under review

திருபன்னிப்பாகம் மகாதேவர் ஆலயம்

From Tamil Wiki
பன்னிப்பாகம்

கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டம் கோதைநல்லூர் பஞ்சாயத்தில் அமைந்துள்ள சிவ ஆலயம். மூலவர் கிராத மூர்த்தி பசுபதி. சிவாலய ஓட்டம் நிகழும் பன்னிரு சிவாலயங்களில் ஆறாவது ஆலயம்.

இடம்

கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டம் கோதைநல்லூர் பஞ்சாயத்தில் இந்த கோவில் இருக்கும் பகுதி திருபன்னிபாகம் என்று அழைக்கபடுகிறது. கோவில் இருக்கும் இப்பகுதியில் ஊர் இல்லை. பூச்சிகுன்னி மலை அடிவாரத்தில் ஆலயம் உள்ளது. அருகில் உள்ள ஊர் முட்டைக்காடு. பன்னிபாகம் கோவிலை சுற்றி ஊர் இருந்ததற்கு வாய்மொழி மரபிலும் கல்வெட்டு சான்றும் உண்டு. இந்த ஊர் முட்டைக்காடு பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளது. காரணம் பூச்சிகுன்னி மலை அடிவாரத்தில் ஏற்ப்பட்ட வெள்ளம் என்று சொல்லப்படுகிறது.

நாகர்கோவில் திருவனந்தபுரம் சாலையில் தக்கலை ஊரிலிருந்து சுருளக்கோடு சாலையில் 6 கி.மீ. தொலைவில் முட்டைக்காடு சந்திப்பில் தோரண வாயில் உள்ளது. அங்கிருந்து 3 கி.மீ. பயணித்து ஆலயத்தை அடையலாம்.

மூலவர்

திருபன்னிபாகம் கோவில் மூலவர் கிராத மூர்த்தி பசுபதி எனப்படும் சிவன்.

தொன்மம்

ஊரின் பெயரை மகாபாரத கதையுடன் இணைத்து கோவிலின் தலபுராணம் உருவாகி உள்ளது.

பன்னிப்பாகம்

அர்ஜுனன் பாசுபதாஸ்திரம் வேண்டி தவம் செய்கையில் அவனை சோதிக்க வேடனாக வந்த சிவன் அந்நேரம் அங்கு வந்த பன்றி மீது அம்பெய்தான். இதே நேர்ம் அர்ஜுனனும் அம்பெய்தான். இருவரும் பன்றிக்கு சொந்தம் கொண்டாடினர். வேடன் தான் சிவன் என்பதை அர்ஜுனனுக்கு காட்டினான்.

காயம்பட்ட பன்றியின் ஒருபாகம் விழுந்த இடம் பன்னிபாகம் என அறியபடுகிறது. கோவிலை அடுத்த பள்ளத்தை பன்றிகுண்டு என்கிறார்கள். கோவிலின் எதிரே உள்ள குளம் அர்ஜுனன் அம்பு விழுந்த இடம் என்று சொல்லபடுகிறது.

கோவில் அமைப்பு

சுற்று சுவருடன் இரண்டு ஏக்கர் பரப்பளவில் உள்ள ஆலய வளாகம் வெளிப்ப்ராகாரம், திறந்தவெளி உள்பிராகாரம், ஸ்ரீகோயிலை சுற்றிய உள்ப்ராகாரம் என மூன்று பகுதிகளை கொண்டது. ஸ்ரீகோவிலை சுற்றி இருக்கும் உள்பிரகாரம் செல்ல கோவில் பூசகருக்கு மட்டுமே அனுமதி உள்ளது.

வெளிபிராகாரத்தில் பலிபீடம் உள்ளது. தெற்கு பக்கம் கிழக்கு பார்த்து பிற்காலத்தில் கட்டபட்ட விநாயகர் கோவில் உள்ளது. கோவிலை அடுத்து இரண்டு சமாதிகள் உள்ளன. முதல் சமாதி இகோவிலில் தவம் செய்த துறவியுடையது. இரண்டாம் சமாதி துறவியின் வேண்டுகோளுக்கிணங்க தவம் செய்த அவரது தம்பியுடைய சமாதி.

துறவியின் சமாதியில் 30 செ.மீ. உயரமுள்ள சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த சமாதிக்கு தினபூஜை உண்டு. சமாதியின் அருகே காணப்படும் கிளிமரம் என சொல்லப்படும் மரம் கோவிலின் தலவிருட்சம்.

மேற்கில் வெளியே செல்ல வாசல் உண்டு. வடமேற்க்கில் சூலமும் வேலும் மேடை மேல் உள்ளன, இவை முருகனாக வழிபடபடுகிறது. வடக்கில் காலபைரவருக்கு கோவில் உள்ளது.

காலபைரவர் கோவில்: கோவிலுக்கு வாசல்கதவு மேற்கூரை கிடையாது. காலபைரவர் சிற்பம் நின்ற கோலத்தில் 120 செ.மீ. உயரம் கொண்ட நான்கு கைகள் உள்ள ஆடையல்லா கருங்கல் சிற்பம். முன்புற இடது கையில் கபாலமும் வலது கையில் சூலமும் பின்புற வலது கையில் உடுக்கும் இடது கையில் நாகமும் உள்ளன. மார்பில் யக்ஞோபவீதமும் உதரபந்தமும் கட்டப்பட்டுள்ளன. கழுத்தில் கண்டமாலை, சரப்பள்ளி, காதில் பத்ரகுண்டலமும் உள்ளன. தலையில் சந்திரப்பிறையுடன் ஜடா மகுடம் உள்ளது. பின்னே வாகனமான நாய் உள்ளது.

கிழக்கு வாசல் வழி உள்ளே செல்கையில் வடக்கு தெற்காக ஓட்டு பணியால் ஆன பெரிய மண்டபம் உள்ளது. தரைமட்டதிலிருந்து 60 செ.மீ. உயரம் கொண்டது. 13 பெரிய கல்தூண்களில் அதிகம் வேலைப்பாடில்லாத அஞ்சலி ஹஸ்த அடியவர்கள், வேணாட்டரசர்கள் சிற்பங்கள் உள்ளன.

பன்னிப்பாகம்

நந்தி மண்டபம்: மண்டபத்திற்கும் கருவறைக்கும் இடையே தரைமட்டதிற்கு 90 செ.மீ. உயரத்தில் நந்தி மண்டபம் உள்ளது. கருங்கல் பாவப்பட்ட தளம் கொண்டது. தூண்கள் நாயக்கர் கால கட்டுமானம் கொண்டது. மண்டபத்தில் கல்லால் ஆன வேலைபாடுடைய நந்தி உள்ளது. கழுத்தில் மணிகளும் கயிறும் தெளிவாக காட்டப்பட்டுள்ளது. 45 செ.மீ. உயரமும் 90 செ.மீ. நீளமும் கொண்டது.

நந்தி மண்டபத்தின் வடபகுதி மேடையில் உள்ள கல்வெட்டு 9-ம் நூற்றாண்டு என்று வரையறை செய்யப்பட்டுள்ளது. முனைவர் அ.கா. பெருமாள் இதன் கட்டுமான அமைப்பை கொண்டு இக்கால வரையறையை சந்தேகிக்கிறார். பழைய கல்வெட்டுகள் பொறிக்கப்பட்ட கற்கள் கட்டுமானத்திற்கு உபயோகித்திருக்கலாம் என்றும் ஊகிக்கிறார்.

திருச்சுற்று மண்டபம்: கோவிலின் தெற்கு, மேற்கு, வடக்கு பகுதிகளில் 19 கல் தூண்களை கொண்ட ஓட்டு பணியிலான திருசுற்று மண்டபம் உண்டு. தரைமட்டத்திலிருந்து 65 செ.மீ. உயரமுடைய திண்ணை கொண்டது. மேற்கு, வடக்கு சுற்று மண்டபங்களிலிருந்து வெளியே செல்ல வாசல்கள் உள்ளன. திருச்சுற்று மண்டபத்தின் வடகிழக்கில் சிறிய அறையும் கிணறும் உள்ளன.

சாஸ்தா சிற்பம்: தெற்கு வெளிபிராகாரத்தில் கருவறையை ஒட்டி கிழக்கு நோக்கி சாஸ்தா சிற்பம் உள்ளது. இது பரிவார தெய்வம். சிற்பம் குறைபட்டுள்ளதால் இதன் மேல் பித்தளை கவசம் போர்த்தி உள்ளனர். காலை மடக்கியபடி யோகப்பட்டத்துடன் அமர்ந்த கோலத்தில் கையில் செண்டுடன் உள்ளார்.

பன்னிப்பாகம்

நிர்மால்ய மூர்த்தி: வடக்கு உள்பிராகாரத்தில் நடுவில் லிங்க வடிவில் நிர்மால்ய மூர்த்தி உள்ளார். ஆவுடையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள இவருக்கு வழிபாடு கிடையாது. இதற்கு கேரள தாந்திரக முறையை காரணம் சொல்கின்றனர்.

ஸ்ரீகோயில்: கருவறை, நடுமண்டபம், முன்மண்டபம் என மூன்று பகுதிகளால் ஆனது ஸ்ரீகோவில். கருவறை சுற்றி வருவதற்குரிய வசதி கொண்டது. கருவறையின் மேற்கு சிவரில் ஜன்னல் உள்ளது. ஸ்ரீகோவிலின் முன்மண்டபத்தை விட நடுமண்டபம், கருவறை அகலமானவை. ஸ்ரீகோவிலின் முன்மண்டபத்தையும் நந்தி மண்டபத்தையும் இணைக்கும் இணைப்பு மண்டபம் உள்ளது.

ஸ்ரீகோவிலின் விமானம் மூன்று அடுக்குகளை கொண்டது. விமானத்தின் தெற்கு பக்கம் முதல் மற்றும் மூன்றாம் அடுக்குகளில் தட்சணாமூர்த்தியும் நடுவில் வீணா தட்சணாமூர்த்தி துவாரபாலகர்களுடனும் உள்ளனர்.

மேற்கு பக்கம் முதல் அடுக்கில் விஷ்ணு சங்கு சக்கரத்துடன் நின்ற கோலத்தில் உள்ளார். இரண்டாம் அடுக்கில் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் உள்ளார். மூன்றாம் அடுக்கில் யோக நரசிம்மர் உள்ளார்.

வடக்கு விமான பகுதியில் மூன்று அடுக்குகளிலும் பிரம்மா கமண்டலம், அட்சமாலையுடன் இருக்கிறார். விமானம் அண்மை காலத்தில் புதுப்பிக்கப்பட்டது. பழைய அமைப்பு அப்படியே இருக்கும்படி செப்பம் செய்யப்பட்டுள்ளது.

கோவிலில் கொடிமரம் இல்லை.

வரலாறு

கோவிலில் கண்டெடுக்கப்பட்ட பழமையாக கல்வெட்டு (T.A.S. Vol. III p.25) கி.பி. 9-ம் நூற்றாண்டை சேர்ந்தது என்று கல்வெட்டை முதல் படி எடுத்த டி.ஏ. கோபிநாதராவ் சொல்கிறார். இது நிபந்த கல்வெட்டு.

கல்வெட்டு செய்திகள்:

  • விகனங்கன் என்ற செட்டியார் ஊர் சபையிடம் 20 பழங்காசு கொடுத்து, இந்த பணத்தில் வரும் வட்டிக்கு நெய் வாங்கி நந்தா விளக்கு எரிக்க ஏற்பாடு செய்துள்ளான்.
  • கோவில் சபையை ஊரார் என்று குறிப்பிடுகிறது. சபையின் உறுப்பினர்கள் தேவகன்மிகள் எனப்பட்டனர்.
  • சபையில் குழிக்கோடு, பிரம்ம மங்கலம் (பிரம்மபுரம்) திருப்பண்ணைக்குளம் (மணலிக்கரை) மாகூர் கோணம் (கோதநல்லூர்) ஆகிய ஊரில் உள்ளவர்கள் உறுப்பினர்களாய் இருந்தனர்.
  • கல்வெட்டில் 'மகாதேவர்க்கு திருபனைக்குளம்’ என்று வருகிறது. திரு என்னும் முன்ஒட்டு சிறப்பு விகுதி தவிர்த்தால் ’பனைக்குளம்’ என்பதே இவ்வூரின் பழைய பெயர்.
பன்னிப்பாகம்

கி.பி. 14-ம் நூற்றாண்டை சார்ந்த தமிழ் கல்வெட்டின் சிதைந்த பகுதி நந்தி மண்டபத்தின் வடக்கு சுவரில் உள்ளது. கல்வெட்டில் நிபந்தம் அளிக்கப்பட்ட இடம் குசத்தியறை அருகே 'வள்ளி ஆறில் நீருண்டு நெல்விளையும் துண்டம்’ என வருகிறது. குசத்தியறை இப்போது அழகியபாண்டியபுரம் அருகே உள்ள குறத்தியறை என்னும் கிராமத்தை குறிக்கிறது.

கி.பி. 1559-ம் ஆண்டு நிபந்த கல்வெட்டு (T.A.S. Vol. III p.67) நந்தி மண்டபத்தின் வடக்கு சுவரில் உள்ளது. இக்கல்வெட்டில் நயினான் அழகன் அய்யாக்குட்டி என்பவனுக்கு குழல் வாசிக்க வள்ளியாற்றின் கரையில் நிலம் கொடுக்கப்பட்ட செய்தி உள்ளது.

திருவிழா

கோவிலில் ஆண்டு திருவிழா கிடையாது. மகா சிவராத்திரி விழா இங்கு மூன்று நாட்கள் நடக்கிறது. திருவாதிரை, பிரதோஷம் போன்ற விஷேசங்கள் சிறப்பாக நடக்கிறது.

உசாத்துணை


✅Finalised Page