under review

சொல் புதிது

From Tamil Wiki
Revision as of 12:04, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
சொல்புதிது முதல் இதழ்
சொல்புதிது
சொல்புதிது

சொல் புதிது (1999-2003) தமிழ் இலக்கியச் சிற்றிதழ். எழுத்தாளர் ஜெயமோகன் அவருடைய நண்பர்களின் ஒத்துழைப்புடன் நடத்திய மும்மாத இதழ் இது. தொடக்கத்தில் ஈரோட்டில் இருந்தும் பின்னர் நாகர்கோயிலில் இருந்தும் வெளியாகியது. இலக்கியம் மற்றும் வரலாற்றுக் கட்டுரைகளை வெளியிட்டது.

வெளியீடு

எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணனை (சூத்ரதாரி) ஆசிரியராகக் கொண்டு ஈரோட்டில் இருந்து சொல்புதிது முதல் இதழ் வெளிவந்தது. பதிப்பாளர் செந்தூரம் ஜெகதீஷ். யூமா வாசுகி, ரிஷ்யசிருங்கர், க. மோகனரங்கன், அருண்மொழிநங்கை ஆகியோர் ஆசிரியர்குழுவில் இருந்தனர். ஜெயமோகன் ஆலோசகராக இருந்து இதழை ஒருங்கிணைத்தார்.

முதல் ஆறு இதழ்களுக்குப்பின் எம்.கோபாலகிருஷ்ணன் ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகினார். சரவணன்(பிறப்பு:1978) ஆசிரியராகப் பொறுப்பேற்றார். ஜெயமோகன், எம்.வேதசகாய குமார், அருண்மொழி நங்கை, மோகனரங்கன், சூத்ரதாரி ஆகியோர் ஆலோசகர்களாக இருந்தனர்

சொல்புதிது இறுதி ஐந்து இதழ்கள் மதுரை கோமதிபுரத்தில் இருந்து வெளிவந்தன. முதன்மை ஆசிரியராக டாக்டர் வெ.ஜீவானந்தம், முதன்மை ஆலோசகராக ஜெயமோகன், கௌரவ ஆசிரியர் டாக்டர் ஹிமானா சையத் ஆகியோரும் ஆசிரியராக ஸதக்கத்துல்லா ஹஸநீயும் பொறுப்பேற்றிருந்தனர்.

வடிவம்

சொல்புதிது அகன்ற வடிவில் இரண்டு பத்திகள் கொண்ட 90 பக்கங்களுடனான இதழாக வெளிவந்தது. வண்ண அட்டையில் எழுத்தாளர்களின் படங்களை வெளியிட்டது. முதல் இதழில் நித்ய சைதன்ய யதியின் படம் இடம்பெற்றிருந்தது.

உள்ளடக்கம்

சொல் புதிது ஆசிரியர் குறிப்பு, கடிதங்கள், நூல்மதிப்புரைகள் ஆகிய வழக்கமான பகுதிகளுடன் இலக்கியவாதிகளின் நீண்ட பேட்டிகள், இலக்கியவிமர்சனக் கட்டுரைகள், கதைகள், கவிதைகளையும் வெளியிட்டது. ஒவ்வொரு இதழிலும் புத்தகப்பகுதி தனியாக இணைக்கப்பட்டிருந்தது. சூஃபி கவிதைகள், அறிவியல் புனைகதைகள் ஆகியவை இடம்பெற்றன.

புனைவு

சொல் புதிது இதழில் சிறுகதைகள், கவிதைகள் வெளியாகின. ராஜமார்த்தாண்டன், மோகனரங்கன், தேவதேவன், யூமா வாசுகி, கலாப்ரியா, மனுஷ்யபுத்திரன் ஆகியோரின் கவிதைகள் வெளிவந்தன. மொழிபெயர்ப்பு மூலம் மலையாளம், மேலை இலக்கியக் கவிதைகள், சிறுகதைகள் அறிமுகமாயின.

அபுனைவு

சொல் புதிது இதழில் புத்தகப்பகுதி, புத்தக மதிப்புரைப் பகுதிகளில் மொழியியல், இலக்கியம், இலக்கியக் கோட்பாடுகள், தத்துவம், மொழியியல், ஓவியம், இசை, நாட்டாரியல் சார்ந்த கட்டுரைகள் வெளிவந்தன. நாராயண குரு, நித்ய சைதன்ய யதியின் கலை சார்ந்த கட்டுரைகளும், மேலைநாட்டு அறிஞர்களின் இலக்கியம் தத்துவம் சார்ந்த கட்டுரைகளும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தன. புனைவு, கவிதைகள் சார்ந்த விமர்சனக் கட்டுரைகள், ரசனைக்கட்டுரைகள் குறிப்பிடத்தக்க அளவில் வெளிவந்தன. ஜெயகாந்தன், பாவண்ணன், மம்முது, வெ சாமிநாதன், ஹெப்சிபா ஜேசுதாசன் ஆகியோரின் நேர்காணல்கள் முக்கியமானவை.

மொழியாக்கங்கள்

ஆங்கிலம், பிற மொழிகளிலிருந்து குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களின் புனைவுகள் தமிழ்ச்சூழலில் அறிமுகப்படுத்தப்பட்டன. ஐசக் பாஷவிஸ் சிங்கர், கப்ரியேல் கார்சியா மார்க்வெஸ், ஜான் எட்கார் வைமான், கமலாதாஸ் போன்றோர்களின் புனைவுகள் மொழிபெயர்க்கப்பட்டன.

பங்களிப்பாளர்கள்

இதழில் எம். வேதசகாயகுமார், அ. முத்துலிங்கம், ரமேஷ் பிரேதன், யுவன் சந்திரசேகர், பாவண்ணன், குமரிமைந்தன், தேவதேவன், ஜெயமோகன் ஆகியோர் குறிப்பிடத்தக்க பங்களிப்பாற்றினர். எம்.சிவசுப்ரமணியம் மொழியாக்கம் செய்த கதைகள் வெளிவந்தன.

பிற பங்களிப்பாளர்கள்

முடிவு

சொல்புதிது மொத்தம் பதினைந்து(15) இதழ்கள் வெளிவந்தது. ஜூலை செப்டெம்பர் 2003 இதழுடன் இதழ் வெளிவருவது நின்றுவிட்டது.

மதிப்பீடு

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தீவிர இலக்கியத்தில் எழுதவந்த எழுத்தாளர்கள் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த 1999 காலகட்டத்தில் அவர்களுக்கிடையேயான உரையாடல் தளமாகவும், தீவிர இலக்கியவாதிகளுக்கும் அவர்களின் வாசகர்களுக்கும் இடையேயான உரையாடல் தளமாகவும் சொல்புதிது அமைந்தது. ஒரு காலகட்டத்தின் இலக்கிய அறிவுச்சேகரமாக, இலக்கியம் சார்ந்த அவர்களின் தீவிர நோக்கைப் பிரதிபலிப்பதாக அமைந்தது.

”சொல்புதிது அதன் மிக விரிவான பேட்டிகள், இந்திய மரபு குறித்த கட்டுரைகள், நூல்பகுதிகள் ஆகியவற்றுக்காக அதை ஒரு குறிப்பிடத்தக்க முயற்சி” என ஜெயமோகன் மதிப்பிடுகிறார்.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 02-Nov-2023, 08:11:17 IST