under review

இடைக்காட்டுச் சித்தர்

From Tamil Wiki
சித்தர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சித்தர் (பெயர் பட்டியல்)

இடைக்காட்டுச் சித்தர் தமிழ்நாட்டில் வாழ்ந்த பதினெண் சித்தர்களில் ஒருவர். இடையர்களையும், ஆடு மாடுகளையும் முன்னிலைப்படுத்திப் பாடியதால் இடைக்காடர் எனப் பெயர் பெற்றார்.

இடைக்காட்டுச் சித்தரின் பாடல்கள் உலக இயல்பு, நிலையாமை, பற்றறுத்தல், இறையனுபவம், யோகம் குறித்த அரிய கருத்துகளை எளிய நடையில் கூறியவை.

இடைக்காடர்கள்

இடைக்காடனார் என்னும் பெயருடன் சங்க காலத்தில் ஒரு புலவர் இருந்தார். திருவள்ளுவமாலையில் இடைக்காடனார் என்பவரின் பாடல் உள்ளது. இவர்கள் மூவரும் ஒருவர் அல்லர்.

வாழ்க்கைக் குறிப்பு

இடைக்கட்டுச் சித்தர் இடைக்காடு என்ற ஊரில் வாழ்ந்தவர். இடையர் குடியிலே பிறந்ததால் இடைக்காட்டுச் சித்தர் எனப் பெயர் பெற்றார். இவரது வாழ்க்கை பற்றிய செய்திகள் அறியவரவில்லை. இவர் பிறந்த இடம் மதுரைக்குக் கிழக்கே உள்ள இடைக்காடா அல்லது தொண்டை மண்டலத்தில் உள்ள இடையன்மேடா என்பது ஆய்விற்குரியது. கொங்கணர் என்பாரின் சீடர் என்றும், பொ.யு. 10-15 நூற்றாண்டு காலகட்டத்தில் வாழ்ந்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. இவர் திருவிடைமருதூரில் சமாதியடைந்தார் என 'ஜனன சாகரம் 500' நூலில் போகர் கூறுகிறார். 'நிஜானந்த போதம்' அவர் திருவண்ணாமலையில் சமாதியடைந்ததாகக் கூறுகிறது.

மட்டான இடைக்காடர் ஜாதி பேதம்
மகத்தான கோனாரே என்னலாகும்
திட்டமுள்ள கோத்திரங்கள் பதினெட்டாகும்
திகழான நூலதனில் கண்ட மட்டும்
காலமுடன் இடைக்காடர் பிறந்த நேர்மை
சட்டமுடன் சொல்லுகிறேன் தன்மை பாரே
தன்மையாம் புரட்டாசி மாதமப்பா
தாழ்வாக இரணியனைக் கொன்ற
வன்மையாம் திருவாதிரை இரண்டாம் காலம்
வளப்பமுடன் அவதரித்த சிசுபாலன் தானே – போக முனிவர் 7000

தொன்மக்கதைகள்

இடைக்காடர் ஆடு மேய்த்துக்கொண்டிருக்கும்போது தாகத்தால் தவித்த நவசித்தர் ஒருவருக்கு பால் கொடுத்துத் தாகம் தீர்க்க, மனம் மகிழ்ந்த சித்தர் இவருக்கு வைத்தியம், சோதிடம் ஞானம், யோகம் முதலியன உபதேசித்ததாகவும் அது முதல் இடைக்காட்டுச் சித்தர் ஆனதாகவும் தொன்மக்கதை கூறுகிறது.

ஒருமுறை வரப்போகும் கடும்பஞ்சத்தை முன்கூட்டியே அறிந்து, முன்னெச்சரிக்கையாக எக்காலமும் கிடைக்கும் எருக்க இலைகளை உண்ண ஆடு மாடுகளுக்குப் பழக்கினார். கெடாமல் இருக்கக்கூடிய குருவரகு தானியத்தைச் சேற்றோடு கலந்து குடிசைக்குச் சுவர் எழுப்பினார். பஞ்சம் வந்தது. புல்பூண்டுகளும் அழிந்தன. எருக்க இலைகளைத் தின்றதால் ஏற்படும் அரிப்பை போக்க ஆடுகள் சுவரில் உடம்பைத் தேய்க்கும்போது சுவரிலிருந்து உதிரும் குருவரகை ஆட்டுப்பாலில் காய்ச்சி உண்டு உயிர் வாழ்ந்தார். பஞ்சத்தால் உயிர்களெல்லாம் அழிய இடைக்காடரும் அவருடைய ஆடுகளும் உயிருடன் இருப்பதைக் கண்டு இவரைக் காண வந்த நவக்கிரகங்களுக்கு வரகு சாதத்தையும் ஆட்டுப்பாலையும் கொடுத்தார். உண்டு, மயங்கிப் படுத்திருந்த நவக்கிரகங்களை இடைக்காடர் தன் சோதிட அறிவின்மூலம் மழை வருவதற்கான முறையில் இடம் மாற்றிப் படுக்கவைத்ததாகவும், அதனால் மழை வந்து பஞ்சம் தீர்ந்ததாகவும் ஒரு தொன்மக்கதை கூறப்படுகிறது.

குரு பூஜை

திருவண்ணாமலையிலும், சிவகங்கைக்கருகிலுள்ள இடைக்காட்டூரிலும் புரட்டாசி திருவாதிரை அன்று இடைக்காடரின் குருபூஜை நடைபெறுகிறது.

இலக்கிய வாழ்க்கை

இடைக்காட்டுச் சித்தரின் பாடல்கள் இடைக்காட்டுச் சித்தர் பாடல் என்ற நூலிலே இடம் பெறுகின்றன. 'ஞானசூத்திரம் 70 'என்ற நூலையும் எழுதினார். ஆடு, மாடு, அன்னம், மயில், குயில், புல்லாங்குழல், அறிவு, நெஞ்சம், முதலானவற்றை முன்னிறுத்திப் பாடுவதாக இவரது பாடல்கள் அமைந்துள்ளன. தாண்டவக் கோனார் கூற்றாக இவர் பாடும் கோனார் பாட்டுக்கள் தத்துவப் பொருள் கொண்டவை. நெஞ்சோடு கிளத்தலில் மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசைகளை நீக்கும்படி அறிவுறுத்துகின்றார். சித்தத்தோடு கிளத்தலில் மாணிக்கவாசகரைப் போலவே தும்பியை விளித்துப் பாடுகின்றார்.

பாடல் நடை

நாரயணக்கோன் கூற்று

கண்ணுள் கருமணியைக் கற்பகத்தைக் காஞ்சனத்தைப்
பெண்ணுருவப் பாதியனைப் பேசரிய முப்பொருளை
விண்ணின் அமுதை விளக்கொளியை வெங்கதிரைத்
தண்ணளியை யுள்ளில்வைத்துச் சாரூபஞ் சாருவனே.

கண்ணிகள்

மனமென்னும் மாடடங்கில் தாண்ட வக்கோனே, முத்தி
வாய்த்ததென்று எண்ணேடா தாண்ட வக்கோனே. 13
 
சினமென்னும் பாம்பிறந்தாற் தாண்டவக்கோனே யாவுஞ்,
சித்தியென்றே நினையேடா தாண்ட வக்கோனே.

பற்றே பிறப்புண்டாக்குந் தாண்ட வக்கோனே - அதைப்
பற்றா தறுத்துவிடு தாண்ட வக்கோனே. 19
 
சற்றே பிரமத்திச்திசை தாண்ட வக்கோனே - உன்னுள்
சலியாமல் வைக்கவேண்டுந் தாண்ட வக்கோனே.

தாண்டவராயக்கோன் கூற்று

மெய்வாய்கண் மூக்குச் செவியென மைந்தாட்டை
     வீறுஞ் சுவையொளி யூறோசை யாங்காட்டை
எய்யாம லோட்டினேன் வாட்டினே னாட்டினேன்
     ஏக வெளிக்குள்ளே யோக வெளிக்குள்ளே.

உசாத்துணை

இடைக்காடர் பாடல்கள், தமிழ் இணைய கல்விக் கழகம்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 22-Jul-2024, 18:12:03 IST