under review

மேலாங்கோடு மகாதேவர் ஆலயம்

From Tamil Wiki
மேலாங்கோடு ம்காதேவர் ஆலயம்

கன்னியாகுமரி மாவட்டம் மேலாங்கோடு என்னும் ஊரிலுள்ள சிவ ஆலயம். மூலவர் காலகாலர் லிங்க வடிவில் உள்ளார். சிவாலய ஓட்டம் நிகழும் பன்னிரு சிவாலயங்களில் இது எட்டாவது ஆலயம்.

இடம்

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பஞ்சாயத்தில் உள்ள குக்கிராமம் மேலங்கோடு. நாஞ்சில் நாட்டில் மேலாங்கோடு என்னும் பெயர் இசக்கியம்மனுடன் தொடர்புடையது. மேலாங்கோடு யட்சிகளின் ஊர் என்ற பொருளில் கதைகள் உள்ளன.

மேலாங்கோடு கோவிலுகாக மட்டுமே பெயர் பெற்ற ஊர். இங்கு மக்கள் குடியிருக்கவில்லை. சிவன் கோவிலுடன் சகோதரிகள் என அறியப்படும் இரண்டு இசக்கியம்மன் கோவில்கள் இங்கு உள்ளன.

மூலவர்

மூலவர் காலகாலர் 60 செ.மீ உயர லிங்க வடிவில் ஆவுடையில் இருக்கிறார். லிங்கம் சரிந்த நிலையில் உள்ளது. லிங்கத்தின் உச்சிப் பகுதி அரைவட்ட கோள வடிவில் இல்லாமல் சற்று குவிந்து உள்ளது. மூலவருக்கு வெள்ளிக் கவசம் உண்டு.

தொன்மம்

மார்கண்டேயன் கதை கோவிலின் தலபுராணமாகக கூறப்படுகிறது.

மிருகண்ட முனிவர் குழந்தை வரம் வேண்டி தவமிருந்தார். சிவன் தவத்திற்கு இரங்கி அறிவும் பக்தியும் உள்ள ஒரு மகன் வேண்டுமா இல்லை அறிவில்லாத பண்பற்ற பல குழந்தைகள் வேண்டுமா என்று கேட்டதுடன் ஒரு குழந்தை பிறந்தால் 16 ஆண்டும் பல குழந்தை பிறந்தால் பல ஆண்டும் உயிர் வாழும் என்று சொன்னார். முனிவர் ஒரு குழந்தை கேட்டார்.

சிவனிடம் வரம்பெற்று பிறந்த மகன் மார்கண்டேயன் சகல வேதங்களையும் கற்று வளர்ந்தான். தந்தையின் வரத்தின் செய்தி அறிந்திருந்த மார்கண்டேயன் 16 வயதில் சிவனே கதி என்று கிடந்தான். குறித்த காலத்தில் காலன் பாசக்கயிற்றை வீச மார்கண்டேயன் லிங்கத்தை கட்டிப்பிடிதான். லிங்கம் மார்கண்டேயனுடன் அசைந்து லிங்கம் சரிந்தது. உடனே லிங்கம் பிளந்து திரிசூலத்துடன் சிவன் வெளிப்பட்டு காலனை சூலத்தால் குத்தினான். மார்கண்டேயன் உயிர் பிழைத்தான்.

சிவலிங்கம் சரிந்து இருப்பதற்கு இது காரணமாக சொல்லப்படுவதுடன் காலனின் பாசக்கயிற்றின் தடம் சிவலிங்கத்தில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

கோவில் அமைப்பு

மேலாங்கோடு மகாதேவர் ஆலயம்

கோவில் கிழக்கு பார்த்து உள்ளது. மேற்கு வாசலுக்கு வர மட்டுமே சாலை உள்ளது. மேற்கு வாசலில் தோரண அண்மையில் காங்கிரீட்டால் கட்டப்பட்ட தோரண வாயில் உள்ளது. மேற்கு பிராகாரத்தில் மரங்கள் நிறைந்த சிறிய காவு (மரத்தோட்டம்) தரை மட்டதிலிருந்து 60 செ.மீ. உயரத்தில் உள்ளது. இங்கு மஞ்சணத்தி, இஞ்சி தெவரை, வேம்பு ஆகிய மரங்களுடன் நேர்ச்சையாக இங்கு கொண்டுவரபட்ட இசக்கி, சாஸ்தா, நாகர்களின் சிற்பங்கள் உள்ளன.

கிழக்கு பக்கம் வாசல் உண்டு. வாசல் வழி வெளியே சென்றால் நீர்நிலை உள்ளது. கிழக்கு வாசல் முன் பலிபீடம் உள்ளது. கிழக்கு வாசல் வழி உள்செல்கையில் தரைமட்டத்திலிருந்து 90 செ.மீ. உயரமுள்ள திண்ணைகளும் நடுவே பாதையுடன் கூடிய கல்மண்டபமும் உள்ளது.

ஸ்ரீகோவில் திறந்தவெளி உள்பிரகாரங்களையும் சுற்று மண்டபத்தையும் கொண்டது. தெற்கு மேற்கு வடக்கு சுற்று மண்டபங்களில் 17 தூண்கள் வேலைப்பாடில்லாமல் உள்ளன.

உள்பிராகாரத்தின் தென்கிழக்கில் மடப்பள்ளியும் திறந்தவெளி மண்டபமும், தென்மேற்கில் விநாயகர் கோவிலும், வடகிழக்கில் அலுவலக அறையும் உள்ளன.

ஸ்ரீகோவில் நந்திமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை என மூன்று பகுதிகள் கொண்டது. அதிக வேலைப்பாடில்லாத நந்தியுடன் கூடிய நந்தி மண்டபம் உருண்ட 4 தூண்களைக் கொண்டது. கருவறையில் மூலவர் லிங்க வடிவில் உள்ளார்.

ஸ்ரீகோவிலின் மேல் ஒற்றை கோபுரமும் செப்புக் கலசமும் உள்ளன.

வரலாறு

ஆலய தோரண வாயில்

கோவிலின் கட்டுமான காலத்தைக் கணக்கிட கல்வெட்டு ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. கோவிலின் அமைப்புப்படி ஸ்ரீ கோவில் 15 முதல் 16- ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததென்றும் சுற்று மண்டபம் அதற்கும் பிற்பட்டது என்றும் முனைவர் அ.கா. பெருமாள் கூறுகிறார்.

வழிபாடு

கோவிலுக்கு தனியாக ஆண்டு திருவிழா இல்லை. பிரதோஷம், மலர்முழுக்கு விழா, மகா சிவராத்திரி ஆகியவை சிறப்பாக நடக்கிறது. மேலாங்கோட்டு இசக்கியை தரிசிக்க வரும் பக்தர்களே சிவனைத் தரிசிக்க வருகிறார்கள். இதனால் செவ்வாயும் வெள்ளியும் சிவனுக்கு உகந்த நாட்களாக இருக்கின்றன. இங்கு நேர்ச்சையாக வெடி வழிபாடு உண்டு.

உசாத்துணை


✅Finalised Page