கல்பனா (இதழ்)
- கல்பனா என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கல்பனா (பெயர் பட்டியல்)
கல்பனா (1979) தமிழ் மாத இதழ். இதற்கு ஜெயகாந்தன் ஆசிரியராக இருந்தார். அறந்தை நாராயணன் நிர்வாக ஆசிரியராகச் செயல்பட்டார். மாதந்தோறும் நாவல்களுடன் கதை, கட்டுரை, நேர்காணல், கேள்வி-பதில் பகுதி, துணுக்குச் செய்திகள் என்று பல்வேறு அம்சங்களைக் கொண்ட இதழாக கல்பனா வெளிவந்தது.
பதிப்பு, வெளியீடு
கல்பனா இதழ் மே 1, 1979-ல் தொடங்கப்பட்டது. அறந்தை நாராயணனால் ஆரம்பிக்கப்பட்டு நின்று போன இதழை, முற்போக்கு இயக்கத் தோழர்கள் ஒருங்கிணைந்து மீண்டும் தொடங்கினர். ஜெயகாந்தன் இதழின் ஆசிரியராக இருந்தார். அறந்தை நாராயணன் நிர்வாக ஆசிரியராகவும், ரா. கிருஷ்ணையா பதிப்பாசிரியராகவும் செயல்பட்டனர். நியு செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தினர் இதழின் விநியோக உரிமையை ஏற்றிருந்தனர். இடது சாரி இயக்கத்தைச் சார்ந்தவர்களின் படைப்புகள் இவ்விதழில் அதிகம் இடம் பெற்றன. இதழின் விலை 1 ரூபாய்.
இதழின் நோக்கம்
முதல் இதழில், இதழைத் தொடங்கியது பற்றி, "உலக இலக்கியங்களின் தரத்துக்குத் தமிழ்மொழியில் தற்காலத் தலைமுறையின் சிறப்பான பங்கை ஆற்றும் துணிவுடன் 'கல்பனா' தக்கோரைக் கொண்டு தொடங்கப்பெறுகிறது. எமது பணியின் சிறப்புக்கேற்பவே உங்கள் ஆதரவின் ஆழமும் வளமும் ஆழ்ந்து பெருகும் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். அதனை அறிவித்து இலக்கியத்துறையில் வர்த்த நோக்கமெனும் மாயைக்கு இரையாகிவரும் படைப்பிலக்கியக் கர்த்தாக்களை எச்சரிப்பது கூடக் 'கல்பனா' வின் பணிகளில் ஒன்றாகும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், "முற்போக்கான எழுத்தாளர்களின் ஜனநாயக, புதிய இலக்கிய மனோபாவமுள்ள சிந்தனைகளை, படைப்புகளை தமிழ் மக்களுக்குப் பரவலாக விநியோகம் செய்ய வேண்டியது கல்பனாவின் தலையாய கடமை என்று இந்த அரிய பொறுப்பினை நாங்கள் ஏற்கிறோம்." என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
உள்ளடக்கம்
இதழின் உள்ளே முகப்புப் பக்கத்தில், பறந்து செல்லும் பறவைகளின் இலச்சினை, 'கல்பனா' என்ற இதழின் பெயருடன் இடம் பெற்றது. அதற்குக் கீழே 'வேறுள குழுவையெல்லாம் மானுடம் வென்றதம்மா..' என்ற கம்பனின் வரிகள் இடம் பெற்றிருந்தன. அதன் கீழே பொருளடக்கம் இடம் பெற்றது.
கல்பனாவின் முதல் இதழில் (மே 1, 1979), 'எங்கெங்கு காணினும்...' என்னும் ஜெயகாந்தனின் நாவல் வெளியாகியுள்ளது. நாவலின் பின்னுரையில் ஜெயகாந்தன், "இதனைக் கற்பனை புரட்சியென்று - புரட்சியை விரும்பாதவர்களும், புரட்சிகரக் கற்பனை - என்று புரட்சியின் ஆதரவாளர்களும் கருதுவர்" என்று குறிப்பிட்டுள்ளார். மாத நாவல் வெளியீடாக இருந்தாலும், கட்டுரைகள், திரை விமர்சனங்கள், புத்தக விமர்சனம், துணுக்குச் செய்திகள் இடம் பெற்றன. 'மன்னார்சாமியின் பதில்கள்' என்னும் கேள்வி-பதில் பகுதி வாசகர்களைக் கவர்ந்த ஒன்றாக இருந்தது.
ஜெயகாந்தனின் 'ஓர் இலக்கியவாதியின் பத்திரிகை அனுபவங்கள்' கல்பனாவில் தான் தொடராக வெளிவந்தது. எஸ்.ஆர். கண்ணன் எழுதிய 'குறள்: ஒரு ஞான நூல்' என்ற தொடர் ஆய்வுக் கட்டுரை இவ்விதழில் வெளியானது. 'ஜன்னல்' பகுதியில் நாட்டு நடப்புகளை காத்திரமாக விமர்சித்து எழுதினார் அறந்தை நாராயணன். ஜெயகாந்தன், எஸ். ஆர். கண்ணன் உள்ளிட்ட பலரது கட்டுரைகள் தொடர்ந்து கல்பனாவில் வெளியாகின.
இடதுசாரி எழுத்தாளர்கள் பலர் இவ்விதழில் எழுதினர். வாசகர்களிடையே 'கல்பனா' இதழுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. மார்க்சிய அறிஞர் மொஹித் சென், ஜஸ்டிஸ் மகராஜன், நா. பார்த்தசாரதி, லக்ஷ்மி, நா. வானமாமலை, பி.இ. பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலரது பாராட்டை 'கல்பனா' பெற்றது.
கல்பனா வெளியிட்ட நாவல்கள்
அசோகமித்திரனின் குறுநாவல் 'தலைமுறைகள்', அறந்தை நாராயணன் எழுதிய 'வாரந்தோறும் வயசாகிறது', வல்லிக்கண்ணனின் 'ஒரு வீட்டின் கதை', பொன்னீலன் எழுதிய 'புதிய மொட்டுகள்', நீல பத்மநாபனின் 'உதயதாரகை', பிரபஞ்சன் எழுதிய 'ஆண்களும் பெண்களும்', சுஜாதாவின் 'மண்மகன்', சகுந்தலை எழுதிய 'கரை சேரும் ஓடங்கள்' உள்ளிட்ட பல நாவல்கள் 'கல்பனா'வில் வெளியாகின.
பங்களிப்பாளர்கள்
- ஜெயகாந்தன்
- அறந்தை நாராயணன்
- எஸ். ஆர். கண்ணன்
- தேவபாரதி
- பொன்னீலன்
- அசோகமித்திரன்
- வல்லிக்கண்ணன்
- நீல. பத்மநாபன்
- சா. கந்தசாமி
- பிரபஞ்சன்
- சு. சமுத்திரம்
- சுஜாதா
- சந்திரகாந்தன்
- தாமரை செந்தூர்பாண்டி
- வையவன்
- சகுந்தலை
- ஜோதிர்லதா கிரிஜா
- விமலா ரமணி
மற்றும் பலர்
நிறுத்தம்
சுமார் இரண்டு ஆண்டுகாலம் (26 இதழ்கள்) வெளிவந்த 'கல்பனா', பொருளாதாரப் பிரச்சனைகளால் 1981-ல் நின்று போனது.
உசாத்துணை
- தமிழில் சில முதலிதழ்கள், நவீன்குமார், நர்மதா பதிப்பகம், சென்னை. முதல் பதிப்பு: 2011.
- கல்பனா இதழ்கள், தனிநபர் சேகரிப்பு, அமரர் பி.எஸ். பாலசுப்பிரமணியன்.
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
08-Feb-2023, 07:23:36 IST