திருநந்திக்கரை குகைக்கோவில்
- திருநந்திக்கரை என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: திருநந்திக்கரை (பெயர் பட்டியல்)
கன்னியாகுமரி மாவட்டம் திருநந்திக்கரை சிவன் கோவிலை அடுத்து உள்ள கி.பி. 8-ம் நூற்றாண்டை சார்ந்த குடைவரை கோவில். சமண்ர்களால் அகழப்பட்டு பிற்காலத்தில் சிவ ஆலயமாக மாற்றப்பட்டுள்ளது. மங்கிய நிலையில் கேரள பாணி தாவர சாய ஓவியங்கள் உள்ளன. மத்திய அரசின் தொல்பொருள் துறையின் கட்டுப்பட்டில் உள்ளது.
பார்க்க திருநந்திக்கரை மகாதேவர் ஆலயம்
இடம்
கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டம், திருவட்டாறு பஞ்சாயத்து யூனியனில் உள்ளது மார்த்தாண்டம் பேச்சிப்பாறை சாலையில் குலசேகரத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது திருநந்திக்கரை. திருநந்திக்கரை சிவன் கோவிலின் அருகே உள்ள உளுத்துப்பாறை என்னும் பாறையில் குடைவரை கோவில் உள்ளது.
கோவில் அமைப்பு
திருநந்திக்கரை உளுத்துப்பாறையின் தெற்கு பக்க சரிவில் குடைவரை கோவில் அகழப்பட்டுள்ளது. குகை தரை மட்டத்திலிருந்து 4 மீ உள்ளது. குகைகோயில் செல்ல பாறை சரிவில் 10 படிகள் வெட்டப்பட்டுள்ளன, இதில் இரண்டு படிகள் தொல்லியல் அளவீட்டு துறையினரால் வெட்டப்பட்டது. கோவிலுக்கு வெளியே முன்பகுதியில் கிழக்கு மேற்காக 5.68 மீ நீளமும் வ்டக்கு தெற்காக 64 செ.மீ. நீளமும் கொண்ட பாறை தரை உள்ளது. குடைவரை கோவில் முகப்பு, முகமண்டபம், உள்மண்டபம், கருவறை என நான்கு பகுதிகளை கொண்டது.
முகப்பு
இக்குடைவரை கோவிலின் முகப்பு இரண்டு முழுத்தூண்களும், இரண்டு பக்கமும் அரைத்தூண்களும் உள்ளன. நான்கு தூண்களும் மூன்று அங்கணங்களும் செதுக்கப்பட்டுள்ளன. கூரைச் சரிவில் கபோதம் முறையாகக் காட்டப்படவில்லை. முழுத்தூண்கள் சதுரம், கட்டு, சதுரம் என்ற அமைப்பில் செதுக்கப்பட்டுள்ளன. தூண்களின் மேலே விரிகோணப் போதிகைகள் உள்ளன. அரைத்தூண்களை ஒட்டிய பாறையில் இரண்டு பக்கமும் ஆழமில்லாத கோட்டங்கள் அகழப்பட்டுள்ளன. இக்கோட்டங்களில் வட்டெழுத்துக் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன.[1]
மண்டபம்
முகமண்டபம் உள்மண்டபம் என்று இரு பிரிவுகளை கொண்டது. உள்மண்டபம் முகமண்டபத்திலிருந்து 6 செ.மீ. உயர்த்தி அமைக்கப்பட்டுள்ளது. முகமண்டபத்தின் மேற்புறச் சுவரில் விநாயகர் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. உள்மண்டபத்தின் வடபுறத்துச் சுவர்மீது சுதை பூசி எழுதப்பட்ட பல ஓவியங்கள் அழிந்து காணப்படுகின்றன. ஒரு ஓவியத்தில் உள்ள மனிதமுகத்தை மட்டும் தற்போது அடையாளம் காணமுடிகிறது[1].
கருவறை
உள்மண்டபத்தின் மேற்குச் சுவரில் கிழக்குப் பார்த்து கருவறை உள்ளது. 2.15 மீ நீளம் 2.5 மீ அகலம் 1.86 மீ உயரம் என சதுர வடிவில் கருவறை உள்ளது. கருவறைச் சுவரின் நுழைவாயிலின் நிலையமைப்பை ஒட்டி இரண்டு அரைத்தூண்கள் உள்ளன[1].கருவறையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள்
குடைவரை கோவிலின் சுவரில் தாவரச்சாய ஓவியங்கள் இருந்திருக்கிறது. ஆரம்ப காலத்தில் திருனந்திக்கரை குடைவரை கோவிலை ஆய்வு செய்த தொல்லியலாளர்கள் இந்த ஓவியத்தை பார்த்துள்ளனர். இங்கு கணபதி, வீணாதர தட்சணாமூர்த்தீ, காளி, நடராஜர் போன்ற கடவுள்களின் ஓவியங்களை பார்த்ததாக பதிவு செய்துள்ளனர். இந்த ஓவியங்களின் சாயலும் வரைபட அடையாளங்களும் இப்போதும் உள்ளன. இந்த ஓவியங்கள் பிற்காலச் சோழர் காலத்தவை[2].
ஆய்வின்போது குடைவரை கோவிலின் உள்ளே வராகி, வைஷ்ணவி, சிவன் ஆகியோரின் சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டு அருங்காட்சியகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இப்பொது குடைவரை கோவிலின் தென்புறம் தட்சணாமூர்த்தி, துர்க்கை சிற்பங்கள் உள்ளன[2].
வரலாறு
குடைவரை கோவில் சமண்ர்களின் கோவிலாக இருந்துள்ளது. கி.பி. 9-ம் நூற்றாண்டில் சைவக் கோவிலாக மற்றாப்பட்டுள்ளது. இதற்கு பிற்கால சோழர்களின் மறைமுக ஆட்சி காரணமாக இருந்திருக்கலாம் என்று அ.கா. பெருமாள் கூறுகிறார்.
கல்வெட்டுகள்
திருவிதாங்கூர் தொல்லியல் துறையினரால் ஆரம்ப காலத்தில் தொகுக்கப்பட்ட கல்வெட்டுகள்[3] தமிழ் வட்டெழுத்திலும் கிரந்த தமிழிலும் உள்ளன.
- கி.பி. 8-ம் நூற்றாண்டை சார்ந்த தமிழ் வட்டெழுத்தால் ஆன கல்வெட்டு (T.A.S. Vol. III part II p.202) குடைவரை கோவிலின் நுழைவாயில் கிழக்கு பக்கம் உள்ளது. திருநந்த்திக்கரை என்னும் பெயர் இக்கல்வெட்டில் காணப்படுகிறது. குடைவரைக் கோவிலை நிர்வகித்த அதிகாரிகள் தனியாள்கள் எனப்பட்டனர்.
- கி.பி. 8-ம் நூற்றாண்டை சார்ந்த கல்வெட்டு (T.A.S Vol. I p.8) திருநந்திக்கரை வள்ளுவ நாட்டின் ஒரு பகுதி என கூறுகிறது.
- இராஜாதித்திய தேவர் பெரும் படை நாயகர் மலைநாட்டு நந்திக்கரை புதூர் வல்லன் குமரன் என்பவனை ஒரு கல்வெட்டு குறிக்கிறது. இங்கு குறிப்பிடப்படும் வல்லன் குமரன் சோழமன்னன் ராஜராஜனால் நியமிக்கப்பட்ட படைத்தலைவன்.
- கி.பி. 9-ம் நூற்றாண்டை சார்ந்த தமிழ் வட்டெழுத்தால் ஆன கல்வெட்டில் (T.A.S. Vol. III part II p.204) மொத்தம் 40 வரிகளில் இரண்டு வரிகள் கிரந்த எழுத்தில் உள்ளன.
- மங்கலசேரியில் வாழும் நாராயணான் திவாகரன் திருநந்திக்கரையில் உள்ள திருவல்லாழ் படராருக்கு வ்ழிபாட்டிற்கும் ஸ்ரீபலி பூஜைக்கும் விளக்கு எரிக்கவும் நிலம் நிபந்தம் அளித்த செய்தி உள்ளது.
- திருநந்திக்கரை சிவனுக்கு பூஜை மற்றும் வழிபாடு செய்ய நிலம் அளிக்கப்பட்ட குறிப்பு உள்ளது.
- தினமும் கோவிலில் 6 நாழி அரிசி பொங்கிப் படைக்க வேண்டும், ஒரு விளக்கு எரிய வேண்டும் போன்ற நிபந்தனைகள் உள்ளன.
- பணியாளர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பள விவரம்:
- சாந்தி குளிக்க 4 கலம் நெல்
- தவில் நாதஸ்வரம் இசைக்க 5 கலம் நெல்
- கோவில் நிர்வாகத்துக்கு 5 கலம் நெல்
- பலி தூவுபவர்க்கு 1 கலம் நெல்
- துப்புரவு பணியாளர்களுக்கு 1 கலம் நெல்
- கல்வெட்டில் குறிக்கப்படும் ஊர்கள்: வாழைக்கோடு (இன்றைய வாளோடு), கரைக்கோடு (தலக்குளம்), அருவிக்கரை(நட்டாலம் பகுதி), மேக்கோடு(இரணியல்)
- கோவில் மூலவர் திருவல்லவாழ் படரார் என குறிப்பிடப்படுகிறார்.
- கோவிலை முழிக்குளம் சபையார் நிர்வகித்தனர். கோவில் பணியாளர்களுக்கு தண்டனை கொடுக்கும் அதிகாரம் சபையாருக்கு உண்டு.
- கி.பி. 1003-ம் ஆண்டில் எழுதப்பட்ட முதல் ராஜராஜனின் (985-1014) கல்வெட்டு (T.A.S Vol. I p413) கிழக்கு சுவரில் உள்ளது. திருநந்திக்கரை மகாதேவர் கோவிலில் திருவிழா நடத்தவும் முதல் ராஜராஜனின் பிறந்த நாளான ஐப்பசி சதயத்தில் விழா நடத்தவும் நிபந்தம் அளித்த செய்தி உள்ளது. திருநந்திக்கரை வள்ளுவ நாட்டின் ஒரு பகுதியாக இருந்த செய்தி உள்ளது.
- கி.பி. 12-ம் நூற்றாண்டை சார்ந்த தமிழ் வட்டெழுத்தில் எழுத்ப்பட்ட 17 வரி கல்வெட்டு(T.A.S. Vol. III part II p.206) கிழக்கு பக்க சுவரின் வலதுபுறம் உள்ளது. நாஞ்சி நாட்டு வேய்கோட்டுமலை ஊரை சார்ந்த சித்தகுட்டி அம்பி அன்னும் அஞ்ஞூற்று முத்தரையன் ஒன்பது எருமைகளை நிபந்தம் அளித்த செய்தி உள்ளது. நாஞ்சில் நாட்டு எல்லை பரந்து இருந்ததை இக்கல்வெட்டு மூலம் அறியலாம்.
உசாத்துணை
- சிவாலய ஓட்டம், முனைவர் அ.கா. பெருமாள், காலச்சுவடு பதிப்பகம், இரண்டாம் பதிப்பு 2021.
- திருநந்திக்கரை குடைவரைக் கோவில், கன்னியாகுமரி மாவட்டம் - முத்துசாமி இரா
- Thirunanthikarai Cave Temple, C.P.R. Environmental Education Centre, Chennai
- Thirunanthikarai Inscription
- Tamilnadu Tourism: Thirunanthikarai Cave Temple, Kanyakumari
அடிக்குறிப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:35:15 IST