under review

அருட்பெருஞ்ஜோதி அகவல்

From Tamil Wiki


'அருட்பெருஞ்ஜோதி அகவல்' 1596 அடிகளைக் கொண்ட பாடல்.. இராமலிங்க வள்ளலார் எழுதிய திருவருட்பா தொகுப்பில், ஆறாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. வள்ளலார் இதனை ஒரே இரவில் எழுதியதாகத் தொன்மக் கதைகள் குறிப்பிடுகின்றன. தமிழ் இலக்கியத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அடிகளைக் கொண்ட ஒரே பாடலாக, வள்ளலார் அருளிய அருட்பெருஞ்ஜோதி அகவல் கருதப்படுகிறது.

பாடல் தோற்றம்

திருவருட்பா என்பது இராமலிங்க வள்ளலார் பல்வேறு கால கட்டங்களில் பாடிய 5818 பாடல்களின் தொகுப்பு. இது ஆறு திருமுறைகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. இதில் ஆறாம் திருமுறையில் இடம் பெற்றிருக்கும் பாடலே அருட்பெருஞ்ஜோதி அகவல்.

இப்பாடலை, வள்ளலார், மேட்டுக்குப்பம் ’சித்திவளாகத் திருமாளிகை’யில். ஆங்கிரச ஆண்டு, சித்திரை மாதம் எட்டாம் நாள், வியாழக்கிழமை அன்று (ஏப்ரல் 18, 1872) எழுதியதாக வள்ளலாரின் வாழ்க்கை வரலாறு தெரிவிக்கிறது.

பெயர் விளக்கம்

மயிலின் ஓசை அகவல் எனப்படும். ஆண் மயில் தன் இணையைக் கூட முற்படும்போது ஏற்படுத்தும் ஓசையே அகவல் எனப்படுகிறது. அது போல, ஓர் அருளாளர் இறைவனுடன் இரண்டறக் கலக்கும் போது தன்னுடைய ஆனந்தக் களிப்பை/அருள் நிலையைத் தமிழ்ப் பாடல்கள் வழியாகக் கூற முற்படுவதே 'அகவல்'.

நூல் அமைப்பு

வள்ளலார், அருட்பெருஞ்சோதி ஆண்டவரை அறிந்தையும், அருள் பெற்றதையும், தன் ஆனந்த அனுபவத்தையும் கூறுவதே அருட்பெருஞ்ஜோதி அகவல். இப்பாடல், 1596 அடிகளைக் கொண்டுள்ளது.

சங்க இலக்கியத்தில் அடியால் மிகுந்தது மதுரைக் காஞ்சி. இது 782 அடிகளைக் கொண்டது. வள்ளலாரின் அருட்பெருஞ்ஜோதி அகவல், அதைவிட இரு மடங்குக்கும் அதிகமான அடிகளைக் கொண்டுள்ளது.

அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி
அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி

- என்று அருட்பெருஞ்ஜோதி மகாமந்திரத்தில் தொடங்கி அருட்பெருஞ்ஜோதி மகாமந்திரத்தில் முடிவடைகிறது. உயிரெழுத்துகள் பன்னிரண்டும் அகவலின் தொடக்கத்தில் பாடல் வரிகளின் தொடக்கமாய் அமைந்துள்ளன. பாடலின் முதல் வரி குறில் எழுத்தில் ஆரம்பித்தால் அடுத்த வரியும் குறிலிலேயே தொடங்குகிறது. முதல் வரி நெடிலில் ஆரம்பித்தால் அடுத்த வரியும் நெடிலிலேயே தொடங்குவதாக அமைந்துள்ளது.

அருட்பெருஞ்ஜோதி அகவலில் கூறப்படும் அரும்பொருள்கள்

அருட்பெருஞ்ஜோதி அகவலில்,

  • ஐம்பூத இயல்வகை
  • மண்ணியல்
  • நீரியல்
  • தீஇயல்
  • காற்றியல்
  • வெளியியல்
  • அகம் புறம்
  • ஐம்பூதக் கலப்புகள்
  • வெளிவகை
  • அண்டப் பகுதிகள்
  • கடல்வகை
  • எண்வகை
  • வித்தும் விளைவும்
  • ஒற்றுமை வேற்றுமை
  • அகப்பூ
  • நால்வகைத் தோற்றம்
  • ஆண் பெண் இயல்
  • காக்கும் அருள்
  • அடக்கும் அருள்
  • மாயத்திரை விளக்கம்
  • அருளில் தெருட்டல்
  • தனிப்பொருள்
  • மெய்ப் பொருள்
  • பராபர இயல்
  • பதவியல்
  • சிவரகசியம்
  • திருவருள் வல்லபம்
  • சிவபதி
  • அருட்குரு
  • உயிர்த் தாய்
  • உயிர்த் தந்தை
  • உயிர்த் துணை
  • உயிர் நட்பு
  • உயிர் உறவு
  • இயற்கை உண்மை (சத்து)
  • இயற்கை விளக்கம் (சித்து)
  • இயற்கை இன்பம் (ஆனந்தம்)
  • அருளமுதம்
  • மணி
  • மந்திரம்
  • மருந்து
  • மாற்றறியாப் பொன்
  • உலவா நிதி
  • ஜோதிமலை
  • இயற்கை
  • பொருண்மை
  • தனி அன்பு
  • நிறைமதி
  • கருணை மழை
  • செஞ்சுடர்
  • அருட்கனல்
  • பரஞ்சுடர்

- என, 52 வகையான பொருண்மைகள் குறித்துக் கூறப்பட்டுள்ளது.

சிறப்புகள்

வள்ளலார், இறைவன் தனக்கருள் செய்த விதத்தையும், அதன் மூலம் தான் பெற்ற பயனையும் மிக விரிவாக அருட்பெருஞ் ஜோதி அகவலில் விவரித்துள்ளார். வள்ளலாரின் ஞானத்திறத்திற்கும், கவிச் செறிவிற்கும் சிறந்த எடுத்துக்காட்டாக அருட்பெருஞ் ஜோதி அகவல் அமைந்துள்ளது. தமிழ் இலக்கியத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அடிகளைக் கொண்ட ஒரே பாடலாக, வள்ளலார் அருளிய 'அருட்பெருஞ்ஜோதி அகவல்' அறியப்படுகிறது. வள்ளலாரின் படைப்புகளிலேயே அவர் தம் உயர்ந்த ஆன்மிக வெளிப்பாட்டை விளக்குவதாக அருட்பெருஞ் ஜோதி அகவல் மதிப்பிடப்படுகிறது.

அருட்பெருஞ் ஜோதி அகவல் பற்றி ஊரன் அடிகள், “திருமுறை ஆறனுள்ளும் சிறந்தது ஆறாம் திருமுறை. அதனுள்ளும் சிறந்தது அருட்பெருஞ்ஜோதி அகவல். திருஅருட்பா ஒரு ஞான உடம்பு எனின் - அதன் தலை (முகம்) ஆறாம் திருமுறை. அம்முகத்திற் கண் அருட்பெருஞ்ஜோதி அகவல். அக்கண்ணுள் மணி அருட்பெருஞ்ஜோதி மந்திரம். அருட்பெருஞ்ஜோதி மந்திரத்தை ஆயிரம் முறை ஓதுவது அருட்பெருஞ்ஜோதி அகவல்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

பாடல் நடை

இறைவன், வள்ளலாருக்கு அருள் செய்தது

பெரிதினும் பெரிதாய்ச் சிறிதினுஞ் சிறிதாய்
அரிதினு மரிதா மருட்பெருஞ் ஜோதி

காட்சியுங் காணாக் காட்சியு மதுதரும்
ஆட்சியு மாகிய வருட்பெருஞ் ஜோதி

இன்புறு சித்திக ளெல்லாம் புரிகவென்
றன்புட னெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி

இறவா வரமளித் தென்னைமே லேற்றிய
அறவாழி யாந்தனி யருட்பெருஞ் ஜோதி

எங்கெங் கிருந்துயி ரேதெது வேண்டினும்
அங்கங் கிருந்தரு ளருட்பெருஞ் ஜோதி

படிமுடி கடந்தனை பாரிது பாரென
அடிமுடி காட்டிய வருட்பெருஞ் ஜோதி
ஜோதியுட் ஜோதியின் சொருபமே யந்த
மாதியென் றருளிய வருட்பெருஞ் ஜோதி
இந்தசிற் ஜோதியி னியலுரு வாதி
யந்தமென் றருளிய வருட்பெருஞ் ஜோதி
ஆதியு மந்தமு மறிந்தனை நீயே
ஆதியென் றருளிய வருட்பெருஞ் ஜோதி
நல்லமு தென்னொரு நாவுளங் காட்டியென்
அல்லலை நீக்கிய வருட்பெருஞ் ஜோதி

தெருட்டுந் தலைவர்கள் சேர்பல கோடியை
அருட்டிறந் தெருட்டு மருட்பெருஞ் ஜோதி
ஐந்தொழி லாதிசெய் யைவரா திகளை
ஐந்தொழி லாதிசெய் யருட்பெருஞ் ஜோதி
இறந்தவ ரெல்லா மெழுந்திட வுலகில்
அறந்தலை யளித்த வருட்பெருஞ் ஜோதி
செத்தவ ரெல்லாஞ் சிரித்தாங் கெழுதிறல்
அத்தகை காட்டிய வருட்பெருஞ் ஜோதி
இறந்தவ ரெழுகவென் றெண்ணியாங் கெழுப்பிட
அறந்துணை யெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி

உசாத்துணை


✅Finalised Page