under review

திருவிடைக்கோடு மகாதேவர் ஆலயம்

From Tamil Wiki
திருவிடைக்கோடு ஆலயம்

கன்னியாகுமரி மவட்டம் வில்லுக்குறி பஞ்சாயத்தில் திருவிடைக்கோடு கிராமத்தில் உள்ள சிவ ஆலயம். மூலவர் மகாதேவர் என்று அழைக்கப்படும் சடையப்பர். சிவாலய ஓட்டம் நிகழும் பன்னிரு சிவாலயங்களில் ஒன்பதாவது ஆலயம்.

இடம்

கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டம் வில்லுக்குறி பஞ்சாயத்தில் உள்ளது திருவிடைக்கோடு. திருவிடைக்கோட்டில் வில்லுக்குறி கால்வாயை ஒட்டி ஆலயம் உள்ளது. நாகர்கோவில் திருவனந்தபுரம் சாலையில் வில்லுக்குறியிலிருந்து கால்வாயை ஒட்டி கிழக்கே சுமார் ஒரு கிலோ தொலைவில் உள்ளது.

மூலவர்

திருவிடைக்கோடு ஆலய மூலவர் மகாதேவர் என்று பரவலாக அறியப்பட்டாலும் ஆதாரபூர்வமான பெயர் சடையப்பர். மூலவர் ஆவுடையில் பிரதிஷ்டை செய்யபட்டு லிங்க வடிவில் உள்ளார். லிங்கத்தின் உயரம் இரண்டு அடி. லிங்கத்தின் தலைப்பகுதியில் வெட்டப்பட்டதன் அடையாளம் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

தொன்மம்

இடைகாடர் கதை:

இடைகாடர் சமாதி

இடைக்காடன் என்னும் இடையர் ஜாதி இளைஞன் பொதிய மலை அடிவாரத்தில் ஆடு மேய்த்து கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த நவசித்தர்களில் ஒருவர் குடிக்கத் தண்ணீர்கேட்க இடையன் ஆட்டுபால் கொடுத்தான். சித்தர் நன்றிக் கடனாக சித்துகளை சொல்லிகொடுத்தார்.

சித்தரான இடைக்காடர் பஞ்சம் வரப்போவதை முன்பறிந்தார். தன் ஆடுகளுக்கு எருக்கிலை தின்னப் பழக்கினார். குறுவரகு என்னும் தானியத்தை மண்ணுடன் கலந்து வீடு கட்டிக்கொண்டார். மழையில்லாமல் பஞ்சம் வந்தபோது ஆடுகள் எருக்கை தின்று வாழ்ந்தன. எருக்கை தின்று ஆடுகளுக்கு அரிப்பு வந்து இடைக்காடர் கட்டிய வீட்டில் உடம்பை தேய்த்தன. சுவரிலிருந்து விழுந்த குறுவரகினை உண்டு வாழ்ந்தார் இடைக்காடர்.

நவக்கிரக அதிபதிகள் பெருபஞ்சத்தில் உயிர் வாழும் ஆடுகளையும் இடைக்காடரையும் பார்க்க வந்தனர். அவர்களை உபசரித்து குறுவரகு கலந்த ஆட்டு பாலைக் குடிக்கக் கொடுத்தார். பாலைக் குடித்த நவக்கிரகங்கள் மயங்கின. இடைக்காடர் அவற்றை மாற்றிக் கிடத்தியதும் மழை பெய்தது.

திருவிடைக்கோடு என்னும் பெயரை பதினெண் சித்தர்களில் ஒருவரான இடைக்காடருடன் இணைத்த இந்த தொன்மம் வாய்மொழிக் கதையாக உள்ளது. திருவிடைக்கோடு ஊரில் உள்ள மலை இடைக்காடர் மலை என்றும் குளம் இடைக்காடர் குளம் என்றும் அழைக்கப்படுகிறது. ஊர் சாஸ்தா கோவில் இடைக்காடர் சமாதி என்னும் வாய்மொழிச் செய்தி உண்டு.

சடையப்பர் கதை:

தோரண வாயில், வில்லுகுறி

திருவிடைக்கோடு பகுதி குடியிருப்புகள் இன்றி காடான போது பறையர் சாதியை சார்ந்த ஒரு சிறுவனும் இஸ்லாமிய சிறுவனும் அவ்வழியே பழம் பறிக்க வந்தனர். அப்போது வில்வ மரத்தில் கீழ் சுயம்புவாக நின்ற சிவலிங்கத்தைக் கண்டனர். ஊர்மக்கள் சிவலிங்கத்திற்கு சிறிய கோவில் கட்டினர். சிவலிங்கத்தின் உச்சிப்பகுதி சடைபோல் தெரிந்ததால் சடையப்பர் என்று பெயரிட்டு வழிபட்டனர்.

சடையப்பர் கோவிலுக்கும் பறையர் மற்றும் இஸ்லாமிய சமூகங்களுக்கும் இடையே சடங்கு ரீதியான தொடர்பு உள்ளது. அதனால் இக்கதை வாய்மொழிக் கதையெனினும் முக்கியமானதாகிறது.

நந்தி கதை:

திருவிடைக்கோடு மகாதேவரின் ஸ்ரீகோவில் கட்டப்பட்டபோது சிவலிங்கம், ஆவுடை, நந்தி ஆகிய மூன்றையும் சிற்பிகள் செதுக்கிக் கொண்டிருந்தனர். சிவலிங்கம் மற்றும் ஆவுடை செதுக்கப்பட்டு முடிந்து நந்தி சிற்பம் பூரணமடைந்தபோது நந்தி உக்கிரமாய் எழுந்ததன் அடையாளம் தெரிந்தது. சிற்பியால் நந்தியை கட்டுபடுத்த முடியவில்லை. ஊருக்குக் கெடுதல் ஏற்படும் என்று பெரியவர்கள் சொல்ல ஊரில் அதன் அறிகுறிகள் தெரிந்தன.

சிற்பி வேறு வழியின்றி நந்தியின் கொம்பை உடைத்து திமிலை பாதியாக வெட்டினார். நந்தியின் உக்கிரம் கொஞ்சம் தணிந்த சமயம் அவசரமாக மூலவரை ஆவுடையில் பிரதிஷ்டை செய்து எதிரே நந்தியை வைத்தனர். நந்தியின் உக்கிரம் முழுமையாக அடங்கியது.

கோவில் நந்தியின் கொம்பும் திமிலும் உடைந்திருப்பதன் காரணமாக இக்கதை சொல்லப்படுகிறது.

கோவில் அமைப்பு

திருவிடைக்கோடு ஆலயம்

திருவிடைக்கோடு ஆலய வளகம் சுமார் 2 ஏக்கர் பரப்பு கொண்டது.திருவிடைக்கோடு ஆலயத்தின் முக்கிய வாசலாக வடக்கு வாசல் உள்ளது. வடக்கு வாசல் ஓட்டுக் கூரையுடன் கூடிய இரண்டு திண்ணைகளுடன் உள்ளது.

வெளிப்பிராகாரம்:

வடக்கு வெளிப்பிராகாரத்தில் வெளிமதிலை ஒட்டி கோவில் அலுவலக அறையும் வேறு சிறு அறைகளும் உள்ளன. கிழக்கு மதிலில் குளத்துக்குச் செல்ல வாசல் உண்டு. வடகிழக்கில் கிணறும் சிறுமண்டபமும் உள்ளன. மண்டப சுவரில் உள்ள துவாரங்கள் வழி சாஸ்தாவின் ஸ்ரீகோவிலை பார்க்கலாம்.

மூலவர் கிழக்கு நோக்கி இருந்தும் கிழக்கில் வாசல் இல்லை. தென்கிழக்கிலும் வடகிழக்கிலும் வாசல்கள் உள்ளன. இவ்வாசல்கள் வழி சாஸ்தா கோவில் சென்று மூல கோவிலை அடைய முடியும். தெற்கு வெளிப்பிராகாரத்தின் நடுவில் உட்கோவில் சுவரை ஒட்டி கிடக்கும் நீண்ட பாறையில் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன.

தென்மேற்கு மூலையில் ஆல், அரசு, வேம்பு இணைந்து ஒரு மரமாக ஊள்ளது. மரம் நிற்கும் மேடையில் நாகர், சாஸ்தா, விநாயகர் சிற்பங்கள் உள்ளன. சாஸ்தா யோக பட்டத்துடன் ஒரு கையில் செண்டு ஏந்தி உட்குடிகாசனத்தில் அமர்ந்திருக்கிறார்.

கோவிலைச் சுற்றி பெரிய கோட்டை மதில்சுவர் உள்ளது. மேற்கு மதிலின் நடுவே வாசலும் சிறு முகமண்டபமும் உள்ளன. மண்டபத் தூணில் வேலைப்பாடில்லாத பாவை விளக்குகள் உள்ளன.

சடையப்பர் கோவில்:

திருவிடைக்கோடு ஆலயம்

வடக்கு சிறுவாசல் வழி உட்கோவிலில் நுழைந்து சுற்று மண்டபத்தின் இடது வாசல் வழி சிறுமண்டபத்தை அடைந்து ஸ்ரீகோவிலை தரிசிக்கலாம். சடையப்பர் கோவில் கருவறை, இடைநாழி, நந்தி மண்டபம். முன் மண்டபம் என்னும் நான்கு பகுதிகள் கொண்டது. கருவறையின் மேல் உள்ள சுதையால் ஆன விமானம் நாகர வகையைச் சார்ந்தது. விமானத்தில் தட்சணாமூர்த்தி, நரசிம்மன், இந்திரன் மற்றும் பிரம்மன் ஆகிய சிற்பங்கள் உள்ளன. விமானத்தின் சுதைவடிவங்கள் வேலைப்பாடுடையவை.

கருவறையயை அடுத்த இடைநாழி சிறுத்தும், நந்தி மண்டபம் விரிந்தும் உள்ளன. இக்கோவிலின் அமைப்பு ஜகதி, விருத்த குமுதம் என்னும் முறைபடி அமைந்துள்ளது. மேல்பகுதியில் அன்ன விரியும், கீழ் கபோதத்தில் சிம்ம விரியும் உள்ளன. கருவறையின் வெளியே தெற்கு. மேற்கு, வடக்கு பகுதியில் போலி வாசல்கள் சோழர் பாணியில் உள்ளன. கருவறையின் அடித்தள அமைப்பு, கட்டுமானம், கோபுரத்தின் சிற்பங்கள் கொண்டு கோவில் 9-ம் நூற்றாண்டிற்கு முன்பானது என்று அ. கா. பெருமாள் சொல்கிறார்.

நந்தி மண்டபத்திலிருந்து இடைநாழிக்கு செல்லும் வாசலின் இருபுறமும் துவாரபாலகர்கள் சிற்பங்கள் சூசிஹஸ்த முத்திரையும் அபய முத்திரையும் காட்டியபடி உள்ளன. நந்தி மண்டபத்தின் நடுவே வேலைப்பாடுடைய நந்தி உள்ளது, இதன் கொம்பும் திமிலும் உடைந்துள்ளன. நந்தி மண்டபத்திற்கு முன்னே நான்கு தூண்களை கொண்ட திறந்தவெளி சிறு மண்டபம் உள்ளது. இதன் வடபக்க தூணில் துவாரபாலகர் நாயுடன் நிற்கும் சிற்பமுள்ளது.

தெப்பக்குளம்

உட்பிராகாரம்: உட்பிராகாரம் சுற்று மண்டப அமைப்புடையது. தென்மேற்கில் கணபதி கோவில் உள்ளது. மேற்கு சுற்று மண்டபத்தில் நான்கு தூண்கள் உள்ளன. நான்கு தூண்களுடைய வடக்குச் சுற்று மண்டபத்தின் வடக்கு வாசலை ஒட்டி சுவரும் வாசலும் உள்ளன.

நடுமண்டபம்: சடையப்பர் கோவிலுக்கும் சாஸ்தா கோவிலுக்கும் இடையே நடுவில் பாதையும் இருபுறமும் திண்ணைகளும் உள்ள மண்டபமும் உள்ளன. இதை அடுத்து இருப்பது 6 தூண்களைக் கொண்ட மண்டபம். தூண்களில் சிங்க முகமும் கிளி மூக்குச் சிற்பங்களும் உள்ளன. மண்டபத்தில் பலிபீடம் உள்ளது.

சாஸ்தா கோவில்: மூலவருக்கு எதிரே மேற்கு நோக்கி சாஸ்தா கோவில் உள்ளது. சாஸ்தாவின் ஸ்ரீகோவில் பிற்காலத்தில் கட்டப்பட்டது. கருவறையில் சாஸ்தாவுக்கு பீடம் மட்டுமே உள்ளது.

பூஜைகளும் விழாக்களும்

கணபதி, நாகர்கள்

பூஜை, வழிபாடு, திருவிழா, நவராத்திரி விழா என அனைத்து விஷேசங்களும் நடக்கின்றன. மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் நடக்கும் திருவாதிரை சடங்கு இஸ்லாமிய மற்றும் பறையர்கள் தொடர்புடையது.

திருவாதிரை சடங்கு

கல்குளம் வட்டத்தில் உள்ள இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் ஊர் ஆளூர். ஆளூரை சார்ந்த இஸ்லாமியர் தன் கையால் இரண்டு பரிவட்டங்களை(சிறுதுண்டு) நெய்வார். பரிவட்டங்களை திருவிடைக்கோடு ஊரை அடுத்த கால்வாய் கரையில் உள்ள பறையர்கள் அதிகம் வசிக்கும் பாறையடி என்னும் ஊரில் உள்ள பறையர் சாதியை சர்ந்த ஒருவரிடம் கொடுப்பார். இவரது குடும்பத்தினர் சடையப்பர் என்னும் புதுச் சொல்லால் அழைக்கப்படுகின்றனர்.

பரிவட்டத்தைப் பெற்றுகொண்டு திருவாதிரை நாளில் கோவிலுக்குக் கொண்டு கொடுக்க வேண்டும். பரிவட்டத்தை சுமந்து வர நடைமுறை உண்டு. ஊர் அடங்கிய பின்னர் இரண்டு பரிவட்டங்களையும் சிங்கம் வாழை இலையில் பொதிந்து கட்டுவார்கள். இந்தகட்டின் மேல் பல அடுக்குகளாக வாழை இலைகள் பொதிந்து கட்டப்படும். பெரிய கட்டானதும் தூக்குவதற்கு உரிமை உள்ளவர் தலையில் தூக்கி வைத்து நிற்காமல் நடப்பார். பொதி சுமப்பவருடன் ஊர்க்காரர்கள் சிலரும் வருவார்கள். கோவிலை நெருங்கும் போது ஒற்றைமுரசு அடிக்கப்பட வேண்டும் என்பது நடைமுறை.

பொதியை வடக்கு வாசல் வழி கோவிலுக்குள் கொண்டு செல்வர். பூசகரின் உதவியாள் பொதியை பிரித்து பூசகரிடம் கொடுப்பார். பூசகர் பரிவட்டங்களை சடையப்பருக்கும் சாஸ்தாவுக்கும் சாத்துவார். பின் மூலவருக்கும் சாஸ்தாவுக்கும் பூஜை நடக்கும். பூஜை முடிந்து பரிவட்டம் கொண்டுவந்தவருக்கும் உடன்வந்தவர்களுக்கும் பிரசாதமாக 4 கிலோ அரிசி வழங்கப்படும்.

1936-க்கு முன் ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆலய நுழைவு அனுமதி இல்லாத காலத்தில் பரிவட்ட பொதியை கிழக்கு வாசலின் வெளியே வைப்பர். கோவிலை சார்ந்த ஒருவர் பொதியை கோவிலுக்குள் கொண்டு வருவார். அக்காலகட்டத்தில் 9 பரிவட்டங்கள் கொண்டுவரப்பட்டு பரிவார தெய்வங்களுக்கும் சார்த்தப்படும். முன் காலங்களில் பரிவட்ட பொதி இரவு 2 மணிக்கு கொண்டு வந்து பூஜைகள் முடியும் வரை காத்திருப்பர், 16 கட்டி சோறு பிராசாதமாக வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிக்காக 6 கோட்டை நெல் விளையும் வயல் இருந்ததன் ஆவணச் சான்று உள்ளது.

பரிவட்டம் கொண்டு வருபவர் மலைப்பகுதிக்கு சென்று 41 நாட்கள் விரதம் இருந்து திருவாதிரை அன்றே ஊருக்கு வர வேண்டும் என்ற பழைய பழக்கம் இப்போது நடைமுறையில் இல்லை.

வரலாறு

சாஸ்தா, திருவிடைக்கோடு ஆலயம்

திருவிடைக்கோடு ஆலயம் பொ.யு. 9-ம் நூற்றாண்டிற்கு முற்பட்டது. இக்கோவிலில் உள்ள 9-ம் நூற்றாண்டு கல்வெட்டில் திருவிடைக்கோடு என்னும் பெயர் உள்ளது. இடைக்கோடு என்னும் பெயரை குறிப்பிடும் வேறு கல்வெட்டுகளும் கிடைந்த்துள்ளன. இகோவிலில் கிடைத்துள்ள மிகப் பழமையான கல்வெட்டு பொ.யு. 869-ம் ஆண்டை சார்ந்த ஆய் அரசன் கோக்கருநந்தடக்கனின்(பொ.யு. 857 - 885) கல்வெட்டு. இக்காலகட்டத்தில் திருவிடைக்கோடு பகுதி ஆய் அரசின் கீழ் இருந்துள்ளது.

கோக்கருநந்தடக்கனின் இரண்டு கல்வெட்டுகள் அடிப்படையில் ஸ்ரீகோவில் பொ.யு. 850-ம் ஆண்டுக்கு முன்னர் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்பதும் கோவிலின் கருவறைப் பகுதி முழுமையாக கட்டுமானம் என்னும் நிலையை அடைய நூறு ஆண்டுகள் வழிபாடு நடந்திருக்க வேண்டும் என்னும் பொதுவான விதிப்படி கோவில் பழமை பொ.யு. 7-ம் நூற்றாண்டு வரை எட்டும் என்பதும் முனைவர் அ.கா. பெருமாள் அவர்களின் ஊகம்.

கல்வெட்டுகள்

திருவிடைக்கோடு மகாதேவர் கோவிலில் 27 கல்வெட்டுகள் உள்ளன. இவற்றில் 4 தமிழ் வட்டெழுத்திலும் 23 தமிழிலும் காணப்படுகின்றன. கல்வெட்டுகள் காலப்படி பொ.யு. 9-ம் நூற்றாண்டை சார்ந்தது இரண்டும், பொ.யு. 10-ம் நூற்றாண்டை சார்ந்த ஒன்றும், பொ.யு. 12-13-ம் நூற்றாண்டுகளை சார்ந்தவை மூன்றும், பொ.யு. 16-17--ம் நூற்றாண்டுகளை சார்ந்தவை பதினைந்தும் உள்ளன.

கல்வெட்டுகளின் அமைவிடம்
பகுதி எண்ணிக்கை
வெளிப்பிராகாரம் 7
சுற்றாலை மண்டபம் 3
கருவறை தூண் 9
வெளிமண்டப தூண் 1
வெளிபிராகாரக் குத்துக்கல் 1
நந்தி மண்டபத்தரை 1
தெப்பக்குளப் படி 2
திருவிடைக்கோடு ஆலயம்

சில முக்கிய கல்வெட்டுகள்:

  • பொ.யு. 869-ம் ஆண்டை சார்ந்த தமிழ் வட்டெழுத்தால் ஆன கல்வெட்டு(T.A.S. Vol. I p.34 ) தெற்கு வெளிப்பிரகார பாறையில் உள்ளது. இதுவே இக்கோவிலில் காணப்படும் பழமையான கல்வெட்டாகும். ஆய் அரசனான கோக்கருநந்தடக்கன் காலத்தை சார்ந்த நிபந்த கல்வெட்டு. முதுகுளம் ஊரை சார்ந்த வாணிபச் செட்டி சாதிகாரர் விளக்கு எரிக்க நெய்க்காக 25 பசுக்களை அளித்துள்ளார்.
  • பொ.யு. 877--ம் ஆண்டை சார்ந்த தமிழ் வட்டெழுத்தால் ஆன கல்வெட்டு(T.A.S. Vol. I p.37 ) தெற்கு வெளிப்பிராகார பாறையில் உள்ளது. ஆய் அரசனான கோக்கருநந்தடக்கன் காலத்தை சார்ந்த நிபந்த கல்வெட்டு.
  • பொ.யு. 10 -ம் நூற்றாண்டைச் சார்ந்த தமிழ் வட்டெழுத்தால் ஆன கல்வெட்டு(T.A.S. Vol. III Part II p.199 ) தெற்கு வெளிப்பிராகார பாறையில் உள்ளது. ஓமாய நாட்டு அரையன் நினைவாக அந்நாட்டை சார்ந்த ஊர் வேளான் கோவிலுக்கு விளக்கு எரிக்கவும் மூலவருக்கு நைவேத்திய அமிர்து கிடைக்கவும் நிலம் நிபந்தமாக விடப்பட்டுள்ளது. இங்கு குறிப்பிடும் ஓமாய நாடு ஆய் நாட்டின் ஒரு பகுதி என கோக்கருநந்தடக்கனின் ஒரு செப்பேடு மூலம் அறியலம்.
  • பொ.யு. 12 -ம் நூற்றாண்டைச் சார்ந்ததாகக் கருதப்படும் தமிழ் கல்வெட்டு(T.A.S. Vol. V p.144 ) தெற்கு வெளிப்பிராகார பாறையில் உள்ளது. ஆளூரை கற்பகச் செட்டி என்பவன் அமாவாசை திதி நாளில் கோவிலில் 12 பிராமணர்களுக்கு உணவளிக்க ஏற்பாடு செய்துள்ளான்.
  • பொ.யு. 12 அல்லது பொ.யு. 13-ம் நூற்றாண்டை சார்ந்ததாக கருதப்படும் தமிழ்க் கல்வெட்டு(T.A.S. Vol. V p.144-145 ) தெற்கு வெளிப்பிராகார பாறையில் உள்ளது. குறுநாட்டு(கடிகைப்பட்டினம்) மருவத்தூர் ஊரைச் சார்ந்த உதையன் பொன்னாண்டி, உதையன் மங்கல நங்கை ஆகிய இருவரும் நிபந்தம் அளித்த செய்தி பட்டியலுடன் உள்ளது.
    • 7 பிராமணார்கள் சாப்பிட அரிசி 10 நாழி
    • கருவறை நைவேத்தியம் 8 நாழி
    • நெய் 12 உழக்கு
    • தேங்காய் 1
    • நல்லமிளகு 1/2 உழக்கு
    • தயிர் 3 நாழி
    • தேவையான உப்பு, விறகு
    • சாப்பிட்டபின் வெற்றிலை போட, ஒரு கட்டு வெற்றிலை 7 பாக்கு
  • பொ.யு. 1373-ம் ஆண்டில் எழுதப்பட்ட ஓலை தென் திருவிதாங்கூர் இடநாட்டிலிருந்து திருவிதாங்கூர் தொல்லியல் துறையினரால் சேகரிக்கப்பட்டுள்ளது. ஓலை கீழப்பேரூர் ரவிவர்மா திருவடியின் காலத்தை சார்ந்தது. மலையாள மொழியில் சோழ கிரந்த எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. இதன் மலையாள நடை ராமாயண காவியத்தை எழுதிய துஞ்சத்து எழுத்தச்சனின் நடையை ஒத்தது. இந்த ஓலையில் திருவிடைக்கோடு மகாதேவர் கோவிலில் கன்னி மாதம் விசாக நாளில் 9 நாழி அரிசி பொங்கி 12 பிராமணர்களுக்கு உணவு வழங்க நிபந்தம் அளித்த செய்தி உள்ளது. திருவிடைக்கோடு கோவிலுக்கு நிபந்தம் விடப்பட்ட நிலம் மணத்தட்டை(இன்றைய தோவாளை வட்டம்) ஊரில் உள்ளது.
  • பொ.யு. 13 அல்லது பொ.யு. 14 -ம் நூற்றாண்டைச் சார்ந்ததாகக் கருதப்படும் கல்வெட்டு(T.A.S. Vol. III p.199 ) தெற்கு வெளிப்பிராகார பாறையில் உள்ளது. வீரபாண்டியன் வேளான் என்பவன் திருவிடைக்கோடு கோவிலுக்கு இன்றைய கட்டிமாங்கோடு(இரணியல் பகுதி) கிராமத்தில் 12 கலம் நெல் விளையும் நிலத்தை நிபந்தமாக கொடுத்த செய்தி உள்ளது.
  • பொ.யு. 1593-ம் ஆண்டு தமிழ் கல்வெட்டு கோவிலின் திருச்சுற்று மண்டபத் தூணில் உள்ளது. இக்கல்வெட்டில் தான் முதலில் கருவறை தெய்வம் சடையப்பர் என்று குறிப்பிடப்படுகிறது. இக்கல்வெட்டில் திருச்சுற்று மண்டப தூண்களை அமைக்க பணம் கொடுத்தவர்கள் பெயர்கள் உள்ளன.
    • பாறச்சாலை கணக்கு நாதன் ஆதச்சன்
    • பள்ளன் பள்ள கனக மும்பையன் கண்ணன்
    • கழைக்கூட்டம் இராமதேவன்
    • பார்த்திபசேகர மங்கலம் ஒற்றிவிளாக வீட்டு
    • குட்டமங்கலம் கணக்கு பெருமனை தர்மன் கிட்டிணன்
    • மருதத்தூர் கணக்கு ஈஸ்வரன் அய்யப்பன்
    • திருவிடைக்கோடு தேவப்புத்திரன்
    • புதுவூர் கடையன் சங்கரன்
    • குழிக்காட்டு சாத்தன் அரங்கன்
    • பள்ளம் சிறப்பள்ளி மருதன் நாகன்
    • நடுவில் விளாட்டுரை நலத்தாள் பெருமாள்
    • கொட்டு முறவம் புறத்து பெரிய திருவடி
    • நயினார் திருவனந்தத்தாழ்வான் மருத்துவன் தேவன்
  • பொ.யு. 1594 -ம் ஆண்டு கருவறைத் தூணில் உள்ள கல்வெட்டில்(த.நா.தொ.து. 1969-91) மாச்சகோட்டு முடவம்புறத்தைச் சேர்ந்த பெரிய திருநயினார் திருவளந்தாழ்வான் என்பவன் ஒரு தூண் அமைக்க 120 பணம் கொடுத்த செய்தி உள்ளது.
  • பொ.யு. 1604 -ம் ஆண்டு கோவில் வெளிமண்டப தூணில் உள்ள கல்வெட்டில்(த.நா.தொ.து. ப. 103) அக்கரை தேசத்து விஷ்ணு நாராயணன் என்பவர் வரிசை தூணை மண்டபத்தில் அமைக்கவும் நான்கு மாலை கட்டவும் இரண்டு குறுணி விதைப்பாடு வயல் நிபந்தமாக அளித்த செய்தி உள்ளது.
  • பொ.யு. 1727-ம் ஆண்டு தமிழ்க் கல்வெட்டு வடக்கு வெளிபிராகாரத்தில் உள்ள ஒரு பாட்டை கல்லில் உள்ளது. இது வேணாட்டு அரசன் ராமவர்மாவின் கடைசி காலத்தை சார்ந்தது. இக்கல்வெட்டில் இராஜராஜத் தென்னாட்டுக் குறு நாட்டு கடிகைப்பட்டணத்தின் அருகே உள்ள மணவாளக்குறிச்சி ஊரை சார்ந்த கணக்கு பெருமாள் கண்டன் என்பவன் திருவிடைக்கோடு கொடம்பீசுவரமுடைய நயினார் கோவிலில் 54 பிராமணர்களுக்கு துவாதசி திதியில் உணவளிக்க நிலம் நிபந்தமாக கொடுத்த செய்தி உள்ளது. இக்கல்வெட்டில் மகாதேவர் கொடம்பீஸ்வரமுடையார் என்னும் பெயரில் குறிப்பிடப்படுகிறார். கோவிலில் பிராமணர்களுக்கு உணவளிக்கும் ஊட்டுபுரை ஊர்சபை பொறுப்பில் இருந்துள்ளது.

உசாத்துணை


✅Finalised Page