காஜா மாலை
காஜா மாலை (பதிப்பு: 1999) இஸ்லாமிய மாலை இலக்கிய நூல்களுள் ஒன்று. இதனை இயற்றியவர் கா. அப்துல்கபூர்.
வெளியீடு
காஜா மாலை, கா. அப்துல்கபூர் இயற்றிய 'பாமாலை 18' என்ற இஸ்லாமிய மாலை இலக்கியங்களின் தொகுப்பு நூலில், பிற மாலை இலக்கிய நூல்களுடன் இணைந்து இடம்பெற்றது. பாமாலை 18 நூலை தக்கலையில் உள்ள பொன்மொழிப் பதிப்பகம், 1999-ல் வெளியிட்டது.
நூல் அமைப்பு
காஜா மாலை, அடிதோறும் நான்கு சீர்களைக் கொண்ட 75 ஈரடிக் கண்ணிகளில் இயற்றப்பட்டுள்ளது. மாலை முழுவதும் 'காஜாவே' என்று விளித்துப் புகழ்ந்து பாடப்பட்டுள்ளது.
உள்ளடக்கம்
காஜா மாலை நூல், காஜா முயினுத்தீன் ஜிஸ்தி என்ற இறைநேசரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறுகிறது. காஜா முயினுத்தீன் ஜிஸ்தி, ஹிஜ்ரி 530-ல் (பொ.யு. 1142) ரஜப் மாதம் முதல் பிறையில், 14-ம் நாள் தெற்கு ஆப்கானிஸ்தானில் பிறந்தார். தனது ஒன்பதாம் வயதினிலேயே, திருக்குரானை முழுமையாகக் கற்றுத் தேர்ந்தார். நபிகள் நாயகத்தின் சமாதியில் வழிபாடு செய்தபோது அவரிடமிருந்து இந்தியாவிற்குச் சென்று இறைப்பணியாற்ற ஆணை பெற்று இந்தியா வந்தார். தனது 97-ம் வயதில் உடல் நீத்தார். ஆஜ்மீரில் இவரது அடக்கத்தலம் அமைந்துள்ளது. 'ஏழைகளின் நண்பன்' என்ற பொருளில் 'கரீப் நவாஸ்' என்று அழைக்கப்படும் இஸ்லாமிய ஞானி இவர். காஜா முயினுத்தீன் ஜிஸ்தியின் வாழ்க்கை, பெருமை, சிறப்பு, அவரது அருங்குணங்கள், அற்புதங்கள், நற்செயல்கள் ஆகியன காஜா மாலை நூலில் விளக்கப்பட்டுள்ளன.
பாடல்
குன்றிலொளிர் விளக்கொளி போல் குவலயத்தில் வாழ்ந்துமன
மன்றிலிருந் தரசாளும் மாமதியாம் காஜாவே
அந்தகராம் சிறுவருக்கோர் அணியாடை ஈந்துபழம்
கந்தலுடை மாற்றுவித்துக் களிப்படைந்த காஜாவே
இருள் சூழ்ந்த நெஞ்சுகளில் இஸ்லாத்தின் ஒளியேற்றி
அருள் சூழ வைத்துவிட்ட ஆற்றல் மிகு காஜாவே
இறைக் காதல் உறுமுள்ளம் ஈடில்லா நெருப்பாகும்
தெறுவோரை எரிக்குமெனத் தெளிந்துரைத்த காஜாவே
வான்கதிரால் பாருலகம் வனப்பொளியைப் பெறுதல்போல்
ஞானிகளால் படைப்பினங்கள் ஒளிருமெனும் காஜாவே
தொண்ணூறு லட்சம்பேர் தூயநெறி சார்வதற்குத்
தொண்ணூற்றே ழாண்டுவரைத் தொண்டாற்றும் காஜாவே
மதிப்பீடு
'காஜா மாலை' நூல் எளிய தமிழில் இயற்றப்பட்டுள்ளது. புனிதர் காஜா முயினுத்தீன் ஜிஸ்தி மீது பாடப்பட்ட குறிப்பிடத்தகுந்த மாலை இலக்கிய நூலாக அறியப்படுகிறது.
உசாத்துணை
- பாமாலை 18, கா. அப்துல்கபூர், பொன்மொழி பதிப்பகம், தக்கலை, முதல் பதிப்பு: 1999
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-May-2025, 13:08:41 IST