under review

சிவாலய ஓட்டம்

From Tamil Wiki
சிவாலய ஓட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் விளவங்கோடு வட்டங்களில் உள்ள முஞ்சிறை, திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, திருபன்னிப்பாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றிக்கோடு, நட்டாலம் ஆகிய ஊர்களில் உள்ள 12 சிவாலயங்களையும் மாசி மாத சிவராத்திரி அன்று நடந்தும் ஓடியும் சென்று தரிசிப்பதே சிவாலய ஓட்டம் எனப்படுகிறது.

பயண நடைமுறைகள்

ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரியில் முஞ்சிறை மகாதேவர் ஆலயத்தில் தொடங்கி நட்டாலம் ஆலயம்வரை பன்னிரு சிவாலயங்களை குறிப்பிட்ட வரிசையில் தரிசிக்க வேண்டும். சிவாலய ஓட்டம் சிவராத்திரிக்கு முந்தய நாள் மாலை தொடங்கி சிவராத்திரி இரவில் முடியும். சிவராத்திரி அன்று அதிகாலை வரை பக்தர்கள் நட்டாலம் வந்தவண்ணம் இருப்பர்.

சிவாலய ஓட்டம் என்பது பொதுவான வழக்காறு. பக்தர்கள் வேகமாக நடந்தும் ஓடியும் செல்கிறார்கள். வாகனங்களில் சென்று பயணிக்கும் பக்தர்களும் அதிகம் உள்ளனர். வாகன பாதை மற்றும் நடை பாதை என இரண்டு பாதைகள் உள்ளன. நடைபாதையில் ஆண்களே அதிகம் நடக்கிறார்கள். ஓட்டக்காரர்கள் திற்பரப்பு, பொன்மனை கோவில்களில் ஓய்வு எடுக்கிறார்கள்.

கேரள பக்தர்கள்

சிவாலய ஓட்டத்தில் பங்கெடுக்க கன்னியாகுமரி மாவட்டம் தவிர கேரளத்தில் இருந்தும் அதிகம் பக்தர்கள் வருகின்றனர். குறிப்பாக திருசூர், கொடுங்கல்லூர், பத்தனம்திட்டா, எர்ணாகுளம், ஆலப்புழை, மாவேலிக்கரை, வெங்கானூர், பாலராமபுரம், கொல்லம் ஆகிய ஊர்களில் இருந்து அதிகம் பேர் கலந்து கொள்கிறார்கள்.

கோஷங்கள்

சிவாலய ஓட்டகாரர்கள் "கோவிந்தா கோபாலா" மற்றும் "அப்பனே சிவனே வல்லபா" என்று சொல்லிக்கொண்டு ஓடுவது பொது வழக்கம்.

மேலும் குழுக்களாக செல்பவர்கள்,

ஆரைக் கணாம் சாமியைக் காணாம், சாமியைக் கண்டால் மோட்சம் கிட்டும்

என்றும்

ஓடினார் ஓடினார்

அய்யனாரும் ஓடினார்

ஓடினார் ஓடினார்

எம்பெருமானும் ஓடினார்

ஓடினார் ஓடினார்

சிவாலயங்கள் ஓடினார்

போன்ற புதிய கோஷங்களை ராகத்தில் சொல்லியபடி செல்கிறார்கள்.

உடை

சிவாலய ஓட்டகாரர்கள் கையில் விசிறி வைத்திருப்பார்கள். முஞ்சிறை கோவில் தோரணவாயில் அருகே உள்ள கடைகளில் விசிறி, வேட்டி, துண்டு விற்பனை அதிக அளவில் நடைபெறுகிறது. இடுப்பு கச்சையில் துணிப்பையில் காணிக்கை பணம் வைத்திருப்பார்கள். காவி அல்லது மஞ்சள் வேட்டி கட்டி மேலாடை இல்லாமல் காவி அல்லது வெள்ளை துண்டுடன் பயணிப்பது வழக்கம். பெரும்பாலானோர் பழைய வழக்கத்தை பின்பற்றினாலும் நடைமுறையில் சிலர் பல வண்ண வேட்டிகள், கால்சட்டை அணிந்தும் பயணிக்கிறார்கள்.

உணவு

சிவாலய ஓட்டகாரர்களுக்கு வழி நெடுக வீடுகள், அமைப்புகள் மற்றும் கோவில்கள் சார்பில் மரச்சீனிக் கிழங்கு, கஞ்சி, பயிறு, கடலை, சுக்குநீர் ஆகியவை வழங்கப்படுகிறது. திக்குறிச்சியிலிருந்து திற்பரப்புச் செல்லும் வழியில் வெள்ளாங்கோடு ஶ்ரீ நாராயண குரு கோயில் வளாகத்தில் பெரிய பந்தியில் கஞ்சி வழங்கப்படுகிறது. கல்குளம் கோவிலில் சோறு, காய்கறி, குழப்புகளுடன் சாப்பாடு வழங்கப்படுகிறது.

சந்தை

சிவாலயங்களின் முன்பகுதியில் சந்தைகள் உருவாவது வழக்கம். நட்டாலம் கடைசி ஆலயம் என்பதால் இங்கு சந்தை பெரியதாக உள்ளது. நட்டாலம் பகுதியில் சந்தைக்காக மாசி மாதம் அறுவடைச் செய்யும் விதமாக செங்கீரையும் காய்கறிகளும் பயிரிடப்பட்டு கோவில் செல்லும் நீண்ட சாலையோரங்களில் விற்பனை செய்வது வழக்கம்.

நடைமுறையில் காய்கறி, கீரை சந்தை குறைந்து திருவிழாக்கடைகள் நிரம்பி காணப்படுகிறது.

திருவட்டாறு

சிவாலய ஓட்டம் தொன்மங்களின் அடிப்படையிலும் நடைமுறையிலும் சைவ வைணவ மதங்களின் இணைவை வலியுறுத்துவதாக உள்ளது. அதன் ஒரு பகுதியாக சிவாலய ஓட்டம் முடித்த பக்தர்கள் திருவட்டாறு சென்று ஆற்றில் நீராடி வைணவக் கடவுளானஆதிகேசவனை வழிபட்டு வீடு திரும்புகின்றனர்.

சிவாலய ஓட்டம், முஞ்சிறை

பன்னிரு சிவாலயங்கள்

சிவாலய ஓட்டகாரர்கள் தரிசிக்கும் ஆலயங்கள்(வரிசைப்படி)
வ.எண் ஆலயம் மூலவர்
1 முஞ்சிறை திருமலை மகாதேவர் ஆலயம் சூலபாணி
2 திக்குறிச்சி மகாதேவர் ஆலயம் மகாதேவர்
3 திற்பரப்பு மகாதேவர் ஆலயம் வீரபத்திரர்
4 திருநந்திக்கரை மகாதேவர் ஆலயம் நந்திகேஸ்வரர்
5 பொன்மனை மகாதேவர் ஆலயம் தீம்பிலான்குடி மகாதேவர்
6 திருபன்னிப்பாகம் மகாதேவர் ஆலயம் கிராதமூர்த்தி
7 கல்குளம் மகாதேவர் ஆலயம் நீலகண்டசுவாமி
8 மேலாங்கோடு மகாதேவர் ஆலயம் பெரிய காலகாலர்
9 திருவிடைக்கோடு மகாதேவர் ஆலயம் சடையப்பர்
10 திருவிதாங்கோடு மகாதேவர் ஆலயம் பிரதிபாணி
11 திருப்பன்றிக்கோடு மகாதேவர் ஆலயம் பக்தவத்சலர்
12 நட்டாலம் மகாதேவர் ஆலயம் அர்த்தநாரீஸ்வரர்

சாஸ்தா கோவில்கள்

பன்னிரு சிவாலயங்களில் அடங்கிய சாஸ்தா கோவில்கள்
வ.எ. சிவாலயம் சாஸ்தா கோவில்(கள்)
1 முஞ்சிறை திருமலை ஆலயம் நாட்டார் தோட்டம் சாஸ்தா
2 திக்குறிச்சி ஆலயம் சாஸ்தா இல்லை
3 திற்பரப்பு ஆலயம் செம்மருந்தங்காடி சாஸ்தா
4 திருநந்திக்கரை ஆலயம் தும்போடு சாஸ்தா

கூடைதூக்கி சாஸ்தா

5 பொன்மனை ஆலயம் மேக்கோடு சாஸ்தா

கோட்டாவிளை சாஸ்தா

அணைக்கரை சாஸ்தா

மரம் விலக்கி சாஸ்தா

புலிமுகத்து சாஸ்தா

அண்டூர் சாஸ்தா

புலை திலத்து சாஸ்தா

6 திருபன்னிப்பாகம் ஆலயம் ஆனையடி சாஸ்தா

கண்டன் சாஸ்தா

பூதம்காத்தான் சாஸ்தா

பாறையடி சாஸ்தா

ஆரியப்பன் சாஸ்தா

ஈத்தவிளை சாஸ்தா

பூமாலை சாஸ்தா

கைதபுரம் சாஸ்தா

இடத்தேரி சாஸ்தா

7 கல்குளம் ஆலயம் சொரிமுத்தையன் தம்புரான்
8 மேலாங்கோட்டு ஆலயம் நாறக்குழி சாஸ்தா

குண்டல சாஸ்தா

9 திருவிடைக்கோடு ஆலயம் கோடியூர் சாஸ்தா

குழிகோடு சாஸ்தா

10 திருவிதாங்கோடு ஆலயம் கோடியூர் சாஸ்தா

குழிகோடு சாஸ்தா

11 திருப்பன்றிக்கோடு ஆலயம் ஆலம்பாற சாஸ்தா

அனுமாவிளை சாஸ்தா

கல்லேற்றிவிளை சாஸ்தா

12 நட்டாலம் ஆலயம் குன்னக்குழி சாஸ்தா

காவு மூலை சாஸ்தா

முளகுமூடு சாஸ்தா

சிவாலய ஓட்டம்

தொன்மம்

சிவாலய ஓட்டம் தொடர்பாக இரண்டு தொன்மக் கதைகள் பொதுவாக சொல்லப்படுகின்றன. திருவட்டாறு ஆதிகேசவன் தொடர்புடைய கதை ஒன்றும் மகாபாரத கதை ஒன்றும் உள்ளன. இவை இரண்டும் சைவ வைணவ இணைவை கூறுவதாக உள்ளன.

கேசன் கதை

திரேதாயுகத்தில் பிரம்மா விஷ்ணுவைத் தரிசிக்க கஞ்ச ஸ்ரிங்கம்(காஞ்சனகிரி) என்னும் இடத்தில் யாகம் செய்தார். யாககுண்டத்தில் தேஜஸுடன் அமர்ந்திருந்த பிரம்மா சிரம் நிறைந்த அகங்காரத்தால் விஷ்ணுவை உதாசீனம் செய்ய எண்ணியிருந்தார். விஷ்ணு பிரம்மாவிற்கு அறிவு புகட்ட நினைத்தார்.

பிரம்மாவின் நாவில் மாயமாய் அமர்ந்திருந்த சரஸ்வதி யாக மந்திரத்தை பிரள செய்தாள், யாகம் கெட்டது. யாகம் தவறியதால் யாகத்தீயிலிருந்து தீபகேசி என்னும் அரக்கனும், கேசி என்னும் அரக்கியும் பிறந்தனர். கேசனும் கேசியும் பிரம்மாவிடம் மரணமில்லா வரம் பெற்று மலையபர்வதம் வந்து அங்கிருந்த அரசனைக் கொன்று அங்கேயே தங்கினர்.கேசன் மலையபர்வதத்தில் அமர்ந்து தவம் செய்து பல வரங்கள் பெற்று தனது சக்தியை பெருக்கிக் கொண்டான். தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தினான். மூவுலகையும் தன் ஆட்சிக்குள் கொண்டு வர நினைத்தான்.

கேசனின் தங்கை கேசி ஒருமுறை நாகலோகம் செல்கையில் இந்திரனைக் கண்டாள். இந்திரனின் அழகில் மயங்கி தன்னை மணக்கும்படி கேரினாள். இந்திரன் மறுத்தான். இந்திரனால் நிராகரிக்கப்பட்ட கேசி அவனை பழிவாங்க நினைத்தாள். கேசி தன் அண்ணன் கேசனிடம் இந்திரன் தன்னை பலவந்தமாக புணர முயன்றதாய் முறையிட்டாள். கேசன் கோபத்துடன் இந்திரனைத் தேடி நாகலோகம் சென்றான். இந்திரனைச் சந்தித்து போரிட்டான். ஏழு நாட்கள் நடந்த போரில் இந்திரன் தோற்றான். கேசனால் துரத்தப்பட்ட இந்திரன் யாரும் காண முடியாத இடத்தில் சென்று ஒழிந்தான்.

கேசன் தேவலோகத்து அம்பையர்களைச் சிறைப்பிடித்தான். சூரிய சந்திரர்களை அவமானப்படுத்தினான். முப்பத்து முக்கோடி தேவர்களும் கூடி விஷ்ணுவிடம் முறையிட்டனர். விஷ்ணு கருடனின் மேலேறி சாகாவரம் பெற்ற கேசனுடன் போரிட்டுத் தோற்றான். அப்போது பராசக்தி தோன்றி “கேசனை அழிக்க முடியாது, அவன் மரணமற்றவன். ஆதிசேஷன், கேசனைச் சுற்றி வழைத்து அரண் கட்டட்டும். நீ ஆதிசேஷன் மேல் சயனிப்பாய்” என்றுச் சொல்லி மறைந்தாள். விஷ்ணு அவ்வாறே அரக்கனை வீழ்த்த, ஆதிசேஷன் கேசனைச் சுற்றி பாம்பரண் அமைத்தான். விஷ்ணு ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டான்.

ஆதிசேஷனின் பிடிக்குள் கேசனை முழுவதும் கட்ட முடியவில்லை. அவனது பன்னிரண்டு கைகளையும் வெளியே நீட்டி கொடுமைகள் செய்யத் தொடங்கினான். கேசனின் கரங்களை ஸ்தம்பிக்கச் செய்ய நினைத்த விஷ்ணு அவனது பன்னிரு கைகளிலும் பன்னிரு சிவலிங்கங்களை வைத்தான். சிவ பக்தனான கேசன் கொடுமைகள் செய்வதை நிறுத்திக் கொண்டான். அந்த பன்னிரு சிவலிங்கங்களும் பன்னிரு சிவாலயங்களாக உருப்பெற்றன.

விராடமூர்த்தி கதை

கேசனின் கதையில் சிறு மாற்றத்துடன் வேறு ஒரு கதையும் சொல்லப்படுகிறது.

கேசவனுக்கும் விஷ்ணுவுக்கும் வெவ்வேறு இடங்களில் சண்டை நடந்தது. சண்டையை முழுமையாக காண வேண்டி, சிவன் விராடமூர்த்தி வேடத்தில் பன்னிரு இடங்களில் நின்று பார்த்தார். அவ்விடங்கள் பன்னிரு சிவாலயங்களாயின.

சர்ப்ப காவுகளின் கதை

கேசனின் கதையின் முடிவில் சிறு மாற்றத்துடன் மற்றொரு கதையும் சொல்லப்படுகிறது.

ஆதிசேஷனின் பாம்பரணில் சிக்கியிருந்த கேசன் தனது பன்னிரு கைகளையும் வெளியே நீட்டினான். கேசன் கைகளை நீட்டிய இடங்களில் பன்னிரு சர்ப்பக் காவுகள் இருந்தன. சர்ப்பக் காவுகளை ஒட்டி சிவாலயங்கள் எழுப்பப்பட்டன.

பீமன் கதை

மகாபாரத யுத்தம் முடிந்து பாவத்தை போக்க தர்மர் யாகம் செய்ய ஏற்பாடு செய்கிறார். யாகத்தை நடத்தும் முனிவர் யாகத்தில் சேர்க்க மனிதனும் சிங்கமும் கலந்த புருஷா மிருகத்தின் பால் வேண்டும் என்கிறார். அதிக பலம் கொண்ட கொடூர குணம் கொண்ட அந்த மிருகத்திடம் பால் கறக்க பலம் பொருந்திய பீமனைக் கண்ணன் தெரிவு செய்கிறான்.

புருஷா மிருகம் சிவனை மட்டுமே வணங்கும். விஷ்ணுவின் நாமம் கேட்டால் கோபித்து கொள்ளும் குணமுடையது. கண்ணன் பீமனிடம் தரையில் வைத்தால் சிவலிங்கமாக மாறும் 12 ருத்ராட்சங்களைக் கொடுத்தான். கோபாலா கோவிந்தா என்று சொல்லி கொண்டு ஓடும்படியும் புருசாமிருகம் துரத்தும் போது ருத்ராட்சத்தை தரையில் வைக்கவும் சொன்னான். லிங்கம் உருவானதும் புருஷாமிருகம் லிங்க பூஜை செய்ய ஆரம்பிக்கும். அந்நிலையில் அதனிடம் பால் கறந்து விடலாம் என்று சொல்லி அனுப்பினான் கண்ணன்.

பீமன் கண்ணன் சொன்னபடி ருத்திராட்சங்களுடன் புறப்பட்டான். புருஷா மிருகத்தை பார்த்து "கோவிந்தா கோபாலா" என்று சொன்னான். மிருகம் கோபம் கொண்டு பீமனை துரத்தியது பீமன் ஓடிக் களைக்கும்போது ருத்ராட்சத்தைத் தரையில் வைத்து சிவலிங்கமாக்கினான். மிருகம் நின்று சிவலிங்க பூஜையில் மயங்கிய சமயம் "கோவிந்தா கோபாலா" என்று சொல்லி பால் கறக்க ஆரம்பித்தான். மிருகம் மீண்டும் விழித்து கொண்டு துரத்தியது. மீண்டும் அவ்வாறே செய்தான்.

சிவாலய ஓட்டம்

அனைத்து ருத்ராட்சங்களும் தீர்ந்த பிறகு ஓடி மிருகத்தின் காட்டிற்குச் சென்று விட்டான். பீமன் ஒரு காலைக் காட்டில் பதித்ததும் காலைப் பற்றிக்கொண்டு பீமன் கால் தனது காட்டில் பட்டதால் அவன் தனக்கே சொந்தம் என்றது. பீமன் முயன்றும் காலை விடுவிக்க முடியவில்லை. தர்மன் அங்கு வந்து பீமனின் ஒரு காலை மிருகம் எடுத்து கொள்ளட்டும் என்று தீர்ப்பளித்தான்.

தனது அகக்கண்ணில் 12 ருத்ராட்சங்களும் 12 விஷ்ணு உருவங்களாக மாறியதை கண்டு ஞானம் பெற்றது புருஷாமிருகம். பீமனும் தனது வலிமையின் அகங்காரத்தை இழந்தான்.

பீமனால் உருவாக்கப்பட்ட 12 சிவலிங்கங்ளும் 12 சிவாலயங்கள் ஆயின

பாதை

சிவாலய ஓட்ட பாதை(84.4 கி.மீ.)
ஆலயம் அமைவிடம் கி.மீ வழி
1 முஞ்சிறை திருமலை ஆலயம் https://goo.gl/maps/VU1wyTF6yBN2cZRi9 12.3 மார்த்தாண்டம்

நேசமணி பாலம்

2 திக்குறிச்சி ஆலயம் https://goo.gl/maps/9toCivYwpcfiDDZx9 12.7 சிதறால்

அருமனை

3 திற்பரப்பு ஆலயம் https://goo.gl/maps/2LukHDWikvTi7Q7q9 7.9 குலசேகரம்
4 திருநந்திக்கரை ஆலயம் https://goo.gl/maps/roTkGwwY5X3hiTnC8 7.7 குலசேகரம்
5 பொன்மனை ஆலயம் https://goo.gl/maps/63oYZB6Qi2T6yG9c8 11.7 சித்திரங்கோடு

குமாரபுரம்

முட்டைக்காடு

6 திருபன்னிப்பாகம் ஆலயம் https://goo.gl/maps/QY1ENEYGwWzdztyGA 5.3 பத்மநாபபுரம்
7 கல்குளம் ஆலயம் https://goo.gl/maps/yQQj1jjTyGJxSEYg8 2.9 புலியூர்குறிச்சி சாலை
8 மேலாங்கோடு ஆலயம் https://goo.gl/maps/UhVz2ix5SZMXdzqY7 4.6 குமாரகோவில் விலக்கு

வில்லுகுறி

9 திருவிடைக்கோடு ஆலயம் https://goo.gl/maps/SKsPCNSGwp6XmRES7 8.7 வில்லுகுறி

தக்கலை

கேரளபுரம்

10 திருவிதாங்கோடு ஆலயம் https://goo.gl/maps/VPcMHNpeX5kKAN528 7.5 நடுகடை

குழிகோடு

11 திருப்பன்றிக்கோடு ஆலயம் https://goo.gl/maps/22PKhsAq8iu9C4Zw5 3.1 பள்ளியாடி
12 நட்டாலம் ஆலயம் https://goo.gl/maps/xPN7Mxda2HXkEr8i9
சிவாலய ஓட்டம்

உசாத்துணை


✅Finalised Page