under review

அவினேனி பாஸ்கர்

From Tamil Wiki
Revision as of 17:39, 22 November 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors;)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
அவினேனி பாஸ்கர்

அவினேனி பாஸ்கர் (பிறப்பு: ஜனவரி 25, 1979), எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். தமிழிலிருந்து தெலுங்குக்கும், தெலுங்கிலிருந்து தமிழுக்கும் மொழிபெயர்ப்புகள் செய்து வருகிறார்.

பிறப்பு, கல்வி

அவினேனி பாஸ்கர் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு வட்டம், குமாரராஜுபேட்டை கிராமத்தில் நாராயணஸ்வாமி, ஜயம்மா இணையருக்கு ஜனவரி, 25, 1979-ல் பிறந்தார். எட்டாம் வகுப்புவரை குமாரராஜுபேட்டை நடுநிலைப் பள்ளியிலும், பத்தாம் வகுப்பு வரை பள்ளிப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியிலும் படித்தார். பள்ளிக்கல்வி முழுவதும் தமிழ்வழியில் பயின்றார். அதன்பிறகு குடும்பத்துடன் சென்னைக்கு இடம்பெயர்ந்தார்.

சென்னையிலுள்ள ஸ்ரீராம் பாலிடெக்னிக் கல்லூரியில் மின்னணு மற்றும் தகவல் தொடர்புத் துறையில் பட்டயப் படிப்பு பயின்றார். மணிப்பாலிலுள்ள மணிப்பால் பல்கலைக்கழகத்தில் நுண் மின்னணுவியலில் முதுகலைப்பட்டம் பெற்றார். தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவர்.

தனிவாழ்க்கை

அவினேனி பாஸ்கர் திருப்பதியைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநர் ஆஷாவை பிப்ரவரி 27, 2009-ல் மணந்தார். மகன் அர்ஜுன். 1999 முதல் பெங்களூரில் பன்னாட்டு நிறுவனங்களில் சிலிக்கான் சில்லு(Chip designing) பொறியியலாளராகப் பணியாற்றுகிறார். குடும்பத்துடன் பெங்களூரில் வசிக்கிறார்.

இலக்கிய வாழ்க்கை

அவினேனி பாஸ்கர் 2013 முதல் தமிழிலிருந்து தெலுங்கிற்கு மொழிபெயர்ப்புகள் செய்து வருகிறார். எண்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும், ஐம்பதுக்கும் மேற்பட்ட கவிதைகளும், ஒரு நாவலும் மொழியாக்கம் செய்துள்ளார். 2013-ல் எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதைகளை தெலுங்கில் மொழிபெயர்த்தார். தொடர்ந்து அ.முத்துலிங்கம், ஜெயகாந்தன், சுஜாதா, அராத்து, சாருநிவேதிதா, ஜி.நாகராஜன், ஆதவன், ஜெயமோகன், சுந்தர ராமசாமி ஆகியோரின் சிறுகதைகளை மொழிபெயர்த்தார்.

2021-ல் அ.முத்துலிங்கத்தின் பதினைந்து கதைகளை தெலுங்கில் 'ஐது காள்ள மனிஷி' என்ற பெயரில் மொழிபெயர்த்தார். இது சாயா பதிப்பகம் வெளியீடாக வந்தது. ஜெயமோகனின் 'அறம்' சிறுகதைத் தொகுப்பை தெலுங்கில் 'நெம்மி நீலம்' என்ற பெயரில் சாயா பதிப்பகத்தின் மூலம் மொழிபெயர்த்தார்.

பூமணியின் 'வெக்கை' நாவல் தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்டு சில பொருளாதாரக் காரணங்களால் புத்தகமாக வெளிவராமல் உள்ளதாகக் குறிப்பிடுகிறார். 'ஏழாம் உலகம்', 'படுகளம்', அம்மா வந்தாள் போன்ற நாவல்களைத் தெலுங்கில் மொழிபெயர்த்து வெளியிடும் திட்டத்தில் உள்ளார். மனுஷ்யபுத்திரன், வைரமுத்து, பெருமாள் முருகன் ஆகியோரின் சில கவிதைகளை தெலுங்கில் மொழிபெயர்த்தார். தொடர்ந்து பத்திரிகைகளுக்கும் பதிப்பகங்களுக்கும் தெலுங்கிலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து தெலுங்கிற்கும் மொழிபெயர்த்து வருகிறார்.

தி. ஜானகிராமன், ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன், ஜெயமோகன், சாரு நிவேதிதா, ஸ்ரீஸ்ரீ, சலம், ரங்கநாயகம்மா, வட்டெர சண்டிதாஸ் ஆகியோரை ஆகியோரைத் தன் ஆதர்ச எழுத்தாளர்களாகக் குறிப்பிடுகிறார். 'ஈமாட்டா', 'சாரங்கா', 'வாகிலி', 'ஆந்திரஜோதி', 'சாக்ஷி' ஆகிய தெலுங்கு இதழ்களிலும் 'நீலி', 'திண்ணை' ஆகிய தமிழ் இதழ்களிலும் இவரின் படைப்புகள், மொழிபெயர்ப்புகள் வெளியாகியுள்ளன.

நூல் பட்டியல்

தமிழிலிருந்து தெலுங்கு
  • ஐது காள்ள மனிஷி (ஐந்து கால் மனிதன் - அ.முத்துலிங்கம்)
  • நெம்மி நீலம் (அறம் - ஜெயமோகன்) (2024)
  • உக்க (வெக்கை - பூமணி)
  • அதோ லோகம் (ஏழாம் உலகம் - ஜெயமோகன்)

இணைப்புகள்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 18-Feb-2025, 21:15:17 IST