ரிஃபாயி மாலை
ரிஃபாயி மாலை (பதிப்பு: 1999) இஸ்லாமிய மாலை இலக்கிய நூல்களுள் ஒன்று. இதனை இயற்றியவர் கா. அப்துல்கபூர்.
வெளியீடு
ரிஃபாயி மாலை, கா. அப்துல்கபூர் இயற்றிய 'பாமாலை 18' என்ற இஸ்லாமிய மாலை இலக்கியங்களின் தொகுப்பு நூலில், பிற மாலை இலக்கிய நூல்களுடன் இணைந்து இடம்பெற்றது. பாமாலை 18 நூலை, தக்கலையில் உள்ள பொன்மொழிப் பதிப்பகம், 1999-ல் வெளியிட்டது.
நூல் அமைப்பு
ரிஃபாயி மாலை அடிதோறும் நான்கு சீர்களைக் கொண்ட 41 கண்ணிகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் 'ரிஃபாயீ' என்ற சொல் இடம்பெற்றது.
உள்ளடக்கம்
ரிஃபாயி மாலை 'அகமது கபீர் ரிஃபாயி' என்ற இஸ்லாமிய இறைநேசர் மீது இயற்றப்பட்ட மாலை இலக்கிய நூல். சுல்தானுல் ஆரிஃபின் சைய்து அகமது கபீர் ரிஃபாயி, ஈராக் நாட்டில் பதாயிஹ் பகுதியில் பிறந்தவர். அன்னையின் கருவறையில் இருக்கும்போதே உரையாடியவராகவும், நபிகள் நாயகத்தின் 17-ம் தலைமுறையில் உதித்தவராகவும் அறியப்படுகிறார். அவரது பெருமை, சிறப்பு, குணநலன்கள், இரக்கம், கருணை, உயிர்களிடத்தான அவரது அன்பு ஆகியன இம்மாலை நூலில் விளக்கப்பட்டுள்ளன.
பாடல்
பாருலகப் பெருநபியின் பதினேழாம் தலைமுறையில்
சீருலவ வந்துதித்த சிறப்பான ரிஃபாயீ
பண் பாடும் இராக் நாட்டில்
கண்போலக் கவின்பெற்ற கருணைமிகு ரிஃபாயீ
சிற்றிளமைப் பருவத்தே சிந்தைகுளிர் மழலைகளால்
உற்றவரை உவப்பாக்கும் உத்தமரே ரிஃபாயீ
உருகிமிக வறுமையுடன் உள்ளுடைந்துருகி வருவோர்க்குப்
பொருளுணவு உடையீந்த புகழ்சேர் ரிஃபாயீ
நேசமிகப் பெருமானார் நீட்டியதோர் வலக்கரத்தைப்
பாசமுடன் முத்தமிடும் பரிசுபெற்ற ரிஃபாயீ
காட்டகத்தே பல்லாண்டு கடுந்தவத்தில் மூழ்கியபின்
நாட்டங்கள் நிறைவேற நாயனருள் ரிஃபாயீ
அவநெறியிற் சென்றதனால் அகமுடைந்த கொடியவரைத்
தவநெறியில் செலுத்தியுயர் தலைமையுறு ரிஃபாயீ
கருவறையில் இருக்கையிலே கனிவாக அன்னையுடன்
அருஞான உரையாடும் அதிமதுர ரிபாயீ
இம்மையிலும் மறுமையிலும் இனிதாக வாழ்வதற்குச்
செம்மையுறத் துணைபுரிவீர் செம்மலரே ரிஃபாயீ
கண்பார்வைப் புலன்களுடன் கால்கை மெய் தளராமல்
விண்பார்வை மேலோங்க வேண்டிடுவேன் ரிஃபாயீ
மதிப்பீடு
ரிஃபாயி மாலை, இஸ்லாமிய மாலை இலக்கிய நூல்களுள் ஒன்று. இஸ்லாமிய இறைநேசரான சுல்தானுல் ஆரிஃபின் சைய்து அகமது கபீர் ரிஃபாயி மீது பாடப்பட்டது. ரிஃபாயியின் பெருமை, சிறப்புகளைக் கூறும் ஒரே இஸ்லாமிய மாலை இலக்கிய நூலாக அறியப்படுகிறது.
உசாத்துணை
- பாமாலை 18, கா. அப்துல்கபூர், பொன்மொழி பதிப்பகம், தக்கலை, முதல் பதிப்பு: 1999
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Jun-2025, 14:22:13 IST