திருநந்திக்கரை மகாதேவர் ஆலயம்
- திருநந்திக்கரை என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: திருநந்திக்கரை (பெயர் பட்டியல்)
கன்னியாகுமரி மாவட்டம் திருநந்திக்கரை என்னும் ஊரில் உள்ள சிவ ஆலயம். மூலவர் பெயர் நந்திகேஸ்வரர். சிவாலய ஓட்டம் நிகழும் பன்னிரண்டு ஆலயங்களில் மூன்றாவது ஆலயம் ஆகும்.
இடம்
கன்னியாகுமரி வட்டம், திருவட்டாறு பஞ்சாயத்து யூனியனில் உள்ளது திருநந்திக்கரை. நாகர்கோவில் திருவனந்தபுரம் சாலையில் மார்த்தாண்டத்திலிருந்து குலசேகரம் நோக்கி பிரியும் சாலையில் 14 கி. மீ. தூரத்தில் உள்ளது. மலையிலிருந்து ஒழுகி வரும் நந்தியாறு என்ற பெயருள்ள சிறிய ஓடை கோயில் முன் ஓடுகிறது. கோவிலை அடுத்து குடைவரைக் கோவிலுடன் கூடிய உளுத்துப்பாறை என்னும் பெரிய பாறை உள்ளது. (பார்க்க திருநந்திக்கரை குகைக்கோவில்)
பெயர்
பண்டைய திருவிதாங்கூர் வரலாற்றாசிரியர்களின் கருத்துப்படி நந்தி என்னும் சமண துறவியின் பெயரால் திருநந்திக்கரை என்று அழைக்கபடுகிறது. தென்திருவிதாங்கூரின் சமணத் தலமாக முன்பு திருநந்திக்கரை இருந்துள்ளது. சிவனின் வாகனமான நந்தியுடன் பின்னர் ஊர்ப்பெயர் இணைக்கப்பட்டது.
மூலவர்
திருநந்திக்கரை ஆலயத்தில் மூலவர் நந்திகேஸ்வரர் ஆவுடையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 30 செ.மீ. உயர லிங்க வடிவில் உள்ளார்.
தொன்மம்
திருநந்திக்கரை ஆலயம் குறித்த தொன்மங்கள் வாய்மொழிக் கதைகளாகவே உள்ளன.
தலபுராணம்
உளுத்துப்பாறையின் அடிவாரம் முன்பு ஏரியாக இருந்துள்ளது. பாறையிலுள்ள குடைவரைக் கோவிலுக்கு ஏரிக்கரை வழியாகத் தான் செல்ல வேண்டும். ஊர் தலைவர் குடைவரை கோவில் சிவலிங்கம் ஏரியில் மிதப்பதாக கனவு கண்டார். மறுநாள் பூசகர் ஏரியில் சுயம்பு சிவலிங்கம் ஒன்றைக் கண்டார். பின்னர் அரசரின் உதவியால் கோவில் கட்டப்பட்டது.
நந்தியின் கதை
ஊருக்குள் வந்து தொல்லை தந்த நந்தியை ஊர்மக்கள் வேண்டுதலை ஏற்று சிவன் சாதுவாக்கி கோவிலில் அமர்த்திக்கொண்டார். சிவனை தரிசனம் செய்ய அளவில் பெரிய நந்தி இடையூறாக இருந்தது. பூசகர் கனவில் தோன்றிய சிவன் சொன்னபடி நந்தி குழிக்குள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
ஊருக்குள் தொல்லை தந்த நந்தியை பிடிக்க வீசப்பட்ட கயிறு உளுத்து பாறையில் சென்று விழுந்தது. அதன் தடம் இப்போதும் பாறையில் நீண்ட வரியாக தெரிகிறது என்ற கதையும் உண்டு.
பரசுராமன் கதை
பரசுராமன் தாயைக் கொன்ற பாவம் போக்க இங்கு வந்து தங்கி தவம் புரிந்து பாவம் தீர்த்தான் என்னும் கதை இங்கு உள்ளது. கோவிலில் உள்ள சாஸ்தா சிற்பம் ஒன்றை பரசுராமராக வணங்குகிறார்கள்.
கொட்டாரம் யட்சி கதை
பத்மநாபபுரம் கொட்டாரத்தில்(அரண்மனை) இருந்த பிராமண உயரதிகாரி ஒருவர் இறந்து மனைவி உடன்கட்டை ஏறினாள். பின் அவள் யட்சியாகி கணவன் மரணத்துக்கு காரணமானவர்களை துன்புறுத்தினாள். நம்பூதிரி ஒருவர் யட்சியை கோவிலில் சங்கல்பித்து அடக்கினார். அவளது உருவமும் சுவரில் வரையப்பட்டது. அது யட்சியாக வழிபடப்படுகிறது
கோவில் அமைப்பு
கோவில் வளாகம் உயர்ந்த கோட்டை மதில் சுவரினுள் உள்ளது. கிழக்குப் பிராகாரத்தில் சாஸ்தா கோவில், நம்பூதிரி மடம், கிருஷ்ணன் கோவில் ஆகியன உள்ளன.
சாஸ்தா கோவில்
முன்பு சாஸ்தா சிலை வெளியில் இருந்துள்ளது. மரக்கிளை ஒன்று சாஸ்தாவில் மேல் விழுந்து கை சேதமானது. பின்னர் கோவில் கட்டப்பட்டு உடைந்த கையுடன் சாஸ்தா பிரதிஷ்டை செய்யபட்டார்.
கிருஷ்ணன் கோவில்
மேடை மேல் இருக்கும் கிருஷ்ணன் கோவில் கல்லால் ஆனது. தென்புறம் சோபனப் படியும் இரண்டு தூண்கள் கொண்ட சிறு முகமண்டபமும் கருவறையும் உள்ளன. மூலவர் கிருஷ்ணன் நின்ற கோலத்தில் உள்ளார். கோவில் அமைப்புப்படி இக்கோவில் பொ.யு. 17 அல்லது 18-ம் நூற்றாண்டைச் சார்ந்தாக தெரிகிறது என்று அ.கா. பெருமாள் கூறுகிறார்.
கோவிலின் வெளி வளாகத்தின் கிழக்கில் அரசமரத்தின் அடியில் நாகர், சிவன், கணபதி, சாஸ்தா ஆகிய சிற்பங்கள் ஒரு மேடையில் உள்ளன.
முன்னரங்கு
எட்டு கல் தூண்கள் கொண்ட ஓட்டு பாணியால் ஆன அரங்கில் பலிபீடமும் வாடாவிளக்கும் உள்ளன. தெற்கிலும் வடக்கிலும் வாசல்கள் உள்ளன. வேலைப்பாடுள்ள பலகணிகளும் உள்ளன.
கிழக்குச் சுற்று மண்டபம்
முன்னரங்கு தாண்டி எட்டு கல் தூண்கள் கொண்ட ஓட்டு பணியால் ஆன கிழக்குச் சுற்று மண்டபம் உள்ளது. நடுவே நடைப்பாதை உள்ளது. வடபுறம் ஈசானிய மூலையில் ஸ்ரீதிருமலையப்பன் கோவில் உள்ளது. மண்டபத் தூண்களில் சிற்பங்கள் உள்ளன.
கிழக்கு சுற்று மண்டப சிற்பங்கள்
- விளக்கேந்திய பாவை
- அஞ்சலி ஹஸ்த அடியவர்
- குறுவாளுடன் ஒர் சிற்பம்(இந்த மண்டபத்தை கட்டிய வேணாட்டு மன்னன் என்ற யூகம் உள்ளது)
- வேல் கொண்டு புலியைக் குத்தி போர் செய்யும் வீரன்
- பன்றியுடன் போர் செய்யும் வீரன்
- குதிரை போல் பய்ந்து செல்லும் வீரன்
- அர்ஜுனன் தபஸ்
- யோகப் பட்டத்துடன் கூடிய சாஸ்தா
- விநாயகர்
- ரிஷபத்தின் மேல் மான் மழு
- பார்வதியுடன் காட்சி தரும் ரிஷபாந்தகன்
- போர் வீரன்(குதிரை மேல் அமர்ந்து தரையில் நிற்பவரிடம் போர் புரிகிறான்)
ரிஷப மண்டபம்
கிழக்கு சுற்று மண்டபம் மற்றும் கருவறைக்கு நடுவே 16 தூண்கள் கொண்ட நமஸ்கார மண்டபம் உள்ளது. இதில் ரிஷபம் இருப்பதால் ரிஷப மண்டபம் என்று அழைக்கபடுகிறது. மேற்கூரையில் பிரம்மாவும் சுற்றிலும் அஷ்டதிக் பாலகர்களும் உள்ளனர். மண்டபத்தின் நடுவில் கழுத்தில் கயிறும் மணியும் கொண்ட கருங்கல் நந்தி சிற்பம் உள்ளது. மண்டபத்தில் இருந்த மரச்சிற்பங்கள் இப்போது திருவனந்தபுரம் அருங்காட்சியகத்தில் உள்ளன.
தெற்கு, மேற்கு, வடக்கு மூன்று புறமும் ஓட்டு பணியால் ஆன சுற்று மண்டபங்கள் உள்ளன.
கருவறை
வட்ட வடிவிலான கருவறை வாசலின் இருபுறமும் துவாரபாலகர்களின் கருங்கல் சிற்பங்கள் உள்ளன. சிற்பங்களின் ஒரு கை சூசிஹஸ்த முத்திரை காட்ட இன்னொன்று ஆயுதத்துடனும் உள்ளன. கருவறை சுவரில் போலிவாசல் எனப்படும் கந்தவார் உள்ளது. கூரை கூம்பு வடிவிலானது. தேக்கு மரப்பலைகையின் மேல் செப்பு தகடு வேயப்பட்டுள்ளது. வருடத்தின் வாரங்களை குறிப்பன என்று கருதப்படும் 52 கழிகோல்கள் கூரையில் உள்ளன. இது கேரள மரபாணியால் ஆனது.
கோவிலின் பரிவார தெய்வங்களாக விநாயகர், ஸ்ரீ திருமலையப்பன், கிருஷ்ணன், தர்மசாஸ்தா, நாகயட்சி, கொட்டாரம் யட்சி ஆகியவை உள்ளன. குடைவரை கோவில் மற்றும் நந்திகேஸ்வரர் கோவில் இரண்டும் வேறுவேறு கோவில்கள்.
ஒவியங்கள்
ஒன்பது தூண்களை கொண்ட மேற்கு சுற்று மண்டபத்தின் மேற்கு சுவற்றில் கொட்டாரம் யட்சியின் தாவர சாயத்தால் ஆன வண்ண ஓவியம் உள்ளது. கைகள் கொடுவாளும் கூர்வாளும் ஏந்தி உள்ளன. விரிசடை, கோரைப்பல், குங்குமப் பொட்டு மற்றும் தலையில் கிரீடமும் உள்ளன.
கருவறை சுவற்றின் மேல் தொங்கு கூரையின் கீழ் பிற்கால பாண்டிய கால பாணியிலான பூதாவாரிகளின் ஓவியங்கள் இருந்த அடையாளங்கள் தெரிகிறது.
ஸ்ரீகோவிலை சுற்றிய சுவர்களில் விநாயகர், விஷ்ணு, சிவன், பரசுராமன், கிருஷ்ணன், சாஸ்தா ஆகிய தெய்வங்களின் தாவர சாய ஓவியங்கள் இருந்தன. பிற்காலக் கோவில் பராமரிப்பின் போது இதன் மேல் வண்ணங்கள் பூசப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.
இந்த ஓவிய மிச்சங்களை கொண்டு அ.கா. பெருமாள் இவை திருவட்டாறு ஆதிகேசவன் ஆலய ஓவியங்களைப் போன்றவை என்றும் 18- ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை என்றும் ஊகிக்கிறார்.
திருவிழா
மாசி மாதம் மகாசிவராத்திரியின் முந்தய நாள் மாலை கொடியேற்றத்துடன் தொடங்கி ஸ்ரீ பூதபலி, ஆறாட்டு, யானை ஊர்வலம் ஆகியவற்றுடன் பத்து நாட்கள் திருவிழா நடக்கிறது. உற்சவவேட்டை அன்று ஆலய வாசல் திறக்கும் நிகழ்வு குறித்த பாடல் பாடப்படுகிறது. முன்பு நந்திமங்கலம் ஆற்றின் கரையில் நடந்து வந்த ஆறாட்டு, இப்போது ஆலயத்தின் வெளியில் உள்ள சுனையின் கரையில் நடக்கிறது.
முத்தாரம்மன் கோவில் சடங்கு
நந்தீஸ்வர் கோவிலுக்கும் பீடவிளை முத்தாரம்மன் கோவிலுக்கும் சடங்கு ரீதியான தொடர்பு உள்ளது. முன்னர் பீடவிளை முத்தாரம்மன் கோவிலில் விக்கிரகம் கிடையாது. அக்காலகட்டதில் ஊர் மக்கள் நந்திகேஸ்வரர் கோவில் விழா வழிபாடு குறித்துப் பேசியுள்ளனர். பின்னர் இது சடங்கு ரீதியாகித் தொடர்கிறது. ஆறாட்டு நாளில் முத்தாரம்மன் பூசகர் ஆறாடச் செல்லும் நந்திகேசனை தீபம் ஏற்றி நோக்குவது சடங்கு.
நந்திகேசன் ஊர்வலம்
நந்திகேசன் சூரியன்கோடு உளவடி மடத்தில் தொடங்கி, முக்கூற்றி சாஸ்தா காவு வழி சென்று வாயலோட்டு நம்பூதிரி மடத்தில் வழிபாடு ஏற்று நந்திமங்கலத்தில் நீராடி நெய்வேத்தியம் ஏற்று திரும்புவார்.
மணலிக்கரை, நெல்வேலி மடத்தை சேர்ந்தவர்கள் இக்கோவிலில் தந்திரிகளாக உள்ளனர்.
வரலாறு
கல்வெட்டு ஒன்று குடைவரை கோவிலில் கிடைத்துள்ளது. இதில் குலசேகரதேவன் மகள் விஜயராகவதேவியான கிழான் அடிகள் திருநந்தா விளக்கு எரிக்க பொன் நிபந்தம் கொடுத்த செய்தி உள்ளது.
முதல் பராந்தக சோழனின் திருவெற்றியூர் கல்வெட்டு கேரள அரசன் ஒருவனின் மகள் விஜயராகவதேவி கொடுத்த நிபந்தம் பற்றி கூறும். விஜயராகவதேவி என குறிப்பிடப்படும் இருவரும் ஒருவர் தான் என்பது திருவிதாங்கூர் தொல்லியலாளர்களின் முடிவு. இதனால் கல்வெட்டு பொ.யு. 10-ம் நூற்றாண்டை சார்ந்தது என்று கொள்ளமுடியும்.
மேலும் இக்கல்வெட்டில் கோவில் அதிகாரிகள் மற்றும் பிற உறுப்பினர்களும் மாடக்கோவிலில் கூடியதாக செய்தி உள்ளது. மாடக்கோவில் என்பது குடைவரை கோவில் அல்ல என்பதால் நந்திகேஸ்வரர் கோவில் இக்காலகட்டத்தில் மாடக்கோவிலாக இருந்துள்ளதாகக் கொள்ளலாம்.
உசாத்துணை
- புகைப்படங்கள் உதவி நன்றி https://shivantemple.blogspot.com/2019/07/4.html
- சிவாலய ஓட்டம், முனைவர் அ.கா. பெருமாள், காலச்சுவடு பதிப்பகம், இரண்டாம் பதிப்பு 2021.
- தென்குமரி கோவில்கள், முனைவர் அ.கா. பெருமாள், சுதர்சன் புக்ஸ், இரண்டாம் பதிப்பு 2018.
- 490kdbtemples.org/about/kumari-shivalayam-ottam/
- Tirunandikkarai Nandikeswarar temple
- திருநந்திக்கரை மகாதேவர் ஆலயம் படங்கள்
- திருநந்திக்கரை மகாதேவர் ஆலயம் படங்கள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:35:15 IST