first review completed

சுதேசமித்திரன்

From Tamil Wiki
Revision as of 20:41, 31 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Category Category:இதழ்கள் சேர்க்கப்பட்டது)
சுதேசமித்திரன் வார இதழ் - 1931: (படம் நன்றி : ஸ்ரீதேவி ரங்கராஜ்)
சுதேசமித்திரன் ஆகஸ்ட் 1936 இதழ்

சுதேசமித்திரன், தமிழில் வெளியான முதல் நாளிதழ். 1882-ல், வார இதழாகத் தொடங்கப்பட்ட சுதேசமித்திரன், 1899 முதல் நாளிதழாக வெளிவந்தது. இதனைத் தொடங்கியவர் ஜி. சுப்பிரமணிய ஐயர். இவர் ஹிந்து இதழின் ஆசிரியர். விடுதலை வேட்கை உணர்வை வெளிப்படுத்தும் இதழ்கள் தமிழில் அக்காலத்தில் இல்லை என்பதால், அதற்காகவே சுதேசமித்திரன் இதழைத் தொடங்கினார். பாரதியார் இவ்விதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.

பதிப்பு, வெளியீடு

தேசபக்தராக இருந்த ஜி. சுப்பிரமணிய ஐயர், ஹிந்து நாளிதழின் ஆசிரியர். இந்திய தேசிய காங்கிரஸ் மகாசபை தொடங்கக் காரணமாக இருந்தவர்களுள் ஒருவர். அக்காலத்தில் வெளிவந்து கொண்டிருந்த ஆங்கில இதழ்களைப் போலத் தமிழிலும் இதழ் ஒன்றைக் கொண்டு வர வேண்டுமென்று விரும்பினார். தேசிய உணர்வையும் விடுதலை வேட்கையையும் மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதற்காக, மார்ச் 1882-ல், சுதேசமித்திரன் இதழைத் தொடங்கினார்.

1893-ல், வாரம் இருமுறை இதழாக சுதேசமித்திரன் வெளிவந்தது. 1897-ல், வாரம் மும்முறையானது. 1899-ல், நாளிதழானது. மக்களிடையே அரசியல், சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அரசியல், சமூகம், தேசியம் சார்ந்து பல செய்திகளை வெளியிட்டது.

1893-ல் வெளிவந்த சுதேசமித்திரன் வார இதழின் தனிப்பிரதி விலை 2 அணா. வருஷ சந்தா, இந்தியாவில் தபால் கூலியோடு சேர்த்து ரூபாய் ஆறு. இலங்கை , பர்மா, அந்தமான் தீவுகளுக்கு ரூபாய் ஐந்து. சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு ரூபாய் ஏழு என்று விற்பனை செய்யபட்டது. நாளிதழ் 1750 பிரதிகளும் , வார இதழ் 1900 பிரதிகளும் விற்பனையாகின.

இதழின் நோக்கம்

மக்களிடையே அரசியல், சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதே சுதேசமித்திரன் இதழின் முக்கிய நோக்கமாக இருந்தது. இதழின் நோக்கம் பற்றி, ஜி. சுப்பிரமணிய ஐயர். இதழின் பொன்விழா ஆண்டில் பின்வருமாறு குறிப்பிட்டார். ”சுதேசமித்திரன், ஹிந்து பத்திரிகையுடன் சேர்ந்து தனது வாழ்க்கையை ஆரம்பித்தது. அப்பத்திரிகையின் நோக்கத்தையே இதுவும் நோக்கமாகக் கொண்டது. அதாவது பத்திரிகைகள் அதிகம் இல்லாத காலத்தில் தேசத்திற்குச் செய்தியைப் பரப்பி அறிவைப் பெருக்கியும், படித்தவர்களுடையவும் சாமான்ய ஜனங்களுடையவும் அபிப்பிராயங்களை வெளிப்படுத்தி அதை உருவாக்கியும் , ஜனங்களுக்கு வழிகாட்டியும் தேச சேவை செய்வதே இந்தப் பொது உத்தேசமாகும்.”

இதழின் வரலாறு

வழக்குகள்

சுதேசமித்திரன் காங்கிரஸ் ஆதரவு இதழாக இருந்ததால் பிரிட்டிஷ் அரசால் பல்வேறு வழக்குகளை அது எதிர்கொண்டது. சுதேசமித்திரனில் வெளிவந்த பல செய்திகள் ராஜத்துவேஷக் குற்றச்சாட்டுகளுக்கு உரியனவாக பிரிட்டிஷ் அரசால் கருதப்பட்டன. தொழுநோயின் காரணமாகக் கொடைக்கானலில் ஓய்வில் இருந்த ஆசிரியர் ஜி . சுப்பிரமணிய ஐயர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீன் நிராகரிக்கப்பட்டது. அரசாங்கத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த வி . கிருஷ்ணசாமி ஐயர், அட்வகேட் - ஜெனரல் பி.எஸ். சிவசாமி ஐயர் போன்றோரது முயற்சியால் சில நிபந்தனைகளின் பேரில் ஜி. சுப்பிரமணிய ஐயர் விடுவிக்கப்பட்டார்.

ஜி. சுப்பிரமணிய ஐயர் (படம் நன்றி: ஹிந்து நாளிதழ்)
சுதேசமித்திரன் துணை ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர், கட்டுரையாளர் : பாரதி
ஸி.ஆர். ஸ்ரீநிவாஸன், சுதேசமித்திரன் ஆசிரியர்
சுதேசமித்திரன் ஆசிரியர்கள்

ஹிந்து இதழில் பணியாற்றி வந்த சி.வி. சுவாமிநாதையர் சுதேசமித்திரன்ஆசிரியராகச் சேர்ந்ததும் இதழ் மேலும் பொலிவு பெற்றது. விற்பனை உயர்ந்தது. பின் சுவாமிநாதையர் விலகி ‘விவேக சிந்தாமணி’ இதழைத் தோற்றுவித்தார் என்றாலும் விற்பனையில் மாற்றமில்லாமல் தொடர்ந்தது. 1904-ல், சுப்ரமணிய பாரதியார் இதன் ஆசிரியராகச் சேர்ந்தார். அவருடைய எழுத்துக்களால் சுதேசமித்திரன் மேலும் பொலிவு பெற்றது. பாரதி, குறிப்பிடத்தக்க பல கவிதை, கதை, கட்டுரைகளை இவ்விதழில் எழுதினார். மொழிபெயர்ப்பாளராகவும் செயல்பட்டார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் ஆசிரியருடன் எழுந்த சிறு கருத்துவேறுபாட்டால் பாரதி இவ்விதழிலிருந்து விலகினார். என்றாலும் வரகவி அ. சுப்பிரமணிய பாரதி, குருமலை சுந்தரம் பிள்ளை, சங்கரலிங்கம் பிள்ளை, கோதண்டராமையர் போன்ற துணை ஆசிரியர்கள் உறுதுணையுடன் இதழ் தொடர்ந்தது.

1915-ல் ஜி. சுப்பிரமணிய ஐயருக்கு மேலும் உடல்நலம் குன்றியது. அதனால் இதழை தஞ்சையில் வழக்குரைஞராகப் பணியாற்றி வந்த ஏ. ரங்கசாமி ஐயங்காரிடம் ஒப்படைத்தார். ரங்கசாமி ஐயங்கார் ஹிந்துவின் நிறுவனரான எஸ். கஸ்தூரிரங்க ஐயங்காரின் மருமகன். ஹிந்துவில் மேலாளராகப் பணியாற்றி அனுபவம் பெற்றவர். அந்த அனுபவம், அவருக்கு சுதேசமித்திரன் ஆசிரியர் ஆனதும் கை கொடுத்தது.

ரங்கசாமி ஐயங்கார் பாரதியின் மீது பெரு மதிப்புக் கொண்டவர். அக்காலக் கட்டத்தில் புதுச்சேரியில் வசித்து வந்த பாரதியை தொடர்ந்து சுதேசமித்திரனுக்கு எழுத வேண்டினார். பாரதியின் புகழ் பெற்ற 'தராசு' கட்டுரைகள் அவ்வாறு வெளியாகின. நாளடைவில் தனது உறவினரான ஸி.ஆர். ஸ்ரீநிவாசனை மேலாளராக நியமித்தார் ஐயங்கார். பிற்காலத்தில் ஸி.ஆர். ஸ்ரீநிவாசன் நல்ல அனுபவம் பெற்று சுதேசமித்திரனின் ஆசிரியரானார். இதழையும் வெற்றிகரமாக நடத்தினார். பல கதை, கட்டுரைகளை சுதேசமித்திரனில் அவர் எழுதினார்.

புதுச்சேரியிலிருந்து வெளியேறி, கடையத்தில் வசித்து வந்த பாரதியை, சுதேசமித்திரனில் சேருமாறு ரங்கசாமி ஐயங்கார் தொடர்ந்து வலியுறுத்தினார். அதனை ஏற்றுக் கொண்ட பாரதி, நவம்பர், 1920-ல் அதன் துணை ஆசிரியராகச் சேர்ந்தார். பாரதியின் ஆசிரியத்துவத்தில் சிறப்பாக வெளிவந்தது மித்திரன். கதை, கவிதை, கட்டுரைகள், சமூக விஷயங்கள் என்று நிறைய எழுதினார் பாரதி. பாரதியின் மறைவுக்குப் பின்னரும் இதழ் சிறப்புடன் வெளிவந்தது. ஏ. ரங்கசாமி ஐயங்காரின் ஆசிரியத்துவத்தில் சுதேசமித்திரன், ஆங்கிலத்திலும் வார இதழாகச் சிலகாலம் வெளிவந்தது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்காரின் மோகனாங்கி
துப்பறியும் சுப்புடு (படம் நன்றி: பசுபதிவுகள்)
இங்கிலாந்தில் காந்தி
ஜீவ வாக்கு - பாரதியின் தமிழ் மொழிபெயர்ப்பு, சரஸ்வதி மகால் நூலகம்.

உள்ளடக்கம்

சுதேசமித்திரன், காந்தி மற்றும் காங்கிரஸ் ஆதரவு இதழாக இருந்தது. காந்தி, தென்னாப்பிரிக்காவில் நிகழ்த்திய அறப்போர், தென்னாப்பிரிக்காவில் நிகழ்ந்த இந்தியர் போராட்டங்கள் போன்றவற்றைத் தமிழர்கள் அறியச் செய்தது. நேட்டால் , டிரான்ஸ்வால் , கேப்காலனி , ஆரஞ்சுரிவர் ஸ்டேட்ஸ் போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் சுதேசமித்திரனுக்கு நிருபர்கள் இருந்தனர். காந்தியைப் பற்றி, தமிழில் முதன் முதலாகச் செய்தி வெளியிட்ட இதழாக, சுதேசமித்திரன் கருதப்படுகிறது.

சிறுகதை, நாவல் தொடர், கட்டுரை, பாடல்கள், துணுக்குகள், உலகச் செய்திகள், சுதேசிச் செய்திகள், சுதேச வர்த்தமானம், இந்திய வர்த்தமானம், பிரபஞ்ச வர்த்தமானங்கள், இசை விமர்சனங்கள், நூல் மதிப்புரை எனப் பலவற்றிற்கு இடமளித்தது சுதேசமித்திரன். படங்களுடன் கூடிய கட்டுரைகளை வெளியிட்டது. விளம்பரங்களும், பஞ்சாங்கக் குறிப்புகளும் இடம் பெற்றன. சமாசாரக் குறிப்பு , சமாசாரக் கடிதம், தலையங்கங்கள் இதழ் தோறும் இடம் பெற்றன.

விவசாயப் பகுதி, ஆடை ஆபரணங்கள் பகுதி, பொருட்களின் விலையைக் கூறும் பகுதி, உலக வர்த்தமானங்கள் என மக்களுக்குப் பயன் தரும் செய்திகள் இதழ்தோறும் வெளிவந்து வாசகர்களைக் கவர்ந்தன. சிறுவர்களுக்கான பகுதிக்கும் இடமளித்தது மித்திரன்.

விளம்பரங்கள்

தாது புஷ்டி லேகிய விளம்பரம், தங்க பஸ்ப லேகிய விளம்பரம் தொடங்கி புத்தக வெளியீட்டு விளம்பரங்கள், இசைத் தட்டு விளம்பரங்கள், கேட்லாக் விளம்பரங்கள், மாந்த்ரீக ரசமணி, லேகியம், கூந்தல் எண்ணெய், தன்வந்திரி கவசம், தாம்பிர பஸ்பம், மஹா பில்வாதி லேகிய விளம்பரங்கள், உட்வர்ஸ் க்ரைப் வாட்டர் விளம்பரம், ருக்மிணி குக்கர் விளம்பரம், திரைப்பட விளம்பரங்கள் போன்றவை சுதேசமித்திரனில் வெளியாகின. திரைப்படங்கள் பற்றிய செய்திகள் அரைப்பக்க, முழுப்பக்கப் படங்களுடன் வெளிவந்தன.

பங்களிப்பாளர்கள்

எஸ்.ஜி. ராமாநுஜலு நாயுடு, குருமலை சுந்தரம்பிள்ளை உள்ளிட்ட அக்காலத்தின் புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் பலர் மித்திரனில் தொடர்கதைகள் எழுதினர். பாரதியின் புதல்வி தங்கம்மாள் பாரதி, தன் தந்தையின் நினைவுகளை, ‘பாரதி - புதுவை நிகழ்ச்சிகள்’ என்ற தலைப்பில் தொடராக எழுதினார். ’வேள்வி’ என்ற தலைப்பில் சிறு நாடகத் தொடர் ஒன்றையும், மேலும் சில கட்டுரைகளையும் அவர் எழுதினார். மகாகனம் வி.எஸ். ஸ்ரீநிவாஸ சாஸ்திரியார் தன் வாழ்க்கை நிகழ்வுகளைத் தொடராக எழுதினார். விடுதலைப் போராட்ட வீரர் தீரர் எஸ். சத்தியமூர்த்தி எழுதிய கடிதக் குறிப்புகள், ‘ஸ்ரீ ஸத்யமூர்த்தியின் கடிதங்கள்’ என்ற தலைப்பில் வெளியானது. திரைப்பட விமர்சனங்களும் ஆரம்ப கால இதழில் வெளியாகின. பத்திரிகை/ நூல்கள் விமர்சனப் பகுதியும் ‘புஸ்தக விமர்சம்’ என்ற தலைப்பில் இடம் பெற்றது.

ய. மகாலிங்க சாஸ்திரி, வடுவூர் துரைசாமி ஐயங்கார், வ.ரா., க.நா.சுப்ரமண்யம் போன்றோரும் சுதேசமித்திரனில் பங்களித்துள்ளனர். ’க.நா.சுப்ரமண்யம்’ பல சிறுகதைகளை, மொழிபெயர்ப்புகளை, கட்டுரைகளை இவ்விதழில் எழுதியிருக்கிறார். அவரது முதல் நாவலாகக் கருதப்படும் ‘சர்மாவின் உயில்’ சுதேசமித்திரனில் தான் தொடராக வெளியானது. பி.ஸ்ரீ. , மகாபாரதம் குறித்து ஆராய்ந்து ‘மகாபாரத ஸாரம்’ என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். கி.வா.ஜகந்நாதனின் ‘நாடோடிப் பாட்டுக்கள்’ உள்ளிட்ட பல இலக்கியக் கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

‘மோகனாங்கி அல்லது திவான் திருமலைராயன் ஸாகஸம்’ என்ற தலைப்பில் தொடர் ஒன்றை எழுதியிருக்கிறார் வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார். இது அவரது வழக்கமான பாணி துப்பறியும் நாவல் அல்ல. சரித்திர நாவல். நாயக்கர் காலத்தைப் பின்னணியாகக் கொண்டது. கா.சி. வேங்கடரமணி எழுதிய தமிழின் முதல் தேசிய சிந்தனை நாவலாகக் கருதப்படும் ‘தேசபக்தன் கந்தன்’ முதன் முதலில் தொடராக வெளியானது சுதேசமித்திரனில்தான். தி.ஜானகிராமனின் புகழ்பெற்ற ‘மோகமுள்’ சுதேசமித்திரனில் தான் தொடராக வெளியானது. எழுத்தாளர் ’ஆர்வி’யின் ‘வஸூமதி’ இதில் தொடர்கதையாக வெளிவந்தது. இசைக் கச்சேரிகள் பற்றியும் இசை விற்பன்னர்கள் பற்றியும் ‘கண்டதும் கேட்டதும்’ என்ற தலைப்பில், ‘நீலம்’ என்ற பெயரில் சுதேசமித்திரனின் உதவி ஆசிரியர் ‘நீலமேகம்’ கட்டுரைகள் எழுதியுள்ளார்.

கர்நாடக இசை தொடர்பான பாடல் ஸ்வரக் குறிப்புகளும் இதழ்தோறும் வெளிவந்தன. நீலகண்ட பிரம்மச்சாரி, என்.கே. அய்யர் என்ற பெயரில் வரலாற்று கால மன்னர்கள் பற்றி எழுதினார். துப்பறியும் சாம்புவை நினைவுபடுத்தும் வகையில் ‘துப்பறியும் சுப்புடு’ என்னும் படக்கதை வெளியானது.

ஜி. சுப்பிரமணிய ஐயர், பாரதியார், பனகல் ராஜா, பச்சையப்ப முதலியார், சேஷைய்யா, ரவிவர்மா என தமிறிஞர்கள், சான்றோர்கள், கலைஞர்களைப் பற்றி ‘தென்னிந்தியப் பிரமுகர்கள்’ என்னும் தொடர் கட்டுரை வெளியானது. ‘சங்கீதப் பகுதி’ என்ற தலைப்பிலான தொடரில், அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், துறையூர் ராஜகோபால் சர்மா போன்றோர் தொகுத்த தியாகராஜர் உள்ளிட்டோரின் இசைக் கீர்த்தனைகளுக்கான ‘ஸ்வரக் குறிப்புகள்’ வெளியாகின. இதழ்தோறும் புகைப்படக்காரர்கள் எடுத்த பல்வேறு படங்களுடன் கூடிய செய்திகள் வெளியாகின.

பம்மல் சம்பந்த முதலியார், எம்.வி.வெங்கட்ராம், லா.ச. ராமாமிர்தம், ச.து.சு. யோகி, பெ. தூரன், சாலை இளந்திரையன், சாலிவாகனன், தமிழ் ஒளி, தமிழழகன், லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி, கோவி. மணிசேகரன் என சுதேசமித்திரனுக்குப் பங்களித்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம்.

சுதேசமித்திரன் அனுபந்தம்

ஆண்டுதோறும் வெளியான சுதேசமித்திரன் அநுபந்தம் அக்காலத்தில் பலராலும் வரவேற்கப்பட்டன. அதில் அரிய இலக்கிய ஆய்வுக்கட்டுரைகள் , சிறுகதைகள் , கவிதைகள் இடம் பெற்றன.

எழுத்துச் சீர்திருத்தம்

சுதேசமித்திரன், பரிசோதனை முயற்சியாக இதழின் சில பக்கங்களை அன்றைய தமிழ் எழுத்துச் சீர்திருத்த முறையில் அச்சடித்து வெளியிட்டது. ஆனால், அது வாசகர்களால் வரவேற்கப்படாததுடன் விற்பனையும் பாதிக்கப்பட்டது. அதனால் ஆறுமாத காலத்திற்குப் பின், பழைய பழைய முறையிலேயே இதழ் அச்சடிக்கப்பட்டது. சுதேசமித்திரன் அரசியல் செய்திகளைக் குறிப்பிடும்போது ஆங்கில ஆட்சிச் சொற்களுக்கான சரியான நேரடி தமிழ்ச் சொற்கள் அப்போது புழக்கத்தில் இல்லாததால், ஆங்கிலச் சொற்களை அப்படியே நேரடியாகத் தமிழ்ப் படுத்திக் கையாண்டது. சம்ஸ்கிருதச் சொற்களையும் அதிகம பயன்படுத்தியது. அதனால் சுப்பிரமணிய சிவா, வ. உ. சிதம்பரம் பிள்ளை போன்றோர் அதனைக் கண்டித்தும், கல்கி கிருஷ்ணமூர்த்தி போன்றோர் ‘தேசபக்தன்’ இதழின் நடையை ஒப்பிட்டும் எழுதினர். மெல்ல மெல்ல அந்த நடை பிற்காலத்தில் மாறியது.

சுதேசமித்திரன் பதிப்புகள்

சுதேசமித்திரன், தனது அச்சகம் மூலம் பல்வேறு நூல்களை அச்சிட்டு வெளியிட்டது.

  • போஜ சரித்திரம் (நாடகம்), டி.எஸ். நாராயண சாஸ்திரி,1900.
  • ஜார்ஜ் சக்கரவர்த்தியின் டெல்லி தர்பார், சுதேசமித்திரன் ஆசிரியர்குழு, 1912.
  • ஆசாரத் திருத்த வியாசங்கள், ஜி. சுப்பிரமணிய ஐயர்,1914.
  • ஐரோப்பிய யுத்த சரித்திரம் : அதன் வரலாறும் நடவடிக்கைகளும், டி.எஸ். விஸ்வநாதன், 1914.
  • சித்தார்த்தன், அ. மாதவையா, 1918.
  • ஜீவவாக்கு-ஜகதீஸ் சந்திரபோஸ் செய்த பிரசங்கம், (தமிழாக்கம் : சி. சுப்பிரமணிய பாரதி),1918.
  • மகாகவி ஸர் ரவீந்திரநாத் தாகூர் அருளிய பஞ்ச வியாஸங்கள், (தமிழாக்கம் : சி. சுப்பிரமணிய பாரதி),1918.
  • மஹாவீரர், ஸி.ஆர். ஸ்ரீநிவாச ஐயங்கார், பி.ஏ., 1921.
  • ஆரோக்யமார்க்கப் ப்ரகாசகம், யோகி இயற்கைதாஸன்,1923.
  • ஸ்ரீமத் சங்கராசார்யர் - ஸி.ஆர். ஸ்ரீநிவாச ஐயங்கார், பி.ஏ., 1925.
  • ஸ்ரீமத் பகவத் கீதை, ஸி.ஆர். ஸ்ரீநிவாச ஐயங்கார், பி.ஏ., 1954.

மற்றும் காங்கிரஸ் வரலாறு உள்ளிட்ட பல நூல்கள் சுதேசமித்திரன் அச்சகம் மூலம் வெளியாகியுள்ளன.

இதழின் வீழ்ச்சி

சுதேசமித்திரனின் ஆசிரியராக இருந்த ஸி.ஆர். ஸ்ரீநிவாசன், 1962-ல் காலமானார். அவரது மறைவிற்குப் பின் இதழ் மெல்ல மெல்ல வீழ்ச்சியைச் சந்தித்தது. 1968 முதல் 1971 வரையில் அடிக்கடி தொழிலாளர் வேலை நிறுத்தங்கள் நிகழ்ந்தன. இதழின் அலுவலகமும். மவுண்ட் ரோடு விக்டோரியா ஹவுஸிலிருந்து ராயப்பேட்டை தேசபந்து நிவாஸிற்கு மாற்றப்பட்டது. இந்த அலுவலக மாற்றத்தால், இதழ் நிறுத்தப்பட்டது.

1972 -ல் ‘சுதேசமித்திரன் பப்ளிக் லிமிடெட் ’ என்ற பெயரில் புதிய நிறுவனம் தொடங்கப்பட்டது. எம் . பக்தவத்சலம், அதன் தலைவரானார். சி.ஆர். ராமசாமி நிர்வாகி மற்றும் ஆசிரியராகச் செயல்பட்டார். ஆனால், பொருளாதாரப் பிரச்சனையால் 1978-ல் இதழ் நின்றுபோனது. மார்ச் 1980-ல், ஜான் தாமஸ் என்பவர் மீண்டும் சுதேசமித்திரன் இதழைத் தொடங்கி நடத்தினார். ஆனால், அவராலும் அவ்விதழின் வீழ்ச்சியைத் தடுக்க முடியவில்லை. நவம்பர் 1994-ல், ராக்ஃபோர்ட் பப்ளிகேஷன் என்ற் நிறுவனம் மீண்டும் சுதேசமித்திரன் இதழைத் தொடங்கியது. காலை நாளிதழாக இவ்விதழ் வெளிவந்தது. ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர். நாகராசன் ஆசிரியராக இருந்தார். இரண்டு ஆண்டுகள் வெளிவந்த சுதேசமித்திரன், பொருளாதாரப் பிரச்சனையால் மே 1, 1996-ல் நின்றுபோனது. அதன் பிறகு அந்த இதழ் மீண்டும் வெளிவரவில்லை.

சுதேசமித்திரன் இதழ் தொகுப்பு

இதழ்த் தொகுப்பு

சுதேசமித்திரனில் வெளியான கவிதை, கதை, கட்டுரை, நாடகம், மொழிபெயர்ப்புகள் ஆகியவற்றில் சில தொகுக்கப்பட்டு ’சுதேசமித்திரன் இதழ் தொகுப்பு’ என்ற தலைப்பில் இரு பாகங்களாக வெளியாகியுள்ளன. வல்லிக்கண்ணனும், ப. முத்துக்குமாரசாமியும் இணைந்து இதனைத் தொகுத்துள்ளனர். கலைஞன் பதிப்பகம் இதனை வெளியிட்டுள்ளது.

இலக்கிய இடம்

மக்களிடையே அரசியல், சமூக விழிப்புணர்வை ஏற்படுத்திய முதல் இதழ் சுதேசமித்திரன். தமிழில் வெளியான முதல் நாளிதழாக ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. தேசியம் சார்ந்து பல செய்திகளை வெளியிட்டதுடன், நாட்டுப்பற்று, மொழிப்பற்று வளரவும் காரணமாக இருந்தது. சிறுகதைகள், புதினத் தொடர்களோடு மொழிபெயர்ப்புக்கும், நாடகங்களுக்கும் இடமளித்தது. சுதேசமித்திரனின் வெற்றியைத் தொடர்ந்து, ‘மித்திரன்’ என்ற பின் இணைப்போடு மாத்வ மித்திரன், ஷத்திரிய மித்ரன், செங்குந்த மித்ரன், யாதவ மித்ரன், நாடார் குல மித்திரன் எனப் பல இதழ்கள் வெளிவந்தன.

தமிழின் முன்னோடி நாளிதழ் மற்றும் வார இதழாகவும், வெகு ஜன மக்களிடையே வாசிப்பார்வத்தை ஏற்படுத்திய முதன்மை இதழாகவும் சுதேசமித்திரன் மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.