under review

சட்டம்பி சுவாமி

From Tamil Wiki
சட்டம்பி சுவாமி

சட்டம்பி சுவாமி (வித்யாதிராஜ சட்டம்பி சுவாமிகள்) (ஆகஸ்ட் 1853 - மே 5, 1924) கேரள யோகி, வேதாந்தி. கேரள மறுமலர்ச்சிக்கு காரணமானவர்களில் ஒருவர். இந்துமதச் சீர்திருத்தவாதி, பிராமணச் சடங்குகளுக்கு எதிராக போராடியவர், ஆத்மானந்தரின் ஆசிரியர், நாராயண குருவின் சமகாலத்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சட்டம்பி சுவாமியின் இயற்பெயர் அய்யப்பன் பிள்ளை. கேரள மாநிலம் திருவனந்தபுரம் கொல்லூர் என்ற சிற்றூரில் தாமரசேரி வாசுதேவ சர்மா, நங்ஹேமப்பிள்ளி இணையருக்கு மகனாக ஆகஸ்ட் 1853-ல் பிறந்தார். குஞ்ஞன்பிள்ளை என்பது இவரின் செல்லப்பெயர். மரபுக்கல்வி பயின்றார். சம்ஸ்கிருதம், தமிழ், ஜோதிடம் பயின்றார். சொந்த முயற்சியால் ஆங்கிலம் கற்றார். நாகர்கோயில் வடிவீஸ்வரம் வேலுப்பிள்ளை ஆசான் இவரது ஆசிரியர்.

பதினைந்து வயதில் திருவனந்தபுரம் பேட்டை என்ற இடத்தில் இருந்த ராமன்பிள்ளை ஆசான் என்பவரிடம் அடிமுறையும் வர்ம வைத்தியமும் கற்றார். அதன்பிறகு முன்னொட்டாக அவரது பெயரின் சட்டம்பி (பயில்வான்) இணைந்தது.

ஆன்மிக வாழ்க்கை

சட்டம்பி சுவாமிகள் தைக்காடு அய்யாவு ஆசானிடம் ஹடயோகம் பயின்றார். நாகர்கோயிலை ஒட்டிய மருத்துவாழ் மலையில் பலகாலம் தவம் செய்தார். சட்டம்பி சுவாமிகள் தைக்காடு அய்யாவு ஆசானிடம் ஹடயோகம் கற்றபோது அங்கு இளைய மாணாக்கராக இருந்தவர் நாராயணகுரு. 1882-ல் வாமனபுரம் அருகே அணியூர் என்ற ஊரில் நிகழ்ந்த கோயில் விழாவில் துறவியானபின் இருவரும் முதன்முறையாக சந்தித்ததாகச் சொல்லப்படுகிறது. மருத்துவாழ்மலையில் இருந்தபோதே நாராயணகுருவிடம் அவருக்கு உறவிருந்தது. நாராயணகுருவும் சட்டம்பி சுவாமிகளும் சேர்ந்து நீண்ட பயணங்களை மேற்கொண்டனர். மருத்துவாழ்மலையில் ஒருகுகையில் தவமிருந்தனர். அந்த குகை இப்போதும் அவர்களின் நினைவிடமாகப் உள்ளது. நாராயணகுரு அருவிப்புறத்தில் அவரது புகழ்பெற்ற சிவலிங்க பதிட்டையை நிகழ்த்தியபோது சட்டம்பி சுவாமி உடனிருந்தார்.

மாணவர்கள்
  • நீலகண்ட தீர்த்தபாதர்
  • தீர்த்தபாத பரமஹம்சர்
  • ஆத்மானந்தா
  • கவிஞர் போதேஸ்வரன்
  • பெருநெல்லி கிருஷ்ணன் வைத்தியன்
  • வெளுத்தேரி கிருஷ்ணன் வைத்தியன்

இந்துமதச் சீர்திருத்தம்

இந்து சமூகத்தில் அன்றிருந்த சமூகச் சீர்கேடுகளுக்கெதிராக எழுதியும் பேசியும் சுற்றுப்பயணம் செய்தார். தீண்டாமைக்கும் சாதிவேறுபாடுகளுக்கும் எதிராகப் போராடினார். கிறிஸ்தவ மதமாற்ற முறைகளைப்பற்றிக் கடுமையான எதிர்ப்புகளைப் பதிவுசெய்தார்.

விவேகானந்தருடன் சந்திப்பு

விவேகானந்தர் 1892-ல் எர்ணாகுளம் சென்றபோது சட்டம்பிசுவாமி அவரைக் காண வந்து கூட்டத்தைக் கண்டு தூரத்திலிருந்தே பார்த்துவிட்டுச் சென்றார். சட்டம்பி சுவாமிகளைப் பற்றிக் கேள்விப்பட்ட விவேகானந்தர் தாமே அவரைக் காணச் சென்றார். இருவரும் சமஸ்கிருதத்தில் உரையாடினர். சட்டம்பி சுவாமிகளிடம் விவேகானந்தர் சின்முத்திரையின் பொருள் கேட்டு அறிந்ததாகச் சொல்லப்படுகிறது. தன் நாட்குறிப்பில் இந்தச் சந்திப்பை ”நான் ஒரு உண்மையான மனிதரை கேரளத்தில் சந்தித்தேன்” என விவேகானந்தர் எழுதினார்.

இலக்கிய வாழ்க்கை

சட்டம்பி சுவாமியின் கைப்பிரதிகள் பல அச்சேறாமல் பின்னாளில் கண்டெடுக்கப்பட்டன. அவர் எழுதி வெளிவந்த சிலநூல்கள் எண்பது வருடங்களுக்கு பின்னர் மறுபதிப்பு செய்யப்பட்டன. அவரது மலையாள உரைநடை நேரடியானது. கேரள உரைநடை வளர்ச்சியில் அவருக்கு முக்கியமான பங்குண்டு.

மறைவு

சட்டம்பி சுவாமி மே 5, 1924-ல் காலமானார். இறுதிக்காலத்தில் சட்டம்பி சுவாமி பன்மனையில் தங்கியிருந்தார். கும்பளத்து சங்குப்பிள்ளை என்ற அறிஞர் அவருடைய புரவலராக இருந்தார். அவர் சமாதியான இடம் பன்மனை ஆசிரமம் என்று அழைக்கப்பட்டது. 1934-ல் திருவிதாங்கூருக்கு வந்த காந்தி அங்கே ஒருநாள் தங்கியிருந்தார்.

நினைவிடம்

கேரளா மாநிலத்தின் பள்ளிச்சல் பஞ்சாயத்தின் மூன்றாம் வார்டில் உள்ள சட்டம்பி சுவாமியின் பூர்வீக வீட்டை அரசு எடுத்து நினைவிடம் கட்ட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் நவ்ஜோத் கோசாவின் அறிக்கை பரிந்துரைத்தது. இந்த வீடு தற்போது சட்டம்பி சுவாமியின் நான்காவது தலைமுறை சந்ததியினரின் வசம் உள்ளது. பொன்னியத்தில் உள்ள பூர்வீக வீட்டை கையகப்படுத்தி நினைவுச்சின்னமாக மாற்ற கேரளா அரசு முடிவு செய்தது.

நூல்கள் பட்டியல்

  • வேதாதிகார நிரூபணம்
  • ஜீபகாருண்ய நிரூபணம்
  • நிஜானந்த விலாசம்
  • அத்வைத சிந்தா பத்ததி
  • கேரளத்தின் தேச நன்மைகள்
  • கிறிஸ்துமதச் சேதனம்
  • கிறிஸ்துமத நிரூபணம்
  • தேவார்ச்ச பத்ததியுடே உபோத்கதம்
  • பிரணவமு சாங்கிய தரிசனமும்
  • பிரபஞ்சத்தில் ஸ்த்ரீ புருஷர்க்குள்ள ஸ்தானம்
கவிதை
  • சிலகவிதா சகலங்கள்
மொழி ஆய்வு
  • பாஷாபத்மபூஷணம்
  • பிராசீன மலையாளம்

உசாத்துணை


✅Finalised Page