under review

முஞ்சிறை திருமலை மகாதேவர் ஆலயம்

From Tamil Wiki
முஞ்சிறை ஆலயம்

கன்னியாகுமரி மாவட்டம் முஞ்சிறை என்னும் ஊரில் உள்ள சிவ ஆலயம். மூலவர் பெயர் சூலபாணி. ஆலய வளாகத்தில் சிவன் மற்றும் விஷ்ணுவுக்குத் தனிக் கோவில்கள் உள்ளன. சிவாலய ஓட்டம் நிகழும் பன்னிரண்டு ஆலயங்களில் இது முதல் ஆலயம்.

இடம்

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டத்தில் உள்ள ஊர் முஞ்சிறை. நாகர்கோவில் திருவனந்தபுரம் தேசிய சாலையில் மார்த்தாண்டத்தில் இருந்து பிரிந்து தேங்காய்பட்டணம் செல்லும் சாலையில் 7 கி.மீ. தொலைவில் உள்ளது முஞ்சிறை. முஞ்சிறை மேல்நிலைப் பள்ளியின் எதிரே உள்ள சாலையில் 40 அடி உயர பாறை மேல் உள்ளது ஆலயம்.

மூலவர்

சிவன் கோவில் வாசல்

ஆலயத்தின் மூலவர் பெயர் சூலபாணி. கோவிலில் உள்ள முதல் ராஜேந்திர சோழனின் கல்வெட்டு மூலவரை சூலபாணி என்று குறிப்பிடுகிறது. மூலவர் லிங்க வடிவில் உள்ளார். சூலத்தைக் கையில் ஏந்தியவர் என்ற பொருளில் சூலபாணி என்று அழைக்கப்படுகிறார். பொ.யு. 1435 -ம் வருட காலத்திய கல்வெட்டு மூலவரை மகாதேவர் என்று குறிப்பிடுகிறது. பிற்கால கல்வெட்டுகளிலும் சூலபாணி என்ற பெயர் காணப்படவில்லை.

தொன்மம்

முஞ்சிறை திருமலை ஆலயம் குறித்து இரண்டு தொன்மக்கதைகள் வாய்மொழிக் கதைகளாக உள்ளன.

ராமாயண கதை: ராவணன் சீதையை கவர்ந்து செல்கையில் விமானம் பழுதடைந்து தரை இறங்கியது. சீதையை இங்கு சிறை வைத்தான் ராவணன். விமானம் பழுது நீக்கப்பட்ட பின்பு சீதையை கொண்டு சென்று அசோகவனத்தில் சிறை வைத்தான். சீதை முதலில் சிறை வைக்க பட்ட இடம் முஞ்சிறை என்றானது.

முருகன் கதை: பிரணவத்தின் பொருள் தெரியாததால் பிரம்மனை முருகன் சிறை பிடித்து வைத்த இடம் முஞ்சிறை என்றானது. அப்போது பிரம்மனின் முன் தோன்றிய வடிவம் தான் சூலபாணி ஆனது.

கோயில் அமைப்பு

கோயில் தரைமட்டத்தில் இருந்து 38 படிகளுக்கு மேல் பாறையில் உள்ளது.

கோவிலின் கிழக்கு வாசல் முன் அரங்கில் செம்பு கொடிமரம், பலிபீடம் மற்றும் ஐந்தடுக்கு பித்தளை விளக்கு ஆகியவை உள்ளன. முன் அரங்கு 5 தூண்கள் கொண்ட ஓட்டுக் கூரையால் ஆனது. கொடிமரத்தின் உச்சியில் நந்தி உருவம் உள்ளது.

வடமேற்கு வெளிப்பிராகாரத்தில் பரிவார தெய்வமாக அய்யப்பன் உள்ளார். சிறிய நாகர் சிற்பங்களும் உடன் உள்ளன. தென்மேற்கில் நாகர் பரிவார தெய்வமும் உள்ளது. பக்தர்கள் , பூசகர்கள் குளிக்க தனித்தனிக் குளங்கள் உள்ளன.

சுற்றி மதிலால் சூழ்ந்துள்ள ஒரு ஏக்கர் பரப்புள்ள ஆலய வளாகத்தில் சிவன் மற்றும் விஷ்ணு இருவருக்கும் கோவில்கள் உள்ளன.

கல் மண்டபம்: நான்கு தூண்கள் கொண்ட சிறிய கல் மண்டபம் தெற்கு வடக்காக உள்ளது. கிழக்கிலிருந்து சிவன் கோவிலுக்கும் விஷ்ணு கோவிலுக்கும் செல்ல இரண்டு பாதைகள் உள்ளன. இரண்டு பக்கங்களிலும் 22 தூண்கள் உள்ளன. மிகக் குறைவான சிற்பங்கள் மட்டுமே உள்ளன.

மகாதேவர் கோவில்: முன்புறத் தூண்கள் இரண்டும் சிங்க முகப்பு கொண்டவை. கருவறை, அர்த்தமண்டபம், நந்தி மண்டபம் என மூன்று பகுதிகளை கொண்டது. நந்தி மண்டபத்தின் மேற்கூரையில் வேலைப்பாடுள்ள சிற்பங்கள் உள்ளன. இங்கு நந்தி வடபுறம் ஒதுங்கி உள்ளது.

விஷ்ணு கோவில் வாசல்

விஷ்ணு கோவில்: கோவில் முன் பகுதியில் செப்புத் தகடுகள் வேய்ந்த கொடிமரம் உள்ளது. உச்சியில் கருடன் உருவம் உள்ளது. முகப்பு மண்டபத்தின் மேல் மகா விஷ்ணுவின் உருவமும் இருபுறமும் பூதேவியும் ஸ்ரீதேவியும் உள்ளனர். கோவிலின் எதிரே உள்ள ஓட்டுக்கூரை மண்டபத்தில் கருடன் நின்ற கோலத்தில் உள்ளார். கருவறை, அர்த்தமண்டபம் என இரண்டு பகுதிகள் கொண்டது.

இரு கோவில்களின் நடுவில் 14 தூண்கள் கொண்ட பூஜைகள் நடக்கும் நீண்ட அரங்கு உள்ளது.

கருவறைகள்

சிவன் மற்றும் விஷ்ணுவுக்கு என இரண்டு கருவறைகள் உள்ளன.

சிவன் கோவில் கருவறையில் மூலவர் சூலபாணி(மகாதேவர்) லிங்க வடிவில் உள்ளார். சிவலிங்கம் ஆவுடையின் மேல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மூலவருக்கு வெள்ளிக் கவசம் உண்டு.

விஷ்ணு கோவில் மூலவர் விஷ்ணுவின் கல் விக்கிரகம் 75 செ.மீ. உயரமுடையது. நான்கு கைகள் கொண்டது. மேல் கைகளில் இடப்புறம் சங்கும் வலப்புறம் சக்கரமும் உள்ளன. வலது கீழ் கை அபய முத்திரையுடனும் இடது கீழ் கை கதையுடனும் உள்ளது.

பூஜைகளும் விழாக்களும்

கேரள தாந்திரிக ஆகம முறைபடி பூஜைகள் நிகழும் ஆலயம். பொ.யு. 11-ம் நூற்றாண்டில் மலையாள பிராமணர்களின் நிர்வாகத்தில் இருந்தது என்பதற்கான கல்வெட்டு சான்று உள்ளது.

சிவன் , விஷ்ணு இருவருக்கும் தமிழ் மாதம் பங்குனி பூரட்டாதி நட்சத்திரத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. ஏழாம் நாள் மண்டகப்படி முஞ்சிறை மடத்திலும், எட்டாம் திருவிழா கமுகம் தோட்டம் கோவிலிலும் நடக்கிறது. ஒன்பதாம் நாள் வேட்டையும், பத்தாம் நாள் ஆறாட்டு நிகழ்ச்சியும் நடைபெறும். ஆறாட்டு கோனார் கோவிலில் நடைபெறும்.

தோரண வாயில்

வேட்டை நிகழ்ச்சி: வேட்டை பொருள்களாக கோழிக்குஞ்சு, இளநீர் வைக்கின்றனர். வேட்டை நடத்துபவர்(குருப்பு) கோழிகுஞ்சு சாகாதபடி மெதுவாக அம்பை வைப்பார் கோழிக்குஞ்சு வளர்ப்பதற்குக் கொண்டு செல்லப்படும். வேட்டை நடத்துவதற்க்கு 4 வேட்டை குருப்பு குடும்பங்கள் உள்ளன. ஸ்ரீபலியை ஒட்டி யானையில் சிவன், விஷ்ணு இருவருக்குமான ஐம்பொன்னால் ஆன விழாப் படிமங்கள் வலம் வரும்.

வரலாறு

கோவிலின் மிக பழைய கல்வெட்டு பொ.யு. 9--ம் நூற்றாண்டைச் சார்ந்தது. ஸ்ரீகோவிலை ஒட்டியுள்ள பிராகார பாறையில் கல்வெட்டு உள்ளதால் கருவறை பகுதி பொ.யு. 9-ம் நூற்றாண்டிற்கு முற்பட்டது என்று அ.கா. பெருமாள் கருதுகிறார். இக்காலத்தில் இக்கோவில் ஆய்மன்னர்கள் கட்டுப்பாட்டில் இருந்திருக்கலாம் என்பது அ.கா. பெருமாள் அவர்களின் யூகம்.

கோவிலில் கிடைத்த கல்வெட்டு ஆதாரங்கள் பொ.யு. 11-ம் நூற்றாண்டில் இக்கோவிலில் ஒரு சபை இருந்ததை குறிப்பிடுகிறது. இதனால் பிற்கால சோழர் காலத்தில் இக்கோவில் பெருங்கோவிலுக்குரிய இடத்தை அடைந்துள்ளதாக கொள்ளலாம் என்று அ.கா. பெருமாள் கூறுகிறார்.

பொ.யு. 11-ம் நூற்றாண்டுக்கு பிற்பட்ட கல்வெட்டுகள் மூலம் நம்பூதிரி பிராமணர்களின் செல்வாக்கு இருந்ததாக அறிய முடிகிறது.

கல்வெட்டுகள்

பொ.யு. 9-ம் நூற்றாண்டை சார்ந்த(T.A.S. Vol. VII p. 21). வட்டெழுத்தால் ஆன கல்வெட்டு பிராகார பாறையில் உள்ளது. பெரிய அம்பலமாக கோவில் இருந்ததை குறிப்பிடுகிறது. நிலக்கொடை வழங்கப்பட்ட தகவல்களும் உள்ளது.

பொ.யு. 11-ம் நூற்றாண்டை சார்ந்த கல்வெட்டு சேதமுற்ற நிலையில் உள்ளது(T.A.S. Vol. III p. 207). இது நிபந்த கல்வெட்டு. முஞ்சிறை திருமலை படரார் என்ற பெயர் வருகிறது. பொ.யு. 11-ம் நூற்றாண்டில் திருமலை என்று வழங்கப்பட்டதன் சான்றாக உள்ளது.

மீண்டும் படி எடுக்கையில்(த.நா.தொ.து. தொ. 6) கோவில் மகேஸ்வர ரட்சைக்காக திருமலை சபையார் முன் கொடுத்த நிபந்த செய்தி உள்ளது தெரியவந்தது.

பொ.யு. 11-ம் நூற்றாண்டை சார்ந்த மற்றுமொரு கல்வெட்டு(T.A.S. Vol. III p. 21) கோவிலின் பின்புறம் உள்ளது. கோவிலில் விளக்கெரிக்க நிபந்தம் அளித்த செய்தி உள்ளது.

பொ.யு. 13-ம் நூற்றாண்டு காலத்தை சார்ந்த சிதைந்த இரண்டு செப்பேடுகள்(T.A.S. Vol. III p. 207) கோவிலின் பின்புறம் உள்ள நம்பூதிரி மடத்தில் கிடைத்துள்ளன. செப்பேடு கோவிலுக்கு அளிக்கப்பட்ட நிபந்தம் குறித்து பேசுகிறது. உணவு வழங்கல் குறித்த சில செய்திகளும் உள்ளன.

பொ.யு. 1435-ஐ சேர்ந்த கல்வெட்டு கோவிலின் உள்பிராகாரத் தரையில் உள்ளது. இது கீழ்ப்பேரூர் வீரகேரள மார்த்தாண்டவர்மா காலத்தை சார்ந்தது. மார்த்தாண்ட வர்மா மகாதேவருக்கு நியதி ஊட்டு நடத்த நிலம் அளித்த செய்தி உள்ளது. ஆலப்புழை நாராயணன் சபையாரிடம் விளக்கெரிக்க 30 ஈழக்காசு கொடுத்த செய்தியும் உள்ளது.

முஞ்சிறை ஆலய குளம்

பொ.யு. 1770-ஐச் சார்ந்த மலையாள வட்டெழுத்து வடிவில் அமைந்த செப்பு பட்டயம்(T.A.S. Vol. I p. 421) கிடைத்துள்ளது. மடத்தில் நடந்த நிர்வாகச் சிக்கல்கள் மற்றும் மடத்து நிலங்கள் குறித்த செய்திகளும் உள்ளன.

பொ.யு. 1800-க்கு பிந்திய சில கல்வெட்டுகள் தூண் அமைத்தவர்கள் செப்பனிட்டவர்கள் பற்றிய விவரங்களைக் கொண்டுள்ளன.

உசாத்துணை


✅Finalised Page