அறந்தை நாராயணன்
- நாராயணன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: நாராயணன் (பெயர் பட்டியல்)
அறந்தை நாராயணன் (நாராயணன்: ஜூன் 20, 1940-ஜனவரி 3, 2001) எழுத்தாளர். இதழாளர். பத்திரிகை ஆசிரியர். நாடக ஆசிரியர். நடிகர். முற்போக்கு இயக்கம் சார்ந்து இயங்கினார். தமிழ்த் திரைப்பட வரலாற்றை முழுமையாக எழுதி ஆவணப்படுத்தினார். ‘தமிழ் சினிமாவின் கதை’ என்னும் அந்த நூலுக்காக குடியரசுத் தலைவரின் விருதைப் பெற்றார். குடியரசுத் தலைவரின் விருது பெற்ற முதல் தமிழ்ப் பத்திரிகையாளர்.
பிறப்பு, கல்வி
அறந்தை நாராயணன், ஜூன் 20, 1940-ல், ரங்கூனில், முத்துத்துரை-ஜானகி அம்மாள் இணையருக்கு ஐந்தாவது மகனாகப் பிறந்தார். தந்தை பர்மாவில் பீங்கான் பாத்திரக்கடை நடத்தி வந்தார். இரண்டாம் உலகப் போரின் தாக்கத்தால், குடும்பத்தினர் பர்மாவை விட்டு சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள காசாவயல் கிராமத்திற்கு வந்தனர். சேமிப்புப் பணம் முழுவதையும் உறவினர் ஏமாற்றியதால், அதிர்ச்சியில் தந்தை முத்துத்துரை காலமானார். தாயார் பொறுப்பேற்று குழந்தைகளை வளர்த்தார். அறந்தை நாராயணன், உள்ளூரில் ஆரம்பக் கல்வி பயின்றார். பள்ளி இறுதி வகுப்பை முடித்தார்.
தனி வாழ்க்கை
அறந்தை நாராயணன், நன்னிலம் அருகே உள்ள கிராமம் ஒன்றில் ஓராசிரியர் பள்ளியில் சில ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார். பணியில் தொடர ஆசிரியர் பயிற்சியை முடிக்க வேண்டி இருந்தது. அப்பயிற்சியை விரும்பாததால் பணியிலிருந்து விலகினார். பணி வாய்ப்புத் தேடி சென்னைக்குச் சென்றார். மனைவி கல்பனா. ஒரே மகள், மதுமிதா.
இதழியல் வாழ்க்கை
அறந்தை நாராயணன், சென்னை வடபழனியில், நாடக நடிகர் எம்.எம். சிதம்பரநாதன் வெளியிட்டுவந்த ‘நடிகன்’ என்ற இதழில் சில மாதங்கள் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். பின் சொந்த இதழ் நடத்தும் விருப்பத்தால் ’கல்பனா’ என்ற இதழைத் தொடங்கினார். பொருளாதாரச் சிக்கல்களால் இதழைத் தொடர்ந்து நடத்து முடியாததால் சில மாதங்களுப்பின் பின் இதழ் நின்று போனது.
அறந்தை நாராயணன், பொதுவுடைமை இயக்கம் சார்பாக வெளிவந்த ‘ஜனசக்தி’ இதழின் அச்சகத்தில் உதவியாளராகப் பணியாற்றினார். பின் பிழைதிருத்துநர் ஆனார். சில மாதங்களுக்குப் பின் உதவி ஆசிரியர் ஆக நியமிக்கப்பட்டார். 'ஜனசக்தி' திரை விமர்சனப் பகுதிக்குப் பொறுப்பேற்றார். சினிமா பற்றிய பல கட்டுரைகளை, விமர்சனங்களைத் தொடர்ந்து எழுதினார். கூடவே அரசியல் கட்டுரைகளையும் ‘எரிமலை’ என்ற பெயரில் எழுதினார். அக்கட்டுரைகளின் ஆழமான கருத்துக்களால் ’எரிமலை நாராயணன்’ என்றும், ‘எரிமலை அறந்தை நாராயணன்’ என்றும் அழைக்கப்பட்டார். ஜனசக்தியில் மிக நீண்ட ஆண்டுகாலம் பணியாற்றினார். பொறுப்பாளர் பாலதண்டாயுதத்தின் மறைவுக்குப் பின் ‘ஜனசக்தி’யிலிருந்து விலகினார்.
மீண்டும் கல்பனா
1979-ல் மீண்டும் ‘கல்பனா’ மாத இதழ் தொடங்கப்பட்டது. ஜெயகாந்தன் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். அறந்தை நாராயணன் நிர்வாக ஆசிரியராக இருந்தார். பொதுவுடைமை இயக்கத் தோழர் ரா. கிருஷ்ணையா பதிப்பாசிரியராகச் செயல்பட்டார். நியு செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தினர் இதழின் விநியோக உரிமையை ஏற்றிருந்தனர். ஜெயகாந்தன், அறந்தை நாராயணன், பொன்னீலன், அசோகமித்திரன், வல்லிக்கண்ணன், சா. கந்தசாமி, நீல. பத்மநாபன், பிரபஞ்சன் உள்ளிட்ட பலரது நாவல்களை ‘கல்பனா’ வெளியிட்டது. மாத நாவல் வெளியீடாக இருந்தாலும், கட்டுரைகள், திரை விமர்சனங்கள், துணுக்குகளுடன் பல்சுவை இதழாகக் கல்பனா வெளிவந்தது. ‘ஜன்னல்’ என்ற பகுதியில் இலக்கியம் தொடர்பான பல செய்திகளை எழுதினார் அறந்தை நாராயணன். இடதுசாரி எழுத்தாளர்கள் பலர் இவ்விதழில் எழுதினர்.
இதழுக்கு வாசகர்களிடையே சிறந்த வரவேற்பு இருந்தாலும், பொருளாதாரச் சிக்கல்களால் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் ’கல்பனா’ நின்றுபோனது.
இலக்கிய வாழ்க்கை
பள்ளியில் படிக்கும்போது கையெழுத்து இதழ் ஒன்றை நடத்தினார் அறந்தை நாராயணன். தான் பணியாற்றிய ‘ஜனசக்தி’ மற்றும் ‘கல்பனா’வில் பல தொடர்களை எழுதினார். அவற்றில் பல பின்னாட்களில் நூல்களாக வெளிவந்தன. நாவல்கள், கட்டுரை நூல்கள், வரலாற்று நூல்கள் என 70-க்கும் மேற்பட்ட நூல்களை அறந்தை நாராயணன் எழுதியுள்ளார்.
தமிழ் சினிமாவின் கதை
‘தமிழ் சினிமா’ பற்றி மிக விரிவான ஆய்வை மேற்கொண்டார் அறந்தை நாராயணன். அதுவே பின்னர் ‘தமிழ் சினிமாவின் கதை’ என்ற தலைப்பில் நூலாக வெளிவந்தது. அறந்தை நாராயணன் எழுதிய முதல் நூல் அதுதான். சென்னையில், நவம்பர் 17, 1981-ல், தொ.மு.சி.ரகுநாதன், 'தீபம்' நா. பார்த்தசாரதி, எஸ்.வி. சகஸ்ரநாமம்', 'சோ' ராமசாமி, சிவகுமார், இயக்குநர் ருத்ரய்யா, ஆர்.எம். வீரப்பன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட நிகழ்வில் அந்த நூல் வெளியிடப்பட்டது. ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளில் சினிமா பற்றி எழுதப்பட்டவற்றுள் 'மிகச் சிறந்த நூல்' என்று 1982-ம் ஆண்டில் நடைபெற்ற 'ஃபிலிமோத்ஸ்வ்'-வில், திரைப்பட வளர்ச்சிக் குழுமத்தால் அந்த நூல் தேர்வு செய்யப்பட்டது. அந்த நூலை எழுதியதற்காக குடியரசுத் தலைவரின் விருதைப் பெற்றார் அறந்தை நாராயணன்.
முதன் முதல் திரைத்துறை சார்ந்த நூல் ஒன்றுக்குக் கிடைத்த ஜனாதிபதி விருது அது தான். ஜனாதிபதி விருது பெற்ற முதல் தமிழ்ப் பத்திரிகையாளரும் அறந்தை நாராயணன் தான். ‘தமிழ் சினிமாவின் கதை’ நூல், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. கோமல் சுவாமிநாதன் உள்ளிட்ட பல எழுத்தாளர்களின் வரவேற்பைப் பெற்றது. தமிழ் சினிமாவைப் பற்றி எழுதப்பட்ட முதல் வரலாற்று ஆவணமாக ‘தமிழ் சினிமாவின் கதை’ கருதப்படுகிறது.
திரைப்பட ஆய்வு நூல்கள்
அறந்தை நாராயணன், தினமணி கதிர் இதழில் திரைப்படங்கள் குறித்தும் திரைப்பட நடிக, நடிகைகள் குறித்தும் மிக விரிவாக ஆய்வு செய்து பல தொடர்களை எழுதினார். தினமணி கதிர் ஆசிரியர் கி. கஸ்தூரி ரங்கன் அவரை ஊக்குவித்தார். ‘தமிழ் சினிமாவில் திருடர் வழிபாடு’ என்ற அறந்தை நாராயணனின் ஆய்வுக் கட்டுரை குறிப்பிடத்தகுந்த ஒன்று. தொடர்ந்து திரைப்படத்துறை பற்றி ஆராய்ந்து 'சுதந்திரப் போரில் தமிழ் சினிமா', ‘நாகரீகக் கோமாளி என்.எஸ். கிருஷ்ணன்’, ‘திராவிடம் பாடிய திரைப் படங்கள்’, ‘சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள்', ‘குடியினால் குடை சாய்ந்த கலைக் கோபுரங்கள்’ எனப் பல நூல்களை எழுதினார்.
மதுரை காமராசர் பல்கலைக் கழகம் அறந்தை நாராயணனின் 'சுதந்திரப் போரில் தமிழ் சினிமா' நூலையும், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் இவரது 'ஜக்கா' புதினத்தையும் 1995-1996 கல்வியாண்டில், பாட நூல்களாக வைத்தன. சாகித்ய அகாதமியின் ‘இந்திய இலக்கியச் சிற்பிகள்’ நூல் வரிசைக்காக கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் வாழ்க்கையை விரிவாக ஆவணப்படுத்தினார் அறந்தை நாராயணன். நேஷனல் புக் ட்ரஸ்டுக்காக ‘சுதந்திரப் போராட்ட காலத் தமிழ்ப் பாடல்கள்’ என்ற நூலை எழுதினார். அந்நூலில் விஸ்வநாத தாஸ், கே.பி. சுந்தராம்பாள் போன்றோர் பாடிய தேசபக்திப் பாடல்களை ஆவணப்படுத்தினார்.
நாடக வாழ்க்கை
இளம் வயதிலிருந்தே நாடகத்தில் ஆர்வம் கொண்டிருந்தார் அறந்தை நாராயணன். பொதுவுடைமை இயக்கம் சார்பாகப் பல நாடகங்களை எழுதியதுடன் தானே சில நாடகங்களை இயக்கி நடித்தார். இவரது நாடகங்களை ‘இந்திய மக்கள் நாடக மன்றம்’ அரங்கேற்றியது. அவற்றுள் ‘சேரன் செங்குட்டுவனின் பேரன்’, 'விண்ணிலிருந்து மண்ணிற்கு', ‘இன்குலாப் ஜிந்தாபாத்’, ‘எரிமலை’, ‘கடைசி இலையுதிர்காலம்’, ‘அவள் பெண்ணல்ல’, ‘என்று மடியும் இந்த அடிமையின் மோகம்’ போன்றவை குறிப்பிடத்தகுந்தன. பாலதண்டாயுதம், நடிகர் எஸ்.எஸ். சந்திரன் போன்றோர் அறந்தையின் நாடகங்களில் நடித்தனர்.
தொலைக்காட்சிப் பங்களிப்புகள்
அறந்தை நாராயணன், ’கல்பனா’ இதழில் எழுதிய நாவல் ‘வாரந்தோறும் வயசாகிறது’. இதுவே பின்னர் 'விண்ணிலிருந்து மண்ணிற்கு' என்ற தலைப்பில் மேடை நாடகமாக நடிக்கப்பட்டது. சென்னைத் தொலைக்காட்சியில், ‘பரீக்ஷா’ ஞாநியின் இயக்கத்தில் அதே பெயரில் தொலைக்காட்சித் தொடராகவும் வெளிவந்தது.
தென்னிந்தியத் திரைப்பட வரலாறு பற்றி, தொலைக்காட்சியின் தேசிய ஒளிப்பரப்பில் 'சினிமா சினிமா' என்னும் தலைப்பில் வெளியான தொடருக்கு திரைக்கதை-வசனம் எழுதினார் அறந்தை நாராயணன். என்.கே.விஷன்ஸ் என். கிருஷ்ணசாமி அத்தொடரைத் தயாரித்து இயக்கினார். இத்தொடரின் மூலம் அகில இந்திய அளவில் சிறந்த திரைப்பட ஆய்வாளர் என்னும் அங்கீகாரத்தைப் பெற்றார் அறந்தை நாராயணன்.
அரசியல் வாழ்க்கை
அறந்தை நாராயணன், ம.பொ. சிவஞானத்தின் தமிழரசு கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். சைதாப்பேட்டைத் தொகுதி செயலாளராகப் பணியாற்றினார். தமிழக உரிமைப் போராட்டங்கள் பலவற்றில் கலந்துகொண்டார். அதனால் பல முறை கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். பொதுவுடைமை இயக்கத்தின் மீது கொண்ட ஈர்ப்பால், தேர்தலின் போது பல தொகுதிகளுக்கும் சென்று பிரசாரம் செய்தார். கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவா, பாலதண்டாயுதம் போன்றோரின் பாராட்டைப் பெற்றார். ஜீவாவின் முன்னிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை உறுப்பினராக இணைந்துக் கொண்டார்.
அறந்தை நாராயணன், பொதுவுடைமை இயக்கம் சார்பாகப் பல போராட்டங்களை முன்னெடுத்தார். தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற கட்சிக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற சென்னை மாவட்ட செயலாளராகப் பணியாற்றினார். திரைப்படங்களின் பெண்களின் ஆபாச நடனங்களைக் கண்டித்து இயக்கத் தோழர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். தனது சொந்த ஊரான காசாவயலில் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை உயர்வுக்காக ஆதிக்க ஜாதியினரை எதிர்த்துப் பல போராட்டங்களை முன்னெடுத்தார். தாழ்த்தப்பட்டோர்களை நில உடைமையாளர்களாக்கினார்.
விருதுகள்
- 1982-ல், குடியரசுத் தலைவர் விருது - ‘தமிழ் சினிமாவின் கதை’ நூலுக்காக.
- 1987-ல் சோவியத் நாடு வழங்கிய ’நேரு விருது’ - ‘கடைசி இலையுதிர்காலம்' நாடக நூலுக்காக.
- 1989-ல், தமிழ்நாடு அரசின், தமிழ் வளர்ச்சி இயக்ககத்தின் முதல் பரிசு - ’சுதந்திரப் போரில் தமிழ் சினிமா' நூலுக்காக.
- 1991-ல், ‘தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்' வழங்கிய ‘கலைமாமணி’ விருது.
மறைவு
தீரா மதுப்பழக்கத்தினால் ஏற்பட்ட குடல் பாதிப்பு நோயால், ஜனவரி 3, 2001-ல், தனது 59-ம் வயதில் அறந்தை நாராயணன் காலமானார்.
இலக்கிய இடம்
முற்போக்கு இயக்கம் சார்ந்து இயங்கிய ஆர்.கே. கண்ணன், கே. முத்தையா, மாஜினி போன்றோர் வரிசையில் இடம் பெறுபவர் அறந்தை நாராயணன். உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து, பொது வாசிப்புக்குரிய பல புதினங்களைப் படைத்தார். நாவல்கள் பல எழுதியிருந்தாலும் ’கட்டுரையாளர்’ மற்றும் ‘திரைப்பட ஆய்வாளர்’ என்பதே இவரது தனிப்பட்ட எழுத்துச் சாதனையாக மதிப்பிடப்படுகிறது. தமிழ் சினிமாவின் முதல் வரலாற்று ஆவண நூலைத் தந்த முன்னோடி ஆய்வாளராக அறந்தை நாராயணன் மதிப்பிடப்படுகிறார்.
நூல்கள்
திரைப்பட ஆய்வு நூல்கள்
- தமிழ் சினிமாவின் கதை
- சுதந்திரப் போரில் தமிழ்த் திரைப்படம்
- நாகரீகக் கோமாளி என்.எஸ். கிருஷ்ணன்
- திராவிடம் பாடிய திரைப்படங்கள்
- விடுதலைப் போராட்ட காலப் பாடல்கள்
- கனவு பூமியில் பாரதிதாசன்
- தமிழ்த் திரைப்படங்களின் நேற்றைய நட்சத்திரங்கள்
- குடியினால் குடை சாய்ந்த கலைக் கோபுரங்கள்
- சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள்
- தமிழ்த் திரைப்படங்கள் - சில செய்திகள், சில சிந்தனைகள்
வாழ்க்கை வரலாற்று நூல்கள்
- விடுதலைப் போர் வீராங்கனை கல்பனா
- விடுதலைப் புரட்சியில் பகத்சிங்கும் அவனது தோழர்களும்
- மக்கள் கலைஞர் எம்.பி. சீனிவாசனின் மலரும் நினைவுகள்
- ராஜாராம் மோகன் ராய்
- பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்
- மானுடம் பாடிய புரட்சித் துறவி விவேகானந்தர்
சிறார் நூல்கள்
- தாத்தாவும் சிங்கம், புலி, கரடிகளும்
நாவல்கள்
- ஜக்கா
- டூப்
- மோகத்திரை
- தேவி தரிசனம்
- காதலுக்காக
- குளிர் இரவில் நெருப்பு மலர்
- வாரந்தோறும் வயசாகிறது
- ஒரு கவிதை, புதுக் கவிதை
- கன்னி அம்மன் கோயில்
கட்டுரை நூல்கள்
- பக்த்சிங்
- மேடையில் பேசலாம் வாருங்கள்
- விடுதலைப் போரில் தொழிலாளர்
- தாயின் மணிக்கொடி
- புரட்சிக் கவிஞர்
- மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
- பாரதியார் புகழ் பரப்பிய ப. ஜீவானந்தம்
- இந்திய நாட்டின் புரட்சிகர இளைஞர்கள்
- பாரதி பாராட்டிய புது மன்னன் லெனின்
நாடகங்கள்
- மூர் மார்க்கெட்
- சேரன் செங்குட்டுவனின் பேரன்
- எரிமலை
- அவள் பெண்ணல்ல
- என்று மடியும் இந்த அடிமையின் மோகம்
- விண்ணிலிருந்து மண்ணிற்கு
- இன்குலாப் - ஜிந்தாபாத் (பகத் சிங் வரலாற்று நாடகம்)
- கடைசி இலையுதிர்காலம்(லெனினது இறுதி நாட்கள் பற்றிய மொழிபெயர்ப்பு நாடகம்)
உசாத்துணை
- கல்கி முதல் கண்ணன் வரை, மு.பரமசிவம், புதுமைப்பித்தன் பதிப்பகம், சென்னை. முதல் பதிப்பு: 2008
- Aranthai Narayanan - Life History - Part 1: Youtube Video
- Aranthai Narayanan - Life History - Part 2: Youtube Video
- இலக்கிய முன்னோடிகள்: திருப்பூர் கிருஷ்ணன்
- அறந்தை நாராயணனின் தினமணி கதிர் திரைப்படக் கட்டுரைகள்: பசுபதிவுகள்
- அறந்தை நாராயணன் நூல்கள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
11-Dec-2022, 18:59:03 IST