under review

அழகிய சிங்கர்

From Tamil Wiki
அழகிய என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: அழகிய (பெயர் பட்டியல்)
சிங்கர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சிங்கர் (பெயர் பட்டியல்)

To read the article in English: Azhagiya Singar. ‎

அழகிய சிங்கர்
அழகிய சிங்கர்
விருட்சம் சந்திப்பு (நன்றி - குவிக்கம்.காம்)
விருட்சம் சந்திப்பு (நன்றி - குவிக்கம்.காம்)

அழகிய சிங்கர்( டிசம்பர் 01, 1953 ) எழுத்தாளர், கவிஞர், பத்திரிகை ஆசிரியர் மற்றும் பதிப்பாளர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக 'நவீன விருட்சம்' என்ற இலக்கியப் பத்திரிகையை நடத்தி வருகிறார்.

பிறப்பு, கல்வி

அழகிய சிங்கர் சென்னையில் டிசம்பர் 01, 1953-அன்று பிறந்தார். இவருடைய பெற்றோர் என். சுப்பிரமணியன் - பாக்கியலட்சுமி. பள்ளி கல்வியை குருசாமி முதலியார் டி டி வி பள்ளியில் பயின்றார். மெட்ராஸ் கிறிஸ்துவக் கல்லுரியில் படித்து 1975-ம் ஆண்டு பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

அழகிய சிங்கரின் இயற்பெயர் சந்திரமௌலி. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் ஆலயத்தின் இறைவனான அழகிய சிங்கர் நினைவாக அப்பெயரை புனைபெயராக வைத்துக்கொண்டார்.

அழகிய சிங்கர் செப்டம்பர் 03, 1980-ல் மைதிலியை மணந்தார். தற்போது மனைவியுடன் சென்னையில் வசித்துவருகிறார். இவர், இந்தியன் வங்கியில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மகளுக்குத் திருமணமாகிவிட்டது. மகன், அரவிந்த் சந்திரமௌலி ஃப்ளோரிடாவில் வசிக்கிறார்.

இலக்கியவாழ்க்கை

அழகிய சிங்கரின் முதல் கவிதை மலர்த்தும்பி என்ற சிறு பத்திரிகையில் 1986-ம் ஆண்டு வெளிவந்தது. செருப்பு என்ற சிறுகதை 1987-ம் ஆண்டு வெளிவந்தது. அழகியசிங்கரின் குறுநாவல்கள் தொகுப்பு ஏப்ரல் 1991-ம் ஆண்டு வெளிவந்தது.

இதழியல்

அழகிய சிங்கரின் உறவினர் ஒருவர் 'தூதுவன்' என்ற பெயரில் கையெழுத்துப்பிரதி நடத்திக்கொண்டிருந்தார். பின்னர் அது 'மலர்த்தும்பி' என்ற பெயரில் அச்சில் வெளியானது. அதுவும் 'பிரக்ஞை' என்ற பத்திரிகையுமே அழகிய சிங்கர் 'விருட்சம்' இதழை 1988-ல் ஆரம்பிக்க அடித்தளமாக அமைந்தது. 1993-ல் 'விருட்சம்' 'நவீன விருட்சம்' என பெயர் மாற்றம் பெற்றது.

அமெரிக்காவில் வசிக்கும் அழகிய சிங்கரின் மகன் அரவிந்த், 'நவீன விருட்சம்' இணைய இதழை வடிவமைத்து ஏற்பாடு செய்து கொடுத்தார். நவீன விருட்சம் இதழிலிருந்து தேர்ந்தெடுத்த சில கதை,கவிதை, கட்டுரைகளை அழகிய சிங்கர் தனது வலைப்பதிவில் வெளியிட்டு வருகிறார்.

இலக்கியம் தொடர்பான பல கூட்டங்களையும் விருட்சம் சார்பில் தொடர்ந்து நடத்தி வருகிறார். விருட்சம் சார்பில் நூல்களையும் வெளியிடுகிறார்.

இலக்கிய இடம்

"அழகிய சிங்கருடைய புனைகதை வெளிப்பாட்டில் பகட்டு, போலி, பாவனை ஏதும் இல்லை. ஆனால் வாசக சுவாரசியம் நிறைய இருக்கிறது" என்று அசோகமித்திரன் குறிப்பிடுகிறார். அழகிய சிங்கரின் பல கதைகள் ஆங்கிலம், இந்தி, பஞ்சாபி மற்றும் பிற மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

அழகிய சிங்கர் தனது இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகளாக அசோகமித்திரன், நகுலன், ஞானக்கூத்தன், க.நா.சு, பிரமிள் ஆகியோரை கருத்துகிறார். தி.க. சிவசங்கரன் அழகிய சிங்கரின் இலக்கிய முன்னோடியாக எழுத்து இதழ் ஆசிரியர் சி.சு.செல்லப்பாவை குறிப்பிடுகிறார்.

நூல் பட்டியல்

சிறுகதை தொகுப்புகள்
  • 406 சதுர அடிகள்
  • ராம் காலனி
குறுநாவல் தொகுப்பு
  • சில கதைகள்
கவிதை தொகுப்புகள்
  • யாருடனும் இல்லை
  • தொலையாததூரம்
  • அழகியசிங்கர்கவிதைகள்
தொகுப்புநூல்கள் - விருட்சம் பதிப்பகம்
  • உரையாடல்கள் - அசோகமித்திரன்,
  • வெங்கட்சாமிநாதனின் நேர்காணல்கள்
  • விருட்சம்கதைகள்
  • விருட்சம் கவிதைகள்
  • விட்டல்ராவுடன் இணைந்து 'இந்தநூற்றாண்டுச் சிறுகதைகள்' என்ற தலைப்பில் மூன்று சிறுகதைத்தொகுப்புகள்
  • யூ.ஜி. கிருஷ்ணமூர்த்தி, ஸ்டெல்லா புரூஸ், ஆத்மாநாம், பிரமிள், ஞானக்கூத்தன்,லாவண்யா ஆகியோர் பற்றிய கட்டுரை மற்றும் கவிதைநூல்கள்.

விருதுகள்

  • கதா விருது - 'அங்கிள்' சிறுகதை
  • திருப்பூர் தமிழ் சங்க விருது - யுகாந்தர் என்ற மொழி பெயர்ப்பு நூல்.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:38:49 IST