under review

இறையருள் மாலை

From Tamil Wiki

இறையருள் மாலை (பதிப்பு: 1999) இஸ்லாமிய மாலை இலக்கிய நூல்களுள் ஒன்று. இதனை இயற்றியவர் கா. அப்துல்கபூர்.

வெளியீடு

இறையருள் மாலை, கா. அப்துல்கபூர் இயற்றிய 'பாமாலை - 18' என்ற இஸ்லாமிய மாலை இலக்கியங்களின் தொகுப்பு நூலில், பிற மாலை இலக்கிய நூல்களுடன் இணைந்து இடம்பெற்றது. இறையருள் மாலை நூலை தக்கலையில் உள்ள பொன்மொழிப் பதிப்பகம், 1999-ல் வெளியிட்டது.

நூல் அமைப்பு

இறையருள் மாலை நூலில் பல்வேறு உட்த்தலைப்புகளுடன் 736 கண்ணிகள் இடம்பெற்றன. பின்வரும் தலைப்புகளில் பாடல்கள் இடம்பெற்றன.

  • திறப்பு
  • அஸ்மாவுல் ஹுஸ்னா (இறைவனின் திருப்பெயர்கள்)
  • நபிமார் முதலியோர்
  • அமரர்கள்
  • நபிமார் பிராட்டியார்கள், குடும்பத்தினர்
  • நாயகத் தோழர்கள்
  • மெய்ஞான மேதைகள்
  • பல்துறை வல்லார்
  • இமாம்கள் (மார்க அறிஞர்கள்)
  • அருள்மறை அறிஞர்
  • நபிமொழி திரட்டியோர்
  • கவிஞர், அறிஞர், திறனாளர்
  • மறைநெறி பரப்பிய இறைநேயர்
  • இலங்கை முதலிய தீவுகளின் இறைநேயர்
  • இந்திய நாட்டின் இறைநேயர்
  • கேரளத்தின் இறைநேயர்
  • தமிழ்நாட்டின் இறைநேயர்
  • இறை புகழ்
  • இறைஞ்சுதல்

உள்ளடக்கம்

திறப்பு

இத்தலைப்பில், எட்டுச் சீர்கள் கொண்ட ஏழு கண்ணிகளாக, கடவுள் வாழ்த்துபோல் ஏழு பாடல்கள் இடம்பெற்றன.

அஸ்மாவுல் ஹுஸ்னா (இறைவனின் திருப்பெயர்கள்)

திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ள 99 இறைவனின் திருப்பெயர்கள், எட்டுச் சீர்களைக் கொண்ட 100 கண்ணிகளில் இப்பகுதியில் இடம்பெற்றன. அத்திருப்பெயர்கள், அரபுத் தமிழில், வரிசை முறையாக, எல்லோரும் எளிமையாக அறிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன, இறைவனின் பெயர்களனைத்தும் அவனின் பண்புகளை உணர்த்துவதாக விரிவான பொருளுடன் விளக்கப்பட்டுள்ளது.

நபிமார் முதலியோர்

இறைவன் மனிதர்களை நெறிப்படுத்த, மனிதர்களில் ஒருவரைத் தனது தூதராகத் தேர்வு செய்துக் காலச்சூழலுக்கு ஏற்ப அனுப்பினான். அந்நபிமார்களின் பெயர்களை, வரிசை முறைப்படி, இறையருள் மாலையின் இப்பகுதியில் இடம்பெற்றன. திருமறையில் இடம்பெற்ற இருபத்தைந்து நபிமார்களின் பெயர்களுடன், இரண்டு நல்லடியார்களின் பெயர்களும் சேர்க்கப்பட்டு, நான்கு சீர்கள் கொண்ட 27 கண்ணிகளாக இப்பகுதியில் இடம்பெற்றன.

அமரர்கள் (வானவர்கள்)

இறைவன் தனது செய்தியை வானவர்கள் மூலம் நபிமார்களுக்கு (இறைத்தூதர்) அருளினான். ஜிப்ரயீல் மூலமாக இறைவசனங்கள் நபிகளாருக்கு வழங்கப்பட்டன. மழைக்கு அதிபதியாக விளங்கும் மீகாயில், உயிர்களைக் கைப்பற்றும் இசுராயீல், சுவனம், நரகம் இரண்டையும் காவல்காக்கும் மாலிக், ரிள்வான், நன்மை, தீமைகளைக் கணக்கிடும் அதிப், ரகீப், உடல் மடிந்தவுடன் மண்ணறையில் கேள்வி எழுப்பும் முன்கர், நக்கீரின் பணிகள் எட்டுச் சீர்கள் கொண்ட ஏழு கண்ணிகளில் இப்பகுதியில் விளக்கப்பட்டன.

நபிமார் பிராட்டியார், குடும்பத்தினர்

நபிமார்களின் தாயார்கள், மனைவிகள், பிள்ளைகள், குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் இப்பகுதியில் எட்டு சீர்கள் கொண்ட 13 கண்ணிகளில் இடம்பெற்றன. நபிகள் நாயகத்தின் மனைவிமார்கள் கதிஜா, ஆயிஷா, ஹஃப்ஸா, உம்முஸல்மா, ஸஃப்யா, ஸவ்தா, ஜைனப், ஜுவைரிய்யா, ஹபீபா மற்றும் மைமூனா என்றும், பிள்ளைகள் அபுல் காசிம், அப்துல்லாஹ், இப்ராஹீம், உம்முகுல்தூம், ஜைனப், ருகையா மற்றும் பாத்திமா என்றும், பேரன்கள் ஹஸன் மற்றும் ஹுஸன் என்பதுமான செய்திகள் இப்பகுதியில் இடம்பெற்றன.

நாயகத் தோழர்கள்

இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு உதவிய நபிகள் நாயகத்தின் தோழர்கள் பற்றிய செய்திகள் எட்டு சீர்களைக் கொண்ட 40 கண்ணிகளில் இடம்பெற்றன. நாயகத்தின் தோழர்கள் பலர் இருந்தும், அபுபக்கர் சித்தீக், உமர் பாரூக், உதுமானார் மற்றும் அலியார் ஆகியோர் மட்டுமே இப்பகுதியில் இடம்பெற்றனர். மேற்கண்ட நான்கு பேர்களும் நபிகள் நாயகத்தின் ஆட்சிக்குப் பிறகு கலிபாவாகப் பொறுப்பேற்று இஸ்லாத்திற்கு ஆற்றிய அரிய பங்களிப்பைப் போற்றும் வகையில் அவர்களைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றன.

மெய்ஞான மேதைகள்

இறையருள் பெற்ற இஸ்லாமிய இறைநேசச் செல்வர்களான முஹ்யித்தீன் ஆண்டகை, ரிபாயீ, ஷாதிலீ, ஷெய்குல் அக்பர் போன்றோர் தொடங்கி பக்தாத் அப்துல் லத்தீப், ராஜஸ்தான் நாகூர் இன்ஹமீதுத்தீன் உள்ளிட்டோரின் வாழ்க்கை, பெருமை, சிறப்பு, மேன்மைகள் இப்பகுதியில் எட்டு சீர்கள் கொண்ட 45 கண்ணிகளாக இடம்பெற்றன.

பல்துறை வல்லார்

பல்துறை வல்லார் என்ற பகுதியில் எட்டு சீர்கள் கொண்ட ஏழு கண்ணிகள் இடம்பெற்றன. ஒவ்வொரு கண்ணியின் இறுதியிலும் 'அல்லாஹ்' என்ற சொல் ஈற்றில் இடம்பெற்றது. இப்னு அப்துல் அஸீஸ், சலாவுதீன், இப்னு சீரின் உள்ளிட்ட சில இஸ்லாமியப் பல்துறை வல்லுநர்களைப் பற்றிய குறிப்புகள் இப்பகுதியில் இடம்பெற்றன.

இமாம்கள் (மார்க்க அறிஞர்கள்)

இப்பகுதியில் எட்டு சீர்கள் கொண்ட ஏழு கண்ணிகள் இடம்பெற்றன. ஒவ்வொரு கண்ணியின் இறுதியிலும் 'அல்லாஹ்' என்ற சொல் ஈற்றில் இடம்பெற்றது. இவற்றில் மார்க்கக் கல்வியாளர்கள் சிலரது வரலாறுகள் இடம்பெற்றன.

அருள்மறை அறிஞர்

இப்பகுதியில் எட்டு சீர்கள் கொண்ட ஏழு கண்ணிகள் இடம்பெற்றன. ஒவ்வொரு கண்ணியின் இறுதியிலும் 'அல்லாஹ்' என்ற சொல் ஈற்றில் இடம்பெற்றது. இவற்றில் ஹிஷாம், இப்னுகதீர், அஸிம், அபூ அம்ரு கிஸாயீ, ஹம்ஸா, நாஃபியின், ரலுசீ மாவிப்னு கதீரத், முயீனு, அப்துல்லா பைளாவீ, சமக் ஷரீ, கஷ்ஷாஃப், உறுமாண் சுயூத்தி, பகுறுத்தீன் ராஜி போன்ற அருள்மறை அறிஞர்களின் வரலாறுகளும் குறிப்புகளும் இடம்பெற்றன.

நபிமொழி திரட்டியோர்

நபிமொழி திரட்டிய புஹாரி, திர்மிதி, இப்னுமாஜா, நஸயீ, அபூதாவூத் போன்றவர்களின் குறிப்புகள் இரண்டு கண்ணிகளில் இடம்பெற்றன.

கவிஞர், அறிஞர், திறனாளர்

இப்பகுதியில் எட்டு சீர்கள் கொண்ட 57 கண்ணிகள் இடம்பெற்றன. 'அல்லாஹ்' என்று விளித்துப் பாடுவதாக இப்பாடல்கள் அமைந்துள்ளன. உமறுப்புலவர், ஆலிம் புலவர், காசிம் புலவர், வள்ளல் பர்மக்கீ, வள்ளல் சீதக்காதி, திப்பு சுல்தான், பீமா, அபுல்கலாம் ஆசாத், சென்னை வள்ளல் ஜமால் முகம்மது, காயிதே மில்லத், காதிர் முஹ்யித்தீன் உள்ளிட்ட கவிஞர், அறிஞர்கள் பற்றிய குறிப்புகள் இடம்பெறன.

மறைநெறி பரப்பிய இறைநேயர்

சீனம், சிங்கப்பூர், இரங்கூன், மலேசியா போன்ற நாடுகளுக்குச் சென்று இறைநெறியைப் பரப்பி, அங்கேயே தங்கி வாழ்ந்து மறைந்த வஹ்ஹாப்பின் கப்ஷா, சைதிசுமாயீல், அப்துல்லா ஆரிஃப், ஸோனன் மொரியா, ஸோனன் தர்ஜாத்து, ஸோனன் கலீஜா, மாலிக் இபுராகீம், ஆசில் வலீமார், செய்கு செய்யது இசுமாயீல், கொடிமலை சுல்தான் கோனிஸ் கந்தர்ஷா, ஹபீபின் நூஹ், பகதூர்ஷா ஜஃபர், சிங்கிலியப் துர்ரவூஃப், அப்துர் ரஹ்மான் போன்ற இறைநேசர்களைப் பற்றிய குறிப்புகள், இப்பகுதியில், எட்டு சீர்கள் கொண்ட 12 கண்ணிகளில் இடம்பெற்றன. 'அல்லாஹ்' என்று விளித்துப் பாடுவதாக இப்பாடல்கள் அமைந்துள்ளன.

இலங்கை முதலிய தீவுகளின் இறைநேயர்

இப்பகுதியில், எட்டு சீர்கள் கொண்ட 13 கண்ணிகள் இடம்பெற்றன. அஷ்ரஃப், ஷெய்கு வஹாப்தீன், அலுத்கமா ஷெய்கு ஹஸனிப்னு உதுமான், மருதானை கலந்தர், துவான் பாபூஸ், ஷெய்கு மாண்ஹாஜி அப்பா, கம்பளை கஹட்டா கண்கௌஃபு வாலா, செய்தப்துல் காதிர், பெருபரி யூசுப் பரக்காத்து, மாலி கனிசம்சுத்தீன், இலட்சதீவு உபை துல்லாஹ், முன்பா முல்யகா உள்ளிட்ட பலரது குறிப்புகள் இடம்பெற்றன.

இந்திய நாட்டின் இறைநேயர்

இப்பகுதியில், எட்டு சீர்கள் கொண்ட 67 கண்ணிகள் இடம்பெற்றன. பாடல்கள் அனைத்தும் 'அல்லாஹ்' என்று விளித்துப் பாடுவதாக அமைந்துள்ளன. அஜ்மீரில் அடக்கமாகியுள்ள காஜா முயீனுத்தீன், டெல்லியில் வாழ்ந்து மறைந்த நிஜாமுதீன், கஸ்மூர் கரிமுல்லாஹ், ஹபீபுர் ரஹ்மான் உள்ளிட்ட சில இறைநேசர்களைப் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றன.

கேரளத்தின் இறைநேயர்

இப்பகுதியில், எட்டு சீர்கள் கொண்ட 19 கண்ணிகள் இடம்பெற்றன. மாலிக், புகாரி, ஜிஃப்ரீ, பொன்னாணி மகுதூம், ஹசைனார், மம்புற அலவீ, உத்தாரம் செய்தபூபக்கர், விழியங்கோடு உமர்காளி, கோயா ஃபஸ்லை, செய்திபுராகீம், ஃபரீதார், எர்ணாகுளம் இஸ்மாயீல் செய்யிது, ஷுஹதா, பீமா, அபூபக்கர், கடுவாவின் ஷெய்கு, வலி நூஹ், காஜா முஹ்யிதீன், நயினார் அப்பா போன்ற இறைநேசர்கள் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றன.

தமிழ்நாட்டின் இறைநேயர்

தமிழகத்தில் வாழ்ந்து மறைந்த மறைநெறி பரப்பிய இறைநேசர்களான கோவளம் தமீமுல் அன்சாரி, சென்னை அண்ணா சாலை செய்யது மூஸா காதிரி, சென்னை வாலாஜா சாலை பஹ்ரூல் உலூம், எழும்பூர் மோதி பாபா, பல்லாவரம் பாபா பக்ருத்தீன், செங்கல்பட்டு உதுமான் வலீ, அரக்கோணம் மஸ்தான் அப்பா, ஏறல் காதிர் ஜீலானி, ஆத்தூர் அப்பாசு சாகிபு, உடன்குடி காசிம் வலு, நாகூர் மீரான் வலி, தக்கலை பீரப்பா, ஆற்றங்கரை செய்யதலி பாத்திமா, சங்கிலி மஸ்தான், இலப்பை முஹ்யித்தீன், தக்கலை பீரப்பா உள்ளிட்டோர் பற்றிய குறிப்புகள் எட்டு சீர்கள் கொண்ட 211 கண்ணிகளில் இடம்பெற்றன.

இறை புகழ்

இப்பகுதியில் எண் சீர்கள் கொண்ட 10 கண்ணிகள் இடம்பெற்றன. 'அல்லாஹ்' என்று விளித்துப் பாடும் வகையில் இப்பாடல்கள் அமைந்துள்ளன. இறைவனின் பேராற்றலைப் புகழும் விதமாகவும், விண்ணிலும், மண்ணிலும் ஆற்றல் செலுத்தும் இறைவனைப் புகழ்ந்து பருவ காலங்கள், துருவங்கள், தாவரங்கள், புள்ளினங்கள், ஏனைய உயிரினங்கள் அனைத்தும் பேராற்றலின் தொடர்ச்சியே என்றும் விளக்கும் வகையில் பாடல்கள் இடம்பெற்றன.

இறைஞ்சுதல்

இப்பகுதியில் எண் சீர்கள் கொண்ட 86 கண்ணிகள் இடம்பெற்றன. 'அல்லாஹ்' என்று விளித்துப் பாடும் வகையில் இப்பாடல்கள் அமைந்துள்ளன. பாடல்கள் அனைத்தும் இறைவனை வேண்டிப் போற்றும் வகையிலும், இறைஞ்சும் வகையிலும் அமைந்துள்ளன.

பாடல்

அருளன்பு பண்பில் அளவற்ற உன்றன
திருநாமம் போற்றித் திறக்கின்றோம் அல்லாஹ்

எல்லா உலகும் ஏகமாய்க் காக்கும்
வல்லான் உனக்கே வான்புகழ் அல்லாஹ்

அடியார்க் கருளும் அன்பாளன் நீயே
முடிவான நாளின் முதலோனே அல்லாஹ்

உன்னையே நாங்கள் உவந்தேத்து கின்றோம்
உன்னிடத் தன்றோ உதவியும் அல்லாஹ்

நன்னெறி மீதே நடத்துவா யெம்மை
நின்னருள் நேயர் நெறியனில் அல்லாஹ்

நின்கோபம் கொண்டோர் நெறிவிட் டகன்றோர்
செல்நெறி தன்னில் செலுத்தாதே அல்லாஹ்

சுவையான தேன்பால் சூழ்காய் கனிகள்
குவையாகக் கொடுக்கும் கோமானே அல்லாஹ்

எறும்புகள் முதலாய் யானைகள் ஈறாய்
உறுமுயிர்க் கெல்லாம் உணவீயும் அல்லாஹ்

வன்முறை ஊழல் வளர்கின்ற உலகில்
நன்முறை ஓங்க நயந்தருள் அல்லாஹ்

கையூட்டை யீந்தும் கையூட்டைப் பெற்றும்
பொய்யூட்டும் புன்மை போக்குவாய் அல்லாஹ்

மதிப்பீடு

இறையருள் மாலை, கா. அப்துல்கபூர் இயற்றிய மாலை இலக்கிய நூல்களுள் ஒன்று. இஸ்லாமியப் பிரார்த்தனை நூல்களுள் ஒன்றாகவும், இறைமையைப் பாடுபொருளாகக் கொண்ட நூலாகவும் அறியப்படுகிறது. இறைவனின் பெருமைகளை, சிறப்பை, அருளைக் கூறும் இஸ்லாமிய மாலை இலக்கிய நூலாக இறையருள் மாலை நூல் மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை

  • பாமாலை 18, கா. அப்துல்கபூர், பொன்மொழி பதிப்பகம், தக்கலை, முதல் பதிப்பு: 1999


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-May-2025, 11:45:11 IST