under review

நாராயணகுரு

From Tamil Wiki
நாராயணகுரு
நாராயணகுரு 60 வயதில்
நாராயணகுரு
எஸ்.என்.டி.பி இயக்கம் தொடங்கப்படுதல்
நாராய்ணகுரு சிலை. வர்க்கலை குருகுலம்
நாராயணகுரு முதல் சிலை, தலைச்சேரி ஜெகன்னாதர் கோயில் முகப்பு
துறவி-வேந்தர்-ஸ்ரீ-நாராயணகுரு
நாராயணகுரு மகாசமாதி
நாராயணகுருவின் சகோதரிகள்

நாராயணகுரு (நாராயணன், நாராயண குரு, ஸ்ரீ நாராயண குரு) (ஆகஸ்ட் 20, 1856 - செப்டம்பர் 20, 1928) மெய்ஞானி, தத்துவ ஆசிரியர், சமூகசீர்திருத்தவாதி. அத்வைத மரபை முன்வைத்தவர். இந்திய மறுமலர்ச்சி நாயகர்களில் ஒருவர். இந்து சமய நவீனமயமாக்கலை நிகழ்த்தியவர்களில் ஒருவர். தத்துவ தளத்தில் வேதாந்தத்திற்கு புதிய வளர்ச்சியை உருவாக்கினார். சாதியொழிப்பு, மதச்சமரசம், சமூக மறுமலர்ச்சி ஆகியவற்றுக்காக பாடுபட்டார். மலையாளம், சம்ஸ்கிருதம், தமிழ் மொழிகளில் முதன்மையான படைப்புகளை எழுதினார். ஸ்ரீநாராயண தர்மபரிபாலன சபா, தர்ம சமிதி ஆகிய அமைப்புகளை உருவாக்கினார். குமாரன் ஆசான், சகோதரன் ஐயப்பன், எம்.குஞ்ஞிராமன் முதலிய ஏராளமான ஆளுமைகளுக்கு ஆசிரியராக திகழ்ந்தார். தத்துவ சிந்தனையில் நடராஜகுரு, நித்யசைதன்ய யதி, முனி நாராயணப் பிரசாத் என அவரிடமிருந்து ஒரு மாணவநிரை உருவானது.

பிறப்பு, கல்வி

மூதாதையர்

தந்தை

நாராயண குருவின் தந்தையின் பெயர் மாடன் ஆசான். மாடன் ஆசானின் குடும்பப்பெயர் கொச்சுவிளை. பெண்வழிச்சமூக முறைப்படி தன் மனைவி குட்டியம்மாவின் இல்லத்துக்கு வந்து மாடன் ஆசான் வாழ்ந்தார். ஆகவே நாராயணகுருவின் குடும்பப்பெயர் தன் அன்னையின் வீடான வயல்வாரம் வீடு என்பதுதான்.

தாய்

நாராயணகுருவின் தாயின் பெயர் குட்டியம்மா. அவருடைய குடும்பப்பெயர் வயல்வாரம் வீடு. திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள செம்பழஞ்ஞி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் குட்டியம்மா. குட்டியம்மாவின் அம்மா செம்பழஞ்ஞியில் மணய்க்கல் கோயிலின் மேற்கே இருந்த இலஞ்ஞிக்கல் என்னும் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

தொழில்

நாராயண குருவின் பெற்றோர் ஈழவ சாதியைச் சேர்ந்தவர்கள். அக்காலத்தில் ஈழவர்களின் தொழில்களாக பனையிலும் தென்னையிலும் ஏறி கள் எடுப்பது, தலைச்சுமையாக பொருட்களை கொண்டுசெல்வது ஆகியவை இருந்தன. ஈழவர்களில் சிலர் வைத்தியம், சோதிடம் ஆகியவற்றை கற்று தொழில்புரிந்தனர். அதன்பொருட்டு சம்ஸ்கிருதமும் கற்றிருந்தனர். குறிப்பாக அறுவைசிகிச்சை வைத்தியம் பெரும்பாலும் ஈழவர்களாலேயே செய்யப்பட்டது. மாடன் ஆசான் ஆயுர்வேத மருத்துவமும் சோதிடமும் செய்துவந்தார். சம்ஸ்கிருதமும் கற்றிருந்தார். ஆகவே ஆசான் என அழைக்கப்பட்டார். நாராயணகுருவின் தாய்மாமா கிருஷ்ணன் வைத்தியர் ஆயுர்வேதமும் சம்ஸ்கிருதமும் கற்று மருத்துவர் பணி செய்துவந்தார்.

பிறப்பு

வயல்வாரம் வீட்டில் குட்டியம்மாவுக்கும் கொச்சுவிளை வீட்டில் மாடன் ஆசானுக்கும் ஆகஸ்ட் 20, 1856-ல் நாராயணகுரு பிறந்தார். (மலையாளமாதம் சிங்ஙம். தமிழ் ஆவணிமாதம். சதயம் நட்சத்திரம்) அவருடன் பிறந்தவர்கள் மூன்று மூத்த சகோதரிகள். தேவி, கொச்சு, மாதை.

நாராயணகுருவுக்கு 15 வயதிருக்கையில் குட்டியம்மா மறைந்தார். அதன்பின் சகோதரிகளில் மூத்தவரான தேவி நாராயண குருவுக்கு அன்னையின் இடத்தில் இருந்தார்.

கல்வி

ஆரம்பக் கல்வி

நாராயண குருவின் தந்தையும் தாய்மாமனும் அவருக்குத் தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளின் அடிப்படைகளையும் ஆயுர்வேத மருத்துவ அடிப்படைகளையும் கற்றுக் கொடுத்தனர். தொழில்முறைப் பாடங்களான சித்தரூபம், பாலப்ரோபதனம், அமரகோசம் போன்றவைகளையும் கற்றுக் கொடுத்தனர்.

எழுத்துகல்வி

மாமாவின் பரிந்துரையில் உள்ளூர் பள்ளி ஆசிரியரும், கிராம அதிகாரியுமாக இருந்த கண்ணங்கரை வீட்டில் செம்பழந்திப் பிள்ளை என்பவர் நாராயண குருவை முறைப்படி எழுத்துக்கல்விக்கு அமரச்செய்தார்.

சாஸ்திரக் கல்வி

1878-ல், தன் 22 வயதில் கருநாகப்பள்ளி என்னும் ஊரில் இருந்த கும்மம்பள்ளி ராமன்பிள்ளை என்னும் ஆசானிடம் சம்ஸ்கிருத இலக்கணம், காவியம் பயில கொண்டுசென்று சேர்த்தார்கள். கும்மம்பள்ளி ராமன் பிள்ளைக்கு கேரள வரலாற்றில் ஓர் இடம் உண்டு. அக்கால மரபுகளை மீறி ஈழவர், கிறிஸ்தவர்கள் முதலிய அக்காலகட்டத்தில் இரண்டாம்நிலைச் சாதியைச் சேர்ந்தவர்களாகக் கருதப்பட்டவர்களுக்கும் அவர் சம்ஸ்கிருதம், மருத்துவம் உட்பட சாஸ்திரக் கல்வி கற்பித்தார். ஆகவே நம்பூதிரி, நாயர் போன்ற சாதியினரால் அவர் புறக்கணிப்புக்கு ஆளானார். பெருந்நள்ளி கிருஷ்ணன் வைத்தியர், வெளுத்தேரி கேசவன் வைத்தியர் இ.கே.அய்யாக்குட்டி போன்று நாராயண குருவுடன் அங்கே படித்த பலர் பின்னாளில் புகழ்பெற்றனர்.

பணிகள்

கல்வி முடித்து 1882-ல் நாரயணகுரு கருநாகபள்ளிக்கு அருகிலுள்ள திண்ணைப் பள்ளி ஒன்றில் ஆசிரியராகச் சிலகாலம் பணி செய்தார். 'நாணு ஆசான்' என்று அழைக்கப்பட்டார்.

1882-ல் தனது சொந்த ஊர் திரும்பிய நாராயணகுரு அந்தப்பகுதி சிறுவர்களுக்கு கல்வி அளிக்க ஒரு பள்ளியைத் துவக்கினார். அந்த பள்ளியில் கல்வி வழங்கியது போக மீதி நேரம் கோவிலுக்குச் சென்று கவிதைகள் எழுதுவது, கிராம மக்களுக்கு தத்துவம் மற்றும் நீதிக்கதைகள் சொல்வது என வாழ்ந்தார். இக்காலகட்டத்தில் நாராயண குரு ஆயுர்வேத வைத்தியத்தொழிலையும் செய்துவந்தார்.

தனிவாழ்க்கை

நாராயணனின் குடும்பத்தினர் அவரை வற்புறுத்தி நாராயணகுருவின் தந்தை மாடனாசானின் மருமகள் முறைகொண்ட காளியம்மா என்பவரை 1883-ல் அவருக்குத் திருமணம் செய்து வைத்தனர். நாராயணகுரு துறவியைப் போல் அலைந்து திரிந்து கொண்டிருந்ததால் காளியம்மாள் அவருடைய தந்தை வீட்டிற்குச் சென்று விட்டார். காளியம்மாள் மறுமணம் புரிந்துகொண்டு இளமையிலேயே மறைந்தார்.

1884-ல் நாராயண குரு தன் தந்தை மரணமடைந்தபின், நாடோடியாகப் பல இடங்களுக்குச் சென்றார். இக்காலகட்டத்தில் தமிழ்நாட்டில் ஈரோடு, பழனி, சிதம்பரம் போன்ற ஊர்களில் அவர் இருந்தமைக்கான புகைப்பட ஆதாரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

நாராயணகுரு

ஆன்மிக வாழ்க்கை

நாராயணகுருவின் ஆன்மிக வாழ்க்கை மூன்று கட்டங்களால் ஆனது. செம்பழஞ்ஞி ஊரில் அவர் ஆசிரியராக இருக்கையில் யோகப்பயிற்சி பெற்றார். அதன்பின் நாடோடித் துறவியாக வாழ்ந்தார். பின்னர் ஆன்மிக குருவாகவும் சமூகசீர்திருத்தவாதியாகவும் தன்னை வெளிப்படுத்திக்கொண்டார்.

யோகப்பயிற்சி

சட்டம்பி சுவாமி

1883-ல் நாராயணகுரு செம்பழஞ்ஞியில் ஆசிரியராக இருக்கையில் தன்னுடன் பயின்ற பெருநள்ளி கிருஷ்ணன் வைத்தியர் என்பவரின் இல்லத்தில் குஞ்ஞன் பிள்ளை என்பவரை அறிமுகம் செய்துகொண்டார். குஞ்ஞன் பிள்ளை யோகப்பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தவர், பிற்காலத்தில் அவர் சட்டம்பி சுவாமி என அறியப்பட்டார். அப்போது அவர் சுப்ரமணிய உபாசகராகவும் ஷண்முகதாசன் என்ற பெயர் சூட்டிக்கொண்டவராகவும் இருந்தார். சட்டம்பி சுவாமியிடமிருந்து நாராயணகுரு சுப்ரமணிய உபாசனைக்கான தீட்சையைப் பெற்றுக்கொண்டார்.

தைக்காடு அய்யாவு

சட்டம்பி சுவாமியின் வழிகாட்டலில் சட்டம்பி சுவாமியின் யோக ஆசிரியரான தைக்காடு அய்யாவு என்னும் யோகியை நாராயண குரு அறிமுகம் செய்துகொண்டார். திருவனந்தபுரம் சாலைத் தெருவில் தைக்காடு அய்யாவு வணிகம் செய்துவந்தார். பிரிட்டிஷ் ரெசிடென்சியில் சூப்பரிண்டண்டாக வேலை பார்த்தவர். 1883 முதல் 1885 வரை நாராயணகுரு அவரிடம் தமிழ், திருமந்திரம் போன்ற நூல்களைப் பாடம் கேட்டார். ஹடயோகமும் பயின்றார்.

தவம்

சுப்ரமணிய உபாசனை

நாராயண குரு தன் இருபத்து ஒன்பதாவது முதல் துறவறம் பூண்டார் எனப்படுகிறது. அவருக்கு துறவு அளித்தவர் எவர் என தெரியவில்லை. திருவனந்தபுரம் அருகே வேளி என்னுமிடத்தில் கடலோரத்தில் ஒரு குடிசையில் சிலகாலம் வாழ்ந்தார். அஞ்சுதெங்கு என்னுமிடத்தில் இருந்த பழைய சிவன்கோயிலில் பண்டாரமாகவும் சிறிதுகாலம் வாழ்ந்தார். பழனியில் சிலகாலம் வாழ்ந்தார்.

மறைஞானப்பயிற்சிகள்

கன்னியாகுமரி மாவட்டம் பொற்றையடி எனும் ஊரின் அருகிலுள்ள மருத்துவாழ்மலையில் (மருந்துவாழ்மலை) ஒரு குகையில் நாராயணகுரு தனிமையில் இருந்து தவம் செய்ததாக நம்பப்படுகிறது. மருத்துவாழ்மலையில் அவருக்கு துறவு அளிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பின்னர் 1926ல் நாராயணகுரு தன் மாணவர் நடராஜ குருவுடன் அங்கே வந்து சிலநாட்கள் வாழ்ந்தார். அவ்விடம் இன்று ஒரு வழிபாட்டுமையமாக உள்ளது. தொடக்க காலகட்டத்தில் அங்கே தங்கியிருக்கையில் நாராயண குரு பலவகையான மறைஞானப் பயிற்சிகளிலும், ஹடயோகப் பயிற்சிகளிலும் பிற துறவிகளுடன் இணைந்து ஈடுபட்டார் என அவர் சொல்லியிருக்கிறார்.

அத்வைதம்

1885-1886 வாக்கில் அறியப்படாத துறவியாக நாராயணகுரு மருத்துவாழ்மலையில் வாழ்ந்த காலகட்டத்தில் நாகர்கோயிலைச் சேர்ந்தவரும் அம்மாளு என அழைக்கப்பட்டவருமான ஒரு முதிய தமிழ்நாட்டு யோகினி நாராயண குருவுக்கு அத்வைத தீட்சை அளித்ததாக நாராயணகுருவைப் பற்றி எழுதப்பட்ட முதற்கட்ட வாழ்க்கை வரலாறுகள் ஒன்றில் (நாராயண குரு - கே.தாமோதரன்) குறிப்பிடப்படுகிறது. சுப்ரமணிய உபாசகராக இருந்த நாராயண குரு அதன்பின் அத்வைதியாக ஆனார். ஹடயோகம் முதலிய மறைஞானப் பயிற்சிகளைக் கைவிட்டு ஞானமார்க்கத்தை ஏற்றுக்கொண்டார். அம்மாளு என்ற பெயரில் இருந்த அந்த யோகினி ஒரு பிராமணப் பெண்மணி என்று மட்டுமே நாராயண குருவின் வாழ்க்கை வரலாற்றாசிரியர்களால் ஊகிக்க முடிகிறது.

குருநிலை

அருவிப்புறம் சிவன் கோவில்

நாராயண குரு 1888-ல் திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள அருவிக்கரை என்ற சிற்றூருக்கு திரும்பி வந்தார். அங்கே ஒரு குடில் கட்டி வாழ்ந்தார். அவர் மருத்துவமும் ஆன்மிக உரையாடலும் நிகழ்த்தி வந்தார். ஏராளமான மக்கள் அவரைக் காண வந்துகொண்டிருந்தார்கள்.

1888 மார்ச் மாதம் சிவராத்திரி நாளில் நாராயண குரு நெய்யாறு ஓடும் இடத்திற்கு அருகில், தனது சீடர்கள் உதவியுடன் நெய்யாறு ஆற்றில் சங்கரன்குழி என்னும் ஆழ்ந்த சுழிக்குள் கிடந்த ஒரு கல்லை எடுத்து அருகே இருந்த பாறைமேல் சிவலிங்கமாகப் பிரதிஷ்டை செய்தார். தென்னை மரக்கிளைகள் மற்றும் மாமரத்து இலைகளைக் கொண்டு மேற்கூரையுடன் குடிசையாகவே அருவிப்புறம் சிவன் கோவில் அமைக்கப்பட்டது. பின்னர் அது கோயிலாகக் கட்டப்பட்டது.

அந்த சிவலிங்க நிறுவுதல் கேரளத்தில் பெரிய சர்ச்சையை உருவாக்கியது. ’ஈழவனுக்கு பிரதிஷ்டை உரிமை உண்டா?’ என்ற வினாவுக்கு 'நான் நிறுவியது நம்பூதிரிகளின் சிவன் அல்ல' என்று பதில் சொன்னார். அந்தக் கோயில் வாசலில் 'சாதி மத பேதம் இல்லாமல் மக்கள் அனைவரும் வாழும் உதாரண தலமிது' என்று எழுதி வைத்தார்.

சமூகப்பணிகள்

அருவிப்புறம் சிவலிங்க நிறுவுதல் வழியாக நாராயணகுரு தன்னை ஒரு குருவாக அறிவித்துக்கொண்டார். அது அவருக்கு கேரளம் முழுக்க புகழை உருவாக்கியது. டாக்டர் பல்பு அவரை சமூகப்பணிகளில் ஈடுபடச் செய்தார். ஸ்ரீநாராயண தர்ம பரிபாலன சபா, நாராயண தர்மசமிதி முதலிய அமைப்புகள் உருவாக்கப்பட்டன.

மடங்கள்

நாராயணகுருவின் காலகட்டத்திலேயே ஏராளமான மடங்கள் உருவாகி வந்தன. அவற்றில் கீழ்க்கண்டவை முக்கியமானவை.

அருவிப்புறம் மடம்

நாராயணகுரு சிவலிங்கத்தை நிறுவிய அருவிப்புறத்தில் அருவிப்புறம் அறக்கட்டளை வழியாக அவர் உருவாக்கியது .1895 ல் ஒரு நிதிவசூலை நிகழ்த்தி அந்தப் பணத்தில் அங்கே அருவிப்புறம் மடம் நிறுவப்பட்டது.

வர்க்கலை சிவகிரி மடம்

1904-ல் நாராயணகுரு வர்க்கலையில் சிவகிரி என்னும் இடத்தில் ஒரு ஆசிரமத்தையும் சம்ஸ்கிருத பள்ளியையும் நிறுவினார். அங்கே 1912ல் ஒரு சாரதாதேவி கோயிலையும் நாராயண குரு நிறுவினார்.

ஆலுவா மடம்

1913-ல் நாராயணகுரு ஆலுவாவில் பாரதப்புழை ஆற்றின் கரையில் அத்வைதாசிரமம் என்னும் மடத்தை நிறுவினார். 'ஓம் சாகோதரியம் சர்வத்ர" (அனைவரும் உடன்பிறப்புகள்) என்னும் அறைகூவலை எழுதிவைத்தார்.

வெட்டூர் மடம்

நாராயணகுரு திருவனந்தபுரம் அருகே வெட்டூர் என்னுமிடத்தில் நிறுவிய மடம். வைக்கம்போராட்டத்தின் மையமாக இந்த மடம் திகழ்ந்தது.

நாராயண குரு
நாராயண குருகுலம்

1924-ல் நாராயண குருவின் மாணவர் நடராஜ குருவால் நீலகிரி மாவட்டம் குன்னூரில் நாராயண குருகுலம் தொடங்கப்பட்டது. அதன் தலைமையகம் வர்க்கலா ஸ்ரீனிவாசபுரத்தில் உள்ளது. அதற்கு தமிழகத்தில் ஊட்டி ஃபெர்ன்ஹில் உட்பட பல இடங்களில் கிளைகள் உள்ளன.

அருவிப்புறம் சிவன் கோயில்

ஆலயங்கள்

சிறுதெய்வ மறுப்பு

நாராயண குரு பெருந்தெய்வ வழிபாட்டை முன்னிறுத்தினார். சிறுதெய்வ வழிபாடு உயிர்ப்பலியுடனும், மது அருந்துவதுடனும் தொடர்புடையது என்பதனால் அதை நிராகரித்தார். பேய்த்தெய்வங்கள், நீத்தார் தெய்வங்கள், குறியீட்டுத் தெய்வங்கள் போன்றவற்றை வழிபடலாகாது என விலக்கினார்.

சிறுதெய்வ வழிபாடு என்பது பூசாரிகள், குறிசொல்பவர்கள், மந்திரவாதிகள் ஆகியோரின் ஆதிக்கத்தை உருவாக்கி மக்களை மூடநம்பிக்கையில் கட்டிப்போடுகிறது என்று நாராயண குரு சொன்னார். அத்துடன் சிறுதெய்வ வழிபாட்டில் உள்ள வன்முறை அம்சம் அதை வணங்குபவர்களின் வாழ்விலும் நீடிக்கிறது என்று அவர் கருதினார். இறைவழிபாட்டின் உணர்வுகள் அச்சம் சார்ந்தவையாக இருக்கலாகாது என்றும், இறைவழிபாடு கல்வியுடன் தொடர்புடையதாக இருக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்

ஆகவே நாராயண குரு கிராமங்கள் தோறும் சென்று அங்குள்ள சிறுதெய்வச் சிலைகளையும் வழிபடப்பட்ட கற்களையும் தூக்கி அகற்றி அங்கே பெருந்தெய்வங்களை நிறுவினார். நாராயணகுரு அவரே கட்டிய ஆலயங்கள், அவர் வந்து மையச்சிலையை நிறுவிய ஆலயங்கள் பல உள்ளன.

பெருந்தெய்வ ஆலயங்கள்

நாராயண குரு 1888-ல்அருவிக்கரையில் சிவன் பிரதிஷ்டை செய்தார். 1889-ல் மண்ணந்தலை என்னும் ஊரில் பகவதிதேவி ஆலயத்தை நிறுவினார். அதன்பின் சுப்ரமணியர், ஜகன்னாதர், சாரதா உட்பட ஏராளமான தெய்வங்களை ஆலயங்களில் நிறுவினார். 1912-ல் வர்க்கலா சிவகிரியில் சாரதாதேவி ஆலயத்தை நிறுவினார்.

( பார்க்க நாராயண குரு ஆலயங்கள்)

அருவ தெய்வக் கோயில்கள்

நாராயணகுரு ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொந்தமானதாக இருக்கும் சிறு தெய்வக் கோவில்களை எல்லாம் இடித்துவிட்டு அந்த இடங்களை பலர் கூடும் கோயில்களாக அமைத்தமைக்கு ஒரு காரணம் அவை அன்றாடம் மக்கள் கூடும் பொது இடங்களாகவும், கல்வி வழங்கும் பள்ளிக்கூடங்களாகவும் அமையவேண்டும் என்பது.

நாராயணகுரு சில தத்துவார்த்த அடிப்படைகளைக் கொண்டு கோவில்களை அமைத்தார். சிவன், விஷ்ணு, சுப்பிரமணியர் போன்ற முழுமுதல் தெய்வங்களைப் பிரதிஷ்டை செய்து கோவில்களை உருவாக்கிய நாராயணகுரு அடுத்து இந்த தத்துவார்த்தமான கொள்கைகளை வலியுறுத்தும் வழியில் முதலில் விளக்கை கருவறை தெய்வமாகப் பிரதிஷ்டை செய்தும், பின்பு சத்யம்-தர்மம்-தயை எனும் சொற்களை கருவறை தெய்வமாகப் பிரதிஷ்டை செய்தும் கோவில்களை அமைத்தார். பின்னர் ஜூன் 14,1927-ல் களவங்கோடு எனும் பகுதியில் நிலைக் கண்ணாடியை தெய்வமாகப் பிரதிஷ்டை செய்து புதிய கோவில் ஒன்றை அமைத்தார். அதன்பின் அவர் கோயில்கள் எதையும் புதிதாக அமைக்கவில்லை.

அமைப்புப் பணிகள்

அருவிப்புறம் அறக்கட்டளை

நாராயணகுரு அருவிப்புறம் ஆலயத்தை நிறுவியபின்1889 ல் அருவிப்புறம் க்ஷேத்ரயோகம் என்னும் அருவிப்புறம் கோயில் அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. 1891ல் குமாரன் ஆசானை நாராயணகுரு சந்தித்து அவரை தன்னுடன் சேர்த்துக்கொண்டார்.

நாராயணகுரு

1893-ல் நாகர்கோயிலில் கோட்டாறு என்னும் இடத்தைச் சேர்ந்த சின்மய ஸ்வரூப சுவாமிகள் என்னும் ஆன்மிக சாதகர் வந்து நாராயண குருவைச் சந்தித்தார். அவருடைய பேரில் தாமரைக்குளம் என்னும் ஊரில் இருந்த குடும்ப சொத்துக்களை அத்வைதக் கல்விக்கான அமைப்பு ஒன்றுக்கு நன்கொடையாக அளிக்க விரும்பினார். அந்த சொத்துக்கள் மேல் இருந்த பிறருடைய உரிமைகளை விலக்கிக்கொள்ள ரூ 3000/- தேவைப்பட்டது. அதன்பொருட்டு நாராயணகுரு விடுத்த அறிக்கையின் அடிப்படையில் நிதிவசூல் நடைபெற்றது. அந்த சொத்து அருவிப்புறம் அறக்கட்டளைக்காக வாங்கப்பட்டது. அந்த அறக்கட்டளைக்கு பேட்டை பி.பரமேஸ்வரன் பொறுப்பாளராக பதவியேற்றார்.

ஆனால் 1909-ல் அந்த அறக்கட்டளைமேல் நாகர்கோயில் நீதிமன்றத்தில் அந்த நிலத்தின் மேல் வேறுசில பங்காளிகளால் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டது. நாராயணகுருவுக்கு நீதிமன்றத்தில் ஆஜராகும்படி அழைப்பாணை விடுக்கப்பட்டாலும் துறவியாகிய அவர் அங்கே செல்ல விரும்பவில்லை. அவர் துறவியாகையால் அவருக்கு நீதிமன்றத்தில் தோன்றுவதற்கு விலக்கு அளிக்கவேண்டும் என்ற கோரிக்கையை அறக்கட்டளை முன்வைத்தாலும் அதை நீதிமன்றம் ஏற்கவில்லை. அவர் மரபார்ந்த முறையில் எந்த அமைப்பாலும் துறவியாக ஆக்கப்படவில்லை என்ற தீர்ப்பு வந்தது. அந்த நிலத்தின்மீதான உரிமை நீதிமன்றத்தால் தனியாருக்கு அளிக்கப்பட்டது. 1909-ல் அதைப்பற்றி குமாரன் ஆசான் ‘ஒரு தூஷிதமாம் நியாயாசனம்’ என்ற பேரில் கண்டனக் கவிதை ஒன்றை எழுதினார். அதன் உருவாக்கப்பட்ட எந்த அறக்கட்டளையிலும் நாராயணகுரு நிர்வாகியாக இடம் பெறவில்லை.

அருவிப்புறம் அறக்கட்டளை சார்பாக 1895-ல் மீண்டும் ஒரு நிதிவசூலை நாராயண குரு நடத்தினார். ரூ 2000/- வசூலாகியது. அதைக்கொண்டு அங்கே ஒரு மடம் கட்டப்பட்டது. இந்த மடத்தில் கல்விப்பணிகளுடன் கைத்தொழில்களும் கற்றுக்கொடுக்கப்பட்டன.

அருவிப்புறம் அறக்கட்டளை (அருவிப்புறம் க்ஷேத்ரயோகம்) 1898-ல் முறைப்படி ஓர் அறக்கட்டளையாகப் பதிவுசெய்யப்பட்டது.

ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன சபா

நாராயணகுரு அருவிப்புறம் ஆலயத்திற்குப் பின் கேரளம் முழுக்க பயணம் செய்து சிறுதெய்வங்களை அகற்றி பெருந்தெய்வங்களை நிறுவும் கோயில்களை உருவாக்கினார். சிறையின்கீழ் என்னும் ஊரில் வைக்கத்து தேவேஸ்வரம் என்னும் ஆலயம் அடுத்தபடியாக அவர் உருவாக்கியது. பக்தர்களின் அழைப்பின்பேரில் கேரளத்திலும், தமிழ்நாட்டில் சிதம்பரம், பழனி , மதுரை, திருநெல்வேலி ஆகிய ஊர்களுக்கும் பயணம் செய்தார். இக்காலகட்டத்தில் சிறுவனான குமாரன் ஆசான் நாராயணகுருவின் மாணவராக ஆனார்.

நாராயணகுருவைப் பற்றி கேள்விப்பட்டு மைசூரில் டாக்டராக வேலை பார்த்து வந்த டாக்டர் பல்பு அவரைக் காண வந்தார். பின்னர் நாராயணகுரு பெங்களூர் சென்று பல்புவைச் சந்தித்தார். 1903-ல் திருவனந்தபுரம் கமலாலயம் பங்களாவில் ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. அதன்படி அருவிப்புறம் அறக்கட்டளை எஸ்.என்.டி.பி [ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன சபா] என்னும் அமைப்பாக 15 மே 1903-ல் ஒரு ‘ஜாயிண்ட் ஸ்டாக் கம்பெனி’யாக நிறுவப்பட்டது. அதன் பங்குத்தொகை ரூ 100. கேரளம் முழுக்க ஏராளமானவர்கள் அதில் பங்குதாரர்களாகச் சேர்ந்தார்கள். குமாரன் ஆசான் அதன் முதல் செயலாளராகப் பதவியேற்றார்.

நாராயணகுரு ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன சபாவின் மூலம் பள்ளிகளையும் கல்விக்கூடங்களையும் கட்டினார். ஈழவ சமுதாயத்தினர் செய்து வந்த குலத் தொழிலான ஆயுர்வேத மருத்துவத் தொழிலுக்குத் தேவையான சமஸ்கிருதம் கற்றவர்கள் அச்சமுதாயத்தில் சிலர் இருந்தாலும் அவர்களுக்கு அதில் முழுமையான அறிவு இல்லாமலே இருந்தது. எனவே பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களை சமஸ்கிருதத்தை முழுமையாகக் கற்றுக் கொள்ள வலியுறுத்தினார். ஆங்கிலக் கல்வியே சமூகஅதிகாரமாகவும் சம்ஸ்கிருதக் கல்வி மத அதிகாரமாகவும் ஆகிறது என நாராயணகுரு கூறினார். இதன் மூலம் கேரளாவில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்கள் அனைவரும் கல்வி கற்க முற்பட்டனர்.

ஸ்ரீநாராயண தர்மபரிபாலன சபா நாராயணகுரு விரும்பியதுபோல சாதிகடந்த அமைப்பாக ஆகவில்லை. டாக்டர் பல்பு தலைமையில் ஈழவச் செல்வந்தர்களால் அது ஈழவச் சாதிக்குரிய அரசியல், பொருளியல் உரிமைகளுக்காகப் பாடுபடும் அமைப்பாக மாறியது. ஏமாற்றம் அடைந்த நாராயணகுரு 1916-ல் அந்த அமைப்பில் இருந்து ராஜினாமா செய்தார்.

தர்மசங்கம்

நாராயணகுரு 3 மே 1926-ல் தனக்குப் பின்பு தன் பணிகளை செய்யும் அமைப்பாக 12 பேர் கொண்ட ஒரு சன்யாசி மடத்தை உருவாக்கி உயில் எழுதி வைத்தார். அந்த அமைப்பு சமூகப்பணிகளைச் செய்துவந்த ஸ்ரீநாராயண தர்மபரிபாலன சபாவுக்கு தொடர்புடையது அல்ல, சுதந்திரமான ஆன்மிக அமைப்பு என்று குறிப்பிட்டார்.

9 ஜனவரி 1928 ல் நாராயணகுருவின் மறைவுக்குப் பின் அந்த அமைப்பு ஸ்ரீ நாராயண தர்ம சங்கம் என்ற பேரில் வர்க்கலையில் சிவகிரி மலைமீது நிறுவப்பட்டது. நிறுவனத் தலைவர் சுவாமி போதானந்தர். நிறுவனச்செயலாளர் சுவாமி தர்ம தீர்த்தர்.

கல்விநிலையங்கள்

நாராயணகுரு அறிவின் அதிகாரத்தை உய்த்துணர்ந்த சமூக சீர்திருத்தவாதி. அறிவே விடுதலை என வலியுறுத்திய குரு 1888ல் அருவிப்புறத்தில் ஒரு பாடசாலையை நிறுவினார். 1904ல் வர்க்கலா சிவகிரி குருகுலம் உருவானபோது அங்கும் ஒரு சம்ஸ்கிருதப் பாடசாலையை நிறுவினார். எஸ்.என்.டி.பி இயக்கம் 1904ல் முதல் பள்ளியை வைக்கம் ஊரில் தொடங்கியது. 1905ல் வர்க்கலா அருகே வெட்டூர் என்னுமிடத்தில் முதல் முதியோர் பள்ளி நிறுவப்பட்டது. எஸ்.என்.டி.பி. இன்று ஏராளமான பள்ளிகளையும் கல்லூரிகளையும் தொடங்கி நடத்தி வருகிறது.

தொழில்கள்

நாராயணகுரு பொருளியல் விடுதலை என்பது சமூக விடுதலைக்கான அடித்தளம் என்பதை வலியுறுத்தினார். 1888 ல் அவர் உருவாக்கிய அருவிப்புறம் குருகுலத்தை ஒட்டியே கைத்தொழில்பயிற்சி சாலைகளை உருவாக்கினார். ஈழவர்கள் கயிறு, ஓடு முதலிய தொழில்களில் ஈடுபடவேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தினார்.

1905 ல் கொல்லம் நகரில் அகில இந்திய வேளாண்மை - கைத்தொழில் கண்காட்சியை நாராயணகுரு நடத்தினார். இந்தியாவில் நடந்த முதல் தொழில் வேளாண்மைக் கண்காட்சி அதுவே. ’கல்வியால் பண்படுக, சங்கத்தால் வலுப்பெறுக, தொழில்செய்து வளர்ச்சியடைக’ என்று அந்த கண்காட்சியில் குரு அறிவித்தார். தொடர்ச்சியாக தொழில்கண்காட்சிகள் எஸ்.என்.டி.பி அமைப்பால் நடத்தப்பட்டன.

நாராயணகுரு பிறந்த இல்லம்

சமூக சிந்தனைகள்

நாராயணகுருவின் சிந்தனைகள் மூன்று தளங்களைச் சேர்ந்தவை. ஒன்று சமூகவியல் களம். இன்னொன்று தத்துவம், மூன்று, ஆன்மிகம். நாராயணகுருவை இந்தியாவின் மாபெரும் சமூகசீர்திருத்தவாதியாகக் கொள்ளலாம். இந்தியாவில் நவவேதாந்தம் சார்ந்த தத்துவ மரபை முன்னெடுத்த தத்துவ அறிஞராகக் கொள்ளலாம். நவீன காலகட்டத்தில் வாழ்ந்த மெய்ஞானியாகவும் கொள்ளலாம்.

நாராயணகுருவின் சமூகவியல் சிந்தனைகள் மானுட சமத்துவம், சாதிமறுப்பு, மத இணக்கம், மதுவிலக்கு என்னும் அடிப்படைகளில் அமைந்தவை. கல்வியும் தத்துவ அறிவுமே விடுதலையை அளிக்கும் என அவர் வலியுறுத்தினார். பொருளியல் தற்சார்புநிலை சமூகவெற்றிக்கு அடிப்படையானவை என்பதையும் முன்வைத்தார்.

சகோதரத்துவம்

நாராயணகுரு சாதி, சமய வேறுபாட்டுக்கு அப்பாற்பட்ட சகோதரத்துவத்தை முன்வைத்தார். 1888ல் அருவிக்கரையில் நிறுவிய சிவன் கோயிலின் வாசலில் ’சாதி மத பேதம் இல்லாமல் மக்கள் அனைவரும் வாழும் உதாரண தலமிது' என எழுதி வைத்தார். 1913ல் நிறுவிய ஆலுவா அத்வைதாசிரமத்தின் முகப்பில் ‘எங்கும் சகோதரத்துவம்’ என எழுதி வைத்தார். தன் செயல்பாடுகள் அனைத்திலும் சாதிபேதமின்மை என்பதை முன்வைத்தார்.

சாதிமறுப்பு

நாராயணகுரு தொடர்ச்சியாக சாதிமறுப்பை முன்வைத்தார். தீண்டாமைக்கு எதிராகவும், தலித் மக்களின் உரிமைக்காகவும் களத்தில் இருந்தார். தலித் குழந்தைகள் படிப்பதை ஒவ்வொரு ஊருக்குச் சென்றாலும் பள்ளிகளுக்குச் சென்று கண்டறிந்து அவர்களை ஊக்குவிப்பதும் நன்றாகப் படிக்கும் குழந்தைகளுக்கு உள்ளூரிலேயே நிதியுதவி ஏற்பாடு செய்வதும் அவருடைய வழக்கம். செல்லும் இடங்களில் எல்லாம் தலித் மக்களுடன் அமர்ந்து உணவுண்ணுதலை ஒரு நெறியாகக் கொண்டிருந்தார். நாராயணகுருவிடம் இருந்தே தீண்டாமை ஒழிப்பு, சமபந்தி உணவு போன்ற கருத்துக்கள் தென்னகத்தில் உருவாகி பின்னர் காந்திமீது செல்வாக்கு செலுத்தின.

இந்து மதம் வர்ணாசிரம தர்மத்தை அடிப்படையாகக் கொண்டது என்னும் ஐயம் கொண்டிருந்த காந்தி நாராயணகுருவைச் சந்தித்து சாதி குறித்த தெளிவு கொண்டார். இந்து மரபின் சுருதிகள் எனப்படும் ஞானநூல்களில் வர்ணாசிரம முறை வலியுறுத்தப்படவில்லை என்றும், ஸ்மிருதிகள் எனப்படும் நெறிநூல்களே அவற்றைச் சொல்கின்றன என்றும், நெறிநூல்கள் காலந்த்துக்கேற்ப மாற்றப்படவேண்டியவை என மரபு சொல்கிறது என்றும் நாராயணகுரு தெளிவுபடுத்தினார். அதை காந்தி தன் உரைகளில் குறிப்பிட்டார். காந்திக்கு தீண்டாமை ஒழிப்பு உட்பட சாதிக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடுவதற்கான தத்துவத்தெளிவை நாராயண குரு அளித்தார்.

நாராயண குரு பழையபடம்
ஊட்டுட்டம்பலம் கலவரம்

1914 நெய்யாற்றின்கரை அருகே ஊரூட்டம்பலம் என்னும் இடத்தில் பள்ளிக்கு படிக்கச் சென்ற தலித் (புலைய) மக்களுக்கு எதிராக நாயர் சாதியினர் நடத்திய கலவரத்தில் ஈழவர்கள் தலித் மக்களுடன் நிலைகொள்ளவேண்டும் என நாராயணகுரு ஆணை பிறப்பித்தார். அக்கலவரத்தில் நாயர்களுக்கு பின்னடைவு உருவாகவும் புலையக்குழந்தைகளுக்கு பள்ளியனுமதி கிடைக்கவும் அந்த ஆதரவு காரணமாகியது. அதையொட்டி 1914ல் அய்யன்காளி நாராயணகுருவை நேரில் சந்தித்து நன்றி சொன்னார். அய்யன்காளிக்கும் நாராயண குருவுக்கும் அணுக்கமான உறவு எப்போதும் நீடித்தது. அய்யன்காளியின் பல போராட்டங்கள் வன்முறைத்தன்மை கொண்டிருந்தபோதிலும் நாராயண குரு அவற்றை ஆதரித்தார், அது அக்காலத்தில் விவாதங்களையும் உருவாக்கியது.

வைக்கம் போராட்டம்

நாராயணகுருவின் முதன்மை மாணவர்களில் ஒருவரான டி.கே.மாதவன் வைக்கம் ஆலயத்திலும் அதையொட்டிய தெருக்களிலும் ஈழவர்கள், தலித் மக்கள் உள்ளிட்ட ’அவர்ணர்’ நுழைவதற்கான போராட்டத்தை 1924 மார்ச் மாதம் தொடங்கினார். அதற்கு முதலில் பிரம்மஞான சங்கம் தலைவியான அன்னி பெசண்ட்டின் ஆதரவை தேடினார். அதன்பின் காந்தியை பலமுறை சந்தித்து ஆதரவு பெற்றார்.

வைக்கம் போராட்டம் எதிர்ப்பரசியல் என்றும், விரும்பப்படாத இடங்களில் நுழையவேண்டியதில்லை என்றும், அவர்ணர் அவர்களுக்கான ஆலயங்களை உருவாக்கிக்கொள்ளலாம் என்று சொன்ன நாராயண குரு அப்போராட்டத்தில் இருந்து விலகி நின்றார்.

ஆனால் காந்தியின் தலைமையில் கேரளத்தின் முதன்மையான அரசியல் பண்பாட்டு ஆளுமைகளால் முன்னெடுக்கப்பட்ட அப்போராட்டம் அனைத்து தளங்களிலும் பெரிய அளவிலான செல்வாக்கை செலுத்தி தேசிய அளவில் கவனிக்கப்பட்டது. நாராயணகுருவின் இயக்கம் எல்லா வகையிலும் போராட்டத்தில் ஈடுபட்டது. வைக்கம் போராட்டத்திற்காக கேரளம் வந்த காந்தி நாராயணகுருவை சந்தித்தார்.

நாராயணகுரு நேரடியாகவே போராட்டத்திற்கு வந்தார். தனக்குச் சொந்தமான வெல்லூர் மடத்தை சத்தியாக்கிரகிகளுக்கு அலுவலகமாக அளித்தார். அன்றைய காலத்தில் பெரும் தொகையான ஆயிரம் ரூபாயை போராட்டநிதியாக கொடுத்தார். சிவகிரி ஆசிரமத்தில் நன்கொடைப்பெட்டி ஒன்றையும் திறந்தார். போராட்டத்திற்கு தன் துறவிகளான இருசீடர்களை குரு அனுப்பினார். அவர்களில் சுவாமி சத்யவிரதன் பின்னர் கேரளத்தில் பெரும்புகழ்பெற்றார்.

27 செப்டெம்பர் 1924 அன்று நாராயணகுரு அவரே வைக்கத்திற்கு வந்தார். அப்போது காந்தி உண்ணாவிரதம் இருந்து வந்தமையால் அவரது உடல்நலனுக்காக நடத்தப்பட்ட மாபெரும் பொதுகூட்டத்தில் நாராயணகுரு மௌனமாக பிரார்த்தனை செய்தார். குரு பொது இடத்தில் பிரார்த்தனை செய்த ஒரே நிகழ்ச்சி அதுவே. அதன்பின் கேரளம் முழுக்க நாராயணகுருவின் பக்தர்கள் லட்சக்கணக்கானவர்கள் வைக்கம் போராட்டத்தில் ஈடுபட்டனர். வைக்கம் போராட்டம் வெற்றிபெற நாராயணகுருவின் பங்களிப்பு முதன்மையானது.

நாராயண குரு பழையபடம்
ஆலுவா பிரகடனம்

1921-ல் கேரளத்தில் மிகப்பெரிய இஸ்லாமிய - இந்து மோதல் உருவானது. மாப்பிள்ளை கிளர்ச்சி என அழைக்கப்படும் இந்தக் கலவரத்தில் பலநூறு இந்துக்கள் கொல்லப்பட்டனர். பிரிட்டிஷ் அரசின் அடக்குமுறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர் கொல்லப்பட்டனர், ஏராளமானவர்கள் அந்தமானுக்குச் சிறைசென்றனர்.

அதையொட்டி மதங்களுக்கு நடுவே ஒத்திசைவும் புரிதலும் உருவாகும்பொருட்டு ஆலுவா 15 மே 1921 ல் ஓர் அனைத்துமத மாநாடு கூட்டப்பட்டது. அதற்கு உலக சகோதரத்துவ மாநாடு என்று பெயரிடப்பட்டது.

அதில் நாராயணகுரு தலைமை வகித்தார். அந்த மாநாட்டில் நாராயண குரு வெளியிட்ட ‘ஒரு சாதி ஒரு மதம் ஒரு தெய்வம் மனிதனுக்கு’ (ஒருஜாதி ஒருமதம் ஒருதெய்வம் மனுஷ்யனு) என்ற வரி அவரது மையமான உபதேசமாக கொள்ளப்பட்டது. ஆலுவாவில் மேலும் சில உலக சகோதரத்துவ மாநாடுகள் நடைபெற்றன.

மதுவிலக்கு

நாராயணகுரு மது தயாரிக்கும் தொழில் செய்துவந்த சமூகத்தைச் சேர்ந்தவர். தன் சமூகம் மது தயாரிப்பதை விடவேண்டும் என வலியுறுத்தினார் 1921 ஆவணி சதயம் நாளில் விடுத்த தன் பிறந்தநாள் செய்தியில் ‘மது என்பது நஞ்சு. கள்ளு இறக்கக்கூடாது, விற்கக்கூடாது. குடிக்கக்கூடாது’ என்னும் அறிவிப்பை வெளியிட்டார்.

அறிவியக்கம்

நாராயணகுரு அனைத்தையும் கற்று உள்ளடக்கி தனக்கென ஒரு நோக்கை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றார். அறிவு ஒன்றுதான் மனித குலத்துக்கு உரியது என்றும் அதைக் கொண்டு முன்னேற்றம் காண்பதுதான் வாழ்க்கை என்றும் சொன்னார். ’அறிவுக்கு குறுக்கு வழிகள் எதுவும் இல்லை’ என்பது அவருடைய கூற்று.

கல்வியிலேயே விடுதலையும் அதிகாரமும் உள்ளது என்று வலியுறுத்திய நாராயண குருவின் வழிகாட்டலில் கல்விநிறுவனங்கள் உருவாயின. கேரள கௌமுதி, தேசாபிமானி உள்ளிட்ட இதழ்கள் உருவாயின. கேரள சிந்தனை மரபில் நாராயணகுருவின் செல்வாக்கால் உருவான ஏராளமான சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் உள்ளனர். நாராயணகுரு உருவாக்கிய அறிவியக்கமே பின்னர் காங்கிரஸ் இயக்கமும் இடதுசாரி அறிவியக்கமும் உருவாக அடித்தளம் அமைத்தது.

தத்துவம்

இறையியல்

நாராயணகுருவின் இறையியல் ஈடுபாடு தொடக்கத்தில் சட்டம்பி சுவாமியிடமிருந்து பெற்றுக்கொண்ட சுப்ரமணிய உபாசனை. அதன்பின் சிவபக்தராக ஆனார். இறுதியாக அம்மாளு அம்மாளிடமிருந்து வேதாந்த தீட்சை பெற்றார். சங்கரவேதாந்தியாக வாழ்ந்து நிறைவுற்றார். தன்னை அத்வைதி என்றே நாராயணகுரு சொல்லிக்கொள்கிறார்.

நாராயண குரு பழையபடம்

அத்வைதிக்கு இறைவழிபாடு சாமானிய தளத்தில் ஏற்புடையது. அத்வைத தரிசனத்தை அடையமுடியாத மக்கள் உருவதெய்வங்களை வழிபடுவதை நாராயணகுரு ஆதரித்தார். மக்களின் வழிபாட்டுக்காக தெய்வங்களை நிறுவி, ஆலயங்களைக் கட்டினார். 1888ல் அவர் கட்டிய முதல் ஆலயம் சிவனுக்காக அருவிப்புறத்தில். பின்னர் ஏராளமான கோயில்களை நிறுவினார்.

நாராயணகுரு சிறுதெய்வ வழிபாட்டுக்கு எதிரானவர். சிறுதெய்வங்கள் மக்கள் அனைவருக்கும் உரியவையாக இருப்பதில்லை, சாதி குடும்ப அடையாளங்கள் கொண்டவை, மதுமாமிசம் கொண்ட வழிபாட்டுமுறை கொண்டவை, பூசகர் போன்ற தனிநபர்களின் அதிகாரத்தை உருவாக்குபவை, மூடநம்பிக்கையை வளர்ப்பவை என்று கருதினார். பெருந்தெய்வக் கோயில்களில் அவர் மங்கலச் சின்னங்களால் வழிபாடு நிகழவேண்டும் என வகுத்தார். வழிபாட்டுக்குரிய தோத்திரங்களை எழுதி அளித்தார். பெருந்தெய்வ ஆலயங்கள் மக்கள் வந்துகூடுவதற்கான இடங்களாக அமையவேண்டும் என்றும், அங்கே கல்வியும் கலைகளும் பெருகவேண்டும் என்றும் கருதினார்.

இறுதிக்கட்டத்தில் நாராயணகுரு கருத்துருவ தெய்வங்களை நிறுவினார். நிலைக்கண்ணாடி (சேர்த்தலை களவங்கோடு ஆலயம்), விளக்கு, சத்யம் தயை தர்மம் ஆகிய சொற்கள் ஆகியவற்றை அவர் கருவறையில் நிறுவினார். அதன்பின் இனிமேல் ஆலயங்கள் வேண்டாம், கல்விச்சாலைகளே போதும் என்று அறிவுறுத்தினார். நாராயணகுரு நிறுவிய கோயில்களின் பரிணாமத்தைக் கொண்டு அவர் முன்வைத்தது தூய அத்வைதமே என உணரலாம்

நாராயணகுரு எல்லா வழிபாடுகளையும், எல்லா தரிசனங்களையும் வேதாந்தத்துடன் இணைக்க முயன்றார். இதற்கு சங்கரரையே நாராயணகுரு முன்னுதாரணமாகக் கொண்டார். சங்கரரைப்போலவே சைவம், வைணவம், சாக்தம் ,கௌமாரம், காணபத்யம், சௌரம் என ஆறு மதங்களுக்கும் உரிய சூத்திரங்களை எழுதினார். குக அஷ்டகம் (கௌமாரம்) பத்ரகாளி அஷ்டகம் (சாக்தம்) விநாயக் அஷ்டகம் (காணபத்யம்) ஸ்ரீ வாசுதேவ அஷ்டகம் (வைணவம்) ஜெனனி நவரத்னமஞ்சரி, காளிநாடகம், பத்ரகாளி அஷ்டகம் (சாக்தம்) சிவ சதகம், சிதம்பர அஷ்டகம் (சைவம்)

சாமானியர்களின் வழிபாட்டுக்காக நாராயண குரு எழுதிய தெய்வதசகம் என்னும் தோத்திரப்பாடலில் இந்தப் பரிணாமம் உள்ளது. ’தெய்வமே என்னை காத்தருள்க’ என தொடங்கும் பாடல் ‘ஒன்றொன்றாய் தொட்டெண்ணி எண்ணும் பொருள் ஒடுங்கையில் நின்றிரும் பரம்’ என வேதாந்தத்தை முன்வைக்கிறது.

நாராயண குரு பழையபடம்
வேதாந்தம்

நாராயணகுருவின் வேதாந்தம் மெய்ஞானக்கொள்கையானது சங்கரர் முன்வைத்த அத்வைதம் என்னும் பிரிவைச் சேர்ந்தது. சங்கரரை நாராயணகுரு தன் முதன்மைக்குருவாகக் கண்டார். சங்கர மரபைச் சேர்ந்தது தன் குருகுலம் என்பதனால்தான் சாரதாதேவி ஆலயத்தை அவர் வர்க்கலையில் நிறுவினார். வேதாந்த சூத்திரம், ஸ்வனுபவ கீதை, ஆத்மோபதேச சதகம், அத்வைத தீபிகா போன்ற அவருடைய நூல்கள் அத்வைத விளக்கமாக அமைந்தவை.

நாராயண குரு வேதாந்தஞானம் தூய நிலையில் ஞானத்தை முன்வைப்பதாக நிலைகொள்ளும்போதே நடைமுறையில் பிற வழிபாட்டுமுறைகளையும் இணைத்துக்கொண்டு அந்த வழிபாட்டுமுறைகளின் ஞானசாரமாக நிலைகொள்ளவேண்டும் என கூறினார். தூய பிரம்மவாதத்தையே நாராயணகுரு முன்வைத்தார்.

சங்கரவேதாந்தத்தில் இருந்து நாராயணகுரு மாறுபடுவதை இரண்டு வகையில் வகுக்கலாம். அவ்வடிப்படையிலேயே அவரை நவவேதாந்தம் சார்ந்தவர் என வகுக்கிறார்கள்.

  • பிரம்மவாதிகள் கயிற்றரவு என்னும் கொள்கையை முன்வைக்கிறார்கள். கயிற்றை பாம்பு என நினைத்து அஞ்சுபவன் அப்போது அறிவது அவன் வரையில் பாம்பைத்தான். அது கயிறென தெளிவடையும்போது பாம்பு இல்லாமலாகிவிடுகிறது. நாராயணகுரு மலரும் மாலையும் என்னும் உருவகத்தை மேலும் பொருத்தமானதாகக் கருதினார். மலரை பார்ப்பவன் மாலையை அறிவதில்லை, மாலையை கண்டதும் மலரை வேறுவகையில் உணர்கிறானே ஒழிய மலர் இல்லாமலாவதில்லை. இந்த உலக யதார்த்தம் மாயை அல்ல, உண்மையின் இன்னொரு தோற்றமே என நாராயணகுரு சொன்னார். இதுவே அவரை சமூகப்பணியாற்றச் செய்தது.
  • நாராயணகுரு தூய அறிவு என்னும் கொள்கையை முன்வைத்தவர், ஞானமே விடுதலையை அளிக்கும் என்று கூறியவர்.ஆனால் அது வேதாந்த ஞானம் மட்டுமல்ல. கலைகள், இலக்கியங்கள், தொழில்கள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் உள்ள நவீன அறிவுகள் அனைத்தையும் அறிவு என்னும் சொல்லால் அவர் குறிப்பிட்டார். அனைத்து அறிதல்களையும் இணைத்து ஒருமையை உணர்வதே வேதாந்தத்தின் வழி என்று கருதினார். தன் முக்கிய மாணவரான நடராஜ குருவை ஐரோப்பாவுக்கு அனுப்பி மேலை தத்துவத்தில் பயிற்சிபெற அவர் ஏற்பாடு செய்தார்
அறிவு

நாராயணகுருவின் தத்துவத்தின் மையக் கலைச்சொல்லாக அறிவு என்பது அமைந்தது. வேதாந்தத்தில் இருந்து எடுத்ததாயினும் அச்சொல்லை நாராயண குரு மேலும் விரிவான பொருளில் முன்னெடுத்தார். உயர்நிலையில் அறிவு, அறிதல், அறிபடுபொருள், அறிபவன் ஆகிய நான்கும் ஒன்றாகும் ஒரு மெய்நிலையை முன்வைத்தார். அறிவு என்னும் அவருடைய சிறிய நூல் அவருடைய தரிசனத்தை வரையறுத்துச் சொல்வதாகும்.

நாராயண குரு பழையபடம்

நடைமுறைத் தளத்தில் குரு அறிவு என்பதை மூன்றுபொருளில் பயன்படுத்துகிறார். ஒருவர் தன்னைச்சூழ்ந்துள்ள உலகைப் பற்றி அறிவதனூடாக அதை பயன்படுத்திக்கொள்வதும், வாழ்வதும் முதல்தளம். நன்று-தீது என அறிவதன் வழியாக நன்மைநோக்கிச் செல்வது இரண்டாவது தளம். தன்னை தானே தொடர்ச்சியாக அறிவதன் வழியாக தன் எல்லைகளைக் கடந்துசெல்லுதல் மூன்றாவது தளம்.

நாராயணகுருவின் தனித்துவம் வாய்ந்த தரிசனம் ‘அறிவு’ என்பதற்கு அவர் அளிக்கும் விளக்கம். ‘அறிவுக்கு எல்லையுண்டு எதிர்நிலையுமுண்டு. அறியாமைக்கு இரண்டுமில்லை’ (அறிவின்னு அதிருண்டு, எதிருண்டு. அறிவில்லாய்மைக்கு ரண்டுமில்ல) என்னும் அவருடைய சொற்றொடர் புகழ்பெற்றது.

அறிவு என்னும் தத்துவத்தின் இரண்டு நிலைகளின் செயல்பாட்டையே நாராயணகுரு முன்னெடுத்தார். அறிவின் முதல்தளத்திற்காக துறவியர் சங்கத்தையும் அதன் இரண்டாவது உலகியல் தளத்துக்காக தர்மபரிபாலன சபாவையும் உருவாக்கினார்.

தரிசன ஒருங்கிணைப்பு

அத்வைத வேதாந்தம் அனைத்து மதங்களையும் இணைக்கும் தன்மை கொண்டது. அனைத்துத் தரிசனங்களையும் இணைத்து மையத்தை கண்டடைய முயல்வது. பதிநான்காம் நூற்றாண்டில் சிருங்கேரியில் வாழ்ந்த வித்யாரண்யர் எழுதிய சர்வதர்சன சம்கிரகம் என்னும் நூலில் எல்லா மதக்கொள்கைகளையும் இணைத்து ஒருமையை காண முயன்றார். நாராயணகுரு அந்நூலை ஒரு முதல்நூலாக முன்வைத்தார்

நாராயண குரு 'தர்சனமாலா' என்னும் நூலை எழுதினார். இது பிரபஞ்சத்தையும் பிரம்மத்தையும் அறிவதன் வெவ்வேறு படிநிலைகளை வெவ்வேறு தரிசனங்களாக முன்வைக்கும் நூல். இதுவும் ஒருங்கிணைப்பு நோக்கு கொண்டதே. நாராயணகுருவின் வழிமுறை என்பது அனைத்துப் பார்வைகளும் பிரம்மதரிசனமாக படிப்படியாக கூர்கொள்ளும் என்பதுதான்.

ஆன்மிகம்

நாராயணகுருவை இந்தியாவின் ஆன்மஞானிகளில் ஒருவராகக் கொள்ளலாம். ஓர் ஆன்மிக ஞானியாக அவரிடம் இரண்டு மரபுகள் இணைகின்றன.

  • தமிழ்ச் சித்தர் மரபு  : நாராயணகுருவுக்கு சித்தர் மரபுடன் நேரடின் உறவுண்டு. தைக்காடு அய்யாவு மற்றும் மருத்துவாழ்மலையில் சந்தித்த சித்தர்கள் ஆகியோரிடமிருந்து அவர் அம்மரபை அடைந்தார். அவருடைய தொடக்ககால பாடல்களில் பட்டினத்தாரின் ஆழ்ந்த செல்வாக்கைக் காணலாம். சித்தர்மரபின் உடலைப் பழித்தல், காமத்தைப் பழித்தல் ஆகியவற்றை அவரும் எழுதியிருக்கிறார். திருக்குறளை மொழியாக்கம் செய்திருக்கிறார். ஹடயோகம், வாசியோகம் ஆகியவற்றை பயின்றிருக்கிறார்.
  • வேதாந்தத்தின் ஞானயோக மரபு: நாராயண குரு தன் முதன்மை நூல்களை எல்லாம் அத்வைத வேதாந்தம் சார்ந்தே எழுதியுள்ளார். வேதாந்தம் சொல்லும் அபேதநிலையை (இரண்டின்மை) முக்தி என தன் நூல்களில் வரையறை செய்கிறார். ரமணரைச் சந்தித்து, அவருடன் அணுக்கமான தொடர்பு கொண்டிருந்தார்.

ஒருபக்கம் உலகியலை ஆற்றிக்கொண்டு மறுபக்கம் அனைத்திலிருந்தும் விடுபட்டவராகவும் அவர் திகழ்ந்தார். ‘ஒருகையால் செயலாற்றி மறுகையால் செயலின்மை எனும் சின்முத்திரை காட்டி அமர்ந்திருக்கும் யோகி’ என்று பி.கே.பாலகிருஷ்ணன் நாராயணகுருவை குறிப்பிட்டார்.

நாராயணகுரு ரபீந்த்ரநாத் தாகூர்

மாணவர்கள்

அறிஞர்கள், சமூகப்பணியாளர்கள்

நாராயணகுருவின் தத்துவ நோக்கு அவரது மாணவர்களால் பிற்பாடு இந்திய மொழிகளிலும் ஐரோப்பிய மொழிகளிலும் பரவலாகக் கொண்டு செல்லப்பட்டது. அது இந்திய அறிவுத்தளத்தில் முக்கியமான ஓர் இயக்கமாக ஆயிற்று. கேரள பொதுவுடைமை அரசியல் நாராயணகுருவில் துவங்குகிறது என ஈ.எம்.எஸ் எழுதினார். மூன்று தலைமுறைகளாக நாராயணகுருவை தொடர்ந்து அறிஞர்கள் பல துறைகளிலும் உருவாகினர்.

  • குமாரன் ஆசான்: நாராயணகுருவின் முதல் சீடர். சிறு வயதிலேயே எஸ்.என்.டி.பி இயக்கத்தின் செயலராகி நெடுங்காலம் பணியாற்றினார். மலையாளத்தில் நவீன கவிதை, இதழியல் இரண்டுமே ஆசானிலிருந்து தொடங்கியவை.
  • சகோதரன் அய்யப்பன்: நாராயணகுருவின் அணுக்கத்தொண்டர்; அடிப்படைக் கருத்துகளில் அவரை நிராகரித்தவர். கேரளத்தில் நாத்திக சிந்தனையை நிறுவிய முன்னோடி. புலையர்களை அணிதிரட்டி ஆரம்பகட்ட கிளர்ச்சிகளை நடத்தியவர். அக்காரணத்தாலேயே ‘புலையன் அய்யப்பன்' என்று அறியப்பட்டவர்.
  • நடராஜகுரு: நாராயணகுருவின் கொள்கைகளையும் செய்திகளையும் உலகம் முழுவதும் கொண்டு சென்றவர்களில் முக்கியமானவர்.
  • சி.வி.குஞ்ஞுராமன் கேரள பண்பாட்டுவரலாற்றில் ஆழமான பங்களிப்பை ஆற்றிய 'கேரள கெளமுதி' இதழ் குழுமம் நாராயணகுருவின் மாணவரான சி.வி.குஞ்சுராமனால் உருவாக்கப்பட்டது.
  • டி.கே.மாதவன்: வைக்கம் ஆலயநுழைவுப் போராட்டத்தை தொடங்கி முன்னெடுத்து வெற்றிபெறச் செய்தவர் டி.கே.மாதவன்.
துறவியர்
  • போதானந்தர் (1883-1928)
  • சிவலிங்க சுவாமி (1866-1919)
  • சத்யவிரதர் (1893- 1926)
  • கோவிந்தானந்தர் (1882-1930)
  • குருப்பிரசாத் சுவாமி (1891-1958)
  • சைதன்ய சுவாமி (1876-1952)
  • ஆத்மானந்தர் (1865- 1969)
  • தர்மதீர்த்தர் (1891- 1976)
  • சுவாமி ஏர்னஸ்ட் கீர்க் ( -1951)
  • பைரவசாந்தி சுவாமி (1818-1938)
  • நடராஜ குரு (1895-1973)
  • ஆனந்த தீர்த்தர் (1905 -1987)
  • சுவாமி நிச்சலதாஸ் (1876-1909)
  • மாதவானந்தர் (1872-1919)
  • ராமானந்தர் (1895-1957)
  • மலையாள சுவாமி (1885 -1962)
  • சங்கரானந்தர் (1886 -1976)
  • நாராயண தீர்த்தர் ( -1917)
  • சேலம் சாந்தலிங்கர்
  • ஹனுமன்கிரி சுவாமி
  • சுகுணானந்தர்
  • மாம்பலம் வித்யானந்தர்
  • நரசிம்ம சுவாமி
  • திருப்ப்பரங்குன்றம் சாந்தலிங்கர்
  • பண்டித ஜெகதீஸ்வர சுவாமி
  • பெரிங்கோட்டுகரை வித்யானந்தர்

வெளிநாட்டுப் பயணம்

  • நாராயணகுரு 1918 ஆகஸ்டில் பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த இலங்கைக்குப் பயணம் செய்தார்.
  • 1926 அக்டோபரில் இரண்டாம் முறையாக இலங்கைக்கு நாராயணகுரு சென்றுவந்தார். உடன் நடராஜ குருவும் பிற மாணவர்களும் சென்றனர். இலங்கை குருவுக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்ததாகவும், அங்கேயே தங்க விரும்பியதாகவும், மாணவர்களின் வற்புறுத்தலினால் திரும்பியதாகவும் எழுதப்பட்டுள்ளது
குரு மாணவர்களுடன்
குரு மாணவர்களுடன்
நாராயணகுரு

சந்திப்புகள்

ரமணர்

நாராயணகுரு 1916-ல் காஞ்சீபுரத்தில் நாராயண ஆசிரமம் ஒன்றை நிறுவியவரான தன் மாணவர் கோவிந்தானந்தாவைச் சந்தித்துவிட்டு திரும்பும் வழியில் திருவண்ணாமலையில் ரமணரின் ஆசிரமத்திற்குச் சென்று அவருடன் தங்கியிருந்தார்.

காந்தி

வைக்கம் போராட்டத்தை ஒட்டி கேரளத்திற்கு வந்தபோது மார்ச் 12.1925 அன்று காந்தி வர்க்கலைக்கு வந்தார். நாராயணகுருவை அவரது வர்க்கலா ஆசிரமத்துக்குச் சென்று சந்தித்துப் பேசினார். அப்போது நாராயணகுருவின் மாணவர் மூர்க்கோத்து குமாரன், டி.கெ.மாதவன் போன்றவர்கள் உடனிருந்தனர். கோட்டயம் ஆட்சித் தலைவரும் ,நாராயணகுருவின் சீடருமான என்.குமாரன் உரையாடலை மொழியாக்கம் செய்தார்.

அச்சந்திப்பின்போது இந்து நூல்களில் சாதி - வர்ணம் ஆகியவை வலியுறுத்தப்பட்டுள்ளனவா என்று கேட்டார். நாராயண குரு மெய்ஞான நூல்களான சுருதிகளில் சொல்லப்படவில்லை, நெறிநூல்களான ஸ்மிருதிகளிலேயே சொல்லப்பட்டுள்ளது, ஸ்மிருதிகள் மாற்றப்படத்தக்கவையே என விளக்கினார்.

தாகூர்

தாகூர் நவம்பர் 15, 1922-ல் நாராயண குருவை சந்தித்தார். அத்வைத வேதாந்தம் பற்றிய ஐயங்களைக் கேட்டறிந்தார். பின்னர் தாகூர் ’நான் நாராயணகுருவை விட ஆன்மிகமாக உயர்ந்தவரையோ மெய்மையை அடைந்தவர்களில் அவருக்கு நிகரான இன்னொருவரையோ சந்தித்ததில்லை” என்று குறிப்பிட்டார்.

எழுத்துகள்

மலையாள மொழியின் தொடக்கப்புள்ளி என்று கருதப்படுபவர் துஞ்சத்து எழுத்தச்சன். பண்டிதர்களிடம் இருந்த சம்ஸ்கிருதமயமான இலக்கியத்தை அவர் மக்கள்மொழிக்குக் கொண்டுவந்தார். அந்த மரபைப் புத்துயிர் பெறச்செய்தவர் நாராயணகுரு. தன் படைப்புகள் வழியாகவும், தன் முதன்மை மாணாக்கரான குமாரனாசானின் படைப்புகள் வழியாகவும் அம்மாற்றத்தை நிகழ்த்தினார்.

நாராயணகுருவின் எழுத்துக்கள் மலையாளம், சம்ஸ்கிருதம், தமிழ் என மூன்று மொழிகளில் அமைந்தவை. அவற்றை இலக்கியம், தத்துவம், அறவியல் என மூன்று வகைமைகளாகப் பிரிக்கலாம்

இலக்கியம்

நாராயணகுரு எழுதிய தோத்திரங்கள் மொழிநடை, புதிய படிமங்கள் ஆகியவற்றால் முதன்மையான இலக்கிய ஆக்கங்களாகத் திகழ்கின்றன. சிவ சதகம், காளிநாடகம், தெய்வசிந்தனம் (மலையாளம்) சிதம்பர அஷ்டகம்,குக அஷ்டகம்,பத்ரகாளி அஷ்டகம்,விநாயக் அஷ்டகம்,ஸ்ரீ வாசுதேவ அஷ்டகம்,,ஜெனனி நவரத்னமஞ்சரி (சம்ஸ்கிருதம்) ஆகியவை முக்கியமான இலக்கிய ஆக்கங்கள். அவருடைய படைப்புகளில் இலக்கியஅழகியல் சார்ந்து காளிநாடகமே உச்சமானது என விமர்சகர்கள் கருதுகிறார்கள். இதை ஆங்கிலத்தில் வினயசைதன்யா மொழியாக்கம் செய்துள்ளார்.

தத்துவம்

நாராயண குரு வாழ்வின் இறுதி பதினைந்து வருடங்களில் தத்துவ முக்கியத்துவம் கொண்ட நூல்களை எழுதினார். அவரது இறப்புக்குப் பின்னர் நாராயணகுருவின் இயக்கம் இந்த நூல்களில் இருந்து மீண்டும் புதிதாக முளைத்தெழுந்தது. அவற்றில் 'தர்சன மாலா', 'ஆத்மோபதேச சதகம்' ஆகிய நூல்கள் தத்துவார்த்தமாக முக்கியமானவை.

அறவியல்

நாராயணகுரு உயிர்க்கொலையை கண்டித்தும், அறம்சார்ந்த வாழ்க்கையை முன்வைத்தும் அறவியல் நூல்களை இயற்றினார். ஜீவகாருண்ய பஞ்சகம், அனுகம்ப தசகம் (மலையாளம்) ஆஸ்ரமம், தர்மம் (சம்ஸ்கிருதம்) ஆகியவை குறிப்பிடத்தக்கவை. சாதியொழிப்பு பற்றி ஜாதி நிர்ணயம்,ஜாதி லட்சணம் என்னும் நூல்களையும் இயற்றினார்.

மொழியாக்கம், உரைகள்

நாராயணகுருவின் பெரும்பாலான தத்துவநூல்கள் ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்யப்பட்டு விரிவான உரையுடன் வெளிவந்தன. நடராஜகுரு, நித்ய சைதன்ய யதி, முனி நாராயணப் பிரசாத் ஆகியோரின் உரைகள் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளன.

காளி நாடகம்' சுவாமி வினய சைதன்யாவால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இந்தியன் லிட்டரேச்சர் இதழில் வெளிவந்தது.

வாழ்க்கை வரலாறுகள், ஆய்வுகள்

நாராயணகுருவின் வாழ்க்கை வரலாறு பலரால் எழுதப்பட்டுள்ளது. குருதேவசரிதம் என்னும் இணையப்பக்கத்தில் அவரைப் பற்றிய 146 வாழ்க்கைவரலாற்று நூல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

முதன்மை நூல்கள்
  • 1926 ல் நாராயணகுரு உயிருடனிருந்தபோது மூர்க்கோத்து குமாரன் அவருடைய முதல் வாழ்க்கை வரலாற்றை எழுதினார்.
  • 1929 ல் கே.தாமோதரன் எழுதிய நாராயணகுரு வாழ்க்கை வரலாறு முழுமையாக அவரை அறிமுகம் செய்வதாகும்
  • 1931- ஜான் தர்மதீர்த்தர் எழுதிய முதல் ஆங்கில வாழ்க்கைவரலாறு The Prophet of Peace வெளிவந்தது
  • 1952 ல் நடராஜ குரு எழுதிய The Way of the Guru நாராயணகுருவைப் பற்றிய விரிவான அறிமுகம் அளிக்கும் நூல்.
  • 1954 ல் பி.கே.பாலகிருஷ்ணன் ஆய்வும், கட்டுரைகளின் தொகுதியுமாக அமைந்த ‘நாராயணகுரு தொகுப்பு’ என்ற நூலை எழுதினார்
குறிப்பிடத்தக்க ஆங்கில நூல்கள்
  • அசோக வேங்கேரி Sree Narayana Guru The perfect union of Buddha and Sankara: A comprehensive Biography
  • எஸ். ஓமனா The Philosophy of Sree Narayana Guru
  • எஸ்.மோகன்தாஸ் Sree Narayana Guru: The Prophet of One World
  • டாக்டர் கே.ஏ.குஞ்ஞக்கன் Sree Narayana Guru: An Aptosle of Humanism
  • கே.கே.ராமசந்திரன் The Life, Times and Miracles of Sree Narayana Guru
  • கே.பி.ஜோசப் Gospel: Guru Sree Narayana of India
  • மூர்க்கோத்து குஞ்ஞப்பா ടree Narayana Guru.
  • எம்.கே.சானு ടree Narayana Guru: Life and Times
  • சச்சிதானந்த சுவாமி Sree Narayana Guru: The Universal Guru
  • அமர்சித்ரகதா Sree Narayana Guru
  • ஜி.கே.சசிதரன் Sree Narayana Gurudev: The Maharshi whom ade Advaitaa Science
  • விஜயாலயம் ஜயக்குமார் Sree Narayana Guru: A Critical Study .
தமிழில்

நாராயணகுருவைப் பற்றி தமிழில் பல நூல்கள் வெளிவந்துள்ளன. குறிப்பிடத்தக்கவை:

  • நாராயணகுரு - மூர்க்கோத்து குஞ்ஞப்பா (தமிழாக்கம் எம்.சேஷன்) நேஷனல் புக்டிரஸ்ட் வெளியீடு
  • நாராயணகுரு - ஆர்ட்டிஸ்ட் கே. மாதவன் (தமிழாக்கம் அரோனிமூஸ்) இணையநூலகம்
  • மகான் நாராயணகுரு (நாடகம்) மாலி. கே.ஆர்.எஸ். குமார்
  • மகான் ஸ்ரீ நாராயண குரு - பட்டத்தி மைந்தன்
  • ஶ்ரீ நாராயண குரு - முனைவர் எஸ். ஶ்ரீகுமார்
  • நாராயண குரு - கே.ஸ்ரீனிவாசன். தமிழில் மா. சுப்பிரமணியம்
  • துறவிவேந்தர் நாராயண குரு - டி.பாஸ்கரன் (சாகித்ய அக்காதமி)
  • நாராயண குரு. எம்.கே.சானு
  • ஸ்ரீநாராயண குரு .முனைவர்.இரா. சாந்தகுமாரி
  • ஸ்ரீநாராயணகுரு வாழ்வும் வாக்கும் -அஜானந்தர்
  • ஸ்ரீநாராயண குரு - பருத்தியூர் சந்தானராமன்

நாராயணகுருவின் கொள்கைகள், கோட்பாடுகள், செயல்பாடுகள் ஆகியவை கேரளாவில் உள்ள பல பல்கலைக்கழகங்களிலும் வேறு சில பல்கலைக் கழகங்களிலும் ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டு பல மாணவர்கள் முனைவர் முனைவர் பட்டமும், ஆய்வியல் நிறைஞர் பட்டங்களும் பெற்றனர்.

நாராயணகுரு சமாதி

சமாதி

செப்டம்பர் 20, 1928-ல் நாராயணகுரு தன் 74 வது வயதில் 1928-ல் கேரளத்தில் வற்கலையில் அவர் உருவாக்கிய சிவகிரி மடத்தில் சமாதியானார். (மலையாளமாதம் கன்னி. தமிழ் புரட்டாசி. சுக்லஷஷ்டி, வியாழக்கிழமை, மாலை 3.30 மணி).

வர்க்கலா சிவகிரி மடத்தில் நாராயண குருவின் சமாதி உள்ளது. நாராயணகுரு சமாதியான அறையில் அவர் பயன்படுத்திய கட்டிலும், நாற்காலியும், தலையணைகளும் அப்படியே இருக்கின்றன. அங்கு ஒரு அணையா விளக்கு எரிகிறது.

சிவகிரி தீர்த்தயாத்திரை

டி.கே.கிட்டன் வைத்தியர் தொடர்ச்சியாகக் கோரியதன் அடிப்படையில் நாராயண குரு ஆண்டுதோறும் நாராயண குருவின் பிறந்தநாளில் பக்தர்கள் சிவகிரிக்கு தீர்த்தயாத்திரை செய்வதற்கான அனுமதியை 19 ஜனவரி 1929ல் வழங்கினார். அதுமுதல் சிவகிரி தீர்த்தயாத்திரை பல்லாயிரம் பேர் பங்குகொள்ளும் விழாவாக நிகழ்ந்து வருகிறது.

நினைவு

  • நாராயண குரு உயிருடன் இருக்கையில் மூர்க்கோத்து குமாரன் முன்னெடுப்பில் தலைசேரியில் நாராயணகுரு உருவாக்கிய ஜெகன்னாதர் ஆலயத்தின் முகப்பில் அவருடைய வெண்கலச் சிலை 12 மார்ச் 1927ல் நிறுவப்பட்டது. கேரளத்திலும் வெளியிலும் நாராயண குருவுக்கு நூற்றுக்கணக்கான சிலைகள் உள்ளன.
  • நாராயணகுருவின் பிறந்த நாள் மற்றும் சமாதி நாள் ஆகியவை கேரள அரசால் அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டன.
  • இந்தியா 21 ஆகஸ்ட் 1967 ல் நாராயணகுருவுக்கு தபால்தலை வெளியிட்டது.
  • ஸ்ரீலங்கா 4 செப்டெம்பர் 2009 ல் நாராயணகுருவுக்கு தபால்தலை வெளியிட்டது.
  • 2006-ல் நாராயணகுருவின் 150-ஆவது பிறந்த நாளின் போது இந்திய அரசு ரிசர்வ் வங்கி மூலமாக சிறப்பு நாணயங்களை வெளியிட்டது

திரைப்படங்கள்

  • 1986 ஸ்ரீநாராயண குரு (மலையாளம்) இயக்கம் பி.ஏ.பக்கர்
  • 1986 சுவாமி ஸ்ரீநாராயண குரு (மலையாளம்) இயக்கம் கிருஷ்ணஸ்வாமி
  • 2010 யுகபுருஷன் (மலையாளம்) ஆர். சுகுமாரன்
  • 2014 பிரம்மஸ்ரீ நாராயண குருஸ்வாமி (துளு) ராஜசேகர் கொடியன்
  • 2016 மருந்நுமாமலை- ஆவணப்புனைவு- (மலையாளம்) இயக்கம் எஸ்.மகேஷ்
நாராயணகுரு அஞ்சல்தலை

வரலாற்று இடம்

நாராயண குரு இந்திய மறுமலர்ச்சியின் நாயகர்களில் ஒருவர். நான்கு தளங்களில் அவருடைய பங்களிப்பை தொகுத்துக்கொள்ளலாம்.

  • நாராயணகுரு இந்திய சமூகத்தின் பழமைவாதம், ஆசாரவாதம் ஆகிய மானுடஎதிர்ப்புக் கூறுகளை கல்விச்செயல்பாடு வழியாகவும், சமூகசீர்திருத்தச் செயல்பாடுகள் வழியாகவும் திருத்தியமைத்த மாபெரும் சமூகசீர்திருத்தவாதிகளில் ஒருவர். அவருடைய கருத்துக்கள் காந்தி வழியாகவும், வைக்கம்போராட்டம் போன்ற நிகழ்வுகள் வழியாகவும் இந்தியாவையே மாற்றியமைத்தன.
  • நாராயணகுரு இந்திய வேதாந்த மரபை ஆசாரவாதம் மற்றும் வழிபாடுகளில் இருந்து மீட்டு அதன் ஞானம் சார்ந்த அடிப்படைகளை நோக்கிக் கொண்டுசென்ற நவவேதாந்த தத்துவவாதி. வேதாந்தத்தின் தூய அறிவு, ஒருமைவாதம் ஆகிய தரிசனங்க்ளை முன்வைத்தவர். அக்கொள்கைகளின் அடிப்படையில் வேதாந்தத்தை நடைமுறைத்தளத்தில் உயிர்க்கருணை, மானுடசமத்துவம், மானுட அறம் ஆகியவற்றுக்காகப்போராடும் ஒரு தத்துவமாக மாற்றியமைத்தார். மெய்ஞானத்தளத்தில் ஞானப்பயிற்சியை ஞானயோகமாகவும் வீடுபேறுக்கான வழியாகவும் முன்வைத்தார்.
  • மலையாள இலக்கியத்தின் மறுமலர்ச்சிக்கு தன் படைப்புகள் வழியாகவும் தன் மாணவரான குமாரனாசான் வழியாகவும் பங்களிப்பாற்றினார்.
  • மெய்ஞானியாக ஓர் ஆன்மிக மரபின் தொடக்கத்தை உருவாக்கினார்.

நூல் பட்டியல்

தமிழ்
  • தேவாரப் பதிகங்கள்
மலையாளம்
  • ஸ்வனுபவ கீதை
  • ஆத்மோபதேச சதகம்
  • அத்வைத தீபிகா
  • அறிவு
  • தெய்வ தசகம்
  • ஜீவகாருண்ய பஞ்சகம்
  • அனுகம்ப தசகம்
  • ஜாதி நிர்ணயம்
  • ஜாதி லட்சணம்
  • சிஜ்ஜட சிந்தகம்
  • தெய்வ சிந்தனம்-1 &2
  • ஆத்ம விலாசம்
  • சிவ சதகம்
  • காளிநாடகம்
சமஸ்கிருதம்
  • தர்சன மாலா
  • பிரம்மவித்ய பஞ்சகம்
  • நிர்விருத்தி பஞ்சகம்
  • சுலோகதிரயி
  • வேதாந்த சூத்திரம்
  • ஹோம மந்திரம்
  • முனிசர்ய பஞ்சகம்
  • ஆஸ்ரமம்
  • தர்மம்
  • சரம சுலோகங்கள்
  • சிதம்பர அஷ்டகம்
  • குக அஷ்டகம்
  • பத்ரகாளி அஷ்டகம்
  • விநாயக் அஷ்டகம்
  • ஸ்ரீ வாசுதேவ அஷ்டகம்
  • ஜெனனி நவரத்னமஞ்சரி
மொழிபெயர்ப்புகள்
  • திருக்குறள்
  • ஈசோவாஸ்யோ உபநிஷத்
  • ஒழிவில் ஒடுக்கம்

தமிழ் மொழியாக்கங்கள்

  • அறிவு: ஞானத்தின் ஆய்வியல் (நித்யசைதன்ய யதி உரையுடன்) - தமிழாக்கம் எம்.கோபாலகிருஷ்ணன்
  • ஸ்ரீ நாராயண தர்மம் - தமிழாக்கம் பி.சி.போஸ்- சி.நல்லசிவம்

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page