மீரான் மாலை
மீரான் மாலை (பதிப்பு: 1999) இஸ்லாமிய மாலை இலக்கிய நூல்களுள் ஒன்று. இதனை இயற்றியவர் கா. அப்துல்கபூர்.
வெளியீடு
மீரான் மாலை, கா. அப்துல்கபூர் இயற்றிய 'பாமாலை 18' என்ற இஸ்லாமிய மாலை இலக்கியங்களின் தொகுப்பு நூலில், பிற மாலை இலக்கிய நூல்களுடன் இணைந்து இடம்பெற்றது. பாமாலை 18 நூலை தக்கலையில் உள்ள பொன்மொழிப் பதிப்பகம், 1999-ல் வெளியிட்டது.
நூல் அமைப்பு
மீரான் மாலை நூலில் 100 கண்ணிகள் அமைந்துள்ளன. நான்கு சீர்களில் ஈரடிக் கண்ணிகளாகப் பாடப்பட்டுள்ளன. ஒவ்வொரு கண்ணியும் நாகூர் மீரான் ஆண்டகையின் பண்பைக் குறிக்கும் விதத்திலும், பெயரைக் குறிக்கும் விதத்திலும் அன்பு மீரான், கௌது மீரான், முத்து மீரான், நேய மீரான் எனப் பல பெயர்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு கண்ணியின் இறுதியிலும் 'மீரான் சாகிபே' என்ற சொல் இடம்பெற்றது.
உள்ளடக்கம்
மீரான் மாலை, 'நாகூர் ஆண்டவர்' என்றும் 'எஜமான்' என்றும் போற்றப்படும், நாகூரில் அடக்கமாகியுள்ள ஷாஹுல் ஹமீது மீரான் பாதுஷாவின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் மாலை இலக்கிய நூல். நாகூர் மீரான் வட இந்தியாவில் அயோத்தியாவிற்கு அருகில் உள்ள மாணிக்கப்பூர் எனும் ஊரில், பொ.யு. 1491-ல், ஹஸ்ரத் சையத் ஹசன் குத்தூஸ் சாஹிப் - பீபி சையிதா ஃபாத்திமா இணையருக்குப் பிறந்தார். நபிகள் நாயகம் அவர்களின் 22-ம் தலைமுறையில், தந்தை வழியில் நபி பேரர் இமாம் ஹஸனி வழியிலும், தாய் வழியில் மற்றொரு நபி பேரரான இமாம் ஹுஸைன் வழியிலும் பிறந்தவராக அறியப்படுகிறார்.
ஷாஹுல் ஹமீது மீரான் பாதுஷா பெயரில் 'மீரான்' என்றால் பார்சி மொழியில் 'தலைவர்' என்றும், 'பாதுஷா' என்றால் உருதுவில் மன்னர் என்றும் பொருள்.
நாகூர் ஆண்டவர், நாகூரில் 28 ஆண்டுகள் தங்கி இறைப்பணி ஆற்றினார். நாகூர் ஆண்டவரின் பிறப்பு தொடங்கி, அவரது அருளாற்றல்கள், அற்புதங்கள், அறிவுரைகள் பற்றிய விரிவான வாழ்க்கை வரலாற்று நூலாக மீரான் மாலை நூல் அமைந்துள்ளது.
பாடல்
சீர்மிகுந்த உலகனைத்தும் சிறப்புடனே படைத்தளிக்கும்
பேர்மிகுந்த இறையருளும் பேறுமீரான் சாகிபே
அறிவுடைய உலகினுக்கோர் அருட்கொடையாம் நபியளிக்கும்
நெறிவிளக்க வந்துதித்த நேயமீரான் சாகிபே
அன்னை தந்தை ஆசிபெற்றும் ஆறுகாடு மலைகடந்தும்
முன்னை ஞானம் தேடிச்சென்ற முத்து மீரான் சாகிபே
தாரகை சூழ் தண்மதிபோல தன்னரிய தொண்டர் சூழப்
பேரகத்தில் ஹஜ்ஜு செய்யப் பெயர்ந்த மீரான் சாகிபே
அறிவின் ஊற்றே அகத்தின் ஊற்றே அன்பின் ஊற்றே அருளின் ஊற்றே
செறிவின் ஊற்றே செம்மை ஊற்றே செய்து மீரான் சாகிபே
மதிப்பீடு
மீரான் மாலை, நாகூர் ஆண்டவர் என்று போற்றப்படும், ஷாஹுல் ஹமீது மீரான் பாதுஷாவின் வாழ்க்கை வரலாற்றை இனிய, எளிய தமிழில் கூறுகிறது. நாகூர் ஆண்டவர் மீது இயற்றப்பட்ட பல இலக்கிய நூல்களுள், குறிப்பிடத்தகுந்த மாலை இலக்கிய நூலாக மீரான் மாலை மதிப்பிடப்படுகிறது.
உசாத்துணை
- பாமாலை 18, கா. அப்துல்கபூர், பொன்மொழி பதிப்பகம், தக்கலை, முதல் பதிப்பு: 1999
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-May-2025, 13:59:32 IST