under review

யோகி ராம்சுரத்குமார்

From Tamil Wiki
பகவான் யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார் (யோகி; பகவான் யோகி ராம்சுரத்குமார்: விசிறி சாமியார்; ராம்சுரத்குன்வர்) (டிசம்பர் 1, 1918 – பிப்ரவரி 20, 2001) ஓர் ஆன்மிக ஞானி. ஆசிரியராகப் பணியாற்றினார். இளம் வயது முதலே ஆன்மிகத் தேடல் உடையவராய் இருந்தார். கஞ்சன்காடு பப்பா ராம்தாஸால் ஆட்கொள்ளப்பட்டார். திருவண்ணாமலைக்கு வந்து அங்கேயே வாழ்ந்து நிறைவெய்தினார்.

பிறப்பு, கல்வி

ராம்சுரத்குன்வர் என்னும் இயற்பெயரை உடைய யோகி ராம்சுரத்குமார், டிசம்பர் 1, 1918 அன்று, உத்திரபிரதேசத்தில் உள்ள நர்தரா எனும் கிராமத்தில், ராம்தத் குன்வர் - குசுமா தேவி இணையருக்குப் பிறந்தார். உள்ளூரில் பள்ளிக் கல்வி கற்றார். அலகாபாத்தில் உள்ள எவிங் கிறிஸ்டியன் கல்லூரியில் இண்டர்மீடியட் படித்தார். அதே கல்லூரியில் பயின்று ஆங்கில இலக்கியத்தில் பி.ஏ. பட்டம் பெற்றார். ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

ராம்சுரத்குமார் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். மனைவி ராம் ரஞ்சனிதேவி. மகன்: அமிதாப். மகள்கள்: யசோதா, மாயா, வீணா.

யோகி ராம்சுரத்குமார்
திருவண்ணாமலை புன்னை மரத்தடியில் யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்

ஆன்மிக வாழ்க்கை

ராம்சுரத்குமார் இளம் வயது முதலே ஆன்மிகத் தேடல் உடையவராக இருந்தார். அவரது ஊரான நர்தரா கங்கைக்கரையில் அமைந்திருந்தது. அதனால் அங்கு சென்று அமைதியாக நதியை உற்றுநோக்கிக் கொண்டிருப்பதும், அங்கு நீராட வரும் சாதுக்களுடன் உரையாடுவதும் அவரது வழக்கமாக இருந்தது.

ஞானத்தேடல்

ஒருநாள், தாய்க்கு உதவும் நோக்கில் தனது வீட்டுக் கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்த ராம்சுரத்குமார், கிணற்றின் மேடையில் அமர்ந்திருந்த குருவியை நோக்கி விளையாட்டாய்க் கயிறை வீசினார். கயிறு பட்டுக் குருவி இறந்தது. ராம்சுரத்குமார் மனம் வருந்தி இறைவனிடம் தனது செயலுக்காக மன்னிப்பை வேண்டினார். “ஏன் இந்தப் பறவை இறந்தது? நான் ஏன் இந்தத் தவறைச் செய்தேன்? சற்றுமுன் உயிருடன் இருந்த இந்தப் பறவை இப்போது இல்லை. அப்படியானால் உயிர் என்பது என்ன? அது எங்கே போகும்? அது ஏன் போகிறது? இதையெல்லாம் செய்பவர் யார்? ஏன் செய்கிறார்?” என்ற கேள்விகள் அவர் உள்ளத்துள் எழுந்தன.

தன் வினாக்களுக்கான விடைகளைத் தேடி பல்வேறு ஆலயங்களுக்குச் சென்றார். பல சாதுக்களை தரிசித்தார். பல புனிதத் தல யாத்திரையை மேற்கொண்டார். பல்வேறு ஆன்மிகத் தத்துவ நூல்களை, ராமகிருஷ்ணர் போன்ற மகான்களின் வாழ்க்கை வரலாற்று நூல்களைப் படித்தார். எதிலும் அவர் மனம் அமைதியடையவில்லை.

கபாடியா பாபா

நர்தராவுக்கு அருகில் உள்ள ஓர் ஊரில் 'கபாடியா பாபா' என்ற துறவி ஒருவர் வசித்து வந்தார். அவரைப் பற்றி அறிந்த ராம்சுரத்குமார், அவரைச் சென்று சந்தித்தார். கபாடியா பாபா, ராம்சுரத்குமாரை காசி போன்ற புண்ணியத் தலங்களுக்குச் சென்று தரிசித்துவிட்டு வருமாறு அறிவுறுத்தினார். அதன்படியே ராம்சுரத்குமார் காசி சென்று வந்தார். காசி அவருள் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. வாழ்க்கையின் நிலையாமையைப் பற்றிய புரிதல் ஏற்பட்டது. ஆன்ம மாற்றத்துடன் நர்தரா திரும்பினார்.

தொடர்ந்து கேதார்நாத், பத்ரிநாத், ரிஷிகேசம் போன்ற தலங்களுக்குச் சென்று வந்தார். பல சாதுக்களை தரிசித்தார். பல நூல்களை வாசித்தார். ஆனாலும் மனம் அமைதியுறவில்லை. கபாடியா பாபா, குரு இல்லாமல் ஒருவன் ஆன்ம ஞானத்தை அடைய முடியாது என்று ராம்சுரத்குமாருக்குத் தெளிவுபடுத்தினார். ராம்சுரத்குமாரை, தென்னிந்தியவுக்குச் சென்று, பாண்டிச்சேரியில் இருக்கும் அரவிந்த கோஷையும், திருவண்ணாமலையில் இருக்கும் ரமண மகரிஷியையும் தரிசித்துவிட்டு வருமாறு பணித்தார்.

முதல் தென்னாட்டுப் பயணம்

ராம்சுரத்குமாரும் அவ்வாறே புறப்பட்டு தென்னிந்தியாவுக்கு வந்தார். புதுச்சேரி வந்தவர் அரவிந்தாஸ்ரமம் சென்றார். அரவிந்தர் அப்போது தனித்திருந்து யோக சாதனைகளை நிகழ்த்தி வந்தததால் அவரது தரிசனம் கிட்டவில்லை. அதனால் திருவண்ணாமலைக்குச் சென்றார். ரமணாஸ்ரமத்தில் தங்கினார். பகவான் ரமணரின் ஆசி ராம்சுரத்குமாருக்குக் கிடைத்தது. குகை நமசிவாயர் ஆலயம், விரூபாக்ஷி குகை, ஸ்கந்தாஸ்ரமம் போன்ற இடங்களுக்குச் சென்று தியானம் செய்தார். ரமணாஸ்ரம பக்தர் ஒருவர் மூலம் கஞ்சன்காட்டில் இருந்த சுவாமி ராமதாசர் பற்றிக் கேள்வியுற்றார். உடன் அங்கு புறப்பட்டுச் சென்றார். சுவாமி ராமதாசரைத் தரிசித்தார். ஆனால், அந்தச் சந்திப்பு ராம்சுரத்குமாருக்குள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. தன் சொந்த ஊருக்குத் திரும்பினார்.

இரண்டாவது தென்னாட்டுப் பயணம்

ராம்சுரத்குமார், சில வருடங்கள் கழித்து மீண்டும் பாண்டிச்சேரிக்குப் புறப்பட்டார். அரவிந்தரின் தரிசனம் பெற்றார். அன்னையின் அருளும் ஆசியும் அவருக்குக் கிடைத்தன. அண்ணாமலை சென்று ரமணரைத் தரிசித்தார். ரமணரது ஆசி ராம்சுரத்குமாருக்குக் கிடைத்தது. பின்னர் கஞ்சன்காடு சென்றார். சுவாமி ராமதாஸரின் தரிசனம் பெற்றார். பின் சொந்த ஊருக்குத் திரும்பினார்.

மூன்றாவது தென்னாட்டுப் பயணம்

நாளடைவில் ராம்சுரத்குமாருக்கு இல்லற வாழ்வின் மீது இருந்த பற்று நீங்கியது. எல்லாவற்றையும் துறந்து வாழும் எண்ணம் மேம்பட்டது. இந்நிலையில் ரமணர், அரவிந்தர் ஆகியோரின் மறைவு பற்றி அறிந்தார். மனம் வருந்தினார். இனி யாரைத் தன் குருவாக அடைவது எனறு ஏங்கினார். சுவாமி ராமதாசரின் நினைவு தோன்றியது. ஞானவேட்கை மிகுதியால் அவரையே குருவாக அடைவது என்ற உறுதியுடன் மீண்டும் அனந்தாஸ்ரமத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கு சென்று சில நாட்கள் தங்கினார். நாம பஜனையில் கலந்துகொண்டார்.

குரு உபதேசம்

சுவாமி ராமதாசரே தனது குரு என்பதை உணர்ந்தார் ராம்சுரத்குமார். குரு செல்லுமிடமெல்லாம் கூடவே சென்றார். ராம்சுரத்குமாரின் ஞானத் தேடலின் தவிப்பை உணர்ந்துகொண்ட ராமதாசர் ஒருநாள், ராம்சுரத்குமாரின் காதில் 'ஓம் ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்' என்ற மந்திரத்தை மும்முறை ஓதி, "இதையே குரு உபதேசமாக எண்ணி 24 மணி நேரமும் ஜெபித்து வா!" என்று கூறி ஆசிர்வதித்தார்.

குரு வாக்கைத் திருவாக்காக ஏற்று நாம ஜபத்தைத் தொடங்கினார் ராம்சுரத்குமார். லட்சக்கணக்காக ஜபம் செய்து அதன்மூலம் ஆன்மானுபூதி பெற்றார்.

கஞ்சன்காட்டில் தன் குரு ராமதாசர் உடனேயே தங்கி வாழ்வது என்ற விருப்பதுடன் அவரது அனுமதி கோரினார் சீடர் ராம்சுரத்குமார். ஆனால் குரு மறுத்துவிட்டார். "நான் எங்கே போவேன், என்ன செய்வேன், தங்களை விட்டால் எனக்கு கதி யார்?" என்று ராம்சுரத்குமார் இறைஞ்சினார். குரு ராமதாசரோ, "போ. எங்காவது போய் பிச்சையெடு." என்று உரத்த குரலில் ஆணையிட்டார். குருவின் வாக்கை ஏற்றுக் கொண்டார் ராம்சுரத்குமார்.

“எங்கே போகப்போகிறாய்?" என்ற குருவின் கேள்விக்கு தன்னையும் அறியாமல் "திருவண்ணாமலை" என்று பதிலளித்தார். சீடரின் தலையில் கை வைத்து ஆசிர்வதித்த குரு ராமதாசர், சால்வை ஒன்றை அவருக்குப் பரிசளித்து வழியனுப்பினார். ஆசிரமம் விட்டு வெளியேறிய ராம்சுரத்குமார் சில காலம் திருவண்ணாமலையில் வசித்தார். பின் சொந்த ஊருக்குத் திரும்பினார். தனக்கான கடமைகளை நிறைவேற்றியவர், நிரந்தரமாக திருவண்ணாமலை தலத்துக்கு வந்து வசித்தார்.

திருவண்ணாமலையில் தவ வாழ்க்கை

ஒரு கையில் கொட்டாங்குச்சி. மறு கையில் விசிறி. ஒரு சிறு கம்பு. பச்சை நிறத் தலைப்பாகை. குருநாதர் தனக்களித்திருந்த பெரிய சால்வை இவற்றுடன் திருவண்ணாமலை தலத்தில் வாழ்ந்தார் ராம்சுரத்குமார். திருவண்ணாமலை ரயில் நிலையம் அருகே உள்ள புன்னை மரத்தடி, அருணாசலேஸ்வரர் ஆலய வாசல், தேரடி மண்டபம், சன்னிதித் தெரு இல்லம், சுதாமா இல்லம் எனப் பல இடங்களில் வசித்தார். பக்தர்களால் ‘யோகி’ என்றும் ‘யோகி ராம்சுரத்குமார்’, 'விசிறி சாமியார்' என்றும் அழைக்கப்பட்டார்.

யோகி ராம்சுரத்குமாரும் எழுத்தாளர்களும்

யோகி ராம்சுரத்குமார், தான், தனது என்பதற்ற முழுமையான ஞானியாகத் திகழ்ந்தார். தன்னை நாடி வந்த பக்தர்களிடம் "எல்லாம் தந்தையின் பணி; தந்தையின் அருள்" என்றே எப்போதும் கூறினார். சிறியோர், பெரியோர் என்று எவரிடமும் எவ்வித பாரபட்சமும் காட்டாதவராக இருந்தார். உள்நாட்டவர்கள் மட்டுமல்லாமல் ட்ரூமன் கேய்லர் வாட்லிங்டன் (Truman Caylor Wadlington), ஹில்டா (Hilda Charlton), லீ லோஸோவிக் (Lee Lozovic) போன்ற வெளிநாட்டுப் பக்தர்கள் பலரும் யோகியைத் தேடி வந்தனர். யோகி ராம்சுரத்குமாரின் பெருமையை அறிந்து எழுத்தாளர்கள் பலரும் அவரை நாடி வந்தனர்.

- போன்ற எழுத்தாளர்கள் யோகி ராம்சுரத்குமாரைச் சந்தித்ததுடன் அவருடனான தங்கள் அனுபவங்களையும் எழுத்தில் பதிவு செய்தனர்.

கி.வா.ஜ., பெரியசாமித் தூரன் போன்றோர் யோகி ராம்சுரத்குமார் மீது பாடிய பாடல்கள் தொகுக்கப்பட்டு புத்தங்களாகவும், ஒலிநாடா ஆகவும் வெளியிடப்பட்டன. அதனை டி.கே. பட்டம்மாள், டி.வி. ஷங்கர நாராயணன், கே.வி. நாராயணசாமி உள்ளிட்ட பலர் பாடினர்.

பாலகுமாரன், யோகி ராம்சுரத்குமாரின் வாழ்க்கை வரலாற்றை ‘விசிறி சாமியார்’, ‘பகவான் யோகி ராம்சுரத்குமார் சரிதம்' போன்ற தலைப்புகளில் நூலாக எழுதினார். பவா செல்லதுரை, ஜெயமோகன் போன்றோர் யோகி ராம்சுரத்குமாருடனான தங்களது அனுபவங்களை எழுத்தில் பதிவு செய்தனர். பிரமிள் உடன் யோகி ராம்சுரத்குமாரை தரிசிக்கச் சென்ற அழகியசிங்கர், அந்த அனுபவங்களை ‘பிரமிளும் விசிறி சாமியாரும்’ எ்ன்ற தலைப்பில் நூலாக எழுதினார்.

யோகி உருவச்சிலை, திருவண்ணாமலை ஆசிரமம்

யோகி ராம்சுரத்குமார் ஆசிரமம், திருவண்ணாமலை

யோகி ராம்சுரத்குமார் டிரஸ்ட் மூலம் யோகி ராம்சுரத்குமார் ஆசிரமம் தோற்றுவிக்கப்பட்டது. முதலில் ஆசிரம உருவாக்கத்தில் ஈடுபாடு காட்டாத யோகி ராம்சுரத்குமார், தன்னைக் காண வரும் பக்தர்கள் வெயிலும் மழையிலும் கஷ்டப்படுவதைக் கண்டு ஆசிரம உருவாக்கத்திற்கு ஒப்புக் கொண்டார். நீதிபதி அருணாசலம் அறங்காவலராக நியமிக்கப்பட்டார். ஆசிரமத்தை யோகியின் அடியவராகிய மா தேவகி வழிநடத்தினார்.

நாமத்தைச் சொல்லுதலே சரணாகதி;
நாமத்தைச் சொல்லுதலே சமாதி;
நாமத்தைச் சொல்லுதலே தியானம்

என்று நாம ஜபத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார் யோகி ராம்சுரத்குமார்.

மறைவு

யோகி ராம்சுரத்குமார், புற்று நோயின் தாக்கத்தால் பிப்ரவரி 20, 2001 அன்று மகாசமாதி அடைந்தார். அவரது உடல் அவரது ஆசிரமத்தில் சமாதி செய்விக்கப்பட்டது. அங்கு அவரது நினைவாக லிங்கம் ஒன்று அமைக்கப்பட்டது.

நினைவுகள்

“Yogi Ramsuratkumar, The Godchild, Tiruvannamalai” என்ற தலைப்பில், ட்ரூமன் கேய்லர் வாட்லிங்டன் எழுதி, 1971-ல் வெளியான நூல்தான் யோகி ராம்சுரத்குமாரின் வாழ்க்கை பற்றி வெளியான முதல் நூலாகக் கருதப்படுகிறது. யோகியின் வாழ்க்கை குறித்து ஆங்கிலத்தில் வெளியான முதல் நூலும் அதுதான். தொடர்ந்து யோகி ராம்சுரத்குமாரின் வாழ்க்கை குறித்தும், அவருடனான தங்களது அனுபவங்கள் குறித்தும் பக்தர்கள் பலர் பல நூல்களை எழுதினர்.

யோகி ராம்சுரத்குமார் மந்த்ராலயம்

கன்னியாகுமரியைச் சேர்ந்த பொன். காமராஜ், யோகி ராம்சுரத்குமாரின் பக்தரானார். யோகி மீது நூற்றுக்கணக்கான பாடல்களை இவர் எழுதினார். கன்னியாகுமரி அருகே உள்ள காணி மடத்தில் யோகி ராம்சுரத்குமாருக்கு பொன் காமராஜ் ஆலயம் ஒன்றை எழுப்பினார்.

உசாத்துணை


✅Finalised Page