மது அப்பா சப்பாத்திக்கள்ளி சதையை கறியாக்கி சமைத்து சதக்கத்துல்லா அப்பாவிற்கு பரிமாறினார்.
  • சதக்கத்துல்லா அப்பா அவர்கள் காட்டில் செல்லும்போது ஓர் இல்லத்தில் ஒரு பெண்மணி தொழுதுகொண்டிருந்தார். அப்போது அவருள் தோன்றிய பீர்முகம்மது அப்பா வந்திருப்பவர் சதக்கத்துல்லா அப்பா என்று சொல்லி உபசரிக்கும்படி ஆணையிட்டார்.
  • சதக்கத்துல்லா அப்பா ஜின் வழியாக மக்கா சென்று கஃபாவில் வழிபட்டபோது அங்கே பீர்முகம்மது அப்பா தலைமையில் தொழுகை நிகழ்வதைக் கண்டார். திரும்பி வந்தபோது பீர்முகமது தறிக்குழியில் நெசவுசெய்துகொண்டிருப்பதை கண்டு திகைத்தார். பீர்முகமது தறிக்குழிக்குள் எட்டிப்பார்க்கச் சொன்னபோது அங்கே மெக்கா தெரிந்தது.

இலக்கிய வாழ்க்கை

பீர்முகம்மது அப்பா திருக்குர் ஆனின் புகழைத் தன் மெய்ஞானக் கவிதைகளில் வெளிப்படுத்தினார். இவருடைய பாடல்கள் எளிமையானவை. அவருடைய பாடல்கள் பலவற்றில் சைவ சமய கூறுகள் உள்ளன. தக்கலையில் வாழ்ந்த நாட்களில் தன் புகழ்பெற்ற நூலான ஞானப் புகழ்ச்சியை இயற்றினார். பீர்முகமது 'ஒலியுல்லா பதினெட்டாயிரம் ஞானப்புகழ்ச்சி' பாடல்களை எழுதினார்.

பாடல் நடை

  • ஞானரத்தினக் குறவஞ்சி

ஆதிக்கு முன்னம நாதியு மென்னடி சிங்கி?
அந்தக் கருக்குழி முந்த இருளறை சிங்கா
ஆதியாய் வந்த அரும்பொருளேதடி சிங்கி?
சோதியிலாதி சொரூபா யெழுந்தது சிங்கா

ஞானப் புகழ்ச்சி

"தென்காசி நாடு சிறுமலுக்க ரென்னுமவர்
தன்பால னிக்கதையைச் சாற்றினான்"

பிஸ்மில் குறம்

முத்தான குர்ஆனுக்கு உயர்ந்த மறையில்லை

முன்னுரைத்த வேதமெல்லாம் முடியவில்லையெனவே

அத்தனையும் குர்ஆனுக்குள் அடக்கிவைத்து

அடங்காத குர்ஆனை அணுபோல் சுருக்கி

அறிவுவகை இத்தனை என்றறியவகை இல்லை

அத்தனையும் அவன் உரைத்த அருள்மறையிலடக்கம்

விவாதம்

பீர் முகம்மது அப்பாவின் பாடல்களை முஸ்லிம்களிடையே உள்ள சில வஹாபியர்கள் தீவிரமாக நிராகரிக்கின்றனர். இப்பாடல்களில் இஸ்லாமிய மரபுக்கு எதிரான சொல்லாடல்கள் இருப்பதாக அவர்கள் கருதினர்.

மறைவு

பீர்முகம்மது அப்பா அவர்கள் 1630 வாக்கில் மறைந்திருக்கலாம். அவர் தக்கலையில் தன் அடக்கவிடத்தை தானே தோண்டி அமைத்திருந்தார் என்றும் தன்னை சிறுபிள்ளைகள் அடக்கம்செய்யவேண்டும் என்று சொல்லியிருந்தர் என்றும் சொல்லப்படுகின்றன.

வாழ்க்கை வரலாறுகள்

பீரப்பா அவர்களின் வாழ்க்கை வரலாறுகளில் தொடக்க காலத்தையவை.

பீர்முஹம்மது சாஹிபு ஒலியுல்லா அவர்களின் ஜீவியசரித்திரம். எம்.ஏ.நெயினா முஹமது பாவலர் 1926

நினைவிடங்கள்

  • பீர்முகமது அப்பாவின் தர்கா ஒன்று கேரளத்தில் பீர்மேட்டில் உள்ளது. அங்கே வழிபாடு நிகழ்கிறது.
  • பீர்முகமது அப்பா தங்கியிருந்த தேவாரம் (தேனி மாவட்டம், தமிழகம்) ஒரு வழிபாட்டிடம் உள்ளது
  • பீர்முகமது அப்பா தவம் செய்த மதுரை மேலூர் அருகே உள்ள கீழைவளர்வு அருகே சர்க்கரை பீர் தர்கா வழிபாட்டில் உள்ளது. இது ஒரு இயற்கையான குகை.
  • பீர் முகம்மது அப்பாவின் சமாதி 'பீர் முகம்மது ஒலியுல்லா தர்கா' தக்கலையில் உள்ளது.

வழிபாட்டுமுறை

பீர் முகம்மது அப்பாவின் ஆண்டு விழா தக்கலை பீர் முகம்மது ஒலியுல்லா தர்காவில் அஞ்சுவண்ணம் பீர்முகமதியா முஸ்லிம் அசோசியேஷன் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஹிஜ்ரி ஆண்டு ரஜபு மாதம் 14-ம் இரவில் நடைபெறுகிறது. தர்காவில் நானூறு ஆண்டுகளுக்கும்மேலாக அப்பாவின் ஞானப் புகழ்ச்சிப் பாடல்களின் முற்றோதுதல் நிகழ்வு நடைபெற்றுவருகிறது. அப்பாவின் 686 பாடல்களைப் பலரும் விடிய விடியஓதுவர். இது பள்ளிப்பாட்டு, தக்கலைப்பாட்டு என அழைக்கப்படுகிறது. தக்கலை ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் எதிரெதிராக அமர்ந்து பீர்முகமது அப்பாவின் பாடல்களை பாடுகிறார்கள். இது பாட்டுக்களதி எனப்படுகிறது. இது பாட்டுக்களரி என்பதன் மரூஉ.

இதை ஒட்டி ஊருநேர்ச்சை என்னும் சடங்கும் நிகழ்கிறது. தக்கலையின் விஸ்வகர்ம சமூகத்தினர் தர்காவுக்கு பால்குடம் எடுத்து வருகிறார்கள். பாட்டுநேர்ச்சைக்குப் பின் மூன்றாம் இரவில் ஸியாரத் என்னும் நேர்ச்சை வழங்கப்படுகிறது.

விழா இல்லாத நாட்களில் குடத்தில் நீரில் மலர்களை போட்டுவைத்து அவற்றை குடிநீராக அளிக்கிறார்கள்.

நூல்கள் பட்டியல்

  • திருமெய்ஞானச் சர நூல்
  • ஞான மலை வளம்
  • ஞான ரத்தினக் குறவஞ்சி
  • ஞான மணி மாலை
  • ஞானப் புகழ்ச்சி
  • ஞானப்பால்
  • ஞானப்பூட்டு
  • ஞானக்குறம்
  • ஞான ஆனந்தகளிப்பு
  • ஞான நடனம்
  • ஞான மூச்சுடர் பதிகங்கள்
  • ஞான விகட சமர்த்து
  • ஞானத் திறவு கோல்
  • ஞான தித்தி
  • மஃரிபத்து மாலை
  • மெய்ஞான அமிர்தக்கலை
  • மிகுராசு வளம்
  • பிசுமில்குறம்
  • ஈடேற்ற மாலை
  • திருநெறி நீதம்
பாடல் இடம்பெற்ற நூல்கள்
  • ஞானத்திறவுகோல்
  • ஞானசித்தி
  • ஞான உலக உருளை
  • ஞானக்கண்
  • ஞானவிகட சமர்த்து
  • ஞான மலைவளம்
  • மெய்ஞான களஞ்சியம்
  • ரோசு மீசாக்குமாலை

உசாத்துணை

இணைப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 27-May-2024, 09:15:18 IST