under review

பொன்மனை மகாதேவர் ஆலயம்

From Tamil Wiki
பொன்மனை ஆலயம்

கன்னியாகுமரி மாவட்டம் பொன்மனை ஊரில் உள்ள சிவ ஆலயம். மூலவர் மகாதேவர் சுயம்பு லிங்கமாக உள்ளார். தீம்பிலான்குடி மகாதேவர் ஆலயம் என்பது ஆவணங்களில் உள்ள அதிகாரபூர்வ பெயர். சிவாலய ஓட்டம் நிகழும் பன்னிரு சிவாலயங்களில் ஐந்தாவது ஆலயம்.

இடம்

கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டத்தில் பொன்மனை பஞ்சாயத்தின் கீழ் உள்ள ஊர். குலசேகரம் அரசமூடு சந்திப்பில் இருந்து சுருளோடு செல்லும் சாலையில் 5 கி.மீ. தூரத்தில் தாமிரபரணி(கோதையாறு) ஆற்றின் இடது பக்கம் உள்ளது. பழையாற்றின் ஒரு பிரிவு இவ்வூரை ஒட்டி செல்கிறது.

மூலவர்

மூலவர் தீம்பிலான்குடி மகாதேவர் லிங்க வடிவில் உள்ளர். தலைப்பகுதியில் வெட்டுபட்ட அடையாளம் உள்ளது. கருவறை சிவலிங்கதிற்கு ஆவுடையார் கிடையாது. அஷ்டபந்தன பிரதிஷ்டை செய்யப்படாத சுயம்பு லிங்கமாகும்.

தொன்மம்

பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவிலின் தலபுராணம் வாய்மொழி கதையாக உள்ளது.

பொன்மனை முன்பு அடர்ந்த காடாக இருக்கையில் இப்பகுதியில் காணிக்காரர்கள் வாழ்ந்து வந்தனர். திப்பிலான் என்பவன் ஒருநாள் மரம் வெட்டி கொண்டிருந்தபோது வெட்ட்றுவாள் கல்லில் பட்டு கல்லில் ரத்தம் கசிந்தது. ஊரார் வந்து புதர்களை அகற்றி பார்க்கையில் சுயம்பு லிங்கம் ஒன்றை கண்டெடுத்தனர். அங்கே கோவில் கட்டி பூஜை செய்து வழிபட்டனர். கோவில் காணிகாரன் பெயரில் தீம்பிலான் ஈஸ்வரன் என்று அழைக்கப்பட்டு பின்னர் தீம்பிலான்குடி மகாதேவர் ஆலயம் ஆனது. தீம்பிலான் வெட்டிய தடம் சிவலிங்கதில் காணப்படுவதாக நம்பப்படுகிறது.

கோவில் அமைப்பு

தோரண வாயில்

கோவில் ஒரு ஏக்கர் பரப்பு கொண்டது. கோவிலை சுற்றிய பகுதிகளும் குளமும் கோவிலுக்கு சொந்தமானவை.

கிழக்கு பார்த்த கோவிலின் முன் பகுதி யானை நுழையும்உயரமுள்ள தோரண வாயில் கேரள பாணி ஓட்டு கூரையால் ஆனது. கிழக்கு வெளிப்பிராகாரத்தில் கேரள பாணி கல்விளக்கு உள்ளது. வடகிழக்கில கோவில் அலுவலகம் உள்ளது. நடுவில் 1994-ல் நிறுவப்பட்ட 40 அடி உயரமுள்ள செம்புத்தகடு வேய்ந்த கொடிமரம் உள்ளது. தென்கிழக்கில் நாகர் சிற்ப்பங்கள் உள்ளன.

மேற்கு வாசலும் தோரண வாயிலும் உண்டு. வடமேற்கு மூலையில் யட்சி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. வடக்கு வாசலும் உள்ளது.

சதுர அமைப்பில் உள்ள கோவிலின் நடுவில் கருவறையும் எதிரே நந்தி மண்டபமும் உள்ளன. நாலாபுறமும் சுற்று மண்டபங்கள் உள்ளன. வெளி பிராகாரம் கருங்கல் பாவப்பட்டுள்ளது.

முன்வாசலை கடந்து தெற்கும் வடக்கும் 16 தூண்கள் கொண்ட இரண்டு கல்மண்டபங்கள் தரைமட்டத்திலிருந்து 25 செ.மீ. உயரமுடையத்தில் உள்ளன. தூண்களில் சிற்பங்கள் இல்லை. தூண்களின் அமைப்பை கொண்டு 18 அல்லது 19-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்று அ.கா. பெருமாள் ஊகிகிறார

சுற்று மண்டபங்கள்:

கிழக்கு உள்பிராகாரத்தில் உள்ள திறந்த வெளி சுற்று மண்டபத்தில் உள்ள ஆறு தூண்களிலும் வேலைப்பாடில்லாத தீபலட்சுமி சிற்பங்கள் உள்ளன. அதன் சுண்ணாம்பு அடிக்கப்பட்டு உருவம் மறைந்துள்ளது.

தெற்கு, மேற்கு, வடக்கு உட்பிரகாரங்களில் உள்ள சுற்று மண்டபங்கள் 21 கல்தூண்களுடன் உள்ளன. இம்மண்டபங்கள் தரைமட்ட அளவில் மற்றும் தரைமட்டத்திலிருந்து உயர்ந்த தளமட்டத்துடன் என இரண்டு பகுதிகளாக உள்ளன. தென்கிழக்கில் மடப்பள்ளியும் தென்மேற்கில் உக்கிராண புரையும் உள்ளன.

ஆலய வளாகம்

வடக்கு சுற்று மண்டபத்தில் தரைமட்ட பகுதியில் வெளக்கேந்திய ஆண் சிற்பங்கள் உள்ளன. வடக்கிழக்கில் திருக்கிணறும் வடமேற்கில் உக்கிராண புரையும் உள்ளன.

கருவறை: கோவில் கருவறையின் வெளிபகுதி கேரள பாணியில் செம்பு தகடு வேயப்பட்ட கூம்பு வடிவ கூரையுடன் வட்டவடிவில் உள்ளது. கருவறையின் உள்பகுதி நீள்சதுர வடிவில் உள்ளது. இதன் முன் அர்த்த மணபமும் இதை அடுத்து உயரமான கருவறையும் உள்ளன. கருவறையில் உள்ள சுயம்பு லிங்கம் 12 செ.மீ. நீளமுடையது. கருவறையில் உற்சவ விக்கிரகமும் உள்ளது.

ஸ்ரீகோவிலின் முன்வாசலில் இருபுறமும் வேலைப்பாடில்லாத துவாரபாலகர் சிற்பங்கள் உள்ளன. ஸ்ரீகோவிலின் வெளியே தெற்கு பக்கம் பிற்காலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் பரிவார தெய்வமாக உள்ளார். தெற்கு உள்பிரகாரத்தின் நடுவே செண்டு ஏந்திய சாஸ்தா உத்குடிகாசனத்தில் அமர்ந்து உள்ளார்.

நந்தி மண்டபம்: கருவறையின் எதிரே 8 தூண்கள் கொண்ட ஓட்டுகூரையால் ஆன நந்தி மண்டபம் உள்ளது. நந்தி சிற்பம் மூலவரின் நேர் எதிரே கால்மடக்கி தத்ரூபமாக உள்ளது. கழுதில் கயிறு மணிகள் உள்ளன. கல்லால் ஆன நந்தி சிற்பம் 70 செ.மீ. உயரமுள்ளது.

நந்தி மண்டபத்தின் மேற்கூரையில் அழகிய வேலைப்பாடுடைய மரசிற்பங்கள் உள்ளன. கூரையின் மேல் அஷ்டதிக் பாலகர்களும் நடுவில் பிரம்மனும் உள்ளனர். நான்கு திசைகளிலும் நடனமாடும் நிலையில் உள்ள 8 நடன மங்கை சிற்பங்கள் உள்ளன.

நந்தி மண்டபத்தின் வடக்கிலும் கிழக்கிலும் கூரையின் அடிபாகத்தில் ராமாயண மரசிற்பங்கள் உள்ளன. மண்டபத்தின் கிழக்கு பக்க கூரையில் இராமாயண நிகழ்ச்சி தொடர்பாக நான்கு சிற்பங்கள் உள்ளன. மண்டபத்தின் தெற்கு கூரையில் பலவிதமான சிற்பங்கள் உள்ளன. சிற்பங்கள் அனைத்தும் முழுதாக பழுதடையாமல் உள்ளது. பன்னிரு சிவாலயங்களில் இத்தகைய மரச்சிற்பங்கள் பொன்மனை ஆலயத்தில் மட்டுமே உள்ளது.

மரச்சிற்பங்கள்

நந்தி மண்டபத்தின் வடக்கு பக்க கூரையின் கீழ் உள்ள சிற்பங்கள்.

  • ராமன் மான் மீது அம்பெய்யும் காட்சி -மானின் கழுத்தில் அம்பு துளைத்து மறுபுறம் வருவது தெரிகிறது
  • ராமன் மடியில் லட்சுமணன் கிடக்கும் காட்சி - கம்பனின் யுத்தகாண்ட நிகழ்ச்சி – நாகாஸ்த்திரத்தால் அடிபட்டு நினைவிழக்கும் லட்சுமணனை இராமன் மடியிலேந்தி புலம்புகிறான்
  • ராவணன் சீதையை தேரில் கவர்ந்து செல்லும் காட்சி - தேரில் ராவணன் பத்து கைகளிலும் ஆயுதங்களுடன் நிற்க சீதை தேர்த்தட்டில் தலையில் கைவைத்து சோகத்துடன் இருக்கிறாள்
  • அனுமன் ராமனிடம் கணையாழியை வாங்கும் காட்சி
  • ராமன், சீதை, லட்சுமணன் ஆகியோரின் வனவாச காட்சி - ராமன் மற்றும் சீதை சிறிய மேடை மேல் அமர்ந்திருக்க லட்சுமணன் நின்று கொண்டிருக்கிறான், பின்னணியில் மூன்று மரங்கள் உள்ளன
  • ராவண தர்பார் காட்சி - மேடையில் பத்து கைகளில் ஆயுதங்களுடன் ராவணன் அமர்ந்திருக்க, எதிரே சூர்பனகை மார்பும் மூக்கும் வெட்டப்பட்ட நிலையில் இருக்கிறாள், அருகில் உள்ளது அமைச்சனாக இருக்க்லாம் என்பது அ.கா. பெருமாள் அவர்களின் ஊகம்
  • கிட்கிந்தை ஆலோசனை கூட்ட காட்சி - சுக்ரீவன், அனுமன், லட்சுமணன் அமர்ந்து சீதையை தேடுவது குறித்து நடக்கும் ஆலோசனை கூட்டம், வானர வீரன் மரத்தின் மேல் காவலுக்கு உள்ளான்
  • அனுமன் சுரசையின் காதுவழி வெளிவரும் காட்சி – ராமாயண காட்சி, கறண்ட மகுடத்துடன் பத்திர குண்டலம் அணிந்த சுரசையின் தலை மட்டும் காட்டப்பட்டுள்ளது. அரக்கியின் வாய்க்கு வெளியே அனுமனின் கால்களும் காதுக்கு வெளியே தலையும் தெரிகிறது.

நந்தி மண்டபத்தின் கிழக்கு பக்க கூரையின் கீழ் உள்ள சிற்பங்கள்.

  • வானரவீரன் இலங்கை வீரனுடன் சண்டை செய்யும் காட்சி – வானர வீரன் தனது வலது காலால் எதிரியின் இடையில் மிதிப்பது நுட்பமாக உள்ளது
  • அசோகவன சீதை – மரத்தின் கீழ் சீதை அம்ர்ந்திருக்க எதிரே அனுமன் மகுடத்துடன் நின்று சீதையிடம் கணையாழியை கொடுக்கிறான். அனுமன் கணையாழியை ஆள்காட்டி விரலிலும் பெருவிரலிலும் பிடித்துகொண்டு பவ்யமாக நீட்டுவது தெளிவாக உள்ளது.
  • அரக்கியரின் சிற்பங்கள் - சீதைக்கு காவல் இருக்கும் அரக்கியர் இருவர். ஒருத்தி கையில் வாளும் சூலமும் கேடயமும் கொண்டிருக்க மற்றொருத்தி சூலத்தை பிடித்திருக்க கோரை பற்களுடன் இருவரும் உள்ளனர்.
  • அனுமன் அசோகவனம் வரும் காட்சி: அசோகவனத்திற்கு சீதையை தேடி வரும் அனுமன் காவலர்களை மாயத்தால் உறங்க செய்து மரத்தில் ஏறி பார்க்கும் தொடர்காட்சி சிற்பம்.
  • வீரர்கள், நடன மங்கைகளின் சிற்பங்கள்
  • ராம லட்சுமணரின் நின்ற கோலம் - இரு பக்கங்களிலும் வானர வீரர்கள் உள்ளனர்
  • ராவணன் அவையில் அனுமன் – ராவணன் அவையில் அவனது ஆசனத்தைவிட உயரமான தன் வால் ஆசனத்தில் அனுமன் அமர்ந்திருக்கிறான். அனுமன் கையில் கதையும் ராவணன் பத்து கைகளிலும் ஆயுதங்களும் உள்ளன.

நந்தி மண்டபத்தின் தெற்கு பக்க கூரையின் கீழ் உள்ள சிற்பங்கள்.

  • அஞ்சலி ஹஸ்த அடியவர்
  • மலர் செண்டு ஏந்திய ஆண்
  • முனிவர்
  • சூலம் ஏந்திய வீரன்
  • மத்தளம் கொட்டும் கலைஞன்
  • புலிகள் நடுவே லிங்கம் - மரத்தின் கீழ் இருக்கும் சிவலிங்கத்தின் இருபுறமும் புலிகள் உள்ளன. ஒரு புலி சிவலிங்கத்தை நாக்கால் நக்குகிறது
  • பசுவின் அருகே லிங்கம் - பசு சிவலிங்கத்தை நாக்கால் நக்க அருகே இரு அடியவர்கள் உள்ளனர்.
  • குரங்கு அர்சனை செய்யும் லிங்கம் - சிவலிங்கத்தை இரு குரங்குகள் மலரால் அர்ச்சனை செய்கிறது. அர்ச்சனை செய்யும் குரங்கின் பின்னே இன்னொரு குரங்கு நீண்ட ஆண்குறியுடன் நிற்கிறது.
  • யாக பூஜை செய்பவர் - ஒரு கையில் மணியும் ஒருகையில் தீபாராதனை தட்டும் உள்ளன. முப்புரி நூல் அணிந்துள்ளார். யாக தீயும் மேலே பழக்குலையும் உள்ளன.
  • நெருப்பில் குளிர்காயும் காட்சி - பெரிய பானையில் நெருப்பு எரிய அருகே ஒருவன் இரண்டு கைகளையும் நீட்டி குளிர்காய்கிறான். இவன் உடம்பில் ஆடை இல்லை, மேல் உள்ள சட்டதில் ஆடை தொங்குகிறது.

நந்தி மண்டபத்தின் மேற்கு பக்க கூரையின் கீழ் உள்ள சிற்பங்கள்.

  • ராமன்
  • சீதை
  • லட்சுமணன்
  • சூர்ப்பணகை - மார்பும் மூக்கும் அறுபட்ட நிலையில்
  • கங்காளநாதர்
  • இந்திரன் - கையில் வஜ்ராயுதம் உள்ளது, ஒரு கை அபய முத்திரையும், ஒரு கை வரத முத்திரையும் காட்டுகின்றன.

வரலாறு

பொன்மனை ஆலயத்தின் கட்டுமானத்தை வாய்மொழி செய்திகள் மற்றும் கட்டுமான அடிப்படையில் காலத்தை ஊகிக்க வேண்டி உள்ளது. கல்வெட்டு ஆதாரங்கள் இக்கோவிலில் கண்டெடுக்கப்படவில்லை.

தென்குமரி தேவசம் துறையின் பதிவேடுகள் இக்கோவிலை மேஜர் தேவச வகையில் சேர்க்கிறது. கோவில் தலபுராணம் மலையர்களுடன் தொடர்புள்ளது. இக்காரணங்களை இக்கோவில் பழமையானது என்பதற்கு அ.கா.பெருமாள் சான்றாக குறிப்பிடுகிறார்.

கருவறை அமைப்பை கொண்டு இது 15-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்க்லாம் என்றும் சுற்று மண்டபமும் முக மண்டபமும் 17-ம் நூற்றாண்டில் கட்டபட்டிருக்கலாம் என்றும் அ.கா. பெருமாள் ஊக்கிறார்.

விழாக்கள்

கோவில் வாசல்

திருவிழா: பொன்மனை ஆலய திருவிழா பங்குனி மாதம் திருவாதிரை நாளில் தொடங்கி பத்து நாட்கள் நடக்கிறது. விழாவில் கலச பூஜை முக்கிய சடங்கு. பத்து நாட்களும் உற்சவ மூர்த்தியின் யானை ஊர்வலம் உண்டு.

ஏழாம் நாள் திருவிழாவில் யானை உற்சவ மூர்த்தியை தாங்கிய ஊரின் எல்லா பகுதிகளுக்கும் வலம் வரும். இது ஆலய நுழைவு அனுமதிக்கு பின் ஏற்பட்டது.

ஒன்பதாம் நாள் விழாவில் கதகளி நிகழ்ச்சி நடக்கிறது. இதே நாளில் வேட்டை நிகழ்ச்சியும் நடக்கிறது. வேட்டை நிகழ்ச்சியில் இளநீரை வேட்டை பொருளாக கொண்டு கோவில் பூசகர் கத்தியால் வெட்டும் சடங்கு நடக்கிறது.

பத்தாம் நாள் ஆறாட்டு நிகழ்ச்சி நடக்கிறது. பகல் மூன்று மணிக்கு யானை ஸ்ரீபலி புறப்பட்டு ஊர்பகுதியில் மக்களின் வழிபாட்டை ஏற்று பழையாற்றில் நீராடி இரவு 2 மணிக்கு கோவில் வரும். இதன் பின் கொடி இறக்கப்படும்.

சிவராத்திரி விழா: சிவாலய ஓட்டகாரர்கள் பொன்மனை ஆலயம் வருகையில் தேரிமேடு பத்மநாயர் குடும்பத்தினர் தினைக் கஞ்சி, நல்லமிளகு சாறு தண்ணீர், சக்கா எரிசேரி தானமாய் கொடுப்பர்.

உசாத்துணை


✅Finalised Page