under review

திற்பரப்பு மகாதேவர் ஆலயம்

From Tamil Wiki
திற்பரப்பு ஆலயம்

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு என்னும் ஊரில் உள்ள சிவ ஆலயம். மூலவர் பெயர் வீரபத்திரர். சிவாலய ஓட்டம் நிகழும் பன்னிரண்டு ஆலயங்களில் இது மூன்றாவது ஆலயம்.

இடம்

கோதை ஆற்றின் கரையில் திற்பரப்பு இருக்கிறது. பேச்சிப்பாறை அணையிலிருந்து 13 கி.மீ. ஓடி வந்து இங்கு 15 மீ உயரத்திலிருந்து அருவியாக விழுகிறது. மார்த்தாண்டத்திலிருந்து 18 கி.மீ. வடக்கில் திருவட்டாறு – களியல் சாலையில் உள்ளது. கோதை ஆற்றின் கரையில் அருவிக்கு தெற்கில் ஆலயம் உள்ளது.

பெயர்

ஸ்ரீவிலாசம் என்னும் சமஸ்கிருதச் சொல்லில் இருந்து திற்பரப்பு என்னும் சொல் வந்ததாக கூறுகின்றனர். ஸ்ரீ – திரு; விசாலம் – பரப்பு. மனதிற்கு ரம்யத்தை தரும் இடம் என்பது பொருள். இது மலையாள இலக்கிய ஆசிரியர்கள் தரும் விளக்கம்.

மூலவர்

ஆலய வாசல்

கோவிலின் மூலவர் வீரபத்திரர் லிங்க வடிவில் உள்ளார். ஜடாதரர் என்றும் மகாதேவர் என்றும் அழைக்கபடுகிறார். மூலவர் வழக்கத்துக்கு மாறாக மேற்கு நோக்கி இருக்கிறார். நந்தி மூலவருக்கு நேர் எதிரில் அமராமல் சற்று விலகி உள்ளது.

தொன்மம்

திற்பரப்பு சிவன் கோவிலுக்கு எழுத்து வடிவில் தலபுராணம் இல்லை. சிவ புராணம் சார்ந்த வாய்மொழிக் கதையே உள்ளது.

சிவனின் பேச்சை மதிக்காமல் பார்வதி தட்சனின் யாகத்துக்கு செல்கிறாள். சிவன் தனது அம்சமான வீரபத்திரனை அனுப்புகிறான். தட்சனின் யாகத்தை அழித்து ஆவேசமுடன் இருக்கும் வீரபத்திரன் அமைதியடைய வேண்டி நதியை நோக்கி அமர்ந்து தியானம் செய்கிறான். காளியும் உடன் வந்து தியானத்தில் அமருகிறாள்.

தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பாயும் நதியை பார்க்க மேற்கு நோக்கி அமர்ந்து தியானம் செய்கிறார் வீரபத்திரர். மூலவர் மேற்கு நோக்கி இருப்பதற்கு இந்த தொன்மமே காரணமாக சொல்லப்படுகிறது. இத்தொன்மபடி நந்தி நதியை மறைக்காமல் இருக்கவே சற்று விலகி இருக்கிறது.

கோயில் அமைப்பு

திற்பரப்பு சிவன் கோவில் இரண்டு ஏக்கர் பரப்புள்ள ஆலய வளாகத்தில் உள்ளது. நான்குபுறமும் 4.50 மீ கருங்கல் மதிலால் சூழ்ந்துள்ளது. நான்கு புறமும் வாசல்கள் உண்டு. மேற்கு வாசலில் மணிமண்டபம் உள்ளது.

சாஸ்தா கோவில்: மேற்கு பிராகாரதில் 1995-ல் நிறுவப்பட்ட 16 மீ. உயரமுள்ள செப்புக் கொடிமரம் உள்ளது. தென்மேற்கில் சிறிய சாஸ்தா கோவில் உள்ளது. சாஸ்தா பூரணை மற்றும் புஷ்கலையுடன் சுகாசனத்தில் உள்ளார்.

கிருஷ்ணன் கோவில்: இப்பிராகாரத்தில் நாகர் சிற்பங்கள், கிருஷ்ணன் கோயில், முருகன் கோயில், மணமேடை ஆகியவை உள்ளன. கிருஷ்ணன் கோவில் கிழக்கு பார்த்து உள்ளது. மூலவர் கிருஷ்ணன் கையில் வெண்ணையுடன் நின்ற கோலத்தில் உள்ளார். எதிரில் முருகன் கோயில் உள்ளது.

கிழக்கு வெளி பிராகாரதின் வாசலில் 8 தூண்களை கொண்ட மண்டபம் உள்ளது. இவ்வாசல் நிரந்தரமாக அடைக்கப்பட்டுள்ளது.

பரிவார கோவில்: தெற்குப் பிராகாரத்தில் ஆஞ்சநேயர் பெயரில் பரிவார கோவில் உள்ளது. இக்கோயிலின் பொதிகை கட்டுமானத்தை கொண்டு இது 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்று அ.கா. பெருமாள் யூகிக்கிறார். இக்கோவிலில் சுற்றிலும் 12 தூண்களை கொண்ட சிறு உட்பிராகார சுற்று மண்டபம் உள்ளது. இக்கோவிலின் மூலவர் வடிவமற்றவர். இது சிவனாக இருக்கலாம் என்று அ.கா. பெருமாள் கூறுகிறார்.

அருவி மண்டபம்

தெற்கு பிராகாரத்தில் பத்திரகாளி கோயில், ஊட்டுப்புரை, ஒடுக்குப்புரை, சமயலறை ஆகியவை உள்ளன.

முன்மண்டபம்: மேற்கு வெளிப்பிராகாரத்தில் கிழக்கு நோக்கி ஜுரதேவர் ஆலயம் உள்ளது. முன்மண்டபம் ஒன்று இருபுறம் பெரிய திண்ணைகளுடன் 20 தூண்களுடன் உள்ளது. தூண்களில் சிற்பங்கள் உள்ளன. முன்மண்டபத்தின் வழிப்பாதையில் பலிபீடமும் வாடாவிளக்கும் உள்ளன. தென்புற திண்ணையில் கிழக்கு நோக்கி பார்வதி கோயில் உள்ளது. வடக்குத் திண்ணையில் விநாயகர் கோயிலும் விளக்கு மண்டபம் செல்ல திட்டிவாசலும் உள்ளன.

வாத்திய மண்டபம்: முன்மண்டபத்தை அடுத்து வாத்திய மண்டபமும் இரண்டு பக்கங்களிலும் சிறு மண்டபங்களும் உள்ளன. இந்த மண்டப தூண்களில் சைவ மரபை ஒட்டிய வேலைப்பாடில்லாத துவாரபாலகர் சிற்பங்கள் உள்ளன. மேலும் கிருஷ்ணன், ஆஞ்சநேயர், விநாயகர், நின்ற கோலத்தில் தேவி சிற்பங்களும் உள்ளன.

பூஜா மண்டபம்: வாத்திய மண்டபத்தை அடுத்து 16 தூண்கள் கொண்ட பூஜா மண்டபம் உள்ளது. பூஜா மண்டபம் கேரள ஓட்டுப் பாணியால் ஆனது. மேல்கூரையில் மரத்தாலான நவக்கிரக உருவங்கள் உள்ளன. இதன் எதிரே கருவறை உள்ளது.

திருச்சுற்று மண்டபம்: பூஜா மண்டபம் மற்றும் கருவறையை சுற்றி 23 தூண்களை கொண்ட திருச்சுற்று மண்டபம் உள்ளது. மண்டபத்தின் தென்பகுதியில் இருந்து வெளிபிராகாரம் செல்ல திட்டிவாசல் உள்ளது. மண்டபத்தின் பிறபகுதிகளில் சிறிய அறைகள் உள்ளன. தென்மேற்கில் உள்ள ஒரு அறையில் அருவி அருகே உள்ள குகைக்கு செல்லும் பாதை உள்ளது.

நந்தி: திருச்சுற்று மண்டபத்திற்கும் பூஜா மண்டபத்திற்கும் தரைமட்ட அளவில் நந்தி உள்ளது.

ஸ்ரீகோவில்: ஸ்ரீகோவில் வட்ட வடிவில் உள்ளது. கூம்பு வடிவ விமானம் செப்புத்தகடுகளால் போர்த்தப்பட்டுள்ளது. விமானத்தின் உட்புறம் செவ்வக வடிவில் உள்ளது. கூரையில் மூன்று கும்பங்கள் உள்ளன. 13 நாக சிற்பங்கள் காணப்படுகின்றன.

பூஜைகளும் விழாக்களும்

இக்கோவிலில் நிர்மால்ய தரிசனம், உஷா பூஜை, உச்சிகால பூஜை, சாயரட்சை, அத்தாழ பூஜைகள் உண்டு. மேலும் சிறப்பு பூஜைகளும் சிறப்பு சடங்குகளும் உண்டு.

இக்கோவிலின் திருவிழா பங்குனி மாதம் பூரட்டாதி நட்சத்திரத்தில் கொடிஏற்றத்துடன் தொடங்கி பத்து நாட்கள் நடைபெறும். மூன்றாம் திருவிழாவில் கலச பூஜையும் முளையடி பூஜையும் நிகழும். ஆறாம் திருவிழாவில் வட்டதீபம் நிகழ்ச்சியும் இரவில் கதகளியும் நடக்கும். எட்டாம் நாள் தாரை பூஜையும் ஒன்பதாம் நாள் பன்றி வேட்டையும் நடைபெறும். இவ்விருநாட்களில் மேள தாளாங்களுடன் யானை ஊர்வலம் உண்டு. பத்தாம் நாள் ஆறாட்டு நிகழ்ச்சி அரவங்காடு காணிக்காரர்கள் மற்றும் மலையர்களின் பங்களிப்புடன் நடைபெறும்.

ஆறாட்டு விழா

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம் களியல் பஞ்சாயத்துக்குட்பட்ட கிராமம் அரவங்காடு. இங்கு ஊர் கோவிலாக சாஸ்தா கோவில் உள்ளது. இக்கோவிலில் பூஜை செய்யும் உரிமை காணிகாரர்களுக்கும் மலையர்களுக்கும் மட்டுமே உரியது.

அரவங்காடு காணிக்காரர்கள் மற்றும் மலையர்களின் வருகையே திற்பரப்பு மகாதேவர் கோவில் ஆறாட்டு விழாவின் முக்கிய நிகழ்ச்சி. விழா அன்று காலை முதல் காணிக்காரர்களும் மலையர்களும் திற்பரப்பு வர ஆரம்பித்து விடுவார்கள்.ஊர்வலத்தில் தர்மசாஸ்தாவின் அமர்ந்த கோல செம்பு விக்கிரகம் ஒன்றை கோவில் பூசகர் தலைமேல் சுமந்து வருவார். யாத்திரைக் காரர்களுக்கு ஊர் மக்கள் இளநீர் கொடுத்து உபசரிப்பர்.

ஊர்வலம் சுமார் பன்னிரண்டு மணியளவில் நதியின் அக்கரை வந்துவிடும். சுமார் ஒரு மணி அளவில் தலைமை பூசகர் விக்கிரகத்தை தலையில் தூக்கி ஆவேசமாய் ஆடியபடி நதியின் இக்கரைக்கு வருவார். மகாதேவர் கோவில் எதிரே உள்ள இசக்கி கோவிலுக்கு வந்து நிற்பார். தொன்மப்படி சாஸ்தா ஒடுக்கப்பட்டவர் ஒருவர் தோட்டதில் இளநீர் குடித்ததால் அவர் ஆலயத்தின் உள்ளே நுழைய அனுமதி இல்லை.

சாஸ்தாவை சுமந்து கொண்டிருக்கும் சாமியாடி பூசகர் இசக்கி கோவிலின் கல்விளக்கை ஒருமுறை சுற்றி வந்து மறுபடியும் நதியின் அக்கரைக்கு ஓடுவார். ஊர்வலத்தில் வந்தவர்களும் உடன் ஓடுவர். அக்கரையில் சிறிது அமர்ந்து கொள்வார். மறுபடி அருள் வருகையில் சாஸ்தாவைத் தரையில் வைத்து ஆற்றில் குதிப்பார். உடன் இருப்பவர்கள் அவரை பிடித்து வெளியில் கொண்டு வருவர். மகாதேவர் கோவில் சார்பில் ஒரு தட்டில் பூஜை பொருள்களை வைத்து அவரிடம் கொடுப்பார்கள்.

வரலாறு

திற்பரப்பு ஆலயத்தின் பழமை குறித்தோ கட்டுமானம் குறித்தோ அறிய குறைவான சான்றுகளே கிடைத்துள்ளன.

பொ.யு. 9-ம் நூற்றாண்டு செப்பேடு சிவனைப் பாராட்டாக சொல்கிறது. இதனால் இங்கு மகாதேவர் வழிபடு தெய்வமாக இக்காலத்தில் இருந்திருக்கிறார் என்று தெரிகிறது.

பொ.யு. 15 -ம் நூற்றாண்டுக்கு பிற்பட்ட காலக்கட்டத்தில் இக்கோவில் கட்டுமானம் நிகழ்ந்திருக்கலாம் என்று அ.கா. பெருமாள் சிற்பங்கள் மற்றும் மண்டபங்களைக் கொண்டு ஊகிக்கிறார்.

கிடைத்துள்ள கல்வெட்டு ஆதாரங்களின் படி கோவில் கட்டுமானம் பொ.யு. 9 -ம் நூற்றாண்டில் தொடங்கி பொ.யு. 19-ம் தூற்றாண்டு வரை நடந்துள்ளது. பெரும்பாலான கட்டுமானங்கள் பொ.யு. 16, 17-ம் நூற்றாண்டுகளில் நடந்துள்ளது என அ.கா. பெருமாள் சொல்கிறார்.

கல்வெட்டுகள்

பொ.யு. 9-ம் நூற்றாண்டை சார்ந்த இரண்டு செப்புப் பட்டயங்கள்(T.A.S. Vol. I p.291) கோவிலில் இருந்து கிடைத்துள்ளன. இரண்டும் ஆய் அரசனான கருந்தடக்கனின் காலத்தவை. பாண்டிய பேரரசுக்கும் ஆய் பேரரசுக்கும் இடயே இருந்த அரசியல் தொடர்பை இவை வெளிப்படுத்துகின்றன. இந்த செப்பேடுகள் வழி திற்பரப்பு ஆய் பேரரசின் ஆட்சியில் இருந்ததாக கொள்ளலாம் என்று அ.கா. பெருமாள் சொல்கிறார்.

இவை நிபந்த செப்பேடுகள். முதல் பகுதி சமஸ்கிருதத்திலும் இரண்டாம் பகுதி தமிழிலும் உள்ளன. இதில் கடிகை பட்டிணத்து உதார வீரன்னாயின கோரகந்கேந்தனின் நிலம் பற்றிய செய்தி உள்ளது.

பொ.யு. 1232-ம் ஆண்டின் தமிழ் வட்டெழுத்தால் ஆன கல்வெட்டு(T.A.S. Vol. VI p. 74) கோவிலின் வடப்புற சுவரில் உள்ளது. மதுரைவாசி இரவி ஜடாதரன் கோவிலுக்கு விளக்கு நிபந்தமாக அளித்த செய்தி உள்ளது. இதனால் இக்கோவில் இக்காலத்தில் வழிபாட்டு தலமாக இருந்தது தெரிகிறது.

பொ.யு. 1469-ம் ஆண்டின் தமிழ் வட்டெழுத்தால் ஆன கல்வெட்டு(T.A.S. Vol. VI p. 76) கோவிலின் பிராகார தூண் ஒன்றில் உள்ளது. நிபந்தம் அளித்தவர்களின் பெயர்கள் உள்ளன. இக்கல்வெட்டில் தான் திற்பரப்பு என்னும் பெயர் முதலில் வருகிறது.

பொ.யு. 12, 13-ம் நூற்றாண்டை சார்ந்தது என்று கணிக்கப்படும் சிதைந்து போன கல்வெட்டு(த.நா.தொ.து. தொ. 4 ப. 109) ஒன்று சாஸ்தா கோவிலின் முகப்பு இடது பக்க சுவரில் உள்ளது.

1489-ம் ஆண்டின் தமிழ் கல்வெட்டு பூஜா மண்டப தூண் ஒன்றில் உள்ளது. கட்டுமான மற்றும் நிபந்த செய்தி உள்ளது.

பொ.யு. 1598-ம் ஆண்டின் சிதைந்த கல்வெட்டு(த.நா.தொ.து. தொ. 4 ப. 108) கோவில் கருவறையின் முன் பக்கத் தூணில் உள்ளது.

பொ.யு. 17-ம் நூற்றாண்டை சார்ந்த சமஸ்கிருத மொழியில் தேவநாகரி லிபியில் எழுதப்பட்ட கல்வெட்டு(T.A.S. Vol. IV p. 78) கோவிலின் தென்புற பாறையில் உள்ளது. இது "வெற்றியின் செல்வத்தையும் நோயற்ற வாழ்வையும் அளிக்கின்ற இறைவன் இக்கோவிலில் பூரணமாய் அமர்ந்திருக்கிறான்" என கூறும்.

பொ.யு. 17-ம் நூற்றாண்டைச் சார்ந்த சமஸ்கிருத மொழியில் தேவநாகரி லிபியில் எழுதப்பட்ட கல்வெட்டு(T.A.S. Vol. IV p. 78) அருவியின் அருகே பாறை ஒன்றில் உள்ளது. இது "தவமுனிவர்களை ஆதரிப்பவனும் சம்புவை வணங்குபவரும் ஆன வஞ்சிநாட்டு மன்னன் பசு மடம் எடுத்ததையும் இவன் பிராமணர்களின் பாதுகாப்பாளனாகவும் வேதங்களைப் புரப்பவனாகவும் இருக்கின்றான்" எனக் கூறும்.

விசாகம் திருநாள் ராமவர்மாவின் (1880 – 1885) மலையாள மொழியில் மலையாள லிபியில் எழுதப்பட்ட கல்வெட்டு அருவி அருகே உள்ள மண்டபத்தில் உள்ளது. இக்கல்வெட்டு மண்டபத்தில் உள்ள சிற்பம் விசாகம் திருநாளுடையது என்றும் மண்டபத்தை கட்டியது இவர் தான் என்றும் கோவிலுக்கு இவர் அடிக்கடி வருவார் என்றும் கூறுகிறது.

பொ.யு. 1884 -ம் ஆண்டு விசாகத் திருநாள் ராமவர்மா சிறு மண்டபம் ஒன்றை கட்டியதை கூறும் கல்வெட்டு(T.A.S. Vol. VI p. 77) கோவில் பிராகாரத்தில் உள்ளது.

உசாத்துணை


✅Finalised Page