தே.ப. பெருமாள்
- பெருமாள் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பெருமாள் (பெயர் பட்டியல்)
தே.ப. பெருமாள் (கோட்டாறு தே.ப. பெருமாள்; தேசிக விநாயக பகவதிப் பெருமாள்; டி.பி. பெருமாள்) (1916 - ஜூலை 05, 1989) கவிஞர், எழுத்தாளர். திறனாய்வாளர். சுதந்திரப் போராட்ட வீர்ர். கவிமணியின் மாணவர். சிறார்களுக்காகப் பல பாடல்களை எழுதினார். பொதுவாசிப்புக்குரிய பல நூல்களை எழுதினார். தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.
பிறப்பு, கல்வி
தேசிக விநாயக பகவதிப் பெருமாள் என்னும் தே.ப. பெருமாள், கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் உள்ள கோட்டாற்றில், தேசியப்பப் பிள்ளை - நீலா இணையருக்கு, 1916-ம் ஆண்டு பிறந்தார். குடும்பச் சூழல்களால் ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். தமிழ் மீது கொண்ட பற்றால் பண்டிதர் சாஸ்தாங்குட்டிப் பிள்ளையிடம் தனிக் கல்வி கற்றார். தமிழ் மரபிலக்கியத்திலும், ஹிந்தி, மலையாள மொழிகளிலும் தேர்ச்சி பெற்றார்.
தனி வாழ்க்கை
தே.ப. பெருமாள், நாகர்கோவிலில் கடை ஒன்றில் ஊழியராகப் பணியாற்றினார். பின் சொந்தமாகக் கடை ஒன்றைத் தொடங்கி நடத்தினார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் கைத்தறித் துணி விற்பனையை மேற்கொண்டார். என்.எஸ். கிருஷ்ணனின் உதவியாளராகச் சில ஆண்டுகாலம் செயல்பட்டார்.
தே.ப. பெருமாள் மணமானவர்.
அரசியல்
காந்தியக் கருத்துக்களால் மிகவும் ஈர்க்கப்பட்ட பெருமாள், காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். கிராமங்கள் தோறும் சென்று கதர் விற்பனை செய்தார். திருவிதாங்கூர் காங்கிரஸ், தமிழக காங்கிரஸ் இயக்கங்கள் நிகழ்த்திய பல போராட்டங்களில் கலந்துகொண்டார். அதனால் சிறை சென்றார். விடுதலையானதும் மீண்டும் சுதந்திரப் போராட்ட நிகழ்வுகளில் களப்பணியாற்றினார்.
இலக்கிய வாழ்க்கை
தொடக்கம்
தே.ப. பெருமாள், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் மூலம் இலக்கிய ஆர்வம் பெற்றார். முதல் கவிதை 'மழை' ஆனந்தபோதினி இதழில் வெளியானது. 'தமிழ்ச்சுனை' என்னும் கதை 1940 ல் வெளியானது. கோட்டாறு தே.ப. பெருமாள் என்ற பெயரில்தொடர்ந்து ஆனந்தபோதினி இதழில் கதை, கட்டுரைகளை எழுதினார்.
கவிதைகள்
'தொழிலாளர் உலகம்' என்ற இதழிலும் பெருமாளின் கவிதைகள் வெளிவந்தன. வசந்தம், அமுதசுரபி, குமரி மலர், அணிகலன், ஆனந்த விகடன், சிவாஜி, கலைமகள், சக்தி போன்ற இதழ்களில் கவிதை, கட்டுரைகளை எழுதினார். 'கவிக்குயில்' என்ற புனை பெயரில் பல கவிதைகளை எழுதினார்.
கவிமணியால் ஊக்குவிக்கப்பட்ட பெருமாள், அவரது ஆலோசனையின் பேரில் தனது கவிதைகளை நூல்களாக வெளியிட்டார். மரபிலக்கியத்தில் தேர்ந்திருந்த பெருமாள் சிறார் இலக்கியத்திற்கும் முக்கியப் பங்களித்தார். திருச்சி வானொலி நிலையம் கவியரங்கம் என்ற நிகழ்ச்சியை முதன் முதலில் தொடங்கியபோது கலந்துகொண்ட கவிஞர்களுள் பெருமாளும் ஒருவர்.
பெருமாள் நாடகம், வாழ்க்கை வரலாறு, நூல் திறனாய்வு, பதிப்பு, தொகுப்பு, ஆய்வு எனப் பல களங்களில் தமிழ் இலக்கியத்திற்குப் பங்களித்தார். 75-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். இவருடைய நூல்கள் பல பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாட நூலாக இடம்பெற்றன. 'தளவாய் வேலுத்தம்பி' நாவல், கேரளப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் புதுமுக வகுப்புப் பாட நூலாய் வைக்கப்பட்டது.
இதழியல்
பெருமாள், இலங்கையிலிருந்து வெளிவந்த 'வீரகேசரி' இதழின் பகுதி நேர நிருபராகப் பணியாற்றினார். சிங்கப்பூர் திரையொளி இதழின் நிருபராகப் பணியாற்றினார்.
நாடகம்
தே.ப. பெருமாள் நாடகங்கள் பலவற்றை எழுதினார். அவற்றுள் 'சாந்தி' குறிப்பிடத் தகுந்த படைப்பாக அறியப்படுகிறது. 1957-லிலும் மீண்டும் 1975-லிலும் இருபதிப்புகளாக வெளிவந்த இந்நாடக நூலில், சாந்தி, நீதி, கனிவு, பக்தி, தோல்வி, மானம், சாவு ஆகிய ஏழு நாடகங்கள் இடம்பெற்றன. இவை தவிர்த்து வேறுபல நாடகங்களையும் பெருமாள் எழுதினார்.
பதிப்பு
தே.ப. பெருமாள், கவிக்குயில் நிலையம் என்ற பதிப்பகத்தை நிறுவினார். அதன் மூலம் தனது நூல்கள் உள்பட பல நூல்களை வெளியிட்டார். சுந்தர ராமசாமி 'புதுமைப்பித்தன் மலர்' கொண்டு வரமுயன்றபோது அதற்காகப் பல்வேறு உதவிகள் செய்து அம்மலர் சிறப்பாக வெளிவர உதவினார்.
அமைப்புப் பணிகள்
பெருமாள், 'நாகர்கோவில் வர்த்தகக் குமாஸ்தாக்கள் சங்கம்' என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அதன் மூலம் பல போராட்டங்களை முன்னெடுத்தார். தொழிலாளர்களுக்கு மாதம் ஒருநாள் மட்டுமே விடுமுறை என்பதை மாற்றி வாரம் ஒரு நாள் விடுமுறை என்பதை நடைமுறைக்குக் கொண்டு வந்தார்.
நாகர்கோவிலில் 'இளங்கோ மன்றம்' என்ற அமைப்பை உருவாக்கினார். அதன் மூலம் பல இலக்கிய நிகழ்வுகளை முன்னெடுத்தார். தமிழறிஞர்கள் பலரை அழைத்து அவர்களது சொற்பொழிவுகளை நிகழ்த்தி இளைஞர்களிடேயே தமிழார்வத்தைத் தூண்டினார். 'ஆசாத் வாசிப்புச் சாலை' என்ற பெயரில் கோட்டாற்றில் படிப்பகம் ஒன்றை நிறுவி இளைஞர்களிடையே வாசிப்பார்வத்தை வளர்த்தார்.
விருதுகள்
- திருவார் இளங்கவிஞன் - கவிமணி அளித்த பட்டம்
- தமிழ்க் கவிஞர் மன்றத்தின் முதல் மாநில மாநாட்டில், அப்போதைய முதல்வர் மு. கருணாநிதியின் பாராட்டு மற்றும் கேடயம் (30-11-1975)
- ஸ்ரீலஸ்ரீ வடிவ அடிகள் வழங்கிய 'தேன் தமிழ்க் கவிஞர்' பட்டம்
- 30-9-1987 அன்று நாகர்கோவிலில் நடைபெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தமிழ் எழுத்தாளர் சங்க மூன்றாவது சிறப்பு மாநாட்டில் 'தேன்கவித்தென்றல்' பட்டம்
- தமிழக அரசின் கலைமாமணி விருது
மறைவு
தே.ப. பெருமாள் ஜூலை 05, 1989 அன்று காலமானார்.
வாழ்க்கை வரலாறு
தே.ப. பெருமாளின் வாழ்க்கை வரலாற்றை முனைவர் க. மாணிக்கராஜ் எழுதினார். இந்நூலை கலைஞன் பதிப்பகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையுடனும், மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையுடனும் இணைந்து 2016-ல் வெளியிட்டது.
ப.முத்துக்குமாரசுவாமி தொகுத்து, பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனம் வெளியிட்ட ' இருபதாம் நூற்றாண்டின் 100 தமிழ்க் கவிஞர்கள்' நூலில் தே.ப. பெருமாளின் கவிதையும், வாழ்க்கைக் குறிப்பும் இடம்பெற்றது.
மதிப்பீடு
தே.ப. பெருமாள் சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், சிறார் இலக்கியம் எனப் பல பங்களிப்புகளைச் செய்திருந்தாலும், அடிப்படையில் கவிஞராகவே அறியப்படுகிறார். கவிமணியில் வழியில் பல கவிதைகளைத் தந்த 'கவிமணி பரம்பரை'யில் குறிப்பிடத் தகுந்த ஒருவராக தே.ப. பெருமாள் மதிப்பிடப்படுகிறார்.
நூல்கள்
கவிதைத் தொகுப்புகள்
- இயற்கையின் நடனம்
- கன்னியாகுமரி (காவியம்)
- வாசவதத்தை (காவியம்)
- குழந்தையரங்கு
- சிறுவர் அமுது (இரு பாகங்கள்)
- நெஞ்சமலர்கள் (இரு தொகுதிகள்)
- சுகானந்த மலர்கள்
- தமிழ்ச்சுனை
சிறுகதைத் தொகுப்புகள்
- சிற்பத்தின் சக்தி
- ஆணவ அரசகுமாரி
- சிந்திக்க வைக்கும் சிறுகதைகள்
- சிரிப்பூட்டும் தெனாலிராமன் கதைகள்
- தமிழக மன்னவர்
- தெய்வீகக் திருக்கதைகள்
- நாத ஓவியம்
- நீதி பூத்த நெஞ்சம்
- புலவர் வரலாற்றுக் கதைகள்
- ஆழ்வார்கள் வரலாற்றுக் கதைகள்
- பெரியபுராணக் கதைகள் (நான்கு பாகங்கள்)
- மறக்க முடியாத மாமன்னர் கதைகள்
- முத்துக் கதைகள்
- பூவும் நினைவும்
நாவல்கள்
- சிற்பியின் கனவு (இரு பாகங்கள்)
- தளவாய் வேலுத்தம்பி
- புதிய நெஞ்சம் புதிய உணர்ச்சி
- வஞ்சிக் கோமகள்
- இசைக் கோமகள்
- வீரதீபம்
- வாழ்விலே வசந்தம்
- வேணாட்டு வேந்தன்
- புதிய நெஞ்சம் புதிய உணர்ச்சி
நாடகங்கள்
- ஆறு நாடகங்கள்
- சாந்தி முதலிய ஓரங்க நாடகங்கள்
- சுதந்திர தீபம் (கவிதை நாடகம்)
- தமிழுக்கு தன்னையே தந்தவன்
- மன்னன் திருமகள்
திறனாய்வு நூல்கள்
- இலக்கியத்தில் இன்பச்சுவை
- கவிஞர் கண்ணதாசன் திரை இசைப் பாடல்கள் ஒரு திறனாய்வு
- கவிமணியின் வாழ்வும் கவிதை வளமும்
- தமிழ்ச்சுவை இன்பம்
- பேயைக்கண்டு பயமா?
- முத்துக்குவியல்
- வாழ்க்கை வரலாற்று நூல்கள்
- அறிஞர்களின் வாழ்விலே
- உலகச் சுடர் மணிகள்
- ஆழ்வார்கள் வரலாற்றுக்கதைகள்
- உவகையூட்டும் உலக நிகழ்ச்சிகள்
- குமரி மாவட்டக் கவிஞர்களும் கவிதைகளும்
- சுடர் மணிகள் வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்
- ஞானப்பெருமக்கள் வரலாற்றில் வியப்பூட்டும் நிகழ்ச்சிகள்
- தேவார திருச்செல்வர்கள்
- நினைவில் நிற்பவர்கள்
- பாலமுருகனடிமை
- மேதைகள் வாழ்விலே சுவையான நிகழ்ச்சிகள்
கட்டுரை நூல்கள்
- அறிஞர்களின் பொன் மொழிகள்
- கவிமணி தேவிமலர்
- கவிமணி நினைவு மலர்
- கவிமணி மலர்
- தமிழ்நாடு மாவட்டக் குறிப்புகள்
- பிரபஞ்சமும் அறிவியலும்
- பெரியோர் சொல்லமுதம்
உசாத்துணை
- தே.ப. பெருமாளின் வாழ்க்கை வரலாறு, முனைவர் க. மாணிக்கராஜ், கலைஞன் பதிப்பக வெளியீடு, முதல் பதிப்பு: 2016
- இருபதாம் நூற்றாண்டின் 100 தமிழ்க் கவிஞர்கள், தொகுப்பாசிரியர் ப. முத்துக்குமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடு, முதல் பதிப்பு: 2004
- தென்றல் இதழ் முன்னோடி கட்டுரை, பா.சு. ரமணன், தமிழ் ஆன் லைன். காம்
- தே.ப. பெருமாள் நூல்கள், தமிழ் இணைய மின்னூலகம்
- தே.ப. பெருமாள் நூல்கள்: காமன்ஃபோல்க்ஸ் தளம்
- தே.ப. பெருமாள் சிறுகதை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 19-Jul-2024, 18:09:15 IST