under review

திருமறை மாலை

From Tamil Wiki

திருமறை மாலை (பதிப்பு:1972) இஸ்லாமிய மாலை இலக்கிய நூல்களுள் ஒன்று. இதனை இயற்றியவர் கா. அப்துல்கபூர்

வெளியீடு

திருமறை மாலை நூல், கா. அப்துல்கபூர், சென்னை பிறைப் பள்ளியில் முதல்வராகப் பணியாற்றிய காலத்தில் இயற்றப்பட்டது. நூலின் அரங்கேற்றம் அதிராம்பட்டினத்தில் நிகழ்ந்தது. இந்நூலை சென்னை அரண்மனைக்காரன் தெருவில் உள்ள திரீயெம் பப்ளிஷர்ஸ் நிறுவனம், 1972-ல் பதிப்பித்தது.

கா. அப்துல்கபூர் இயற்றிய 'பாமாலை - 18' என்ற இஸ்லாமிய மாலை இலக்கியங்களின் தொகுப்பு நூலிலும் திருமறை மாலை நூல், அப்துல்கபூர் இயற்றிய பிற மாலை இலக்கிய நூல்களுடன் இணைந்து இடம்பெற்றது. இந்நூலை தக்கலையில் உள்ள பொன்மொழிப் பதிப்பகம், 1999-ல் வெளியிட்டது.

நூல் அமைப்பு

திருமறை மாலை, 313 கண்ணிகளால் ஆனது. 313 என்பது இஸ்லாமிய வரலாற்றில் நிகழ்ந்த முதல் போரான பத்ரு போர்க்களத்தை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அப்போரில் நபிகள் நாயகத்துடன் இணைந்து போரிட்ட வீரர்களின் எண்ணிக்கை 313.

திருமறை மாலையில் ஒன்று முதல் 292 வரை உள்ள கண்ணிகள், 'திருமறையாம்' என்பதாகவும், மீதம் உள்ள 293 முதல் 313 வரை இருக்கும் கண்ணிகள், 'அல்லாஹு' என்றும் முடிகின்றன. கண்ணிகள் அனைத்தும் எட்டு சீர்களைக் கொண்டுள்ளன.

உள்ளடக்கம்

திருமறை மாலை, இறைவன் அருளிய மறையின் சிறப்பையும் மறையின் கட்டமைப்பையும் கூறுகிறது. திருமறையை இறைவன், வானவர் தலைவர் ஜிப்ரீல் மூலம் முகம்மது நபிக்கு அருளினான். அது மக்கா நகரிலுள்ள ஹீரா குகையில், ரமலான் மாதம் இரவில் நடந்தேறியது என்பது போன்ற பல செய்திகளை திருமறை மாலை நூல் கூறுகிறது. திருமறையாகிய குர் ஆன் பற்றிய பல செய்திகள் திருமறை மாலையில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

பாடல்

ஆதியருள் கனிந்திலங்கி அமரர்கோன் வழியாக
நீதிநபி மாமணிக்கு நிறைவளித்த திருமறையாம்

இடைப்படுத்தும் தீமைகட்கும் இழிவளிக்கும் செயல்களுக்கும்
தடைச்சுவராய்த் தொழுகையினைத் தந்துவிட்ட திருமறையாம்

வான்புகழும் தூய்மையினை வாக்களித்துச் சிறப்பிக்கும்
நோன்பளித்து மக்கள்மன நோய்போக்கும் திருமறையாம்

பேழையுறு செல்வத்தைப் பெருந்தூய்மைப் படுத்திடவே
ஏழைவரி யானஜகாத் எடுத்துரைக்கும் திருமறையாம்

இறந்தோனின் ஊனினையே இன்னொருவன் புசிப்பானோ
புறங்கூற்றை அவ்விதமே புகல்கின்ற திருமறையாம்

நாயகனின் வீடடைந்து நல்லுணர்வைப் பெருக்கிடவே
வாய்ப்புடையோர் ஹஜ்ஜுசெய வலியுறுத்தும் திருமறையாம்

முன்பிழைகள் பின்பிழைகள் மொழிப்பிழைகள் செயற்பிழைகள்
எண்பிழைகள் யாவையுமே பொறுத்தருள்வாய் அல்லாஹு

இம்மையிலும் மறுமையிலும் எழிலனைத்தும் ஈர்ந்திடுவாய்
வெம்மைநெருப் பின்கொடுமை விலக்கிடுவாய் அல்லாஹு

பொறுமையினை எம்மீது புகுத்தியபின் தளர்வின்றி
உறுதியுறுத் தெம்மடியை உவந்தருள்வாய் அல்லாஹு

நெஞ்சத்தை விரிவாக்கி நேரிறப்பை எளிதாக்கி
தஞ்சத்தை அளித்திடுவாய் தனிக்கருணை அல்லாஹு

மதிப்பீடு

திருமறை மாலை, இஸ்லாமிய மாலை இலக்கிய நூல்களுள் ஒன்று. கா. அப்துல்கபூர் இயற்றிய குறிப்பிடத்தகுந்த மாலை இலக்கிய நூல்களுள் ஒன்றாகவும், இஸ்லாமிய சமயத்துக்கு மட்டுமின்றி பிற சமயத்தினருக்கும் பொதுவான வாழ்வியல் கருத்துக்கள் பலவற்றைக் கொண்ட நூலாகவும் அறியப்படுகிறது.

உசாத்துணை

  • இந்திய இலக்கியச் சிற்பிகள்: கா. அப்துல்கபூர், எழுத்தாக்கம்: ஹ.மு. நத்தர்சா, சாகித்ய அகாதமி நிறுவன வெளியீடு, முதல் பதிப்பு: 2005.
  • திருமறை மாலை, கா. அப்துல்கபூர், திரீயெம் பப்ளிஷர்ஸ், அரண்மனைக்காரத் தெரு, சென்னை, முதல் பதிப்பு: 1972.
  • பாமாலை 18, கா. அப்துல்கபூர், பொன்மொழி பதிப்பகம், தக்கலை, முதல் பதிப்பு: 1999.


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-May-2025, 11:54:33 IST