under review

சதக்கத்துல்லா அப்பா

From Tamil Wiki
சதக்கத்துல்லா அப்பா அடக்கம் செய்யப்பட்ட இடம்: கீழக்கரை
சதக்கத்துல்லா அப்பா சமாதி

சதக்கத்துல்லா அப்பா (சதக்கா)(பொ.யு. 1632 - 1703) சூஃபி கவிஞர், சூஃபி ஞானி, ஆசிரியர். அரபியில் கவிதைகள் பல எழுதினார். சீதக்காதி, கண்ணாட்டி அப்பா என்ற மஹ்மூதுதீபி போன்றவர்கள் இவரின் மாணவர்கள். தமிழகத்தில் கலாச்சார ரீதியாக இஸ்லாமுக்கும், பிற மதத்தினருக்கும் இடையே இருந்த இடைவெளியைக் குறைத்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சதக்கத்துல்லா அப்பாவின் இயற்பெயர் சதக்கா. சதக்கத்துல்லா அப்பா அபூபக்ரின் (ரலி) வழிவந்த சுலைமான் வலிக்கும், இஸ்லாத்தை தழுவி எமனேஸ்வரத்தில் வந்து தங்கி வாழ்ந்து வந்த ஒரு வட நாட்டு பிராமணக் குடும்பத்தில் தோன்றிய பாத்திமாவுக்கும் மூன்றாவது மகனாக காயல்பட்டணத்தில் 1632-ல் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் நான்கு பேர். இவரின் தாத்தா சதக் நெய்னார். ஆரம்பத்தில் தந்தையிடம் கல்வி கற்றார். பின்னர் தன் தந்தையின் நண்பரான அதிராம்பட்டினம் சின்ன நெய்னா லெப்பை ஆலிமிடம் கல்வி கற்றுத் தலைப் பாகையும் மேலங்கியும் பெற்றார். அதன்பின் தன் ஊர் திரும்பி அறிவு தேடுவதிலும், இறைவணக்கத்திலும், மக்களுக்கு அறிவுரை வழங்குவதிலும் ஈடுபட்டார்.

சதக்கத்துல்லா அப்பா தமிழ்ப் பண்டிதராக இருந்தார்.

பெயர்க்காரணம்

சதக்கத்துல்லா அப்பா ஹஜ் பயணமாக மக்கா சென்றிருந்த போது அங்கு ஹரம் ஷரீஃபில் வைத்து ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு ஒரு நூலை ஓதிக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஒரெழுத்து அதில் தவறாக எழுதப்பட்டிருந்ததனால் அதற்குப் பொருள் விரிக்க இயலாது அவ்வாசிரியர் திணறினார். அப்பொழுது தொழுகைக்கு பாங்கு சொல்லப் படவே எல்லோரும் எழுந்து தொழச் சென்று விட்டனர். இதனைக் கவனித்துக் கொண்டிருந்த சதக்கத்துல்லா அப்பா அந்நூலை எடுத்து, அதில் தவறாக எழுதப்பட்டிருந்த எழுத்தைத் திருத்தி வைத்து விட்டுத் தாமும் தொழுது விட்டு, அங்கு வந்து உட்கார்ந்தார். நூலைத் திறந்த ஆசிரியர் அதில் அவ்வெழுத்து திருத்தப் பெற்றிருப்பதையும், பொருள் தெளிவாக விளங்க வருவதையும் கண்டு மகிழ்ந்து அதனைத் திருத்தியவர் சதக்கத்துல்லா அப்பா தான் என்பதையும் விசாரித்துதறிந்து, “இத்தருணத்தில் தங்களை அல்லாஹ்வே எங்களுக்குத் தன் அருட்கொடையாக அனுப்பி வைத்தான்” என்று கூறி அல்லாஹ்வின் அருட்கொடை என்று பொருள் படும் ‘சதக்கத்துல்லாஹ்’ என்று அழைத்தார்.

ஆன்மிகம்

ஷாஹுல் ஹமீது ஆண்டகையிடம் தீட்சை பெற்ற சதக்கத்துல்லா அப்பாவின் தாத்தா சதக் நெய்னார் ஊழியம் செய்து கொண்டிருந்தபோது அவருக்கும் மக்களுக்கும் சச்சரவு ஏற்பட்டு அவர்கள் இவரை ஏசியதாகவும் அதனை ஷாகுல் ஹமீது ஆண்டகை தடுத்து அவரின் பேரராக ஒரு குத்பு தோன்றப் போவதாக முன்னறிவிப்புச் செய்ததாகவும் அதற்கேற்ப சதக்கத்துல்லா அப்பா பிறந்தனரென்றும் கூறுவர். சதக்கத்துல்லா அப்பா இல்லறத் துறவு வாழ்க்கையை மேற்கொண்டார். மதீனாவில் இரண்டாண்டுகள் தங்கி, அவர்களுக்கு மார்க்கக் கல்வி போதித்தார் என்று கூறப்படுகிறது. தமிழகம் முழுக்க பெரும்பாலான ஊர்களில் இவர் வந்து சென்றதாக ஐதீகக் கதை உள்ளது. அக்கால சூஃபி க்கள் பெரும்பாலானவர்களிடம் இவர் உரையாடியுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

மக்களுக்கு ‘ஷரஉ’ என்னும் மார்க்க நெறிமுறையை உணர்த்தி வாழ்ந்த சதக்கத்துல்லா அப்பா நாகூர் சென்ற பொழுது அங்கு ‘ஷரஉ’ (மார்க்க நெறிமுறை)க்கு மாற்றமான செயல்கள் தர்காவில் நிகழ்வதன் காரணமாக தர்காவுக்குச் செல்லாது கால்மாட்டுத் தெருவின் இறுதியில் பீரோடும் தெரு சந்திப்பிலேயே நின்று பாத்திஹா ஓதி விட்டுத் திரும்பி விட்டனர். அவ்விடத்தில் இன்றும் ஒரு விளக்குத் தண்டு உள்ளது. அதற்கு “ஸதக்” நின்ற இடம் என்று பெயர் கூறப்படுகிறது.

மாணவர்கள்

சதக்கத்துல்லா அப்பாவுக்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆன்மீக மாணவர்கள் இருந்தனர். இவரின் தம்பி ஸாம் ஷிஹாபுத்தீன் வலியும், கண்ணாட்டி அப்பா என்ற மஹ்மூதுதீபியும் இவரின் பிரதான சீடர்கள். கண்ணாட்டி அப்பா சதக்கத்துல்லா அப்பா மீது பாடிய இரங்கற்பாவில், இவர்கள் மனிதர்களுக்கு மட்டுமின்றி ஜின்களுக்கும் கல்வி போதித்ததாகக் குறிப்பிடுகின்றனர். படிக்காசுத் தம்புரான், நமச்சிவாயப் புலவர் போன்ற அக்கால சைவ அறிஞர்கள் பலர் இவருடைய மாணவர்களாக இருந்தனர். ஏராளமான மாற்று மதத்தினர் என நான்காயிரத்திற்கு மேற்பட்டவர்கள் இவரிடம் வந்து கலிமா சொல்லி அந்தரங்க ஈமான்(நம்பிக்கை) கொண்டிருந்தனர் என்று கல்வத்து நாயகம் தாம் எழுதிய சதக்கத்துல்லாஹ் அப்பாவின் வரலாற்றில் குறிப்பிட்டார். வள்ளல் சீதக்காதி குறிப்பிடத்தகுந்த மாணவர்.

அற்புதங்கள்
  • சதக்கத்துல்லா அப்பா பல அற்புதங்களைச் செய்துள்ளதாக நம்பிக்கை உள்ளது. ஒரு பஞ்ச காலத்தில் காயல்பட்டணம் இரட்டைக் குளப் பள்ளிவாசலில் வைத்து மீக்காயீல் அவர்களிடம் கூறி மழை பெய்யச் செய்தார் என்ற நம்பிக்கை உள்ளது.
  • உமறுப்புலவர் கனவிலும் சதக்கத்துல்லாஹ் அப்பாவின் கனவிலும் நபிகள் காட்சியளித்ததாக நம்பப்படுகிறது. வைகறையில் சதக்கத்துல்லாஹ் அப்பாவைக் காணவந்த உமறுப்புலவரை வரவேற்று நபியின் வரலாற்றை தன் பிரதம சீடரான மஹ்மூது தீபி அவர்களின் மூலம் விளக்கினார்.

ஒளரங்கசீப் நட்பு

சதக்கத்துல்லா அப்பாவின் புகழை அறிந்து அப்போது டில்லியிலிருந்து அரசாண்டு வந்த ஒளரங்கசீப் இவரை அரசவைக்கு அழைத்தார். இவர் மறுத்ததால் தென்னாட்டின் முஃப்தி பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினார். “துறவிகள் அரசு உத்தியோகம் ஏற்க முடியாது” என்று கூறி சதகத்துல்லா மறுத்தார். பின்னர் ஒளரங்கசீப் இவரின் மகன் முஹம்மது லெப்பை ஆலிமைத் தென்னாட்டிற்கு முஃப்தியாக நியமித்து, ஜாகீர்களும் வழங்கி அதற்கான செம்புப்பட்டயமும் எழுதி அனுப்பினார். இறுதி வரை இவருக்கும் ஒளரங்கசீபுக்கும் இடையே நெருங்கிய நட்புறவு இருந்து வந்தது. இவர் அரபியில் பாடிய புகழ்ப்பா மாலையில் ஒவ்வொரு ‘பைத்’தும்(பாடல்) ஒளரங்குஷா என்று முடிவுறும்.

இலக்கிய வாழ்க்கை

சதக்கத்துல்லா அப்பா அரபியில் கவிதைகள் எழுதினார். இரண்டடிகளான வித்ரிய்யாவில் ஒவ்வொரு பைத்துக்கும் மூன்றடி சேர்த்து ஐந்தடியாகச் செய்தது போல ’பானத் ஸுஆத்’, ’புர்தா’ ஆகியவற்றிற்கும் செய்தார். முஹ்யித்தீன் ஆண்டகை மீது ’யாகுத்பா’ என்ற கஸீதாவும், நாகூர் ஷாஹுல் ஹமீது ஆண்டகை மீது ’யாஸையிதீ ஷைகீ’ என்ற கஸீதாவும் இன்னும் பல நூல்களும் இவர் இயற்றினார். ’ஸுப்ஹான மெளலி’தை அரபு நாட்டிலிருந்து நம் நாட்டிற்குக் கொண்டு வந்து பரப்பியவர். அதில் சில பைத்துகளையும் யாத்துச் சேர்த்துள்ளனர்.

அரபியில் சிறந்த புலமை பெற்றிருந்த இவர் ‘ஸஞ்சானீ’ என்ற பிரபல அரபி இலக்கண நூலின் ஆசிரியர், ‘மஹ்பூஸ்’ என்ற பாடத்தில் செய்திருக்கும் தவற்றைச் சுட்டிக்காட்டி ஒரு நூல் எழுதினார். (முந்திய எழுத்து ஸவருடையதாக இருந்தால் மட்டும் வஸ்லுடைய ஹம்ஸ் வரும் என்று மஹ்பூஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு நிபந்தனையிடுவது அவசியமில்லை என்றும் முந்திய எழுத்து ‘ஸேர்’ அல்லது ‘பேஷ்’ உடையதாக இருந்தாலும் கூட இந்த ‘ஹம்ஸ்’ வரவே செய்யும் என்றும் இதற்குக் குர் ஆனிலும் ஆதாரங்கள் உள்ளன என்றும் கூறி அந்த ஆதாரங்களையும் தாம் எழுதிய நூலில் இவர்கள் குறிப்பிட்டார்). தாம் எழுதிய இந்நூலுக்குப் பெயர் வைப்பது பற்றித் தம் மாணவர் மஹ்மூது தீபியிடம் இவர்கள் கேட்டபோது அவர் அடக்கமான முறையில் ‘அன ஆஜிஸுன் ஜானீ’ (நான் சக்தியற்றவன்; பாவி) என்று கூற அதையே இவர் தாம் எழுதிய நூலுக்குப் பெயராக ‘ஷரஹு ஆஜிஸுன் ஜானீ ஃபீ ஷரஹு ஸஞ்சானீ’ என்று வைத்தார்.

‘சீறாப்புராணத்தை’ எழுதிய உமறுப் புலவர், வள்ளல் சீதக்காதி கேட்டுக் கொண்டதற்கேற்ப , சதக்கத்துல்லா அப்பா அவர்களிடமும் அவரது மாணவர் மஹ்மூது தீபி அவர்களிடமும் மார்க்க கல்வி பெற்று, அதன் பின்னரே எழுதினார். இவர் முடிக்காமல் விட்ட நபியின் வரலாற்றை பனீ அஹம்மது மரைக்காயர் என்பவர் இயற்றி அது சின்ன சீறா என்று அழைக்கப்பட்டது. பின்பு முன்னா முகம்மது காதிரி என்பவர் இரு பகுதியையும் இணைத்து தானும் சில பகுதிகளை சேர்த்து முழுமைப் படுத்தினார்.

பட்டம்

சதக்கத்துல்லா அப்பாவிற்கு பதினேழு பட்டங்கள் வரை உள்ளன. அவற்றில் சில:

  • கிள்ரு (அலை) ‘குத்புஸ்ஸமான்’ என்ற பட்டம் சூட்டினார்.
  • ‘ஷாஹுஷ் ஷரீஅத்’ (ஷரீஅதின் மன்னர்)
  • ‘மாதிஹுர் ரசூல்’ (அண்ணல் நபியைப் புகழ்பவர்)
  • ‘ஸுல்தானுல் உலமாயில் அரபி வல் அஜம்’ (அரபி, அரபி அல்லாத மார்க்க மேதைகளின் மன்னர்)

மதிப்பீடு

”கலாச்சார ரீதியாக இஸ்லாமுக்கும், பிறருக்கும் இடையே இருந்த இடைவெளியை சதக்கத்துல்லா அப்பா குறைத்தார். சதக்கத்துல்லாஹ் அப்பா உள்ளிட்ட கணிசமான இஸ்லாமிய அறிஞர்கள் அரபு மொழியில் எழுதியுள்ளனர். அவற்றை தமிழ் இலக்கியம் என்று கொள்ளாவிட்டாலும் தமிழக இலக்கியத்தின் பகுதியாக கருத வேண்டும். வட மொழியிலும், ஆங்கிலத்திலும் எழுதப் பட்ட தமிழர் ஆக்கங்கள் அவ்வண்ணமே கருதப்படுகின்றன. சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்களின் கால கட்டத்தில் நடந்த ஒரு படைப்பூக்கக் கொந்தளிப்பை தவிர்த்தால் தமிழில் சிறுபான்மை இலக்கியம் தீவிரமான வளர்ச்சி எதையும் அடையவில்லை" என ஜெயமோகன் மதிப்பிட்டார்.

மறைவு

சதக்கத்துல்லா அப்பா கீழக்கரையில் தன் 73-வது வயதில் 1703-ல் காலமானார்.

நினைவு

சதக்கத்துல்லா அப்பா கீழக்கரையிலுள்ள ஜாமிஆ மஸ்ஜிதில் அடக்கம் பெற்றார். ஒளரங்கஜீப் சதக்கத்துல்லா அப்பாவின் சமாதி மீது கட்டிடம் எழுப்பினார்.

நூல் பட்டியல்

  • பானத் ஸுஆத்
  • புர்தா
  • யாகுத்பா
  • யாஸையிதீ ஷைகீ
  • ஸுப்ஹான மெளலி
  • அன ஆஜிஸுன் ஜானீ

இணைப்புகள்


✅Finalised Page