under review

திருப்பன்றிக்கோடு மகாதேவர் ஆலயம்

From Tamil Wiki
திருப்பன்றிக்கோடு மகாதேவர் ஆலயம்

கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடி பஞ்சாயத்தின் கீழ் உள்ளது திருப்பன்றிக்கோடு ஆலயம். மூலவர் மகாதேவர் என்று அறியப்படும் பக்தவத்சலர். லிங்க வடிவில் உள்ளார். சிவாலய ஓட்டம் நிகழும் பன்னிரு சிவாலயங்களில் பதினொன்றாவது ஆலயம்.

இடம்

கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டம் பள்ளியாடி பஞ்சாயத்தின் கீழ் வரும் குடியிருப்புகள் குறைவாக உள்ள பகுதியில் ஆலயம் அமைந்துள்ளது. நாகர்கோவில் திருவனந்தபுரம் தேசிய தெடுஞ்சாலையில் இரவிபுதூர்கடையிலுருந்து பிரியும் சாலை வளியாக பள்ளியாடி உள்ளது. பள்ளியாடியிலிருந்து கோவிலுக்குச் செல்லும் பாதை தெற்கு வாசலில் சென்று சேரும், அங்கிருந்து தென்கிழக்காய்த் திரும்பி கிழக்கு வாசலை அடையலாம்.

மூலவர்

மூலவரான சிவன் மகாதேவர் என்று பரவலாக அறியப்படும் பக்தவத்சலர். ஆவணங்களில் பக்தவத்சலர் என்னும் பெயரே உள்ளது. மூலவர் ஆவுடையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்க வடிவத்தில் உள்ளார். லிங்கத்தின் வலது பக்கம் சற்று சிதைந்துள்ளது.

தொன்மம்

திருப்பன்றிக்கோடு ஆலயத்திற்கு இரண்டு தல புராணங்கள் வாய்மொழி கதையாக உள்ளன.

திருப்பன்றிக்கோடு மகாதேவர் ஆலயம்

வேடன் கதை: பாசுபதாஸ்திரம் வேண்டி அர்ஜுனன் இமயமலையில் தவம் செய்கிறான். அப்போது பன்றியை வேடன் ஒருவன் வேடத்தியுடன் துரத்தி செல்கிறான். அர்ஜுனன் தன் தவத்திற்கு இடையூறாக ஓடிய பன்றியின் மீது அம்பெய்தான் அதே நேரத்தில் வேடனும் அம்பெய்தான். பன்றிக்காக வேடனும் அர்ஜுனனும் சண்டையிடுகிறார்கள். சண்டையில் அர்ஜுனன் தோற்றான். அந்நேரத்தில் பன்றி நந்தியாகவும் வேடனும் வேடத்தியும் சிவனும் பார்வதியுமாக உருமாறினர். அர்ஜுனன் சிவன் தனக்கு அருள் புரியவே இந்த நாடகத்தை நடத்தினான் என்று உண்ர்கிறான். நந்தி பன்றியாக மாறிய இடம் திருப்பன்றிக்கோடு ஆனது.

தசாவராத கதை: இரணியன் பூமியை சுருட்டி பாதாளத்தில் ஒளித்து வைத்தான். திருமால் பன்றியாக(வராகம்) மாறி பாதாள உலகுக்குச் சென்று பூமியை மீட்டு வந்தார். பன்றியின் மூர்க்கம் அடங்கவில்லை. சிவன் வராகத்தின்(பன்றி) கொம்பை ஒடித்து அடக்கினார். சிவன் பன்றியின் கொம்பை(கோடு) ஒடித்ததால் பன்றிக்கோடு என்றானது.

திருபன்றிக்கோடு கோவில் உருவான வாய்மொழி கதியும் உண்டு. முன்பு இப்பகுதி காடாக இருந்தது. பூசகர் கூட வரத் தயங்கிய இங்கே சிவன் கூரையின்றி இருந்தான். ஒரு நாள் சிவன் வேணாட்டு அரசன் கனவில் தோன்றி தனக்கு கோவில் அமைக்க வேண்டினார். அரசன் தான் கனவில் கண்ட இடத்தை அடையாளம் கண்டு கோவிலைக் கட்டினான்.

கோவில் அமைப்பு

சுற்றிலும் மதிலுடன் கூடிய ஆலய வளாகத்தில் கோவில் கிழக்கு நோக்கி உள்ளது. வாசலின் எதிரே செப்பு கொடிமரமும் பலிபீடமும் உள்ளன. முன்வாசலை அடுத்து நீண்ட நடுவில் வழிபாதையுடன் கூடிய நீண்ட அரங்கு உள்ளது.

கிழக்கு திருச்சுற்று மண்டபம் ஏழு தூண்களை கொண்டது. தெற்கு திருச்சுற்று மண்டபத்தில் வெளியே செல்ல வாசலும் தென்மேற்கில் கணபதி கோவிலும் உள்ளன. மேற்கு திருச்சுற்று மண்டபம் 8 தூண்களுடன் உள்ளது. வடக்கு திருச்சுற்று மண்டபம் 9 தூண்ட்களை கொண்டது. நடுவில் வாசலும் கிழக்கில் கிணறும் உள்ளன.

அம்மன் கோவில்: மேற்கு திருச்சுற்று மண்டபத்தின் வடமேற்கில் அம்மன் கோவில் உள்ளது. பார்வதியின் வடிவமாய் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அம்மன் விக்கிரகம் நின்ற கோலத்தில் திரிபங்க வடிவில் உள்ளது. ஒரு கையில் தாமரையுடனும் இன்னொரு கை அபய முத்திரை காட்டியபடியும் உள்ளன.

திருப்பன்றிக்கோடு மகாதேவர் ஆலயம்

ஓட்டு கூரையுடன் கூடிய நமஸ்கார மண்டபம் 14 தூண்களை கொண்டது. நடுவே நந்தி சிற்பம் உள்ளது.

ஸ்ரீகோவில்: 120 செ.மீ. உயரத்தில் உள்ள கருங்கல் தளத்தில் ஸ்ரீகோவில் உள்ளது. கூம்புவடிவ தொங்கு கூரையுடன் வட்ட வடிவில் உள்ளது. கூரை இடைவிட்ட இரண்டு தட்டுகளைக் கொண்டது. மேல்கூரையில் கிழக்கில் இந்திரன், தெற்கில் தட்சணாமூர்த்தி, மேற்கில் நரசிம்மன், வடக்கில் பிரம்ம்மா ஆகியோரின் மரச்சிற்பங்கள் உள்ளன. மேல்கூரை 5 செ.மீ. கனமுள்ள தேக்குப் பலகையால் வேயப்பட்டு செம்புத் தகட்டால் பொதியப்பட்டுள்ளது. கருவறையின் உட்பகுதி சதுர விடிவிலானது.

பரிவார தெய்வங்கள்: விநாயகர், அய்யப்பன், வள்ளி, தெய்வானை, நாகர்.

வரலாறு

இக்கோவிலில் கிடைத்துள்ள கல்வெட்டு ஆதாரங்களைக் கொண்டு ஆலயம் 13-ம் நூற்றாண்டுக்கு முற்பட்டது எனக் கொள்ளப்படுகிறது. கல்வெட்டுகள் திருச்சுற்று மண்டபத்தில் காணப்படுவதால் இன்றைய அமைப்பும் அக்காலத்தைச் சார்ந்ததாக கொள்ளலாம்.

கல்வெட்டுகள்
  • மலையாள ஆண்டு 451(பொ.யு. 1276) தமிழில் எழுதப்பட்ட கல்வெட்டு திருச்சுற்று மண்டபத்தின் கிழக்குச் சுவரில் உள்ளது. ஒரு பெண் பொன்னாக நிபந்தம் அளித்து கோவிலுக்கு நந்தா விளக்கு அமைத்து எரிக்க ஏற்பாடு செய்துள்ள செய்தி கல்வெட்டில் உள்ளது.
  • பொ.யு. 12-ம் நூற்றாண்டைச் சார்ந்த நிபந்த கல்வெட்டு சிதைந்த நிலையில் திருச்சுற்று மண்டபத்தின் கிழக்குச் சுவரில் உள்ளது.
  • பொ.யு. 14-ம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டு பலிபீடத்தில் உள்ளது. இதில் ஸ்ரீசுறுக்கி என்பவரின் மரபில் வந்த ஒருவர் பலிபீடத்தை அமைத்தாக செய்தி உள்ளது.

பூஜைகளும் விழாக்களும்

திருப்பன்றிக்கோடு மகாதேவர் ஆலயம்

அஷ்டமி, மகாசிவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, சங்கடஹரசதுர்த்தி, திருவாதிரை நாட்களில் சிறப்பு வழிபாடு உண்டு.

மாசி மாதம் அஷ்டமியில் குன்னம்பிறை சாஸ்தா கோவிலில் இருந்து கபள கும்பத்தை யானை மேல் கொண்டு வந்து சிவனுக்கு அபிஷேகம் செய்யபடுகிறது. அம்மன் கோவிலில் ஆடிமாதக் கடைசி செவ்வாய் அன்று சிறப்பு நிகழ்ச்சி உண்டு.

கார்த்திகை மாதம் சதுர்தசி தேய்பிறையில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி அஷ்டமியில் ஆறாட்டு விழாவுடன் முடிவுறும்.

உசாத்துணை


✅Finalised Page