சித்தர்கள்
- சித்தர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சித்தர் (பெயர் பட்டியல்)
‘சித்தர்’ என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது பொருள். சித்தத்தை வென்றவர்கள் என்ற பொருளும் உண்டு. இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய எட்டு வகையான யோகங்கள் (அஷ்ட யோகங்கள்) முலம் அஷ்டமா சித்திகளைப் பெற்றவர்கள் சித்தர்கள். சித்தர்களில் பல வகையினர் உண்டு.
சித்தர்கள் - பெயர் விளக்கம்
’சித்தர்’ என்பதற்கு, “ஞானசித்தி படைத்தோர்; சித்தி பெற்றவர்; தேவகணத்துள் ஒரு சாரார்; யாவும் உணர்ந்தவர்” என்று அகராதி பொருள் கூறுகிறது. சித்தர்களில் பல வகையினர் உண்டு. உலக இயக்கத்தை, பிரபஞ்சத்தை, இறையாற்றலை, உயிர் தத்துவத்தை, பிரபஞ்ச ரகசியத்தை ஆராய்ந்து அறிந்தவர்கள் சித்தர்கள். இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து, இயற்கையை முற்றிலும் அறிந்தவர்கள். மானுட குல வளர்ச்சிக்காகவும், உயர்வுக்காகவும் உழைப்பவர்கள் சித்தர்களாகக் கருதப்படுகின்றனர். சித்தர்கள் சுயநலமற்றவர்களாக மதிக்கப்படுகின்றனர்.
அஷ்டமா சித்திகள்
பல்வேறு யோகப் பயிற்சிகளினாலும், பிராணாயாமம், வாசி யோக முறைகளினாலும் சித்தர்கள் பல்வேறு சித்துக்களைப் பெற்றனர். அவற்றுள் அஷ்டமாசித்திகள் குறிப்பிடத்தகுந்தவை.
- அணிமா - அணுவைக் காட்டிலும் சிறிதான தேகத்தை அடைதல்.
- மகிமா - மலையைப் போல் பெரிதாகுதல்.
- இலகிமா - காற்றை விட இலேசாக இருத்தல்.
- கரிமா - எடை அதிகமாவது-மலைகளாலும், காற்றினாலும் அசைக்க முடியாதபடி பாரமாயிருத்தல்.
- பிராப்தி - எல்லாப் பொருட்களையும் தன்வயப் படுத்துதல், மனத்தினால் நினைத்தவை யாவற்றையும் அடைதல்.
- பிராகாமியம் - தன் உடலை விட்டு பிற உடலில் உட்புகுதல். (கூடு விட்டுக் கூடு பாய்தல்); தான் விரும்பிய வடிவங்களை எடுத்து, அதில் இயங்குதல்
- ஈசத்துவம் - ஈசனுக்குச் சமமான நிலையை அடைதல்
- வசித்துவம் - உலகில் உள்ள அனைத்தையும் தன் வசப்படுத்தல்.
பதினெண் சித்தர்கள்
சித்தர்களில், பதினெண் சித்தர்கள் சிறப்புப் பொருந்தியவர்களாகக் கருதப்படுகின்றனர். 18 பேர் ஒரு குழுவாக வாழ்ந்ததாலும், பதினெட்டு என்ற எண்ணின் புனிதத் தன்மை கருதியும், சித்தர்கள் 18 பேர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர் என்ற கருத்து உள்ளது. பண்டை நூல்களில் பல்வேறு சித்தர்கள், பதினெண் சித்தர்களாக இடம்பெற்றுள்ளனர். பதினெண் சித்தர்களின் பெயர் வரிசை பல நூல்களில் பலவாறாகக் காணப்படுகின்றது. ஆ. சிங்காரவேலு முதலியாரின் ‘அபிதானசிந்தாமணி’யில் காணப்படும் பதினெண் சித்தர்கள் பட்டியல்:
- அகத்தியர்
- போகர்
- கோரக்கர்
- கைலாசநாதர்
- சட்டைமுனி
- திருமூலர்
- நந்தி தேவர்
- பூனைக்கண்ணர்
- கொங்கணவர்
- மச்சமுனி
- வாசமுனி
- கூர்ம முனி
- கமல முனி
- இடைக்காடர்
- புண்ணாக்கீசர்
- சுந்தரானந்தர்
- உரோமரிஷி
- பிரமமுனி
‘வைத்தியத்திறவுகோல்’ நூலில் இடம் பெற்றுள்ள பதினெண் சித்தர்கள் வரிசை பற்றிய பாடல்:
“மண்ணுலகின் மானிடர்கள் வாழவேண்டி
மகிமை பெரும் அகஸ்தியர் காக்கேயரோடு
புண்ணியர் புலிப்பாணி புலத்தியர் போகர்
புஜண்டரொடு சட்டமுனி யிராமதேவர்
தன்மையுள்ள காலாங்கி கருவூரார் பவந்தர்
தன்வந்திரி கலசமுனி கோரக்கர் மச்சர்
வன்மையாம் பிரமரிசி கருணானந்தர்
வாதி முதலிவர் பதினெண்பேர் சித்தராமே!”
இதன்படி
- அகத்தியர்
- காக்கேயர்
- புண்ணியர்
- புலிப்பாணி
- புலத்தியர்
- போகர்
- காகபுஜண்டர்
- சட்டமுனி
- ராமதேவர்
- காலாங்கி தேவர்
- கருவூரார்
- பவந்தர்
- தன்வந்திரி
- கலசமுனி
- கோரக்கர்
- மச்ச முனிவர்
- பிரம்ம ரிஷி
- கருணானந்தர்
ஆகியோர் பதினெண் சித்தர்களாவர்.
கருவூரார் பலதிரட்டு -300 என்ற நூலில் உள்ள பதினெண் சித்தர் வரிசை:
- நந்தீசர்
- மூலத்தீசர்
- அகத்தீசர்
- சட்டநாதர்
- பதஞ்சலி
- வியாக்ர பாதர்
- கோரக்கர்
- கமலமுனி
- பூனைக் கண்ணார்
- இடைக்காடர்
- சண்டிகேசர்
- போகர்
- சிவவாக்கியர்
- காலாங்கி நாதர்
- புண்ணாக்கீசர்
- மச்சேந்திரநாதர்
- யூகி முனிவர்
- கொங்கணர்
இவ்வாறாகப் பல்வேறு நூல்களில் பலவகைச் சித்தர்கள், பதினெண் சித்தர்களாக இடம் பெற்றுள்ளனர். ஆனால், சித்தர்களின் எண்ணிக்கை 18-ஐ விட அதிகம். பண்டை இலக்கியங்கள், பல்வேறு சித்தர்களைப் பற்றிய தகவல்களைத் தருகின்றன.
சித்தர்கள் பட்டியல்
- காலாங்கி
- கலச நாதர்
- கமல முனி
- யூகி முனி
- கருணானந்தர்
- போக முனி
- சட்டை நாதர்
- கடுவெளிச் சித்தர்
- கம்பளிச் சித்தர்
- கஞ்சமலைச் சித்தர்
- பதஞ்சலி
- கோரக்கர்
- பவணந்தி
- புலிப்பாணி
- அழுகண்ணிச் சித்தர்
- பாம்பாட்டிச் சித்தர்
- இடைக்காட்டுச் சித்தர்
- குதம்பைச் சித்தர்
- வசிஷ்டர்
- கௌசிகர்
- பிரம்ம முனி
- வியாசர்
- தன்வந்திரி
- சட்டை முனி
- புண்ணாக்கீசர்
- நந்தீசர்
- அகப்பேய்ச் சித்தர்
- கொங்கணவர்
- மச்ச முனி
- குருபாத நாதர்
- பரத்வாஜர்
- கூன்கண்ணர்
- ரோமரிஷி
- காகபுஜண்டர்
- பராசரர்
- தேரையர்
- புலஸ்தியர்
- சுந்தரானந்தர்
- திருமூலர்
- கருவூரார்
- சிவவாக்கியர்
- தொழுகண் சித்தர்
- தேரையர்
- கபில முனி
- நவநாத சித்தர்
- அகத்தியர்
- ரோம ரிஷி
- யாகோப்புச் சித்தர்
- பூனைக்கண்ணர்
- நந்தீசர்
சித்தர்களில் பூனைக்கண்ணர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் என்ற ஒரு நம்பிக்கை உள்ளது. போகர் சீனர் என்று கூறப்படுகிறது. யாக்கோபுச் சித்தர் அரேபியாவைச் சேர்ந்தவர் என்ற கருத்து நிலவுகிறது. ரோம ரிஷி ரோம் நகரைச் சேர்ந்தவர் என்று கருத்தும் உண்டு. இந்த வகையில் சித்தர்கள் நாடு, நகரம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்து தூய அற வாழ்வு வாழ்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
பதினெண் சித்தர்களின் ஜீவசமாதிகள்
சித்தர்கள் பலரது ஜீவசமாதிகள், புகழ்பெற்ற ஆலயங்களில் அமைந்துள்ளன என்ற கருத்து நிலவுகிறது
சித்தர் | சமாதி ஆலயம் | |
1 | அகஸ்தியர் | திருவனந்தபுரம் |
2 | கொங்கணர் | திருப்பதி |
3 | சுந்தரானந்தர் | மதுரை |
4 | கரூவூரார் | கரூர் |
5 | திருமூலர் | சிதம்பரம் |
6 | தன்வந்திரி | வைத்தீஸ்வரன்கோவில் |
7 | கோரக்கர் | வடக்குப் பொய்கை நல்லூர் |
8 | குதம்பைச் சித்தர் | மயிலாடுதுறை |
9 | இடைக்காடர் | திருவண்ணாமலை |
10 | இராமதேவர் | அழகர்மலை |
11 | கமலமுனி | திருவாரூர் |
12 | சட்டமுனி | ஸ்ரீரங்கம் |
13 | வான்மீகர் | எட்டுக்குடி |
14 | நந்திதேவர் | காசி |
15 | பாம்பாட்டிச் சித்தர் | சங்கரன்கோவில் |
16 | போகர் | பழனி |
17 | மச்சமுனி | திருப்பரங்குன்றம் |
18 | பதஞ்சலி | திருப்பட்டூர் |
இவை தவிர்த்து சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், தஞ்சை, புதுச்சேரி எனப் பல இடங்களில் பல சித்தர்களின் ஜீவசமாதி ஆலயங்கள் அமைந்துள்ளன.
உசாத்துணை
- பதினெண் சித்தர்கள் பெரிய ஞானக்கோவை: தமிழ் இணைய மின்னூலகம்
- அபிதான சிந்தாமணி: ஆர்கைவ் தளம்
- சித்தர்கள்: தினமணி இதழ் கட்டுரை
- தமிழ்ச் சித்தர்கள்: தமிழ் அண்ட் வேதாஸ் தளம்
- பதினெண் சித்தர்கள்: தினமலர் இதழ் கட்டுரை
- பதினெண் சித்தர்கள் வரலாறு நூல்
- சித்தர்கள் உறையும் ஜீவசமாதிகள்: விகடன் தளம்
- ஜீவ சமாதிப் பீடங்கள்: யாழ்.காம்
- சென்னைச் சித்தர்கள்
- வேலூர் மாவட்டச் சித்தர்கள்
- மதுரை மாவட்டச் சித்தர்கள்
- திருச்சி மாவட்டச் சித்தர்கள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
11-Mar-2023, 20:36:07 IST