under review

இராம. இருசுப்பிள்ளை

From Tamil Wiki
இராம. இருசுப்பிள்ளை (படம் நன்றி: முனைவர் மு. இளங்கோவன் தளம்)

இராம. இருசுப்பிள்ளை (ராம. இருசுப்பிள்ளை; ஆர். இருசுப்பிள்ளை) (அக்டோபர் 17, 1928 - நவம்பர் 13, 2020) தமிழ்ப் பேராசிரியர்; இதழாசிரியர்; சொற்பொழிவாளர், எழுத்தாளர். வள்ளலார் வழியில் சமயம் பரப்பிய சைவ அறிஞர். தமிழ்நெறிச்செம்மல், ஞானச்செம்மல் உள்ளிட்ட பல விருதுகள் பெற்றார். கவிஞர் சிற்பி தலைமையில், ஐ. கே சுப்பிரமணியத்துடன் இணைந்து, 'தொண்டில் கனிந்த தூரன்' நூலுக்குப் பங்களித்தார்.

பிறப்பு, கல்வி

இராம. இருசுப்பிள்ளை, அக்டோபர் 17, 1928 அன்று, கள்ளக்குறிச்சி அருகே உள்ள சிறுவேங்கையூரில், மணியக்காரர் இராமசாமிப் பிள்ளை - இருசாயி அம்மாள் இணையருக்குப் பிறந்தார். ஆரம்பக் கல்வியை சொந்த ஊரில் பயின்றார். உயர்நிலைக் கல்வியை கள்ளக்குறிச்சி நாட்டாண்மைக் கழக உயர்நிலைப்பள்ளியில் கற்றார். 1942-ல், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இடைநிலைக் கல்வி படித்தார். சென்னைப் பல்கலையில் பயின்று எம்.ஏ. பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

இராம. இருசுப்பிள்ளை மணமானவர். மனைவி: கமலா. இவர்களுக்கு முருகவேள், அறவாணன், திருநாவுக்கரசு, ஞானவள்ளல், இருசு அம்பலவாணன் என ஐந்து பிள்ளைகள்.

கல்விப் பணிகள்

இருசுப்பிள்ளை ஓராண்டு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிய பிறகு கோவை பூ.சா.கோ. கலைக் கல்லூரியில் தமிழ்த் துறையில் 14 ஆண்டுகள் விரிவுரையாளராகவும், தமிழ்ப் பேராசிரியராகவும் பணிபுரிந்தார். பூ.சா.கோ. தொழில்துறை நிறுவனத்தில் தொழிலாளர் நல அதிகாரியாகப் பணியாற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

தொண்டில் கனிந்த தூரன் நூல் (தொகுப்பாசிரியர்களுள் ஒருவர்)

இராம. இருசுப்பிள்ளை, கல்லூரி இதழ்களிலும் இலக்கிய மற்றும் சமய இதழ்களிலும் பல்வேறு கட்டுரைகளை எழுதினார். பல கல்லூரி, பல்கலைக்கழக நிகழ்வுகளிலும், கருத்தரங்குகளில் இலக்கிய, ஆன்மிக, சமயச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். இலக்கியம், ஆன்மிகம், மொழி, வரலாறு, அகராதி போன்ற துறைகளில் 20-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். கவிஞர் சிற்பி தலைமையில், ஐ. கே சுப்பிரமணியத்துடன் இணைந்து, 'தொண்டில் கனிந்த தூரன்' என்ற தலைப்பிலான பெரியசாமித் தூரனின் வாழ்க்கை வரலாற்று ஆவணத் தொகுப்பிற்குப் பங்களித்தார்.

இதழியல்

இராம. இருசுப்பிள்ளை, கலைக்கதிர் இதழின் பொறுப்பாசிரியராக, 1953 முதல் 1990 வரை பணியாற்றினார். சர்வோதயம் மாத இதழின் பொறுப்பாசிரியராக ஏழாண்டுகள் பணியாற்றினார்.

சமய வாழ்க்கை

இராம. இருசுப்பிள்ளை சிறுவயது முதலே திருவருட்பாவைப் பாராயணம் செய்து வந்தார். வள்ளலாரின் நெறிகளையே தனது நெறிகளாக ஏற்றுக் கொண்டு வாழந்தார். வேதாத்திரி மகரிஷி, ஞானவள்ளல் பரஞ்சோதி மகான் ஆகியோரின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். யோகி ராம்சுரத்குமாரின் போதனைகளால் மிகவும் ஈர்க்கப்பட்டார்.

இராம. இருசுப்பிள்ளை, பணி ஓய்வுக்குப் பின் வேதாத்திரி மகரிஷியுடன் இணைந்து அவரது மையத்தில் வேதாத்திரியம் விளக்கும் ஆசிரியராகவும், தியானம் பயிற்றுவிக்கும் ஆசானாகவும் பணியாற்றினார்.

அமைப்புச் செயல்பாடுகள்

இராம. இருசுப்பிள்ளை கோவை நன்னெறிக் கழகம், கோவை கம்பன் கழகம், கோவை திருவள்ளுவர் மன்றம், கோவை ரமண கேந்திரம், கோவை சன்மார்க்க சங்கம், உலக சமுதாய சேவா சங்கம், ஆழியார் அறிவுத் திருக்கோவில் உள்ளிட்ட பல அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். அவற்றுடன் இணைந்து பல்வேறு ஆன்மிக, சமய, இலக்கியப் பணிகளை மேற்கொண்டார்.

பொறுப்பு

  • கோவை பாரதீய வித்யாபவனின் மனித உணர்வு மேம்பாட்டுத் துறை இயக்குநர்.
  • அறிவியல் கலைச்சொல் அகராதிக் குழு உறுப்பினர்

விருதுகள்

  • அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அளித்த 'நல் மாணாக்கர்' விருது
  • கோவை நன்னெறிக் கழகம் வழங்கிய 'தமிழ்நெறிச் செம்மல்' விருது
  • கோவை மாவட்ட சன்மார்க்க சங்கம் அளித்த 'தமிழ்ச் சான்றோர்' விருது
  • கோவை கம்பன் கழகம் வழங்கிய 'கம்பன் காவலர்' விருது
  • கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் வழங்கிய 'ஞானச் செம்மல்' பட்டம்
  • சென்னை சேக்கிழார் ஆராய்ச்சி மன்றம் வழங்கிய 'நல்லாசிரியர்' விருது
  • கோவை பாரதீய வித்யா பவன் வழங்கிய 'தமிழ்மாமணி' விருது
  • அருள்நிதி பட்டம்

ஆவணம்

பேராசிரியர் இராம. இருசுப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை முனைவர் இரா. கா. மாணிக்கம் எழுதினார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறை, மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையுடன் இணைந்து கலைஞன் பதிப்பகம், 2017-ல் அந்நூலை வெளியிட்டது.

மறைவு

பேராசிரியர் இராம. இருசுப்பிள்ளை, நவம்பர் 32, 2020 அன்று காலமானார்.

மதிப்பீடு

பேராசிரியர் இராம. இருசுப்பிள்ளை தமிழ் மற்றும் சமயம் இரண்டிலும் தேர்ந்த அறிஞர். வள்ளலாரையும், காந்தியையும் தனது ஆதர்சமாகக் கொண்டு இயங்கினார். இவரது நூல்களில் திருவாசகச் சொல்லகராதி, திருக்கோவையார் சொல்லகராதி, கொங்கு நாட்டில் இந்திய சுதந்திரப் போராட்டம் ஆகிய மூன்று நூல்களும் முக்கியமான நூல்களாக ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுகின்றன. திருக்குறள், திருவருட்பா, காந்தியம் மூன்றையும் பரப்பிய தமிழறிஞர்களுள் ஒருவராக பேராசிரியர் இராம. இருசுப்பிள்ளை மதிப்பிடப்படுகிறார்.

இராம. இருசுப்பிள்ளை நூல்கள்

நூல்கள்

  • வண்டி வளர்ந்த கதை
  • தொழிலகமும் மனித உணர்வும்
  • தொழிலகப் பாதுகாப்பு
  • தொழில் நல்லுறவில் மேற்பார்வையாளர் பங்கு
  • கொக்கரோ (ஜப்பானியக் குறுநாவலின் தமிழாக்கம்)
  • எண்ணுக நல்லன
  • நல்ல எதிர்காலம்
  • புத்தாண்டில் புதுவாழ்வு
  • வள்ளலாரும் வேதாத்திரி மகரிஷியும்
  • வள்ளலார் வாழ்வும் வாக்கும்
  • ஞானப் பரம்பரை
  • திருவருட்பா தினசரி தியானம்
  • நாளொரு குறள்
  • திருக்குறள் சிந்தனை
  • கோவை மாவட்ட சுதந்திரப் போராட்ட வரலாறு
  • கொங்கு நாட்டில் இந்திய சுதந்திரப் போராட்டம்
  • தமிழ்மொழியின் தொன்மையும் மேன்மையும்
  • அருட்பெருஞ்ஜோதி அகவல் விளக்கம்
  • மனித உணர்வு மேம்பாட்டிற்கான வழிமுறைகள்
  • திருநாவுக்கரசர் பேராசிரியர்
  • திருவாசகச் சொல்லகராதி
  • திருக்கோவையார் சொல்லகராதி

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 04-Sep-2024, 19:33:55 IST